புதன், 8 பிப்ரவரி, 2023

பளிச் பெண்கள் – 1, நூறு புராணங்களின் வாசலைப் படைத்த முபின் சாதிகா

 

பளிச் பெண்கள் – 1


நூறு புராணங்களின் வாசலைப் படைத்த முபின் சாதிகா


சர்வதேச புத்தகத் திருவிழா ஆரம்பமாகப் போகிறது என்பதால் மிகச் சிறந்த ஒரு இலக்கிய ஆளுமையினை நம் லேடீஸ் ஸ்பெஷல் இதழில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறேன். ஏறக்குறைய பத்தாண்டுகளுக்குப் பின் கிரிஜா மேம் பளிச் பெண்கள் தொடர் எழுதக் கூப்பிட்டதில் மகிழ்ச்சி. ஏனெனில் என் முதல் படைப்புகளும் முதல் நூலும் லேடீஸ் ஸ்பெஷலாலேயே வந்தவை. மற்றும் ஸ்பெஷல் லேடி அவார்டும், ஸ்ரீ சக்தி அவார்டும் கொடுத்து சிறப்புச் செய்தவர்கள் கிரிஜாமேம். வீட்டில் இருந்தபடியே என் எழுத்துப்பணியை ஆற்ற (செகண்ட் இன்னிங்ஸ்) மறுபடியும் ஊக்கம் கொடுத்த அவர்களுக்கு என் சிரம்தாழ்ந்த நன்றிகள்.


முபின் ஸாதிகா கோவையில் பிறந்தவர் ஆனால் சென்னை வாசி. பெற்றோர் நூல்களை வாசிப்பதில் பேரார்வம் கொண்டவர்கள்.  பெண்களுக்கான பள்ளியில் பயின்ற அவர் மதரீதியான பாகுபாடுகளை எதிர்கொண்டதால் அவரது குழந்தைப்பருவம் பாதிக்கப்பட்டதாகக் கூறினார். மற்ற குழந்தைகளின் பள்ளிப் பருவம்போல் தனக்கு அமையவில்லையே என்ற குறை அவருள் இன்னும் இருக்கிறது. எதிராஜில் இளங்கலை வேதியல் படித்தார். அதன் பின் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுநிலை தமிழ், ஆய்வியல் நிறைஞர் (எம் பில்) பயின்றார். ஆங்கில ஆர்வத்தால் பிரிட்டிஷ் தூதரகத்தில் மேல்நிலை ஆங்கிலம் படித்தார். முனைவர் பட்ட ஆய்வை சென்னை புதுக்கல்லூரியில் முடித்தார்.


அவருடைய நூறு புராணங்களின் வாசல் என்னும் தொகுதி இந்த ஆண்டு வந்து அதிகம் விற்பனை ஆனது. அடுத்த தொகுதி வரும் ஆண்டு வெளியாகிறது. அதுபற்றியும் அவரது படைப்புலகம் பற்றியும் கேட்டபோது,. சிறுவயதிலிருந்தே நூல்கள் வாசிப்பதில் அதிக ஆர்வம் இருந்தது. சில வருடங்களுக்கு முன் எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அதன் பின் மூன்று மாதங்கள் கழித்து தூங்கும் போது அழுத்தம் ஏற்படும் ஓர் அனுபவத்திற்குப் பின் அதுவரை நான் எழுதியே இராத புதிய வகையான தமிழ் மொழியில் கவிதைகள் எழுதத் தொடங்கினேன். அதில் முதல் கவிதை செய்தித் தாளின் மேற்புறம் இருக்கும் வெள்ளை இடைவெளியில் நீளமாக எழுதிக் கொண்டே போனேன். அதற்கு முற்றுப் புள்ளியே இட முடியாத வகையில் அது நீண்டு கொண்டே போனது. நனவிலி நிலையில் கவிதைகள் தோன்றும், அப்படியே அவற்றை எழுதி வைத்துவிடுவேன். இப்படி பல கவிதைகள் எழுதிய பின்னும் அவற்றைப் பிரசுரிக்க எனக்கு மனமில்லை. அதனால் சில வருடங்கள் கழித்து ஒரு வலைப்பூவைத் தொடங்கி அவற்றைப் பதிவிட்டேன். சங்க இலக்கியம் போன்ற சொற் பிரயோகம் இருப்பதாகப் பலரும் அவற்றைப் பற்றிக் கருத்து கூறினார்கள். ‘அன்பின் ஆறாமொழி,’ உளம் எனும் குமிழி,’ என்ற இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. ”

