புதன், 4 ஜனவரி, 2023

பாத யாத்திரையும் பக்தி இலக்கியமும்

 பாத யாத்திரையும் பக்தி இலக்கியமும்


நான்கு யுகங்களில் கலியுகமே பக்திமார்க்கத்திற்குப் பெருந்துணை
புரிகின்றது. கிருதயுகத்தில் கடவுளை அடையக் கடுந்தவம் புரியவேண்டும்.
ஊசிமுனை, நெருப்பு ஆகியவற்றில் நிற்றல் என.  திரேதாயுகத்தில் மாபெரும்
அளவிலும் பொருட்செலவிலும் தானம், யாகம், வேள்விகள் செய்து கடவுளை
அடைந்தார்கள். துவாபர யுகத்தில் அர்ச்சனை செய்தல் மந்திரம் சொல்லுதல்
ஆகியன கடவுளை அடையும் வழி.  ஆனால் கலியுகத்தில் நாம சங்கீர்த்தனத்தால்
இறைவனை அடையலாம். 

இறைவனின் திருப்பெயரையும் திருநாமங்களையும் உச்சரிப்பதன் மூலமே கடவுளை அடையலாம் எனக் கூறப்படுகிறது. பல்வேறு திருத்தலங்களிலும் ஆன்மீகச் சொற்பொழிவுகள், நாம சங்கீர்த்தனங்கள் நிகழ்த்தப் படுகின்றன. பக்தி இலக்கியத்தின் பிதாமகன்கள் ஆழ்வார்கள், நாயன்மார்களுமே ஆவர். பதிகங்கள், மற்றும் பிரபந்தங்கள் இவற்றுள் பல பதிகங்கள் கடவுள் வாழ்த்தாக முன்னிலையில் பாடிப் பரவித் தொழப்படுகின்றன. பிரபந்தங்கள் அன்பின் ஐந்திணை, கைக்கிளை, பெருந்திணை சார்ந்தவை.

அப்பர் சம்பந்தர், சுந்தரர் மாணிக்க வாசகர் ஆகியோரின் தேவாரம், திருவாசகம்,
திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார்,
பூதத்தாழ்வார் பாடல்கள்,  நாலாயிரந்திவ்யப் பிரபந்தம், தூது, பள்ளு, குறவஞ்சி,
காவடிச் சிந்து, பிள்ளைத் தமிழ், அருணகிரிநாதரின் திருப்புகழ், அண்ணாமலை
ரெட்டியாரின் காவடிச் சிந்து, கும்மி எனத் திருத்தலங்களிலும் இல்லங்களிலும் பாடும் பாடல்கள் இப்போது காவடி பூசை, கார்த்திகை பூசை, வழிநடைப் பயணம் என அனைத்திலும் பாடப்படுகின்றன.

மேலும் பழனி, ஐயப்பன் கோவில் போன்ற திருத்தலங்களுக்குப் பாத யாத்திரை
செல்வோர் பாடும் பாடல்கள் பல தற்போது வெகுஜனங்களாலேயே இயற்றப்பட்டும்
பாடப்பட்டும் இசைக்கப்பட்டும் வருகின்றன. மக்கள் அனைவருமே கடவுளின் முன்
சமம் என இப்பாடல்கள் உணர்த்துகின்றன.இவற்றுள் பல கோயிலுக்குச் செல்லும் வழியிலும் கோயிலைச் சுற்றி வந்தும் கோயிலில் அமர்ந்தும் பாடும் பாடல்கள். 

வழிநடைப்பாடல்கள், ஊர் விவரக்குறிப்புகள், இயற்கைக் காட்சிகள் பற்றிய வர்ணனை, கடவுளையே அருட்பிரசாதமாகக் காணல், கடவுள் திருக்காட்சி வர்ணனை, கடவுள் அவதாரங்கள் பற்றிய வர்ணனை, ஆயுதங்கள், வாகனங்கள், நடனங்கள், இதிகாச புராண நிகழ்வுகள், கதைப்பாட்டுகள், குடும்ப நலன், இகவாழ்வு நலன், இகபரம் அறுத்து மோட்சத்திற்கான வேண்டுதல் என நீள்கிறது பட்டியல்.

பக்தர்கள் கூட்டம் கூட்டமாய்ச் செல்லும்போது கோஷமிட்டபடி உரத்துக்கூறிச்
செல்லும் இசைப் பாடல்கள் எளிய தமிழில் நெகிழ்வாய் அமைந்தவை. எதுகை
மோனையுடன் எழில்மிகு சந்தம் கொண்டவை.

அகவல்,  வெண்பா,  விருத்தம், வருகைப்பத்து, பிள்ளைத்தமிழ், தூது உலா, பள்ளு, தெம்மாங்கு, காவடிச்சிந்து என விநாயகர், முருகன், அம்மன், சிவன், பெருமாள், ஐயப்பன், ஐயனார், கருப்பர், ஆஞ்சநேயர், மீனாக்ஷியம்மன், லெக்ஷ்மி, சரஸ்வதி, துர்க்கை, காளி, பைரவர், நரசிம்மர் ராமர் என அனைத்துக் கடவுளர் மேலும் பக்தி பொங்க யாக்கப்பட்டுள்ளன. 

சில பத்துப்பாக்கள் அமைந்தவை, பழைய யாப்புகளில் தொடங்கி இசைப்பாக்களாகச் சிறப்பு
வடிவமும் பெற்றுள்ளன. பாதயாத்திரைக்காக வருடா வருடம் பக்தி இலக்கியப்
புத்தகங்கள் பல்வேறு சங்கத்தினரால் இலவசமாக வெளியிடப்படுகின்றன. அவை வெகு
ஜனத்தைப் பக்தி இலக்கியத்துக்குள் ஈர்த்து வருகின்றன என்பது உண்மை.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)