திங்கள், 6 பிப்ரவரி, 2023

அன்பெனும் கட்டிற்குள் அகப்பட்ட கிருஷ்ணர்

 அன்பெனும் கட்டிற்குள் அகப்பட்ட கிருஷ்ணர்


பகவானான ஸ்ரீகிருஷ்ணரை இருவர் கட்டிப் போட முயன்றனர். இரண்டுமே கிருஷ்ணர் நடத்திய லீலைகளால் விளைந்தவைதான். இருவருமே அவருக்கு நெருக்கமானவர்கள்தான். ஒருவர் கிருஷ்ணரின் வளர்ப்புத்தாய் யசோதை, இன்னொருவர் அவரது அத்தை குந்தியின் மகனான சகாதேவன். சிறு குழந்தையில் கிருஷ்ணர் சேட்டைக்காரர் என்பதால் அவரை உரலில் கட்டிப் போட்டாள் யசோதை, ஆனால் சகாதேவன் ஏன் கிருஷ்ணரைக் கட்டினான் என்பது புதிரானது. இரண்டைப் பற்றியும் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

அந்த ஆயர்பாடியில் எப்போதும் குட்டிக்கோபர்களின் ஆர்ப்பாட்டம். நடுநிலையில் குட்டிக்கண்ணன். இவனோடு வீடுகளில் புகுந்து வெண்ணெய் திருடுவதும் அதைத் தாங்கள் உண்பதும் குரங்குகளுக்கு அளிப்பதும்தான் குட்டிக்கோபர்களின் வேலை. எப்போது பார்த்தாலும் எல்லாத் திசைகளிலிலிருந்தும் கிருஷ்ணனை நோக்கிக் கோபியர்களின் புகார்தான். ”கண்ணன் இங்கே எங்கள் இல்லம் புகுந்தான், வெண்ணெய் திருடிச் சென்றான், உரியை உடைத்தான், உண்டு களித்தானெ”ன்று.

பார்த்தாள் யசோதை. இந்த சேட்டைகள் நடக்காமலிருக்க வேண்டுமானால் அவனைக் கட்டிப் போட வேண்டும். வீட்டின் புழக்கடைப்பக்கத்தில் ஒரு உரல் இருந்தது. அதில் கட்டிப்போட்டால்தான் சரிவரும். ஒரு துண்டுக்கயிற்றை எடுத்தாள். அதைக் கொண்டு கண்ணனின் இடுப்பைச்சுற்றிக் கட்ட எத்தனித்தாள். அட! இதென்ன கயிற்றின் நீளம் போதவில்லையே. அதற்குள் கண்ணனின் குட்டித்தொந்தி பெருத்து விட்டதா என்ன. இன்னும் ஒருதுண்டுக் கயிற்றை இணைத்துக் கட்ட ஆரம்பித்தாள். அடடா! இன்னும் போதவில்லையே. தன் மகனின் வயிறு என்ன பானை ஆகிவிட்டதா.?


வியப்புடன் இன்னும் சில, பல கயிறுகளை இணைத்து அவள் சுற்றத் தொடங்கும் போதெல்லாம் கிருஷ்ணனின் இடுப்புப் பெருத்துக்கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் அவள் களைத்துப் போய் ”கண்ணா இதென்ன லீலை”” என்று மயக்கம் கொள்ளத்  தன் தாயின் மேல் கருணை கொண்ட அந்தத் தாமோதரன் இடுப்பைச் சுருக்கித் தன் லீலைகளை நிறுத்திக் கொண்டான்.

தன் மகனின் சிறு மணிவயிற்றில் கயிற்றைக் கட்டி உரலில் இணைத்த யசோதை தன் வேலைகளைப் பார்க்கச் சென்றாள். அதன்பின் கண்ணன் உரலோடு வந்து தோட்டத்தில் இருந்த மருதமரங்களைப் பெயர்த்துச் சாபத்தால் அம்மரமாக மாறிய நளகூபன் மணிக்ரீவனுக்குச் சாபவிமோசனம் அளித்தது தெரிந்த கதை. இப்படித் தாயைத் திகைக்க வைத்த கிருஷ்ணனை இன்னொருவன் தன் அன்பால் திகைக்கவைத்துக் கட்டினான். அவன் யார் என்றால் பாண்டவர்களில் ஒருவனான சகாதேவன். கிருஷ்ணனின் அத்தை குந்தியின் மகன்.


