செவ்வாய், 8 நவம்பர், 2022

மூகாசுரனை அழித்தது யார்?

 மூகாசுரனை அழித்தது யார்?


மூகாசுரன் என்னும் அசுரன் மலை போன்ற அளவில் காட்டுப் பன்றியாக உருவெடுத்து உலா வந்து கொண்டிருந்தான். எட்டுவகைக் குன்றுகளும் யானைகளும் கூட நடுங்கி விழும்படியான உக்கிரத்தில் ஒருவனின் தவத்தைக் கெடுக்க வந்து கொண்டிருந்தான் அவ்வசுரன்.  ஒரே நேரத்தில் இருவர் விட்ட அம்பு அப்பன்றியைத் துளைத்தது. வேடன் ஒருவனும் வில்லாளி ஒருவனும்தான் அப்பன்றியின் மேல் அம்பு விட்டவர்கள். இருவரும் தான் விட்ட அம்பால்தான் அந்த அசுரன் இறந்தான் என வாதிட்டனர். முடிவில் யார் விட்ட அம்பால் அந்தப் பன்றி இறந்தது என்பதைப் பார்ப்போம்

திருவேட்களம் என்னும் ஊரில் ஒரு வில்லாளி தவம் செய்து கொண்டிருந்தான். அவன் பெயர் அர்ஜுனன், பஞ்சபாண்டவர்களில் ஒருவன். அவனுக்குப் பார்த்தன் என்றொரு பேரும் உண்டு.. அவனிடமே காண்டீபம் என்னும் வில் இருக்கும்போது பாசுபதாஸ்திரம் என்னும் வில்லை சிவனிடம் பெற வேண்டிக் கடுந்தவம் புரிந்துகொண்டிருந்தான்.

குருக்ஷேத்திரப் போரில் படை பலம் இல்லாத பாண்டவர்கள் படை, பணம் ஆட்சி அதிகாரம் என  அனைத்து பலமும் நிரம்பிய கௌரவர்களை ஜெயிக்க வேண்டுமானால் சிவனிடமிருந்து பாசுபதாஸ்திரத்தைப் பெறுவது ஒன்றே வழி எனக் கூறுகிறார் கிருஷ்ணன். அவரது சொல்லை மந்திரமாக ஏற்றுத் தவம் செய்ய ஆரம்பித்தான் அர்ஜுனன்.

வியாச முனிவர் அவனுக்குத் தவம் செய்யும் வழிமுறைகளையும் அதற்கான மந்திரங்களையும் அவனுக்குப் போதித்தார். தன் தவத்தை ஆரம்பித்தான் பார்த்தன். தவம் என்றால் சாதாரணத் தவம் இல்லை, வேணுபுரம் என்ற மூங்கில் காட்டின் நடுவில் ஊசி முனையில் நின்று பரமனை நோக்கிய கடுந்தவம்.

பாசுபதாஸ்திரத்தின் சிறப்பு என்னவென்றால் அதை ஏவினால் எதிரிப் படையைவிடப் பத்துமடங்கு பலம் கொண்டு அழித்துவிடும். இதைப் பெறுவது ஒன்றே தன் வாழ்நாள் தவமாகச் செய்து கொண்டிருந்தான் பார்த்தன். அவன் எதற்காகத் தவம் செய்கிறான் எனத் தெரியாமல் தன் இந்திர பதவிக்கு ஆபத்தோ என நினைத்தான் இந்திரன். அதனால் ரம்பா, ஊர்வசி, மேனகா போன்ற அரம்பையர்களை அனுப்பி அவன் தவத்தைக் கலைக்கச் செய்தான். ஆனால் இந்த அப்சரஸ்களின் நடனத்தைத் துளியும் சட்டை செய்யவில்லை பார்த்தன். தோற்றுப்போன தேவலோக மாந்தர்கள் இந்திரலோகம் திரும்பினர்.


எதற்கும் கலையாத பார்த்தனைப் பார்த்தான் துரியோதனன். தவத்தின் மூலம் பலம் பெற்ற அஸ்திரம் கிடைத்துவிட்டால் தன் படை ஆட்டம் கண்டுவிடும் என அவனுக்குத் தெரியும் அதனால் அவனுக்குக் கோபம் பொறுக்க முடியாமல் வந்தது. என்ன செய்து பார்த்தனின் தவத்தைக் கெடுக்கலாம் என யோசித்தான். உடனே அவன் நினைவில் வந்தவன் மூகாசுரன்தான் பார்த்தனின் தவத்தைக் கெடுக்குமாறு அவனை ஏவினான்.

