வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

பீமனையே அழவைத்த தர்மத்தின் மனிதன்.

 பீமனையே அழவைத்த தர்மத்தின் மனிதன்



தர்மத்தின் மனிதன் என்று ஒருவனையாவது உங்களால் சுட்ட முடியுமா என்பது கேள்விக்குறிதான். ஒன்றிலோ அல்லது மற்றொன்றிலோ அவர்கள் தம் தர்மத்தை விட்டு விலகி இருப்பார்கள். ஆனால் மகாபாரதத்தில் தர்மத்தின் மனிதன் என்று சுட்டிக்காட்டும்படி ஒருவன் இருந்தான். இராமாயணத்தில் கும்பகர்ணனைப் போலத் தன் அண்ணன்களிடம் அபரிமிதமான பாசம் கொண்டவன், கர்ணனைப் போலச் செஞ்சோற்றுக் கடன் கழித்தவன், தன் குடும்பப் பாரம்பரியத்தின் மேல் கொண்ட மரியாதையால் தன் அண்ணிக்கு ஒரு அக்கிரமம் நிகழ்ந்த போது அதைத் தட்டிக் கேட்டவன் அவன். அப்படிப்பட்ட தர்மவான் யார் என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

திருதராஷ்டிரனின் மகன்களில் ஒருவர் விகர்ணன். இவரது காதுகள் பெரிதாக இருந்தமையால் இப்பெயர் பெற்றார். பேருக்கேற்றாற்போல் நல்ல விஷயங்களைத் தன் விசாலமான காதுகளால் உட்கிரஹித்துக் கொள்ளக் கூடியவர். இவரும் அர்ஜுனனைப் போல வில் வித்தையில் சிறந்து விளங்கியவர். இவரது மனைவி காசிராஜனின் மகள் சுதேஷ்ணவதி. இவர்களது மகள் துர்கா. இவள் கர்ணனின் மகன் சத்யசேனனை மணந்தாள்.


கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் வில் வித்தையைக் கற்பித்தவர் துரோணாச்சாரியார். இவர்களுக்குப் பயிற்சி முடிந்தபின்  குரு துரோணர் தன்னை அவமானப்படுத்திய துருபதனை குருதட்சிணையாகக் கொண்டுவரும்படிக் கேட்டார். துரியோதனன் துச்சாதனன் யுயுத்சு ஆகிய சகோதரர்களுடன் விகர்ணனும் பாஞ்சாலத்துக்குப் படை எடுத்துச் சென்றார். ஆனால் அவர்கள் தாக்குதல் முறியடிக்கப்பட்டதால் பின்வாங்கினர். அதன் பின் அர்ஜுனன் துருபதனை வென்று துரோணருக்குக் குருதட்சணையாக்கினான். துருபதன் மகள் பாஞ்சாலியைப் பாண்டவர்கள் ஐவரும் மனைவியாகப் பெற்றனர்.

எதற்கும் உதவாத நிலத்திப் பண்படுத்தி இந்திரப் ப்ரஸ்தமாக்கி பாண்டவர்கள் இருந்து வந்தபோது அங்கே அவர்கள் அழைப்பின் பேரில் விருந்துகுச் சென்றனர் கௌரவர்கள். அப்போது அதன் அழகில் மயங்கி துரியோதனன் நிலம் என்று நினைத்து நீரில் காலை வைக்கக் குப்புற விழுந்தான். அதைக்கண்டு பாஞ்சாலி நகைக்க அவளைப் பழிவாங்க எண்ணினான். அதற்குத் தோதாய்த் தங்கள் அஸ்தினாபுரத்துக்கு பாண்டவர்கலை மறு விருந்துக்கு அழைத்து வந்தார்கள் கௌரவர்கள்.


வந்து விருந்து முடிந்ததும் சும்மாயிராமல் துரியோதனன் பகடைவிளையாட்டுக்கு அழைக்க தர்மனும் ஒப்புக் கொண்டு விளையாடினான். அப்போதே விகர்ணன் அவ்விளையாட்டினை எதிர்த்தான். ஆனால் விளையாட்டு வினையாகி தர்மர் பாஞ்சாலியையும் பிணையாக சூதில் வைத்துத் தோற்றுப் போனார். அதனால் ஓராடையில் இருந்த அவளைச் சபைக்கு இழுத்து வந்து மானபங்கப்படுத்துமாறு துரியோதனன் ஆணையிட துச்சாதனன் பாஞ்சாலியைச் சபைக்கு இழுத்து வந்தான்.

எண்ணற்ற சான்றோரும் ஆன்றோரும் பிதாமகர் பீஷ்மரும் அமைந்திருந்த சபையில் பாஞ்சாலி “தன்னைத் தோற்றபின் தர்மர் என்ன உரிமையில் என்னையும் வைத்துத் தோற்றார்?” எனக் கேள்வி எழுப்பினாள். அதற்கு யாரும் பதிலளிக்காதபோதும் விகர்ணன் அவளது கூற்று சரி என அவளுக்காகப் பரிந்து பேசினான். அவளுக்கு அச்சபையில் மானபங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என அவன் எவ்வளவோ முயற்சித்தும் அது நிகழ்ந்தேவிட்டது.

