செவ்வாய், 17 ஜனவரி, 2023

திரையுலக பிரம்மா, டைரக்டர்களின் டைரக்டர் ஸ்ரீதர்

 திரையுலக பிரம்மா டைரக்டர்களின் டைரக்டர்  ஸ்ரீதர்

 


இத்தாலியின் ட்ரிவி ஃபவுண்டனுக்கும் கொலோசியத்துக்கும் போனபோது கூட நாங்கள் ரொம்ப ஆர்ப்பரிக்கவில்லை. ஆனால் டிட்லிஸ் சிகரத்துக்குப் போனவுடன் டூர் கைடைத் துளைத்தெடுத்து விட்டோம், “ ஆல்ப்ஸ் மலை எது என்று ?” ”அதன் ஒரு சிகரத்தில்தான் நீங்க இப்போ காலடி எடுத்து வைச்சிருக்கீங்க” என்றார் கைட். அட ! என்று வெள்ளிய மேகம் அள்ளி வழங்கிய வெள்ளைப் பூக்களில் துள்ளிக் குதித்தோம். பின்னே ”ஒரு ராஜா ராணியிடம்” என்று சிவந்த மண்ணில் சிவாஜி காஞ்சனாவைப் பார்த்துப் பாடிய பாட்டில் நாங்கள் இதை எல்லாம் குழந்தைப் பருவத்திலேயே பார்த்திருந்தோமே. அப்பேர்ப்பட்ட சினிமா சரித்திரத்தில் இடம்பெற்ற இடத்தில் காலடி வைத்தது எங்களுக்கு நிலவில் இறங்கியது போலிருந்தது. ( பனியின் அடர்த்தியும் காரணம் J

 

தனவணிகனில் சினிமா கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு சிறு பிள்ளையில் சினிமா என்றாலே பயம். வீட்டில் அனைவரும் லெக்ஷ்மி அக்கா வீட்டில் விட்டுச் சென்றுவிட அந்த அக்காவோ என்னை ஒரு சினிமாவுக்குத்தான் கூட்டிச் சென்றார். “ நேத்துப் பூத்தாளே ரோஜா மொட்டு” என்று திரையில் எம் ஜி ஆர் பாட என் விழிகளோ கண்ணீரில் கதை எழுதிக் கொண்டிருந்தன. அதற்குச் சில ஆண்டுகளுக்குப் பின் ”பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்” என் பருவ வயதில் என்னை நனைத்தது. என் கணவரோ அவரது இளமைப் பருவத்தில் “ ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது” என்ற பாடலில் மயங்கியதாகச் சொல்வார். 85 களில் எங்கள் கல்லூரிக் காலத்தில் என் சின்ன மாமா சிதம்பரம் அண்ணாமலை நகரில் தினம் தினம் பார்த்து மகிழ்ந்த படம் ”தென்றலே என்னைத் தொடு”. நன்குபுரிந்த ஒரு விஷயம் என்னெவென்றால் நாங்கள் அனைவரும் வயசு வித்யாசமில்லாமல் ஸ்ரீதரின் படங்களோடு வாழ்ந்திருக்கிறோம்.

 

திரையுலக பிரம்மாக்களில் ஒருவரான இயக்குநர் ஸ்ரீதர் மதுராந்தகம் அருகே உள்ள சித்தாமூரை சேர்ந்தவர். 1933 இல் பிறந்து 2008 இல் மறைந்தார். இளமை & புதுமை இயக்குநர், நவரச இயக்குநர், முக்கோண காதல்கதை இயக்குநர், மனதின் உன்னதங்களை, உறவின் உன்னதங்களைப் படமாக்கிய இயக்குநர் ஸ்ரீதர். ட்ரெண்ட் செட்டர். சில கிளிஷேக்களை உடைத்தார். வசனபாணி நாடகங்கள்தான் சினிமா என்றிருந்ததை மாற்றியவர். ஒளிப்பதிவு, வித்யாசமான காமிரா கோணங்கள், வெகுஜன மொழியில் இயல்பான வசனங்கள் , இதயத்தை உருக்கும் காட்சிகள். ஆபாசமற்ற நகைச்சுவைகள், அழகு நடனங்கள் எனப் பிரமிக்க வைத்தவர்.

