திங்கள், 30 ஜனவரி, 2023

வில்லுக்கு விஜயன் என்ற பெயர் வந்தது எப்படி?

 வில்லுக்கு விஜயன் என்ற பெயர் வந்தது எப்படி?


பரசு என்ற ஆயுதத்தைப் பற்றிக் கேள்விப்பட்டால் நமக்குப் பரசுராமர் நினைவில் வருவார்.  வேலைப் பார்த்தால் நமக்கு வேலாயுதனான அழகன் முருகன் ஞாபகம் வருவார். அதேபோல் எத்தனையோ ராஜாதி ராஜாக்கள் வீராதி வீரர்கள் சூரர்கள் வில் சுமந்து நிற்பதைப் பார்த்திருந்தாலும் நமக்கு அர்ஜுனன் மட்டுமே நினைவில் நிற்பது ஏன்? அதிலும் வில்லுக்கு விஜயன் என்ற பெயர் அவனுக்கு வந்தது எப்படி என்பதைப் பார்ப்போம் குழந்தைகளே.

அஸ்தினாபுர அரண்மனையில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் கிருபாசாரியாரும் துரோணாசாரியாரும் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது மன்னர் திருதராஷ்டிரன் முன்னிலையில் இளவரசர்களுக்கான போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அப்படிப் போட்டிகள் நடைபெறும்போதெல்லாம் மல்யுத்தத்தில் பீமனும் வில் யுத்தத்தில் விஜயனும் ஜெயிக்க முடியாதவர்களாக இருந்தார்கள். இதைக்கண்டு கௌரவர்களுக்கு மட்டுமல்ல அவர்களின் தந்தையான மன்னன் திருதராஷ்டிரனுக்குமே பொறாமை கொழுந்துவிட்டு எரிந்தது.


ஒருமுறை இவ்வாறு விஜயன் விற்போட்டிகளில் ஜெயித்தபோது திருதராஷ்டிரன் துரோணரைத் தனியே அழைத்துக் கேட்டே விட்டார். “ அனைத்து இளவரசர்களுக்கும் ஒன்றாகத்தானே அஸ்திர சஸ்திர பயிற்சி அளிக்கிறீர்கள். ஆனால் விஜயன் மட்டுமே வில் வித்தையில் சிறந்து விளங்குவது எப்படி?

இதைக் கேட்டதும் துணுக்குற்ற துரோணர், “ அரசே! எதையும் கூர்ந்து அவதானிக்கும் தன்மை விஜயனிடம் அதிகம் இருப்பதால் அவனே வில் வித்தைகளில் ஜெயிக்கிறான். நான் அனைவருக்கும் சமமாகத்தான் பயிற்றுவிக்கிறேன். ” இவ்வாறு அவர் அரசரிடம் கூறினாலும் மனதிற்குள் அரசர் தன்னைச் சந்தேகிக்கிறாரோ என்ற எண்ணம் வாட்டியது.

வரட்டும். வேளை வரும்போது தன் பயிற்சிகள் பாரபட்சமற்றவை என்பதை அரசருக்கு நிரூபிக்கவேண்டும் என முடிவெடுத்துக்கொண்டார். ஒருமுறை அம்பை எய்து காட்டை எரிப்பது பற்றிச் சொல்லிக் கொடுப்பதற்காகத் தன் மாணாக்கர்களான கௌரவர்களுடனும் பாண்டவர்களுடனும் கானகம் நோக்கிச் சென்றார்.

வழியில் ஒரு ஆற்றுப் பாதை குறுக்கிட்டது. அங்கே அந்த ஆறு சிற்றாறாக ஒருபக்கம் ஓட மணல் பெருமளவில் கிடந்தது. அங்கேயே தன் பயிற்சியை ஆரம்பித்தார் துரோணர். ஆற்று மணலில் காட்டை எரிப்பதற்கான மந்திரத்தை எழுத ஆரம்பிக்கும்போது அவர் விஜயனை அழைத்தார். “ விஜயா என் கமண்டலத்தை ஆசிரமக்குடிலில் வைத்துவிட்டு வந்துவிட்டேன். அதை நீ சென்று எடுத்துவா”


ஆசாரியரின் கட்டளையைக் கேட்ட விஜயன் ’காட்டை எரிக்கும் முக்கியமான பயிற்சியை நான் பெற இயலாதா. ஆசிரியர் கமண்டலத்தை எடுத்துவரச் சொல்கிறாரே. என்ன சோதனை? ‘ என்று மனதிற்குள் வருந்தினாலும் ஆசிரமம் நோக்கிச் சென்றான். அவன் கமண்டலத்தை எடுத்துக் கொண்டு திரும்பி வருவதற்குள் அவர்கள் அனைவரும் ஆசிரியரிடம் மந்திரத்தைக் கற்றுப் பயிற்சி எடுத்து விட்டுக் கானகத்தை நெருங்கி இருந்தார்கள்.

