செவ்வாய், 24 ஜனவரி, 2023

பனிக்குடம் - ஒரு பார்வை

 

பனிக்குடத்தில் இன்னுமொருமுறை தோய்ந்து பிறந்தேன்


ஜெர்மனியின் ஷோலிங்கனில் நான் சந்தித்த இலக்கிய முத்து கௌசி. அங்கே தாய்மையோடு எங்களுக்கும் விருந்தோம்பினார்கள் கௌசியும் அவர் கணவரும் மகளும். அதன் முன்னரே வலைப்பூ எழுத்துக்களில் கௌசியின் பல்பரிமாணங்கள் கண்டு வியந்திருக்கிறேன். செய்திகளையும் வித்யாசமான சிறுகதைகளாக்கும் அவர் பாணி என்னை ஆச்சர்யப்படுத்தியதுண்டு. அவரின் இத்தொகுப்பில் மகளாய், இளம் மனைவியாய், தாயாய் உணர்ந்தேன். அவரின் எழுத்துக்கள் நம் உள்ளத்தோடு பேசுகின்றன. அதுவே அவரின் எழுத்தாற்றலுக்குச் சாட்சி. தொய்வில்லாத மன ஓசையின் வெளிப்பாடு. எதுகை மோனை சந்தத்தோடு புதுக்கவிதையிலும் எடுத்தி இயம்பி இருப்பது சிறப்பு. அவர் எழுத்துக்கள் பற்றித் தெரிந்திருந்தும் இது ஒரு எதிர்பாரா வாசிப்பனுபவம். இன்ப அனுபவம்.  

பலரைத் தோற்கடித்து எனக்குள்
உரிமையுடன் நுழைகின்றாய் நீ

என்ற வரிகளில் குழந்தை உருவாகும் போது ஏற்படும் அறிவியல் போராட்டத்தை அறவியலுடன் எடுத்தியம்புகிறார் கவிஞர். உடல் மாற்றங்களில் மார்பகங்கள் மெல்ல வீங்கி மகவுக்கு உணவு தயாரிக்கும் என்று கூறியுள்ளது அனுபவ அற்புதம்.

நம்மின் சிறு பதிப்பு குழந்தை என்பதை என் மறுபிறப்பாய் உன் தந்தையின் மறுபிறப்பாய் என அழகாகச் சித்திரப்படுத்தி உள்ளார். இதை இன்னொரு விதமாகவும் சொல்லலாம். பிள்ளைப் பேறு என்பதே மறுபிறப்புத்தானே. கணவனும் மனைவியும் பிள்ளை பிறந்தபின் தந்தையும் தாயுமாய் இன்னொருபிறப்பு எடுக்கிறார்கள்தானே.

குழந்தை உருவானதும் இருவரும் நெகிழ்வது அழகு. என் பரிசத்தில் உன் பரிசத்தை உணர அப்பா என்று மனதுள் இசைக்கின்றார்!. வரும் குழந்தை உலகுக்கு சூரியனாய் உதித்துப் பணி செய்ய வேண்டும் என்ற பேராவல் தாய்க்கு.

அண்டத்தில் இருப்பதே பிண்டத்தில் இருக்கிறது என்பார்கள். கௌசியின் கவிதைகளில் அண்ட இருட்டிலும் தாயின் சுவாசத்தையே தாலாட்டாகக் கொண்டு குழந்தை ஜீவிக்கிறது. குழந்தை வயிற்றுக்குள் அடித்தாலும் உதைத்தாலும் ஆக்கினைகள் செய்யும் இன்பத்தை ஒரு தாயாக உரைக்கும்போது அதைப் படிக்கும் என்னைப் போன்ற பல தாய்கள் அந்தப் பேரின்பத்தை நினைவில் கொண்டு மகிழ்வார்கள்.