 

இவரது பதினேழாவது வயதில் இவர் எழுதிய ரத்தபாசம் நாடகமாகவும் திரைப்படமாகவும் வந்தது மாமன் மகள், மகேஸ்வரி, அமர தீபம், மாதர்குல மாணிக்கம், எங்கள் வீட்டு மகாலட்சுமி, யார் பையன், மஞ்சள் மகிமை, உத்தம புத்திரன் மற்றும் புனர் ஜென்மம் போன்ற படங்களுக்கு வசனம் எழுதி உள்ளார். 1956 இல் வீனஸ் பிக்சர்ஸ் மூலம் சில திரைப்படங்கள் தயாரித்துள்ளார். 1961 இல் சித்ராலயா நிறுவனத்தைத் தொடங்கி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடத்தில் 60 படங்களை இயக்கி உள்ளார்

 

இதயத்துடிப்புப் போல இடைவிடாமல் துடிக்கும் காதல் உணர்வுகளைத் திரையிலிருந்து பார்ப்பவர் இதயத்திற்கு இடம் மாற்றியவர். காதலை ஒரு ஒளிமயமான ஓவியம் போலப் பிரகாசமாகத் தீட்டியவர். இவர் பெயர் திரையில் வரும்போது கைதட்டல்கள் அதிரும். விசில் சத்தங்கள் காதைப் பிளக்கும். கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் திரையுலகைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர். தமிழ் சினிமாவை பிரம்மாண்டமான ஸ்டூடியோ  செட்டிங்குகளில் இருந்து வெளியுலகுக்குக் கொண்டு வந்தவர். தன் காட்சி அமைப்புக்களால் ஆட்சி செய்து தமிழ் சினிமாவை ஹிந்தித் திரையுலகமே திரும்பிப் பார்த்து வியக்கும்படிச் செய்தவர்.

 

என்ன ஒன்று.. கலர்ப்படம் என்ற விளம்பரத்துக்கு ஏற்ப ஈஸ்ட்மென் கலரில் எத்தனை நிறமுண்டோ அத்தனை நிறங்களிலும் ஒரு காட்சியின் அரங்கப் பொருட்கள் இருக்கும். எங்கெங்கு நோக்கினும் கண்ணைப் பறிக்கும் வண்ணங்கள். முக்கோணக் காதல் கதை அம்சம் கொண்டவை. பெரும்பாலும் காதலில் தோல்வியுற்ற கதாநாயகர்கள்.

 

நடிகருக்காகப் படம் பார்த்தவர்கள் இயக்குநருக்காகப் படம் பார்த்தார்கள். அறிவு ஜீவிகளில் இருந்து அன்றாடங்காய்ச்சிகள் வரை இவரது படம் பிடித்தது. மூன்று தலைமுறைகளுக்கான படத்தை இயக்கியவர். சித்ராலயா என்றொரு பத்திரிக்கையைப் பத்தாண்டுகளாக நடத்தி வந்தார். மாதம் இருமுறை வெளிவந்த அதில் சக கலைஞர்களைப் பாராட்டி எழுதி இருக்கிறார்.

 

அன்பு, பாசம், இரக்கம், பச்சாதாபம்,  காதலில் சிக்கிக்கொண்டு அலைபாயும் மனிதர்கள் இவரது கதாபாத்திரங்கள். அதுவரை வெறும் உரையாடல்களால் நடந்த சினிமாவில் மனங்களையும் உணர்வுகளையும் பேச வைத்தவர். காதலின் வித்யாசமான பரிணாமங்களை, குணாதிசயங்களை, முகங்களைப் படைத்தவர். சுயநலம் கொண்ட மனிதர்களுக்கு நடுவில் நல்லவர்கள் அல்லல்படும் கதை. அல்லது சுற்றி இருக்கும் எல்லாருமே நல்லவர்களாக இருப்பவர்கள் அதுவேதான் பிரச்சனையும்.

 

1959 இல் கல்யாண பரிசு தமிழ் திரைப்பட வரலாற்றில் மைல்கல். காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன் பாடல் படு ஹிட். பாடல்கள் இவரது படங்களின் பலம். மனதை இனிமை உணர்வுகளால் பித்தம் கொள்ளச் செய்யும் மெல்லிசையால் ஆனவை. ஸ்ரீதர், எம் எஸ் வி, கண்ணதாசன், ஏ. எம் ராஜா கூட்டணி பல்லாண்டு காலம் கொடி கட்டிப் பறந்தது.