ஆங்கிலக் கவிதைகளும் எழுதத் தொடங்கினேன். நான் அதிகமாக ஆங்கிலக் குறுங்கதைகள் வாசிப்பேன். அதனால் குறுங்கதைகள் எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. மேலும் சிறுவயதிலிருந்தே கதைகளுக்கான குறிப்புகளைச் சேகரித்து வைத்திருந்தேன். அவற்றை வைத்து குறுங்கதைகள் எழுதி சமூக ஊடகங்களில் வெளியிட்டேன். அதனைப் பலரும் ஆர்வமுடன் வாசித்து என்னை ஊக்கப்படுத்தினார்கள். ‘நூறு புராணங்களின் வாசல்என்ற குறுங்கதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. அதன் அடுத்த பாகமாக மேலும் நூறு குறுங்கதைகளின் தொகுப்பும் வரவிருக்கிறது. குறுங்கதைகள் எழுதுவதற்கு நான் படித்த வேற்றுக்கிரகவாசிகள் குறித்த பல தகவல்கள் பயன்படுகின்றன.”


படைப்பாக்கத்தில் இதுவரை நான் ஏற்ற இறக்கங்கள் என எவற்றையும் சந்திக்கவில்லை. தொடர்ந்து கவிதைகள் எழுதுகிறேன். குறுங்கதைகளை எழுதுகிறேன். நெடுங்கதைகளையும் எழுதும் முயற்சி இருக்கிறது. நெடுங்கவிதைகளையும் எழுதி வைத்திருக்கிறேன். ஏற்றங்கள் என்றால் திரைப்படத்திற்குக் கதை எழுதும் வாய்ப்பு வந்திருக்கிறது. இறக்கம் என்று இதுவரை எதுவும் ஏற்படத்தில்லை.

என் படைப்புகளை இரவு நேரங்களில் மட்டுமே எழுதுகிறேன். அதனால் அதிகமான படைப்புகளை எழுத முடிகிறது.  பகல் நேரங்களில் ஆய்வுக்குத் தேவையானவற்றை வாசிப்பது, எழுதுவது என்பதுதான் பொதுவாக என் பணி.

இவரது கவிதைகள் வித்யாசமான பாணியில் அமைந்தவை. அது குறித்துக் கேட்டபோது, “எனக்கு கவிதையில் வாய்க்கும் மொழி குறித்து என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனெனில் நான் இத்தகைய கவிதைகள் எழுதத் தொடங்கும் போது சங்க இலக்கியத்தைத் தீவிரமாக வாசித்ததில்லை. ஆனால் உள்ளுணர்வு குறித்த ஆய்வும், நனவிலி குறித்த ஆய்வும் எனக்கு எழுதுவதில் அதிகமாக உதவுகின்றன. குறுங்கதைகள் எழுதுவது எனக்குப் புதியதாக இருக்கிறது. இதுவரை நான் வாசிக்காத வகையிலான கதைகளாக அவற்றை எழுதவேண்டும் என்பதுதான் எனக்கு ஒரு சவாலைத் தருகின்றன.”

”தடைகள் என்றால் இவற்றை நூலாக்கம் செய்வதில் சிறிய தடைகள் இருந்தன. இணைய நண்பர்கள்தான் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டார்கள். குறுங்கதைகளும் அவ்வாறுதான் வெளியிட முடிந்தது. நான் யாரிடமும் நூலாக்கம் பெறுவதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை. என் படைப்பாக்கங்களுக்கு எத்தகைய வரவேற்பு இருக்கும் என்பதை என் பதிப்பாளர்கள் முடிவு செய்யவேண்டும் என நினைக்கிறேன். அதனால் அவர்கள் விரும்பினால் அவர்களே அணுகுவார்கள் என்று காத்திருக்கிறேன். ”

