செவ்வாய், 13 டிசம்பர், 2022

திருநாவுக்கரசனின் வினைப்பயனைத் திருத்திய திருநாவுக்கரசர்

 திருநாவுக்கரசனின் வினைப்பயனைத் திருத்திய திருநாவுக்கரசர்


சிவனை வணங்குவது பூசிப்பது மட்டுமல்ல சிவனடியார்களையும் சிவ ரூபமாகக் கண்டு வணங்கி அமுது படைத்து வணங்கி வந்தார் ஒருவர். அது மட்டுமல்ல சமயக்குரவர் நால்வருள் ஒருவராக அப்பர் பெருமானின் மேல் கொண்ட பக்தியால் பல்வேறு பொது சேவைகளும் செய்து வந்தார் அவர். அதனால் அவர் பெற்ற பிறவிப் பயனையும் அவர் மகனின் வினைப்பயன் நீங்கியதையும் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

சோழ நாட்டில் திங்களூர் என்றொரு ஊர் இருந்தது. அங்கே அப்பூதி அடிகள் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் சிவனை அல்லும் பகலும் பூசிப்பதோடன்றி சிவனடியார்களையும் சிவன்போலவே பாவித்துப் பக்தியும் ப்ரேமையும் கொண்டிருந்தார். அவர்களுள் முதன்மையாக அவர் சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவரான திருநாவுக்கரசரிடம் மிகுந்த அன்பு பூண்டிருந்தார்.

அதனால் அவர் தன் மூத்த மகனுக்கு மூத்த திருநாவுக்கரசு எனப் பெயரிட்டதோடு ஊரில் வேதபாடசாலை, தண்ணீர்ப் பந்தல், அன்ன சத்திரம் ஆகியவற்றையும் நிறுவி திருநாவுக்கரசர் என அப்பரின் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

ஒருமுறை திங்களூருக்கு அப்பர் பெருமான் விஜயம் செய்தார். ஊருக்குள் நுழைந்ததில் இருந்து அவர் ஒவ்வொரு வீதியிலும் அவர் பெயரில் வேத பாடசாலைகள், அன்ன சத்திரங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் ஆகியவற்றைக் கண்டு வியந்தார்.


வழிப்போக்கன் ஒருவனிடம் அது பற்றி விசாரித்தார். அவனோ “ அப்பூதி அடிகள் என்ற ஒருவர் சிவன்மேல் மட்டுமல்ல சிவனடியார்கள் மேலும் பக்தி கொண்டவர். திருநாவுக்கரசர் சமணம் துறந்து சைவத்துக்கு வந்து சிவத்தொண்டு புரிந்து வருவதை அறிந்து அவர் மேல் ஏற்பட்ட கரை காணா அன்பினால் இப்படி அவர் பேரைச் சூட்டிப் பல்வேறு நலத்தொண்டுகள் புரிந்து வருகிறார். வயிற்றுப் பசிக்கு சாதம், ஞானப் பசிக்கு வேதம். அதனால் ஊரே சிவமயம் ஆகிவிட்டது.” என அப்பூதி அடிகளின் நற்பண்புகளைப் புகழ்ந்தான்.

“ஆமாம். நீங்கள் யார் ஐயா?” என வினவினான்.


“என் பெயரும் திருநாவுக்கரசு தானப்பா” என அன்பொழுகக் கூறி அப்பூதி அடிகளின் இல்லம் இருக்குமிடம் பற்றி வினவினார். ”நானே கூட்டிச் செல்கிறேன் ஐயா” எனக் கூறிய அவன் அவரைக் கூட்டிச் சென்று அப்பூதி அடிகளின் வீட்டில் விட்டதோடு அப்பூதி அடிகளிடமும் அவர் இன்னார் என்பதைக் கூறிச் சென்றான். எதிர்பாராமல் நாவுக்கரசரைக் கண்ட அப்பூதி அடிகளும் அவர் மனைவியும் அவர் பாதங்களில் பணிந்து தொழுதார்கள்.  