 

உத்தரவின்றி உள்ளே வாவில் காஞ்சனா ரவிச்சந்திரன் ஜோடியின் ”காதல் காதல் என்று பேசக் கண்ணன் வந்தானோ. மாதமோ மார்கழி “ இவை இரண்டும் என் எவர் ஃபேவரைட் பாடல்கள். அவளுக்கென்று ஒரு மனம் படத்தில் ”உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் மங்கையரில் மகராணி, மலர் எது என் கண்கள் தானென்று சொல்வேனடி” மேலும் தேன் நிலவில்’ ஓஹோ எந்தன் பேபி, பாட்டுப் பாடவா, காலையும் நீயே மாலையும் நீயே” ஊட்டிவரை உறவில் “ ஹேப்பி இன்று முதல் ஹேப்பி தேடினேன் வந்தது” “ ராஜ ராஜஸ்ரீ ராஜன் வந்தான் “, போலீஸ்காரன் மகளில் “ நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” அழகே உன்னை ஆராதிக்கிறேனில் “நானே நானா” ஆகிய பாடல்களும்தான். 

 

“சித்திரை நிலவே அத்தையின் மகளே சென்றதை மறந்துவிடு.” என்று ஸ்டைலாக நடந்து வரும் பாலாஜி அதில் முடிவில் வில்லன் என்று தெரியும்போது சிறிது அதிர்ச்சிதான்!. காதலிக்க நேரமில்லையில் ”விஸ்வநாதன் வேலை வேணும்” பாடல் வித்யாசம். உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா, ராஜஸ்ரீ தனிமையில் பாடும் ”அனுபவம் புதுமை” ”நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா” “ ”என்ன பார்வை உந்தன் பார்வை” யென பிரசிடென்ஸி காலேஜும் மெரினா பீச்சின் அலைகளும் கைகோர்க்கும் இடத்தில் முத்துராமனும் காஞ்சனாவும் ஆடுவது ஆனந்த அலைகள்.

 

கண்ணியமான கேரக்டர்களைப் படைத்தவர். வில்லன் கேரக்டரே கிடையாது ! பெண்களை இழிவுபடுத்திக் காட்டியதில்லை, கண்ணியமாகத்தான் காட்டியிருப்பார் என்றாலும் அர்த்த ராத்திரியிலும் சோகக் காட்சியிலும் கூடப் பெண்கள் எடுப்பாகத் தோற்றம் தருவார்கள். அப்போதைய ஹிந்திப் படங்கள் போல டைட் ஃபிட் பைஜாமா, குர்த்தாக்கள்.

 

படம் பேர் வெண்ணிற ஆடை. ஆனால்  படம் முழுவதும் ஜவுளிக்கடை விளம்பரம் போல வண்ண வண்ண ஆடைகள். மேலும் டாக்டர் ஃபுல் & ஃபுல் கோட் சூட்டுடன். பத்தும் பத்தாதற்கு மேஜரும் விடிந்ததும் வீட்டிலேயே கோட் சூட் போட்டிருப்பார். வயதுப் பெண்கள் இரு நிறங்களில் டேப் எனப்படும் ரிப்பன் வைத்து போ கட்டி இருக்க வாழாத பெண்ணின் அம்மாவோ அம்பாரமாய்த் தலையில் பூக்கூடையுடன். இதில் கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல,, அம்மம்மா காற்று வந்து, என்ன என்ன ஆசைகளோ எனப் பாடல்கள் அற்புதம்.

 

நெஞ்சில் ஓர் ஆலயம். ”எங்கிருந்தாலும் வாழ்க, நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால், சொன்னது நீதானா”  பி பி ஸ்ரீனிவாசின் குரலில் சோகப் பொழிவு. கல்யாண்குமார் படம் முழுக்க ரவுண்ட் நெக் ஷர்ட் போட்ட டாக்டர். முன்னாள் காதலியான தேவிகாவின் கணவன் முத்துராமன் ஒரு கேன்சர் பேஷண்ட். அவரைக் காப்பாற்றிவிட்டுத் தமிழ்ப் பண்பாட்டின் காவலராய் டாக்டர் இறப்பது வித்யாசம். இதில் எம் எஸ் வியின் இசையமைப்பில் ஒரு பாடலில் தவளை கத்தும் சத்தம் கூடக் கேட்கும். வித்யாசமான கேமிரா கோணங்கள்.( சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்ற பாடல்).

 

காதலைக் கூறும் அதே கணம் எதிலும் வழுவாமல் பாரம்பரிய விழுமியங்களை நிலை நிறுத்தும் படங்கள். சோகக் கூறுகளும் தத்துவக்கூறுகளும் உண்டு. காதலை ஒரு உன்னதமான உணர்ச்சியாக, இலட்சியமாகக் கொண்டு ஆனால் தியாகங்களின் அடுக்குகளில் மாட்டிக் கொண்டு துயரப்படுவன் சுமைதாங்கி. வெளிப்படையாகச் சொல்வதில்லை. மட்டுறுத்தப்பட்ட உணர்வுகளுடனே வாழ்வார்கள் இவரது கதாபாத்திரங்கள்.