மகாபாரதப் போர் தொடங்கச் சில நாட்கள் இருந்தன. பாண்டவர்களின் சார்பாக தூதுவனாகக் கிருஷ்ணன் செல்ல வேண்டி இருந்தது. பாண்டவர்களுக்கு எதையும் கொடுக்கப் பிரியப்படாத கௌரவர்களால் போர் மூண்டே விடும் என்பதைத் தெரிந்திருந்த கிருஷ்ணன் விளையாட்டாக சகாதேவனிடம் இக்கேள்வியைக் கேட்டான்” சகாதேவா இந்தப் பாரதப் போர் எப்படியும் மூண்டுவிடும் என்று தெரிகின்றது. இதை எப்படி நிறுத்தலாம். நீதான் சாஸ்திரங்களில் கரைகண்டவனாயிற்றே. இதற்கு ஒரு வழி கூறு”

கௌரவர்களே ஒப்புக்கொண்டாலும் கிருஷ்ணன் இந்தப் போரைத் தூண்டிவிடவே தூது செல்கிறார் என்பதைத் தன் சாஸ்திர அறிவால் உணர்ந்த சகாதேவனும் விளையாட்டாகவே பதில் கூறத் தொடங்கினான்” இதற்கு ஐந்து உபாயங்களைச் செய்யவேண்டும் கிருஷ்ணா” உடனே கிருஷ்ணனும்” அதென்ன சகாதேவா, ஐந்து உபாயங்கள்? அவற்றை விவரி!” என்றான்.

சகாதேவனும் “ முதலில் அர்ஜுனனின் காண்டீபத்தை முறித்துப் போட வேண்டும். அடுத்து பீமனின் கதாயுதத்தையும் உடைத்தெறிய வேண்டும். பாஞ்சாலியில் விரித்த கூந்தலை அறுத்தெறிய வேண்டும். நான்காவதாக தீயவர்களில் நல்லவனாக இருக்கும் கர்ணனுக்கு முடிசூட்ட வேண்டும். ஐந்தாவதாகத் தூதுசெல்ல இருக்கும் உன்னைக்கட்டிப் போட வேண்டும். இதை எல்லாம் செய்தால் போர் நிச்சயம் மூளாது ” என்றான்.

இதைக் கேட்டுச் சிரித்த கிருஷ்ணன், “ மற்ற நான்கும் கூட உன்னால் இயலலாம். ஆனால் என்னை எப்படிக் கட்டிப்போடுவாய் சகாதேவா. என் குழந்தைப் பருவ சேட்டைகளால் என்னைக் கட்டிப் போட முயன்ற என் தாய் யசோதையாலேயே என்னக் கட்ட முடியவில்லை. நானாக விரும்பித்தான் கட்டுப்பட்டேன். நீ எப்படிக் கட்ட முடியும் “ என்று கூறி ஆரவாரமாகச் சிரித்தார்.


” என்னாலும் முடியும் கிருஷ்ணா” என்றான் சகாதேவன். “ எப்படி முடியும் ?” என்று கேட்ட கிருஷ்ணர் பல்லாயிரம் கிருஷ்ணர்களாக உருவெடுத்தார். எங்கு நோக்கினும் மாயக்கண்ணனின் வடிவம்தான். ஒரு கிருஷ்ணரையே கட்டமுடியாதே. இவ்வளவு கிருஷ்ணரையும் எப்படிக் கட்டுவது என்றெல்லாம் யோசிக்கவில்லை சகாதேவன். பேசாமல் ஒரு ஓரமாக அமர்ந்து கிருஷ்ணரைத் தியானிக்க ஆரம்பித்தான். அவர் விசுவரூப அழகில் ஆழ்ந்து கிருஷ்ணர் பெயரை உச்சரித்தபடிக் கிருஷ்ணப் ப்ரேமியாகப் பக்தியில் அமிழ்ந்தான்.

அவன் அவரைத் தியானிக்கத் தியானிக்க பக்தியால் கட்டப்பட்டார் கிருஷ்ணர். அவரின் பல்லாயிரம் விசுவரூப வடிவங்களும் ஒன்றாக இணைந்து ஒரே உருவாக மாறியது. மேலும் சகாதேவனின் பக்தி அவரை எங்கும் நகர வொட்டாமல் அங்கேயே பிடித்து அமிழ்த்தி வைத்தது. அவரும் அவனது இதயத்தில் கட்டுண்டார். அன்பின் தளையின்முன் ஆண்டவனேயானாலும் மீளமுடியுமா என்ன ?

” ஹாஹா ! சகாதேவா உன் அன்பின் வலிமை என்னைக் கட்டிப்போட்டுவிட்டது. என்னை விடுவியப்பா” எனக் கேட்டார் கிருஷ்ணர். சகாதேவன் கண்களைத் திறந்தான். பகவானின் உருவம் பிரகாசமாக அவன் மனமெங்கும் நிறைந்திருந்தது. உள்ளே கண்ட பகவானை எதிரேயும் தரிசித்து வணங்கினான். கிருஷ்ணரும் அவனை ஆசீர்வதித்தார்.

இப்படியாகத் தாய் யசோதரையின் அன்பிற்கும் தன் மைத்துனனான சகாதேவனின் பக்திக்கும் கட்டுப்பட்டார் ஸ்ரீகிருஷ்ணர். பகவானே ஆனாலும் அன்பினாலும் பக்தியாலும் அவரை நாம் பெறமுடியும் என்பதை இக்கதை மூலம் அறிந்தோம் தானே குழந்தைகளே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)