ஆசிரியரிடம் கமண்டலத்தைக் கொடுத்த அவன் “ ஆசாரியரே பயிற்சி முடிந்து விட்டதா ?” என வினவினான். அவரும் ஆம் எனக் கூறிவிட்டுக் கௌரவர்களையும் பாண்டவர்களையும் அன்று கற்ற வித்தையை வைத்து வனத்தை எரிக்கும்படிக் கூறினார். பாண்டவர்களும் கௌரவர்களும் ஒவ்வொருவராக முயன்று மந்திரம் கூறி அம்பைச் செலுத்தியும் வனம் எரியவில்லை. எங்குமே தீப்பிடிக்கவில்லை. மந்திரம் பழுதோ என அவர்கள் நினைக்க துரோணரோ கோபாவேசமாக நின்றிருந்தார். அனைத்தும் வியர்த்தம். அனைவரும் வியர்த்தம் என அவர் வாய்விட்டுச் சொல்லவில்லை அவ்வளவுதான்.


விஜயன் துரோணரிடம் ‘”குருவே நான் இந்த வித்தையை முயற்சிக்கட்டுமா? “ எனக் கேட்டான். இதைக் கேட்டதும் கௌரவர்கள் மட்டுமல்ல. பாண்டவர்கள் நால்வருமே குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கத் தொடங்கினார்கள். பயிற்சி பெற்ற தாங்களே திணறி நிற்கும்போது எந்தப் பயிற்சியையும் பார்க்காத விஜயன் அம்பெய்துவதாவது. வனத்தை எரிப்பதாவது..’ என நினைத்த அவர்கள் சிரிப்பு நின்றபாடில்லை.

ஆனால் துரோணரோ விஜயன் மேல் நம்பிக்கை வைத்து, “ சரி விஜயா.. எங்கே நீ முயற்சி செய் பார்ப்போம்” என்றார். இன்று விஜயன் குருவின் கோபத்தைச் சம்பாதிக்கப் போகின்றான் என்று ஆவலோடு காத்திருந்தனர் அனைவரும். ஆனால் விஜயன் வந்தான் நின்றான். தன் வில்லை எடுத்தான். அதில் அம்பைப் பொருத்தினான். மனதிற்குள் குருவை வணங்கி நெற்றியின் நடுவே வில்லையும் அம்பையும் நிறுத்தி மனதிற்குள் மந்திர உச்சாடனம் செய்தபடி அம்பை எய்தான்.


என்ன ஆச்சர்யம்! அந்த வனம் விஜயனின் அம்பு பாய்ந்ததும் திகுதிகுவெனத் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. பேச்சுமூச்சற்றுப் போயினர் அனைவரும். ” எப்படித் தெரிந்தது இவனுக்கு இவ்வித்தை என அனைவருமே யோசித்தபடி நின்றனர். துரோணர் வியப்புடன் விஜயனிடம் “” உனக்குத்தான் நான் இந்த வித்தையைக் கற்பிக்கவில்லையே. எப்படித் தெரிந்தது விஜயா உனக்கு” எனக் கேட்டார்.

“ஆசாரியரே நீங்கள் ஆற்று மணலில் இம்மந்திரத்தை எழுதிப் பாடம் சொல்லிக் கொடுத்ததைக் கவனித்தபடிதான் குடிலுக்குச் சென்று .இந்தக் கமண்டலத்தை எடுத்து வந்தேன். திரும்பி வரும்போது ஆற்று மணலில் அந்த மந்திரம் அழியாமல் அப்படியே இருந்தது. எனவே அதை மனனம் செய்து கொண்டே வந்தேன். அதனால் இந்த அஸ்திர வித்தையைச் செய்ய முடிந்தது.” என்றான். அனைவரும் தலைகுனிந்து நின்றனர். தன் சீடன் விஜயனின் கூர்ந்த அவதானிப்பையும் எதையும் கவனத்துடன் செய்வதையும் புகழ்ந்து அனைவரையும் பெருமிதத்துடன் பார்த்தார் துரோணர். இதனாலேயே அவனுக்கு வில்லுக்கு விஜயன் என்ற பெயர் வந்தது.

இந்நிகழ்ச்சிமூலம் பாண்டவர்கள், கௌரவர்கள்,, திருதராஷ்டிரனோடு நாமும் கூர்ந்த அவதானிப்பின் மூலம் அசாதாரண விஷயங்களையும் சாத்தியப்படுத்தலாம் என்பதைக் கற்றோம்தானே குழந்தைகளே.

2 கருத்துகள்:

  1. கதை அருமை.....காரணம் இப்போதுதான் அறிகிறேன். இதுவரை தெரியாத கதை. ஒவ்வொரு கிளைக்கதையிலும் எவ்வளவு அர்த்தங்கள். மிக்க நன்றி தேனு.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. தொடர்ந்து வாசிப்பதற்கு நன்றி கீத்ஸ் :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)