சாதாரணச் சிவனடியாராக வந்தவர் தன் மனதில் நிறைந்த நாவுக்கரசரே எனத் தெரிந்ததும் அவர் பரவசம் சொல்லில் சொல்லி மாளாது. அவர் சென்ற நேரம் உணவருந்தும் நேரம் ஆகையால் உணவு உண்டு செல்லுமாறு உபசரித்தார் அப்பூதி அடிகள். அப்பர் ஒப்புக் கொண்டதும் அப்பூதி அடிகள் மனம் மகிழ்ந்து தன் மகன் மூத்த திருநாவுக்கரசை அழைத்து தோட்டத்துக்குச் சென்று வாழை இலை பறித்து வருமாறு கூறினார்.

அறுசுவை உணவுகள் மணம் பரப்பிக் கொண்டிருந்தன. இலை பறிக்கச் சென்றவனைக் காணவில்லை. ஏன் இன்னும் தாமதம் எனத் தோட்டத்துக்குச் சென்று பார்த்தனர் அப்பூதி அடிகளும் அவர் மனைவியும். பார்த்தால்.. பறித்த இலையோடு நச்சரவம் தீண்டி நீலம் பாரித்து வீழ்ந்து கிடந்தான் மண்ணில்.. மனம் நடுங்கியது அப்பூதி அடிகளுக்கும் அவர் மனைவிக்கும். கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

செய்வதறியாமல் கைகளைப் பிசைந்தவாறு ஒரு கணம்தான் நின்றனர். சிவனடியார் பசியோடு காத்திருப்பாரே என எண்ணிய அடுத்த கணம் அவர்கள் தங்கள் மகனைப் பாய் ஒன்றில் சுருட்டி மறைத்து வைத்துவிட்டு வேறொரு இலை ஒன்றைப் பறித்துச் சென்று அறுசுவை உணவுகளைப் பரிமாறினர்.

தலை வாழை இலையின் முன் அமர்ந்தார் அப்பர். ”எங்கே உங்கள் மகன். நேரமாகிவிட்டதே. சிறுகுழந்தைக்குப் பசிக்குமே, அவனும் என்னுடன் உணவருந்தட்டும். கூப்பிடுங்கள்” என வினவினார். சிவனடியார் சாப்பிடாமல் போய் விடுவாரோ என நடு நடுங்கிப் போய் அப்பூதி அடிகளும் அவர் மனைவியும் நா தழு தழுத்தபடி அவர் முன்னே நெடுஞ்சாண் கிடையாக விழுந்து உண்மையைக் கூறினார்கள்.


“ என்னது நச்சரவமா.. எங்கே நான் பார்க்கிறேன்” என்றபடி எழுந்து சிறுவனின் உடலைத் திங்களூர் ஈசன் முன்னே கிடத்தினார். “ ஒன்று கொலாம்” என்ற பதிகத்தை அவர் பாடப் பாட உடலில் இருந்து நச்சு வெளியேறிப் பிரகாசமான உடலுடனும் முகத்துடனும் எழுந்து அமர்ந்தான் மூத்த திருநாவுக்கரசு. பெற்றவர்கள் அவனை உச்சிமோர்ந்து அணைத்துக் கண்ணீர் பெருக்கினார்கள். தன் மகனின் வினைப்பயனைத் திருத்திய அப்பரைத் தொழுது பணிந்தார்கள்.

சிவனை வணங்குவது மட்டுமல்ல. சிவத்தொண்டில் ஈடுபடுவது மட்டுமல்ல. சிவனடியாரான அப்பரின் மேல் கொண்ட பக்தியால் பொதுத்தொண்டிலும் ஈடுபட்டுத் தன்னலமற்ற சேவை செய்து வந்ததால் அப்பூதி அடிகளின் மகன் உயிர் பெற்றது வியப்புக்கும் போற்றுதலுக்கும் உரிய செயல்தானே குழந்தைகளே.

 

2 கருத்துகள்:


  1. குழந்தைகளுக்கான பதிவு சிறப்பு..

    அருமை..

    பதிலளிநீக்கு
  2. நன்றி துரை சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)