சனி, 12 நவம்பர், 2022

ஃபைவ் ஸ்டார் பிரசன்னாவும் புன்னகை இளவரசி சிநேகாவும்

 ஃபைவ் ஸ்டார் பிரசன்னாவும் புன்னகை இளவரசி சிநேகாவும்


எண்பதுகளில் பிறந்து நாற்பதுகளில் இருக்கும் ஹீரோக்களால் சூழப்பட்டு இருக்கிறது இன்றைய கோலிவுட். ஐம்பதுகளில் பிறந்த கமல் ரஜனி ஆகியோரின் ஆட்சிக்காலம் மிக நீண்டது. இன்றும் தொடர்கிறது. ஆனால் தொண்ணூறுகளிலோ, இரண்டாயிரத்திலோ பிறந்த ஹீரோக்கள் என்று சுட்டிக்காட்ட யாருமே இல்லை என்றுதான் தோன்றுகிறது.

அப்படி நாற்பதுகளில் இருக்கும் ஹீரோக்களில் ஹீரோ, வில்லன் என இரண்டு வேடங்களும் செய்து ரசிகர்களைக் கவர்ந்தவர் பிரசன்னா. 1981 இல் திருச்சியில் பிறந்தவர். 2001 இல் இருந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்மொழிப் படங்களில் நடித்து வருகிறார். 2002 இல் மணிரத்னம் தயாரிப்பில் சுசி கணேசன் டைரக்‌ஷனில் ஃபைவ் ஸ்டாரில் அறிமுகம். கனிஹா ஜோடி, திரு திருடா திரு திருடா தீஞ்சுவை நானடா எனக் கனிஹா கட்டிப்போடப்பட்ட பட்டாம்பூச்சியாக ஷர்ட் போட்டுக் கொண்டு பாடும் பாடலில்தான் எனக்கு இவர் அறிமுகம். தீட்சண்யமான கண்கள். அழகான புன்னகை.

இவர் நடித்ததில் எனக்குப் பிடித்த படம் 2004 இல் பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் அழகிய தீயே. ராதா மோகனின் அழகான வசனங்கள் இப்படத்துக்கு சிறப்புச் சேர்த்தது. நவ்யா நாயருக்கும் இவருக்கும் நட்பு அரும்பிக் காதலாகி மலர்வதைக் காட்டும் பாடல் “ விழிகளில் அழகிய வானம்” அழகோவியம். 

”ஒருபெண்ணைச் சந்தித்தேன்அவள் நட்பை யாசித்தேன்அவள் பண்பை நேசித்தேன்வேறென்ன நான் சொல்ல  யே,இருதயமே துடிக்கிறதாதுடிப்பது போல் நடிக்கிறதாஉரைத்திடவாமறைத்திடவாரகசியமாய் தவித்திடவாஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்எனை கத்தி இல்லாமல் கொய்யும்” என வைரமுத்துவின் வைர வரிகளும் நம்மைக் கொய்து போடும்.

2005 இல் கண்டநாள் முதலாய் என்ற படம். பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் பிரியா டைரக்‌ஷனில் பிரசன்னாவும் லைலாவும் நடித்தார்கள். ரேவதியின் மகளான லைலா அறிமுகக் காட்சியிலேயே குட்டிப் பெண்ணாக குட்டிப் பிரசன்னாவின் கன்னத்தைக் கடித்து விடுவதும் அதைத் தொடர்ந்து கன்னத்தில் பேண்டேஜ் போட்ட பிரசன்னாவைக் காட்டியபடி “ கண்டநாள் முதலாய்க் காதல் பெருகுதடி” என்ற பாடலும் வரும். யுவன் சங்கர் ராஜா இசையில் இப்பாடல் காட்சி பச்சை மிளகாயைக் கடித்ததுபோல் ஒரு மயக்கம். இப்படத்தில் பிரசன்னா தன்மையான மனிதராக நடித்திருந்தார்.  

2008 இல் அஞ்சாதே, இருண்மையான மர்மமான படம். நியோ நாயர் ( சோகம் ததும்பும், அவலச்சுவை நிரம்பிய படம்). மிஸ்கினின் இயக்கத்தில் நரேன், பிரசன்னா, அஜ்மல், அமீர் ஆகியோர் நடித்தது. பெண்களைத் துன்புறுத்தும் சைக்கிக் வில்லனாகப் பிரசன்னா. பிரசன்னாவின் வில்லன் கதாபாத்திரத்தின் மேல் அதிகபட்ச விமர்சனங்களைப் பெற்ற படம். ஒரு கேரக்டராவது தலை முடி அந்நியன்போல முகத்தை மூடுவதுபோல் முன்புறம் வழிய வழிய இருப்பது மிஸ்கின் படங்களில் மரபு. இதில் பிரசன்னாவின் ஹேர் ஸ்டைலும் அப்படியே.