நான் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதுகிறேன். எனக்கு சங்க இலக்கியம், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள் இவை எல்லாமே மிகவும் பிடிக்கும். அவற்றை இப்போது தொடர்ந்து வாசிக்கிறேன். அது தவிர நவீன இலக்கிய புதின ஆசிரியர்கள் பலருடைய படைப்பாக்கங்களையும் வாசித்திருக்கிறேன். அதே போல ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்ட வேற்று மொழிகளிலுள்ள பல நவீன, பின்நவீன படைப்பாளர்களின் ஆக்கங்களையும் வாசிப்பதில் ஆர்வம் அதிகம். சங்க இலக்கிய பாடலாசிரியர்கள் எல்லோருமே எனக்கு முன்னோடிகளாகக் கொள்கிறேன். ”

இவரை வாழ்த்திய பிரபலங்கள் பற்றிக் கேட்டபோது “நீதியரசர் திரு.மகாதேவன் எனக்குப் பெரும் ஊக்கத்தைக் கொடுத்தவர். அவர் என் எழுத்துகளைத் தொடர்ந்து வாசிப்பவர். எழுத்தாளர் வாஸந்தி அவர்கள் என் எழுத்துகள் மீது பெரும் பற்றைக் கொண்டிருக்கிறார். எழுத்தாளர் அம்பை அவர்களும் என் எழுத்துகள் மீது ஆர்வம் கொண்டவர். எழுத்தாளர்கள் தமிழவன், ஜமாலன் போன்றவர்கள் என் எழுத்தை வாசித்து ஆக்கப் பூர்வமான கருத்தை வழங்கியிருக்கிறார்கள். இயக்குநர் ஞான ராஜசேகரன் அவர்களும் என் எழுத்தைக் குறித்து நல்லதொரு விமர்சனத்தைக் கொடுத்திருக்கிறார். சமீபத்தில் நடிகர் நாசர் அவர்கள் என் உரையைக் கேட்டு மிகவும் ஊக்கம் கொடுக்கும் கருத்தைச் சொன்னார்.  இயக்குநர் ரஞ்சித் அவருடைய திரைப்படத்தைக் குறித்து நான்  எழுதிய கட்டுரையைப் பாராட்டியதும் ஊக்கம் கொடுத்த ஒன்று. என் எழுத்துகளைத் தொடர்ந்து வாசித்து ஆதரவு கொடுக்கும் கவிஞர்-பேராசிரியர் தமிழன்பன் ஐயா, சாகித்ய அகாடமியின் முன்னாள் செயலாளர் திரு.இளங்கோவன் ஐயா,  பேராசிரியர் ராஜராஜேஸ்வரி போன்ற பலரைச் சொல்லலாம்.


இவரது எழுத்தின் நுணுக்கம் பற்றிக் கேட்டபோது “பல வகையான தத்துவங்களை அறிவதிலும் அவற்றைக் குறித்து தொடர்ந்து சிந்திப்பதிலும் எழுத்தில் நுணுக்கம் ஏற்படுவதாக நான் நம்புகிறேன். அது தவிர எல்லாத் துறை குறித்த அறிமுகமும் எழுத்துக்கான அடித்தளத்தை உருவாக்குகிறது. மேலும் நுட்பமாகவும் நுணுக்கமாகவும் சிலவற்றை எழுத்தில் கொண்டு வர பல இலக்கியங்களை வாசித்தல் அவசியம் என்றும் கருதுகிறேன். எழுத்தின் முக்கியத்துவம் என்பது அதை வாசித்த பின் சிந்தனையை மாற்றி அமைக்கவேண்டும். அத்தகைய சிந்தனையை மாற்றி அமைக்காத எழுத்து வாசகர்களுக்குச் சவாலாக இருக்க முடியாது. எல்லா வாசகர்களிடமும் படைப்பு மனம் இருக்கும். அதனைத் தூண்டும் விதமான எழுத்துகளை எழுதுவதைப் பெரிதும் விரும்புகிறேன். ”

புதிதாக எழுத வருபவர்களுக்கான ஆலோசனையாக “படைப்புகளை எழுதுவதற்கு யாரும் எந்த மனத்தடையும் கொள்ள வேண்டியதில்லை. இப்போது வலைப்பூக்கள் இருக்கின்றன, சமூக ஊடகங்கள் இருக்கின்றன. அவற்றில் தொடர்ந்து எழுத்துகளைப் பதிவிடலாம். காணொலிகள் வாயிலாக வாசகர்களையும், நேயர்களையும் சென்றடையலாம். இணையத்திலேயே நூல்களைப் பதிப்பிக்கலாம்.”

