ஞாயிறு, 20 நவம்பர், 2022

பத்தாயிரம் யானைகளின் பலம் பெற்ற பீமன்

பத்தாயிரம் யானைகளின் பலம் பெற்ற பீமன்


ஒரே மனிதனுக்குப் பத்தாயிரம் யானைகளின் பலம் கிட்ட முடியுமா. அப்படி பலம் கிட்டிய ஒருவன் தன் எதிரிகள் நூறு பேரை ஒரே போரில் கொல்ல முடியுமா? சாதாரண மனிதருக்கு அசாத்தியமான இவை இரண்டையும் நிகழ்த்திய பீமனின் வரலாறைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.


பாண்டுவுக்கும் குந்திக்கும் பிறந்த மகன் பீமன். இவர் வாயுபுத்திரனின் அருளால் பிறந்தார். எனவே வலிமையுடன் திகழ்ந்தார். இவரது மனைவி இடும்பி, மகன் கடோத்கஜன். சிறுவயதிலிருந்தே நகைச்சுவையுணர்வு நிரம்பப் பெற்றவர். அதோடு அளப்பரிய கோபமும் கொண்டவர்.

அஸ்தினாபுர அரண்மனையில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பீஷ்மர் குரு துரோணர் மற்றும் கிருபாச்சாரியார் மூலம் பல்கலைகளையும் பயிற்றுவித்து வந்தார். பீமன் கதாயுதப் பயிற்சியில் சிறந்து விளங்கினார். மல்யுத்தம் போன்றவற்றிலும் வெற்றிகாண முடியாத வீரராகத் திகழ்ந்தார்.

இருந்தும் அவரது பசி உணர்வுக்கு முன் அவரது பெருமைகள் குறைந்துதான் இருந்தன. ஏனெனில் பாண்டவர்கள் சாப்பிடும் மொத்த உணவில் பாதி உணவை இவரே உண்டதால் அனைவரின் கேலிக்கும் ஆளாவார். இப்படி ஒருமுறை துரியோதனன் இவரைக் கேலி செய்ய பதிலுக்கு இவர் துரியோதனை மல்யுத்தப் போட்டிக்கு அழைத்துத் தோற்கடிக்கச் செய்தார்.


இதேபோல் அடிக்கடி நிகழவும் துரியோதனன் ஒரு கட்டத்தில் இவர் மேல் வெறுப்புற்றான். எப்போது பார்த்தாலும் நன்கு சாப்பிட்டு மலைபோல் கொழுத்துத் தன்னையும் போட்டிக்கு அழைத்துத் தோற்கடிக்கும் பீமனைக் கொல்ல வேண்டும் எனத் தக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்தான்.

பீமன் சாப்பிடும் உணவில் பணியாட்கள் மூலம் விஷத்தைக் கலக்கச் செய்தான் துரியோதனன். அதை உண்டும் அவர் மரிக்காமல் மயங்க அப்பணியாட்களைக் கொண்டே பீமனைத் தூக்கிச் சென்று கங்கையில் மூழ்கடிக்கும்படிச் செய்தான். பீமன் அழிந்தான் என இங்கே துரியோதனன் மகிழ்ந்து கொண்டிருக்க அங்கோ பீமன் கங்கையின் வெள்ளத்தில் உருண்டு புரண்டு போய்க் கொண்டு இருந்தான்.

நீரில் உருண்டு வரும் பீமனைக் கண்டு கங்கையில் வசித்து வந்த நாகமன்னன் வாசுகி பதட்டமுற்றான். பீமனை நாகலோகத்துக்கு எடுத்துச் சென்று விஷத்தை நீக்கிக் காப்பாற்றினான். துரியோதனன் பீமனின் உணவில் விஷம் சேர்த்ததைத் தெரியப்படுத்தி கௌரவர்களுக்குப் பாண்டவர்கள் மேல் உள்ள வெறுப்பையும் புலப்படுத்தினான். பீமனின் மேல் இரக்கம் கொண்டு பத்தாயிரம் யானைகளின் பலத்தை வழங்கி அவனைக் கங்கையின் கரையில் கொண்டு சேர்த்துக் காப்பாற்றினான்.  

பீமன் தப்பி வந்தது பற்றி அறிந்து துரியோதனனின் சினம் இன்னும் அதிகமாகியது. பஞ்சபாண்டவர்களையும் அழித்து ஒழிக்க விரும்பினான் அவன். எனவே தன்னுடைய கட்டிடக் கலை வல்லுநனான புரோசேனன் என்பானிடம் கூறி அரக்கு மாளிகை ஒன்றைக் கட்டிப் பாண்டவர்க்கு  பரிசளித்தான். அதில் குந்தியுடன் பாண்டவர்கள் குடியேறினர்.