ஒரு குழந்தையின் வரவால் உணவுக் கட்டுப்பாடு, கடவுள் வழிபாடு என ஒரு தாய் தெய்வீக நிலைக்கு உயர்ந்துகொண்டே செல்கிறாள். சுகமாய்ச் சுமப்பதால் வலியும் கூட சிரிக்க வைக்கிறது ஆனந்தத்தில். நம்மின் சிறு உருவாகப் பத்து மாதம் கர்ப்பத்தில் கை கூப்பி வணங்கித் தாயிடம் கற்றுக்கொள்ளும் குழந்தையை கௌசி விவரிக்கும்போது மனம் பெருமிதத்தால் பொங்குகிறது.

கருவறை அமைதி ஆனந்தம் உண்மையில் அந்தப் பேரின்பம் எங்குமே கிட்டுவதில்லை. உந்தி உந்தி வெளியேற கழுத்தைச் சுற்றும் காலனாய் உணவுக்குழாய் தடுக்கக் கத்தியால் தாயையும் சேயையும் பிரித்தெடுக்கிறார்கள் மருத்துவர்கள். என் மகவுகளையும் ( உணவுக்குழாய் சுற்றவில்லை ஆனால் ) இப்படிக் கத்தியால் பிரிக்கப்பட்டுப் பெற்றதால் அதன் வேதனையை என்னால் முழுவதுமாய் உணர முடிகிறது. குழந்தையின் குரலின் வசீகரம் அனைத்தையும் மறக்கடிக்கிறது.

வாழ்க்கை தலைகீழாய் மாறுவதையும் பிரம்மாண்டப் பிரச்சனைகளை குழந்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் கவிஞர் விவரித்திருக்கும் விதம் கண்டு பிரமித்தேன். தாய் தந்தையின் ஸ்பரிசம், மணத்தை நுகரும் குழந்தையும், அதற்குப் பசித்தால் பால் சுரக்கும் தாயும், எட்டி எட்டி நடை போட்டு எட்டாத உயரம் போகும் குழந்தையும், பிரபஞ்சத்தைத் தன்னோடு இணைப்பதற்குக் குழந்தை பேசும் அம் மும் வெகு அழகு.

பருவ மாற்றத்தால் பச்சிளங்குழந்தை பருவக் குமரி ஆனதும், அவள் மாற்றத்தை உலகம் படம் பிடிப்பதும், மகள் என்னும் உலகைச் சுற்றி இருக்கும் ஓஸோன் படலமாயிருக்க விரும்புவதும், ஒரு தாயாய் விவரித்திருக்கும் விதம் சிறப்பு.

தன் தாயின் சிறப்பாக தாயின் கரங்களே பொற்கரண்டி என்றும் சேலைத்தலைப்பின் நறுமணத்தையும், அவர் சமைக்கும் கறிச்சுவையின் அறுசுவையும் அமுது என்றும் ரசித்துக் கூறி இருக்கிறார். 

தாயாய்த் தான் வடிக்கப்பட்டதையும் வார்த்தெடுக்கப்பட்டதையும் ஒரு இளம்பெண்ணாகவும் கூறி இருக்கிறார். சேர்க்கை என்னைச் சிந்திக்க வைக்கும், நூல்கள் எனக்கு வழியைக் காட்டும் எனப் புதுமைப்பெண்ணாய் ஆயுதமாய் எழுத்தைத் தெறிக்க விடுகிறார். இதில் மூட நம்பிக்கைகளை ஆய்வுக்கூடத்தில் கழுவ வேண்டும் என்ற வார்த்தைகள் பெரிதும் சிந்திக்க வைத்தன.

விவேகானந்தரின் வரிகளான தனித்திரு விழித்திரு என்பதையும் கவிதையுள் அழகாகக் கொண்டு வந்துள்ளார். பெண்ணாய்ப் பிறந்ததால் விட்டுக்கொடுப்புகளோடும் தடைகளோடும் சமரசங்களோடும் வாழ நேர்வதையும் கோபத்தோடு சுட்டியிருக்கிறார். அடுத்து இளமைப் பருவத்துக்கே உரித்தான காதல் உணர்வுகளைப் பாடு பொருளாக்கி அதில் என் அருகே மிருகமா, அன்பு மனிதனா என்றும், பெண்மையை இழந்து தாய்மையைப் பெற்றதும், அழுகின்ற போது ஆறுதல் செய்வதும், அதன்பின் அன்பினால் ஆளுமை செய்வதும், இருமனம் கூடிய திருமணம் தந்த பரிசு. அதை இவரின் வார்த்தைகளில் படிக்கும் போது நமக்கும் நெகிழ்வு.