இவரது நூல்கள் பற்றிக் கேட்டபோது “காணொலி மூலமாக என் எழுத்துகளையும் கருத்துகளையும் பகிரவேண்டும் என்ற ஒரு திட்டம் இருக்கிறது. இரண்டு கவிதைத் தொகுப்புகள், குறுங்கதைத் தொகுப்புகள் தவிர ஒரு கட்டுரைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. தமிழில் நான் மொழிபெயர்த்தகுறியியல்குறித்த நூல் விரைவில் வெளியாகவிருக்கிறது. ஆங்கிலத்தில் என் கவிதைகள் சர்வதேச அளவிலான பெண்களுக்கான கவிதைத் தொகுப்புகளில் இடம்பெற்றிருக்கிறது. ஆங்கிலத்தில் என் கட்டுரை சர்வதேச பதிப்பகம் சார்பாக வந்த நூலில் பிரசுரமாகியிருக்கிறது.

எனக்குத் தெரிந்த தத்துவங்களை அனைவருக்கும் புரியும்படி விளக்கவேண்டும் என்பது என் ஆவல். கடவுள் முருகனின் தோற்றவியல் குறித்த ஓர் ஆய்வைச் செய்து வருகிறேன். அதை முழுமையாக்கவேண்டும் என்பது என் இலக்கு. அது தவிர, அறிவியல் துறையில் சில புதிய பரிமாணங்களை அடையும் ஆய்வுகளை செய்யும் இலக்கு இருக்கிறது.

இத்துறையில் எதிர்கொண்ட லாப நஷ்டங்கள், இதன் எதிர்காலம், பணி வாய்ப்புப் பற்றிக் கேட்டபோது தமிழில் படைப்பாக்க நூல்களுக்குப் பெரும்பாலும் எந்த ஒரு தொகையும் தருவதில்லை. அது போன்ற பழக்கம் பதிப்பாளர்களிடம் இல்லை. ஆனால் தொடர்ந்து நூல்கள் வரவேண்டும் என விரும்புபவர்கள் விற்பனையான நூல்களுக்கான ராயல்டி தொகையை எதிர்பார்க்கக்கூடாது என்பது தமிழின் எழுதப்படாத விதி. ”

”ஆய்வுத் துறையில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. முனைவர் பட்ட ஆய்வு முடித்த பின் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தொடர்ந்து ஆய்வு செய்யலாம். பணி வாய்ப்பைப் பெறலாம்.முதுமுனைவர் பட்ட ஆய்வைச் செய்யலாம். அதற்கான கொடைகளும் இருக்கின்றன. பல நிறுவனங்களில் புதிய ஆய்வுத் திட்டங்களைச் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ”

இது தொடர்பாகக் கிடைத்த விருதுகள், பரிசுகள், முக்கியஸ்தர்களின் வாழ்த்துகள், மேற்கொண்ட பயணங்கள் பற்றிக் கேட்டபோதுஎன் படைப்பாக்கத்திற்காகஅன்னம்விருதைப் பெற்றிருக்கிறேன். என் விமர்சன நூலுக்காக சிறந்த விமர்சகருக்கானமேலும்விருதைப் பெற்றிருக்கிறேன். இந்த விருதுகளுக்காகவும் என் எழுத்துகளுக்காகவும் முன்னாள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ராஜேந்திரன் அவர்கள் என்னை வாழ்த்தியதையும் பேராசிரியர் நாச்சிமுத்து அவர்கள் வாழ்த்தியதையும் பெருமையாகக் கருதுகிறேன். என் தோழியும் பேராசியருமான அரங்க.மல்லிகா என்னை எப்போதும் வாழ்த்துவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