அரக்கு மாளிகைக்குத் தீவைத்துப் பாண்டவர்களை உயிரோடு எரிக்க நினைத்த துரியோதனனின் திட்டம் அறிந்து விதுரர் பாண்டவர்களுக்கு முன் எச்சரிக்கைத் தகவல் அனுப்பினார். ஓர் இரவு அரக்கு மாளிகை தீப்பற்றியதும் முன்பே அம்மாளிகையின் கீழ்ப்பகுதியில் பாண்டவர் தாம் உருவாக்கி வைத்திருந்த சுரங்கப் பாதையின் வழியாகத் தப்பிச் சென்றனர்.

இந்தப் பாதையிலும் நெருப்பும் புகையும் சூழ்ந்து நடக்க முடியாமல் குந்தியும் மற்ற பாண்டவர்களும் தடுமாறியபோது பீமனே அவர்களை வழி நடத்தியும் சுமந்து சென்றும் தப்பிக்க வைத்துக் காப்பாற்றினார். அதன் பின் அவர்கள் கௌரவர்கள் கண்ணில் படாமல் கானகத்தில் மறைந்து வாழ்ந்தனர். அங்கும் பகாசுரன், இடும்பன், கிர்மிரா ஆகிய அசுரர்கள் தொல்லை கொடுக்க அவர்களையும் பீமன் அழித்தார். அரக்கர் தொல்லை நீங்கியதால் அங்கே இருந்த மக்கள் அவரைப் புகழ்ந்து நன்றி கூறினர்.

இப்படியே போய்க் கொண்டிருக்கும்போது இந்திரப் பிரஸ்தம் என்னும் களர் நிலத்தைச் சீர்படுத்திப் பாண்டவர்கள் இந்திரலோகம் போல சமைத்து ஆண்டு வந்தார்கள். இதைக் கண்டு அழுக்காறு அடைந்த துரியோதனன் அவர்களைத் தலைநகருக்குச் சூதாட அழைத்தான். தர்மரும் சகுனியின் பகடை விளையாட்டில் தன்னைத் தோற்றபின் தன் தம்பியர், திரௌபதி ஆகியோரையும் வைத்துத் தோற்றார்.

தோற்ற திரௌபதியை சபை முன்னால் இழுத்து வரச் செய்து துரியோதனனின் ஆணைப்படித் துச்சாதனன் துகிலை இழுத்து மானபங்கப் படுத்தினான். இதைக் கண்டு பீமனின் நெஞ்சம் கொதித்தது. பல்லோரும் நிறைந்திருந்த சபையில் பாஞ்சாலி அவமானமுற்றதும் “ பாவி துச்சாதனன் செந்நீர், அந்தப் பாழ் துரியோதனன் ஆக்கை ரத்தம் மேவி இரண்டுங்கலந்து பூசிக் குழல் முடிப்பேன் யான். இது செய்யுமுன்னே முடியேன்” எனக் கொந்தளித்துக் கூறினாள். அவளின் சபதத்தை நிறைவேற்றி வைப்பதாக ஆண்மை நிரம்பிய பீமன் உறுதி ஏற்றான்.


அதன் பின் பன்னிரெண்டு ஆண்டுகாலம் வனவாசம் நோற்றுப் பதிமூன்றாம் ஆண்டில் விராடதேசத்தில் அஞ்ஞாதவாசம் புரிந்தனர், பாண்டவர்கள். பீமன் விராட தேச மன்னனின் இராஜ்ஜியத்தில் மாறுவேடமிட்டு வல்லபன் என்ற பெயரில் சமையற்காரராகப் பணியில் அமர்ந்தார். அங்கும் திரௌபதிக்கு விராட மன்னனின் மைத்துனனால் ஏற்பட்ட இடையூறைக் களைந்தார்.

பாண்டவர்களுக்கு உரிய தேசத்தை மட்டுமல்ல , ஐந்து ஊர்களோ, ஐந்து கிராமங்களோ கூடக் கௌரவர்கள் கொடுக்க விரும்பாதபோது குருக்ஷேத்திரப் போர் ஆரம்பமானது. கௌரவர்கள் பக்கம் பகவான் கிருஷ்ணரின் சேனையும், பாண்டவர்களின் பக்கம் பகவான் கிருஷ்ணனும் துணை இருக்க ஆரம்பமான போர் பதினெட்டு நாட்கள் நடைபெற்றது.

இப்போரின் முடிவில் துரியோதனனுடன் பொருத பீமன் தன் கதாயுதத்தால் அவன் தொடையில் அடிக்க துரியோதனன் மாண்டான். கௌரவர்கள் நூறு பேரையும் தன் கதாயுதத்தால் அடித்து வீழ்த்தி வென்றான் பீமன். வாசுகி கொடுத்த வரத்தின் படி பத்தாயிரம் யானைகளின் பலம் பெற்றவனான பீமன் முடிவில் அநீதியை எதிர்த்துப் போராடி நியாயத்தையும் நீதியையும் நிலைநாட்டினார்.  நேர்மையானவனாகவும் நல்லவனாகவும் இருந்ததாலேயே பீமனால் இவ்வாறு வெல்ல இயன்றது. எனவே நாமும் நேர்மையான முறையிலேயே நமக்கு உரியவற்றை அடையப் பாடுபடுவோம் குழந்தைகளே.


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)