புதன், 22 பிப்ரவரி, 2023

ஆல்தோட்ட பூபதியும் ஆல்ரவுண்டர் சிம்ரனும்

 ஆல்தோட்ட பூபதியும் ஆல்ரவுண்டர் சிம்ரனும்


திரையில் தீப்பிடித்தது போன்ற அழகுடன் நம் கண்முன் ஒளிர்பவர்கள் மூவர். இதில் ஐஸ்வர்யா ராயிற்கு முதலிடம். அடுத்து சிம்ரன், மூன்றாமிடம் தீபிகா படுகோனே. முகத்தில் மச்சம் கொண்ட மச்சக் கன்னிகள் வரிசையிலும் சிம்ரன் இடம் பிடிக்கிறார். முதலிடம் கே ஆர் விஜயாம்மாவுக்கு அடுத்து சுஜாதாம்மா மூன்றாமிடம் உதட்டோர குட்டி மச்சக்காரி சிம்ரன், நான்காமிடம்தான் மனோரமாம்மாவுக்கு.

இடையழகிலும் சிம்ரனுடன் ’நேருக்கு நேர்’ யாரும் போட்டி போட முடியாது. ”மனம் விரும்புதே உன்னை உன்னை” என்று பிரபுதேவா ஸ்டைலில் ஒட்டகமாய் வளைந்து இடுப்பை ஒடிப்பதிலாகட்டும். லோ ஹிப் பாண்ட் போட்டு எந்த பயமுமில்லாமல் துணிச்சலாக ”உன்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா இல்லை நானா” என்று ஸ்டைலாக ஸ்டெப்ஸ் போடவும் சிம்ரன் ஒருவராலேயே முடியும். ஒரு சினிமா விருது ஒன்றில் மேடையிலேயே வினு சக்கரவர்த்தியால் ”சும்மா கொப்பும் குலையுமா மப்பும் மந்தாரமுமா” என்று மொழியப்பட்டவர் சிம்ரன்.

சற்று புஷ்டியான பெண்களையே தமிழ்க் கதாநாயகிகளாகக் கொண்டாடியவர்கள் தமிழர்கள். முதன் முறையாக ஸ்லிம்மாக இருந்த சிம்ரனையும் அவரது நடிப்பாற்றலுக்காகக் கொண்டாடினார்கள். ஒல்லியான பெண்களை ஸ்லிம்ரன் என்றும் இடுப்பை ஆட்டி நடப்பவர்களை ஒனக்கென்ன சிம்ரன்னு நினைப்பான்னும் கேலி செய்வது பழக்கமாகவே இப்போதும் பழக்கமாகவே இருக்கிறது.

சிம்ரன் 1976, ஏப்ரல் 4 அன்று மும்பையில் பிறந்தார். இவரது ரியல் பெயர் ரிஷிபாமா நேவால். நடிகை மோனல் நேவால் இவரது சகோதரி. தனது இருபதாவது வயதில் 1996 தேரே மேரே சப்னே வில் சந்திரசூர் சிங்கின் ஜோடி பூஜாவாக அறிமுகம். தமிழ், ஹிந்தி கன்னடம் தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அறிமுகமான நான்காண்டுகளிலேயே, அதாவது 2000 ஆம் ஆண்டு 75 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் வாங்கியவர். தன் சிறுவயதுத் தோழனான தீபக் பாகாவை மணமுடித்தார். அதீப், ஆதித் ஆகிய இரு மகன்கள் உண்டு.

1997 இல் ஒன்ஸ்மோரில் அறிமுகமாகி வி ஐ பி, நேருக்கு நேர், பூச்சூடவா, கொண்டாட்டம், அவள் வருவாளா, நட்புக்காக, கண்ணெதிரே தோன்றினாள், துள்ளாத மனமும் துள்ளும், வாலி பிரியாகனவே கலையதேஜோடிகண்ணுபட போகுதையாநேரம்உன்னைக் கொடு என்னைத் தருவேன்பார்த்தேன் ரசித்தேன்பிரியமானவளே12பிரமணாபார்த்தாலே பரவசம்பம்மல் கே. சம்பந்தம்கன்னத்தில் முத்தமிட்டால்தமிழ்ஏழுமலைபஞ்சதந்திரம்ஐ லவ் யூ டாபாப் கார்ன்அரசுகோவில்பட்டி வீரலட்சுமிஉதயாநியூவாரணம் ஆயிரம், 2019 இல் பேட்டயில் ரஜனியுடன் ஜோடியாக நடித்தவர்.

பஞ்சதந்திரத்தில் மூக்கை விடைத்துக் கண்களைப் பெரிசாக்கி முறைப்போடு பேசுமிடமாகட்டும், வெடுக் வெடுக்கென்று நடந்து சென்று பின் திரும்பி வந்து ஹோட்டல் ரூமில் கணவனான (கமல்) ராமைப் பார்த்து அவர் பாண்டை எடுப்பதற்காக வேகமாகத் திரும்பி அந்த சுழற்சியினால் தேவயானியின் மேல் விழுந்து விட ”சீ” என்று சீறும் இடமாகட்டும், நடிப்பின் செல்வி.