”சர்வதேச கருத்தரங்கங்களில் என் கட்டுரையை வாசித்து வெளிநாட்டுப் பேராசிரியர்கள் திரு. டேனியல் ஸ்மித் அவர்களும் திரு.அலெக்ஸ் டீக் க்வாங் லீ அவர்களும் எழுதிக்கொடுத்த கருத்துகள் எனக்கு மிகவும் பெருமை அளித்த நிகழ்வுகளாக இருக்கின்றன. அதற்காக என் கல்லூரியில் சிறந்த மாணவிக்கான அங்கீகாரம் கிடைத்ததும் எனக்கு மிகவும் மகிழ்வைக் கொடுத்த நிகழ்வுகள். பெனிசில்வேனியாவிலிருந்து வந்த பேராசிரியர் அமந்தா வீட்மேன் அவருடைய ஆய்வுக்கு நான் செய்த உதவிக்காக எனக்குத் தன் நூலில் நன்றி சொல்லியிருப்பதும் எனக்குப் பெரும் மகிழ்வைக் கொடுத்தது. அவர் எனக்கு இரு ஆய்வுத் திட்டங்களைக் கொடுத்திருக்கிறார். அதை நான் செய்து கொண்டிருக்கிறேன்.”

”சாகித்ய அகாடமிக்காக போபாலில் தமிழகம் சார்பாக நடந்த கவியரங்கத்தில் பங்கெடுத்தது மிகவும் அருமையான பயணமாக அமைந்தது. செகந்திராபாதிலுள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கத்தில் பங்கெடுத்ததும் அங்கிருக்கும் அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் நூலகத்திற்குச் சென்றதும் மறக்க முடியாத பயணங்கள். டெல்லியில் ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் சர்வதேச மாநாட்டில் பங்கெடுத்ததும் மிகவும் முக்கியமான கருத்தரங்கங்களாக இருந்தன. சென்னையிலும் காரைக்குடியிலும் மலேசிய கவிஞர்களுடன் கவியரங்கத்தில் பங்கெடுத்தது நினைவில் நிற்கும் அனுபவங்களாக இருக்கின்றன.”

சாகித்ய அகாடமிக்காக மதுரை லேடி டோக் கல்லூரி, மன்னார்குடி செங்கமலத்தாயார் கல்லூரி, சென்னை இந்துக் கல்லூரி போன்ற இடங்களில் தமிழிலும் டெல்லியில் ஒரு முறை ஆங்கிலத்திலும் இணையத்தில் இரு முறையும் உரையாற்றி இருக்கிறார். தத்துவவியலாளர்கள் டெல்யூஜ்-கத்தாரி குறித்த சர்வதேச கருத்தரங்களில் மும்பை, டெல்லி, சென்னை ஆகிய இடங்களில் ஆங்கிலத்தில் கட்டுரை வாசித்திருக்கிறார். மைசூரில் த்வன்யலோகா நிறுவனத்தில் ஒரு சர்வதேச கருத்தரங்கத்தில் ஆங்கிலத்தில் உரையாற்றியிருக்கிறார். லயோலா கல்லூரி, எத்திராஜ் மகளிர் கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரி, புதுக்கல்லூரி ஆகிய கல்லூரிகளில் தேசிய கருத்தரங்கங்களில் ஆங்கிலத்தில் கட்டுரைகள் வாசித்திருக்கிறார்.

தொடர்ந்து இணையத்தில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றி இருக்கிறார். இவரை இரு முறை பொதிகைத் தொலைக்காட்சி நேர்காணல் செய்திருக்கிறது. தனியார் தொலைக்காட்சியான மிர்ச்சியும் இவரை நேர்காணல் செய்திருக்கிறது. அகில இந்திய வானொலியும் நேர்காணல் செய்திருக்கிறது.இவரது நேர்காணல் ஒன்று எழுத்தாளர் எஸ்.சண்முகத்தால் நூலாக்கம் செய்யப்பெற்றிருக்கிறது.

இவர் செய்த சிறப்புப் பணி 40 பெண் கவிஞர்களின் கவிதைகளை வாசித்து அவர்களின் படைப்புலகம் குறித்து 40 நூல்களை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர்களின் கவிதைகளைக் குறித்து மதிப்புரையாக 40 கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ( சிறப்புத் தகவல் என்னவென்றால் இவர் டிவி பிரபலம் நிஜந்தன் அவர்களின் சகோதரி என்பது J )

2 கருத்துகள்:

  1. மிக்க நன்றி தேனம்மை லெட்சுமணன். உங்கள் முயற்சியால் இந்த நேர்காணல் பிரசுரமானது. தொடர்ந்து நீங்கள் இந்த வகையில் இயங்குவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி முபீன்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)