என் உடல் ஒரு அருங்காட்சியகம்
என் மனம் ஒரு சோதனைக் கூடம்
இயற்கையின் படைப்புகள் எத்தனையோ
அத்தனையும் பேரழிவுகளையும் தருகின்றன.

என அபாரமான வார்த்தை வீச்சு. கவிஞர் எல்லாத் துறைகளிலும் துறைபோகியவர் என்பதற்கு இந்த மொத்தத் தொகுப்பும் அதில் இந்த வரிகளுமே சான்று. அண்டத்தையே பனிக்குடமாக்கும் வித்தை கைவருகிறது இவருக்கு.

பெண்மனதின் புலம்பல்களும், தவிப்புகளும், தவறுகளுக்குத் தானே பொறுப்பேற்பதும் அத்துடன்

அனைத்துமாய் நானிருக்க
அவதாரம் பலவாறாக நானிருக்க
உன்னை மிஞ்சி நான் இருக்க மட்டும்
உனக்கு இஷ்டமில்லை

என உண்மையை அதிரடியாய்ச் சுட்டிக் காட்டுவதும் கம்பீரம். அதேபோல் தன்னைத் தானே வடிவமைத்துத் தன்னைத் தானே ஏற்றுக் கொள்ளுதல் என உளவியல் பாடத்தையும் தன்னம்பிக்கையையும் போதிக்கிறார்!. பெண்களின் மனபலம் பற்றி உரைப்பதும் ஆணுக்கான அறிவுறுத்தலும் நெஞ்சுரம் தருகின்றன.

முதுமை பற்றிய சித்திரம் அடுத்தது. போற்ற வேண்டிய பொக்கிஷம் முதுமை என்னும் வலிமை, கண் இமைகளால் கைதட்டல் கொடுப்பது, அற்புத சக்தியாக ஒவ்வொருவருக்குள்ளும் ஆட்சி செய்யும் தாய், பூச்சிகளுக்கும் உணவூட்டும் தாயின் நற்செயல்கள், தாயின் கைத்தடியாய் மாறவேண்டும் என்ற ஆசை, வான் துகளாக வழி நடத்தி வாழ்த்திக் கொண்டிருக்கும் தேவதை, ஆறாயிரம் கோடி செல்களில் மிஞ்சி இருப்பவற்றுள் ஆட்சி செய்யும் இறை துகளை இறைஞ்சி இன்னும் சில காலம் அவள் தன்னுடன் வாழும் வரம் தரவேண்டும், என் உயிர்மெய் தந்தவள், நம் எல்லா உணர்விலும் வெளிப்படும் வார்த்தை அம்மா எனத் தாயின் மீதான அபரிமிதமான அன்பை எழுத்தில் காவியமாக வடித்துள்ளார் கௌசி.

மிக அருமையான இந்தக் காவியத்தைப் படித்துப் பெருமிதத்திலும் பூரிப்பிலும் அன்பிலும் பாசத்திலும் நனைத்து விம்மிக் கிடக்கின்றேன் நான். உலகின் முதல் அன்பை எழுத்துக்களில் படைத்த கௌசிக்குப் பேரன்பும் முத்தங்களும்.

இனி அவரின் வார்த்தைகளிலே, 

நடந்தேன் வாழ்க்கைப்பாதை தோறும்
நலமே தோன்றுமென நல்லெண்ணங்கொண்டே

என்று நவில்கிறேன் முத்தாய்ப்பாய்.!

3 கருத்துகள்:

  1. புத்தக விமர்சனம் அருமை

    பதிலளிநீக்கு
  2. நன்றி மணி மேம்

    நன்றி

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)