பார்த்தாலே பரவசத்தில் கணவனான மாதவனுடன் பிணக்கம் ஏற்பட்டு விவாகரத்தாகிவிட இவர் அடுத்து லாரன்ஸ் ராகவேந்திராவைத் திருமணம் செய்ய கொள்ள முதல் கணவனான மாதவனின் ஒப்புதல் வேண்டி அழைத்துச் செல்வார். அப்போது மாதவன் செக்கச் சிவந்த தன் மனைவிக்கு அடுத்த கணவனாக வரப்போகும் லாரன்ஸைப் பார்த்துவிட்டு “ஐயோ இவ்ளோ கறுப்பா இருக்கானே” என்று அங்கலாய்க்கும் இடமும் சிம்ரனின் முறைப்பும் குபீர் சிரிப்பை வரவழைத்தது. சிரித்துக் கொண்டே சிடுசிடுப்பது சிம்ரன் ஸ்பெஷல்.

எனக்கு மிகவும் பிடித்த இவர் பாடல்கள் பல உண்டு. துள்ளாத மனமும் துள்ளுமில் இருபது கோடி நிலவுகள் கூடிப் பெண்மை ஆனதோ, இன்னிசை பாடி வரும், அவள் வருவாளாவில் சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க, ஜோடியில் காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம், வெள்ளி மலரே, ஒரு பொய்யாவது சொல் கண்ணே, பிரியமானவளேயில் என்னவோ என்னவோ என் வசம் நானில்லை, எனக்கொரு சிநேகிதி, விஐபியில் மின்னல் ஒரு கோடி, டைம் படத்தில் காதல் நீதானா, வாலியில் நிலவைக் கொண்டுவா, ஓ சோனா , இதில் நிலவைக் கொண்டு வா பாடலில் கிரேக்க தேவதையைப் போலிருப்பார் சிம்ரன். முழு உருவமுமே எழில் பொங்கும் வடிவழகு கொண்டவர் சிம்ரன். சொல்லப்போனால் அஜித்தை விட விஜய்க்கு நிகரான ஜோடி சிம்ரன்.

கதாநாயகியாய்ப் புகழ்பெற்ற காலத்திலேயே பார்த்தேன் ரசித்தேன் படத்தில் எதிர் நாயகி பாத்திரத்தில் நடித்தவர். வில்லியானாலும் சிம்ரனின் நடிப்பு இதில் பேசப்பட்டது. சூப்பர் ஹிட் படம் & பாடல்கள்.  சிறந்த நாட்டிய தாரகை சிம்ரன். ஆனால் ஐந்தாம் படையின் தேவசேனாவைப் போன்ற நாட்டியத்துக்கான வாய்ப்பு வேறு படங்களில் ஏனோ முழுமையாக அமையவில்லை. ரமணாவில் விஜய்காந்தின் மனைவியும் (சிம்ரன்)  மகளும் கட்டிட இடிபாட்டில் சாம்பல் ஓவியங்களாய் உதிரும் இடம் திடுக்கிட வைத்தது. கடுமையான மேக்கப்போடு வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவின் மனைவி & தாய் மாலினி கிருஷ்ணனாக நடித்திருப்பார். முன் தினம் பார்த்தேனே என்ற பாடலும் காட்சி அமைப்பும் மனதைத் தாலாட்டும் நாஸ்டால்ஜிக் நினைவலைகள்.


அவள் வருவாளா வித்யாசமான திரைக்கதை. இதில் சுஜாதா மாமியார் ஆனால் தாயும் மகளும் போல் ஒரு வீட்டில் வாழ்ந்து வர உண்மை தெரியாமல் இவரை அஜித் ப்ரபோஸ் செய்வார். மருமகளுக்கு மாமியாரே மனமுவந்து மறுகல்யாணம் செய்து வைக்கும் திரைக்கதை. வாலி மற்றும் இப்படத்தில் கொழுந்தன் மற்றும் கணவனே வில்லன்கள் கதாபாத்திரம். அதைக் கண்டுபிடித்து இவர் தப்புமிடங்கள் நமக்கு பதக் பதக்.

ஜோடி படம் தாம் காதலிப்பவர்களின் இல்லத்துக்குள் வேறொருவராக மாறிப் புகுந்து காதலை எதிர்ப்பவர்களின் உள்ளங்களை மாற்ற முனையும் கதை. பிரியமானவளேயில் மேரேஜ் அக்ரிமெண்ட் என்றொரு புது விஷயம். இதன்படி திருமணம் செய்து ஒருவருடம் பிடித்திருந்தால் நீடிப்பது என்ற அக்ரிமெண்டில் தன் குடும்பத் தேவைக்காகக்  கையெழுத்திட்டு மணக்கும் சிம்ரனை முடிவில் விஜய் மடக்குவது விவேகம் என்றாலும் அவரும் மனம் திருந்தி இவருடன் இணைவது சுபம். இதில் ஜூன் ஜூலை மாதத்தில் ரோஜாப்பூவின் வாசத்தில் என்ற பாடல் குழந்தைகளின் நறுமணத்தைப் பரப்பும்.