உடன் துரியோதனின் கட்டளையை ஏற்ற மூகாசுரன் மலை போன்ற காட்டுப்பன்றி உருவெடுத்து குன்றுகளும் கிடுகிடுக்கும் வண்ணம் யானைகளும் பிளிறி ஓடும் வண்ணம் நடந்து வந்தான். பூமி அதிர்ந்தது. அது கைலாயத்தையும் எட்டியது. தன்னை நோக்கி ஊசி முனைத் தவம் இருக்கும் பக்தனுக்குப் பாசுபதாஸ்திரத்தைக் கொடுக்குமுன்னர் அவனுடன் விளையாடிப் பார்க்க நினைத்தார் பரமன்.


அவர் உடனே ஒரு வேடனாக உருக்கொண்டார். உடன் பார்வதியும் வேடுவச்சியாக உருக்கொண்டாள். இருவரும் அந்த மூங்கில் வனத்தில் தோன்றினர். தவத்துக்கு இடையூறாக ஏதோ கொடூரமான ஒலி ஒன்று இடைஞ்சல் செய்தது பார்த்தனை. கண் திறந்து பார்த்தான். அங்கோ கர்ண கடூரமாக ஒலி எழுப்பியபடி பாய்ந்து வரும் காட்டுப்பன்றி. உடனே தன் காண்டீபம் என்னும் வில்லை எடுத்து இமைக்கும் நொடிப்பொழுதில் அதன் மேல் எய்தான்.

அதே சமயம் தன் பக்தனைக் காக்கும் பொருட்டு வேடனாக உருக்கொண்ட பரமனும் தன் அம்பை எய்தார். இரண்டு அம்புகளும் ஒரு சேரத் தாக்க அப்பன்றி மலை சாய்ந்து விழுந்தது. ஒரே நேரத்தில் இரு அம்புகளா. இருவருமே அதன் அருகில் சென்று பார்த்தனர். இருவருக்குமே தன் அம்பினால்தான் அது இறந்தது என்ற பலமான எண்ணம் ஏற்பட்டது. அப்பன்றியை வதைத்தது தன்னுடைய அம்புதான் என்று அந்த வேடன் பார்த்தனிடம் வாதம் புரிய ஆரம்பித்தார்.

தன் தவத்திற்கு இடையூறாக வந்த அப்பன்றியின் மேல் முதலில் பாய்ந்து அழித்தது தன்னுடைய அம்புதான் என்று வாதிட்டான் பார்த்தனும். இதை இருவருமே ஏற்கவில்லை. முதலில் இருவரும் விற்போரில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையில் மற்போர் ஏற்பட்டது. வேடனாய் உருக்கொண்ட பரமனின் தாக்குதலில் பார்த்தன் ஓய்ந்து ஒதுங்கினான். கோபமான பரமனோ பார்த்தனின் வில்லைப் பிடுங்கி இரண்டாக உடைத்துப் போட்டார். தன் கால் விரல்களால் பார்த்தனை எத்தி எறிந்தார்.

எங்கேயிருந்துதான் பார்த்தனுக்கு அவ்வளவு கோபம் வந்ததோ. விழுந்தது கூடப் பெரிதாக வலிக்கவில்லை. ஆனால் ஒரு வில்லுக்காகத் தவம் செய்யப் போய்த் தன் வில்லும் உடைபட்டதே என்ற கோபத்தில் பரமன் முறித்துப் போட்ட தன் வில்லை எடுத்து அவர் முதுகிலேயே அடித்தான். இது என்ன விபரீதம். அவன் பரமனின் முதுகில் அடித்த அடி அவன் முதுகிலும் சுளீர் என விழுகிறதே. திகைத்துப் போனான் அவன்.


பார்த்தனுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. வேடனை உற்றுப் பார்த்தான் அந்த வில்லாளி. வேடனும் வேடுவச்சியும் பரமனும் பரமேஸ்வரியுமாக அவனுக்குக் காட்சி கொடுத்தார்கள். உடனே பரமனின் திருவடிகளில் சரணாகதி அடைந்தான் பார்த்தன். அந்தப் பன்றியை இருவரின் அம்புகளும்தான் துளைத்தன. எனவே இருவருமே சேர்ந்துதான் அவ்வசுரனை அழித்தோம் என்று கூறி அவனை மன்னித்த பரமன் தன்னிடமிருந்த பாசுபதாஸ்த்திரத்தைப் பரிசாக அளித்து அவனுடைய காண்டீபத்தையும் முழுமையாக்கித் திருப்பிக் கொடுத்தார்.

பாரதப் போரில் அந்தப் பாசுபதாஸ்திரத்தைக் கொண்டுதான் பார்த்தன் கொடியவர்களை அழித்தான். ஆனால் அதைப் பெற அவன் பட்ட பாடு இருக்கிறதே. எத்தனை இடையூறுகளைத் தாண்டியும் தன் குறிக்கோளில் உறுதியாக நின்று அவன் ஜெயித்தான். எனவே நம் குறிக்கோளில் நாம் உறுதியுடன் இருக்க வேண்டும் குழந்தைகளே. 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)