 

சுமைதாங்கியில் ”மயக்கமா கலக்கமா, மனிதன் என்பவன் தெய்வமாகலாம்” எனத் தத்துவப் பாடல்களும் உண்டு. பிரச்சனைகளின் அழுத்தம் தாளாமல் நாயகன் போதகர் ஆன கதை. ஒருவரின் ஆன்மாவிற்குள் இன்னொருவரின் ஆன்மாவைப் புகுத்தியது, நிலை நிறுத்தியது நெஞ்சம் மறப்பதில்லை. காதல் உண்டு ஆனால் ஆக்ரோஷம் கிடையாது. மென்மையான புரிந்துணர்வுள்ள காதலர்கள்.

 

மொத்தத்தில் தியாகமே கருப்பொருள். கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சிருக்கும் வரை, வெண்ணிற ஆடை, அவளுக்கென்று ஒரு மனம், இளமை ஊஞ்சலாடுகிறது. இது அனைத்துமே முக்கோணக் காதல் கதைகள். உடன்பிறந்தவர்களின் தியாகம். டாக்டரின் (முன்னாள் காதலனின்) தியாகம், தன்னை வளர்த்த குடும்பத்தினருக்காகத் தியாகம், சுரண்டல் சுயநலம் மிகுந்த குடும்ப உறுப்பினர்களுக்காக்த் தியாகம் ஆகியன.  காதலின் நம்பிக்கை அற்ற தன்மையின் அபாயத்தையும் சுட்டிக்காட்டியவை அவர் படங்கள். தகுதி அற்ற மனிதனைக் காதலித்த பெண்ணுக்கு நேர்ந்ததை விளக்கியது போலீஸ்காரன் மகள். காதலையும் தியாகத்தையும் தராசில் போட்டு சமமாக நிறுத்துக் கொடுத்துள்ளார். உண்மையான காதல் என்றைக்கும் ஜெயிக்கும் என்ற செய்தியைச் சொல்லின அவர் படங்கள்.மொத்தத்தில் அவர் ஒரு காதல் டிக்‌ஷ்னரி. அவரைப் பற்றி எழுதுவது கமண்டலத்தில் காவிரியை அடக்குவது போலக் கடினமானது. 

 

இவர் அறிமுகப்படுத்திய நடிகர்கள் ரவிச்சந்திரன், காஞ்சனா, ஜெயலலிதா, ஸ்ரீகாந்த், நிர்மலா, மூர்த்தி ஆகியோர் பின்னும் சிறப்படைந்தார்கள்.  நஸ்ரானா, தில் ஏக் மந்திர், பியார் கியே ஜா, கெஹ்ரி சால் ஆகியன அவர் எடுத்த ஹிந்திப் படங்கள். இளமை ஊஞ்சலாடுகிறது படம் தமிழக அரசின் திரைப்பட விருது பெற்றது. கல்யாணப்பரிசு படத்திற்கு சிறந்த படத்திற்கான தகுதிச் சான்றிதம், நெஞ்சில் ஓர் ஆலயம் படத்துக்கு ஜனாதிபதியின் வெள்ளிப் பதக்கம், கலைமாமணி விருது, நஸ்ரானாவுக்கும். தில் ஏக் மந்திருக்கும் பிலிம்பேர் விருது ஆகியன பெற்றவர். பாலசந்தரிலிருந்து அடுத்து வந்த அநேகம் இயக்குநர்கள் இவரையே முன்மாதிரியாகக் கொண்டதாகப் பல்வேறு பேட்டிகளில் கூறி இருக்கிறார்கள். இந்தத் திரையுலகப் பிரம்மாவுக்கு, டைரக்டர்களின் டைரக்டருக்கு, மனித மனதின் உன்னதங்களைப் படைத்தவருக்கு எனது வந்தனங்களும்.




டிஸ்கி:- பானுப்பிரியா பற்றிய கட்டுரையைப் பாராட்டிய குருவிக்கொண்டான்பட்டி வாசகர் திரு மு. சுப. கருப்பையா அவர்களுக்கு நன்றிகள். வெளியிட்ட தனவணிகனுக்கும் நன்றிகள். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)