ஒரு முரட்டுக்குழந்தையின் பேரன்புத் தாயாய்க் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஜொலித்திருப்பார். நெஞ்சில் ஜில் ஜில் என்று நீல வானோடு போட்டி போட்டுப் பிரம்மாண்டமாய்த் தான் பெறாத தன் சேயைத் தாங்கும் தாய்ப்பாசம் பிரமிக்க வைத்தது. பம்மல் கே சம்பந்தத்தில் கமலுடன் காதல் வயப்படுவதும், மனதுக்குப் புலப்படாத அந்தக் காதலின் அழுத்தத்திலும், தன் ப்ரொஃபஷனல் கோளாறினால் வயிற்றில் கடிகாரம் வைத்துத் தைக்கப்பட்ட சம்பந்தத்தைத் தன் அன்பினால் சிறைப்பிடித்து மறு ஆபரேஷன் செய்வதும் அதற்குப் பின்னான வெறிச் மனநிலையில் ஏண்டி சூடாமணி என்ற பாடலும் நம் மனதையும் பிசையும்.

எந்த பந்தாவும் செய்து கொள்ளாமல் சில பாடல்களிலும் சில படங்களிலும் சிறப்புத் தோற்றம் கொடுத்தவர். ஆஹா கல்யாணம், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா ஆகிய படங்களிலும், பிதாமகன் படத்தில் ஒரு பாடலிலும், தொட்டு தொட்டு, மானா மதுரை, ஆல் தோட்ட பூபதி, புத்தம் புதிதாய் ஆகிய பாடல்களிலும் சிறப்புத் தோற்றம். இதில் ஆல் தோட்ட பூபதியில் விஜயுடன் அசத்தல் பர்ஃபார்மன்ஸ்.  

சின்னத்திரையிலும் 97 இல் சூப்பர் ஹிட் முகாப்லா, திருமணத்துக்குப் பின் டான்ஸ் தமிழா டான்ஸ் என்ற ரியாலிட்டி ஷோ, சுந்தரகாண்டம் தொடர், சிம்ரன் திரை, ஜாக்பாட் என்ற கேம்ஷோ, அக்னிப் பறவை தொடர் ஆகியவற்றில் தொகுத்தும் நடித்தும் வந்தார். சிம்ரன்  & சன்ஸ் என்ற தயாரிப்பு ஸ்டூடியோ ஆரம்பித்து நடத்தி வருகிறார். நிஜமாகவே பல்துறையிலும் தடம் பதித்துள்ள இவர் ஒரு ஆல்ரவுண்டர்தான்.

இத்தனை சித்திரங்கள் சிம்ரனைப் பற்றி என் மனதை நிறைத்தாலும் கோவில்பட்டி வீரலெக்ஷ்மி என்ற படம் அவரது முத்திரைப் படமாகும். அவரது நடிப்பாலும் உடல் மொழியாலும் உக்கிரக் கண்களாலும் என்னை நிஜமாகவே வெலவெலக்க வைத்த படம். தீண்டாமைக்கும் அதிகார வர்க்கத்துக்கும் காவல்துறைக்கும் எதிராகப் போராடும் வீரலெக்ஷ்மி கிளர்ச்சி செய்து துப்பாக்கியைப் பிடிக்கும் கதை. முதுகுக்குப் பின்னிருந்து அரிவாள் உருவுவது, வீச்சரிவாளால் வெட்டுவது, பிச்சுவாக் கத்தியால் குத்துவது என ஆண்களைப் பார்த்துப் பழகிய இடத்தில் துப்பாக்கியோடு ஒரு பெண்ணாக சிம்ரன். உண்மையான இழை ஒன்று முழுப்படத்திலும் ஓடுகிறது என்றே ஹிந்துவும் குறிப்பிட்டு இருந்தது. என்னைப் பொறுத்தவரை இதுவே சிம்ரனின் சிறந்த படமாகும்.

அறிமுகமான வருடத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதுபெற்றவர். கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்கும் ஃபிலிம்ஃபேர் விருது,சொல்லப்போனால் எட்டுமுறை ஃபிலிம்ஃபேர் விருது பெற்ற பெருமைக்குரியவர் இவர். விஜய் விருது மற்றும் தமிழக அரசின் கலைமாமணி விருதை இருமுறை பெற்றிருக்கிறார். பவர் ஆஃப் உமன் என்ற விருதும் பெற்றிருக்கிறார். ஆல்ரவுண்டர் சிம்ரன் இன்னும் இன்னும் சிறக்கவும், தேசிய விருதுகள் பல பெறவும் வாழ்த்துக்கள்

3 கருத்துகள்:

  1. திடீரென சிம்ரன் பற்றி.......

    பதிலளிநீக்கு
  2. இது தனவணிகன் என்ற இதழில் தொடராக வந்ததுப்பா.

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)