பின்னர் கர்ணன் விகர்ணனிடம் ” அத்தனை பேர் நிறைந்த சபையில் நீ மட்டும் கௌரவர்களுக்கு மாற்றாக, திரௌபதிக்கு ஆதரவாக ஏன் பேசினாய்?”” எனக் கண்டித்தார். அதற்கு விகர்ணன் “ என்னதான் இருந்தாலும் பாண்டவர்கள் எங்கள் சகோதரர்கள். எங்கள் அண்ணியார் பாஞ்சாலி. அவர்களுக்கு ஒரு அவமானம் ஏற்பட்டால் அது குருவம்சத்துகு நிகழ்ந்த அவமானமே ஆகும். இது எங்கள் குலமே நாசமடைய வழிவகுக்கும். அதனால்தான் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தேன்” என்றான். அவ்வளவு தர்மநெறி மிக்கவன் விகர்ணன்.

அவன் உரைத்தது போல் பாஞ்சாலிக்கு நிகழ்ந்த அவமானமே குருக்ஷேத்திரப் போர் ஏற்படக் காரணமாயிற்று. இப்போரில் தன் சகோதரன் துரியோதனனுக்காக விகர்ணன் போரிடுகிறான். சிறந்த போர்வீரனான விகர்ணன் போரின் ஏழாம் நாளில் துருபதனையும் சிகண்டியையும் தாக்கிப் பின்வாங்கச் செய்தான். பத்தாவது நாளில் அர்ஜுனனும் சிகண்டியும் பீஷ்மரை அடையாமல் தடுக்கிறான். பதிமூன்றாம் நாள் போரில் அபிமன்யு கொல்லப்படுகின்றான்.


பதினான்காம் நாள் போர் ஆரம்பமானது. கௌரவர்கள் அனைவரையும் தான் ஒருவனே கொன்றழிப்பதாக சபதம் செய்த பீமன்முன் நிற்கின்றான் விகர்ணன். கௌரவர் சபையில் பாஞ்சாலிக்கு ஆதரவாகப் பேசிய ஒரே மனிதன் என்பதால் அவனைக் கண்டதும் கருணை மிகுகிறது பீமனுக்கு. ” தர்மத்தின் மனிதனே! ஒதுங்கிப் போ நீ என் முன்னிருந்து. அதர்மத்தின் பக்கம் நிற்காதே. அதற்குத் துணை போகாதே “ என்று அறிவுறுத்துகின்றான்.

“ அது முடியாது பீமா. அதர்மவாதிகள் என்றாலும் நாங்கள் வெற்றிபெற மாட்டோம் என்றாலும் நான் எனது சகோதரர்களைக் கைவிடமாட்டேன். ”. என்கின்றான். அதற்கு பீமன் “ அன்றைக்கு சபையில் பாஞ்சாலிக்கு நடந்த அநீதிக்கு எதிராகக்  குரல் கொடுத்தாயே! ” என்று கேட்கிறான். அதற்கு விகர்ணன்” அன்று அண்ணியாருக்காக குரல் கொடுத்தேன். இன்று என் அண்ணன்களுக்காகப் போரிட வந்து நிற்கின்றேன். இரண்டுமே என் கடமைதான். இக்கட்டில் இருப்பவர்களைக் கைவிடுவதல்ல என் தர்மம். வா பீமா.போரிடுவோம்” என்று அறைகூவுகின்றான்.

வேறுவழியில்லாமல் பீமனுக்கும் விகர்ணனுக்கும் இடையே யுத்தம் நிகழ்கிறது. விகர்ணன் தாக்கப்பட்டு இறக்கும் தருவாயில் பீமனிடம் தன் இறுதிக் கடன்களைச் செய்யுமாறு கேட்கிறான். பீமனின் கண்களில் நீர் பொங்கி வழிகிறது. அவன் தலையை மடியில் வைத்தபடி பீமன் புலம்புகிறான். ” தர்மத்தின் மனிதனே.. அதர்மத்தின் பக்கம் நின்றதால் உன்னைக் கொல்ல வேண்டி வந்ததே. அல்லவர்களை அழிக்கும்போது நல்லவர்களையும் அழிக்க நேர்கிறதே. இதுவே குருவம்சத்தைப் பீடித்த கேடு. என் செய்வேன் விகர்ணா” என்று மாபெரும் உருவமுடைய பீமன் சிறுகுழந்தையைப் போலக் கலங்கி அழுகின்றான்.

எத்தகைய சூழலிலும் தன் தர்மத்தை விட்டு விலகக்கூடாது என்று வாழ்ந்து சென்ற விகர்ணனின் கதை நாமும் பின்பற்றக்கூடியதுதானே குழந்தைகளே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)