தொடர்ந்து பிரியாணி, காலக்கூத்து, ரகசியமாய், காதல்.காம்,சென்னையில் ஒரு நாள், சீனாதானா, சாது மிரண்டால், அஞ்சாதே, அழகிய தீயே, கல்யாண சமையல் சாதம், கண்ணும் கண்ணும், மஞ்சள் வெய்யில், கஸ்தூரி மான், அச்சமுண்டு அச்சமுண்டு, நாணயம், கோவா, பாணா காத்தாடி, மாஃபியா, முரண், நாணயம், நிபுணன், பீச்சாங்கை, பவர் பாண்டி, புலிவால், சிந்துபாத், திருட்டுப் பயலே – 2, துப்பறிவாளன், வசந்த மலர்கள் ஆகியவற்றிலும் சிறப்பாக நடித்துள்ளார்.  

திரும்ப சுசி கணேசன் இயக்கத்தில் திருட்டுப் பயலே – 2 இல் வில்லனாக நடித்தார். அமலாபால், பாபி சிம்ஹா ஜோடி. ஸ்மைல், ஸ்மைல் அண்ட் பீ எ வில்லன். SMILE SMILE AND BE A VILLAIN என்ற சொல்லுக்குப் பொருத்தமாய் இருக்கும் திருட்டுப் பயலே 2 கேரக்டர். இதில் முகநூல் மூலம் பெண்களுக்கு வலை விரித்து மயக்கி உறவு கொள்ளும் பாத்திரம் பால்கி என்ற பிரசன்னாவுக்கு. இப்படத்தில் பிரசன்னாவுக்கு பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்டர் விருது கிடைத்திருக்கின்றது.

மே 11, 2012 ஆம் ஆண்டு சிநேகாவுடன் திருமணம். விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் இருக்கிறார்கள் இத்தம்பதிக்கு. 2010 லேயே சிநேகாவின் முன்னாள் கணவராக கோவா படத்தில் நடித்திருக்கிறார். விரும்புகிறேன் & அச்சமுண்டு அச்சமுண்டு ஆகிய படங்களிலும் இத்தம்பதி ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்கள்.பிரசன்னாவின் பயோ டேட்டாவைப் பார்த்தால் சாக்லேட் பாயாக அறிமுகமாகி அதன்பின் அநேக க்ரைம் த்ரில்லர் படங்களில் வில்லனாகவே நடித்திருக்கிறார்.


2000 ஆம் ஆண்டில் நடிக்க வந்தவர் சிநேகா. இவரும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 70 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். அழகிய முகம், வடிவான உடலமைப்பு, அடர்த்தியான கேசம், திருத்தமான நாசி, இளமூங்கில் தோள்கள், வெண்மையான கழுத்து, குடும்பப்பாங்கான தோற்றம் எல்லாவற்றையும் விட புன்னகை இளவரசி எனப் புகழப்பட்டவர். ஒரு காலக்கட்டத்தின் காதல் ராணி. ஒரு சர்வேயில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு மிகப் பிடித்தவர் எனத் தேர்ந்தெடுத்த நடிகை சிநேகா. அந்தக் காலகட்டத்தில் ஜவுளிக்கடை, அரிசிக்கடையிலிருந்து ஃபேன்ஸி ஸ்டோர் வரைக்கும் கடை போர்டு எல்லாம் சிநேகாவின் புகைப்படம்தான். எங்கும் சிநேகா எதிலும் சிநேகா.

என்னவளேயில் அறிமுகம். இவரது பெரும்பாலான படங்கள் பெரிதும் பேசப்பட்டவை. பார்த்திபன் கனவில் இரட்டை வேடம். ஆட்டோகிராஃபில் தன்னம்பிக்கை திவ்யாவாக ஒளிவிடுவார். பார்த்திபன் கனவில் தன் கணவருடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வந்திருப்பார் சத்யா. அப்போது அவரின் பெற்றோர் கணவருடன் வராமல் இவர் தனியாக எதற்காக வந்தார் எனக் கேட்கத் தன் கணவருடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தை மறைத்து ”பொறந்ததுலேருந்து இருபத்திரண்டு வருஷம் இந்த வீட்ல வாழ்ந்திருக்கேன் நான். கல்யாணமானதும் ஒரு இரண்டு நாள் வந்து இருக்கக் கூடாதா” எனக் கேட்பது குடும்பப் பாங்கு.

அறிமுகமான ஆனந்தம் படத்திலேயே யார் இந்தப் பெண் என நினைக்க வைத்துத் தன் நடிப்பால் கவர்ந்தவர். பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் என்ற பாடலைப் பாடி ஆடுவார். அப்பாஸ் ஜோடி. சூப்பர் ஹிட் படம் அது.

 தொடர்ந்து புன்னகை தேசம் , உன்னை நினைத்துவிரும்புகிறேன் ஆகிய படங்களில் விருது பெற்றார்கல்யாண சமையல் சாதத்தில் பிரசன்னா இம்பொடன்ஸ் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்தது போல் சிநேகாவும் டாக்டர், நர்ஸ், விலைமகள் என வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.

ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே படத்தில் “இனி நானும் நான் இல்லை இயல்பாக ஏன் இல்லை சொல்லடாசொல்லடா முன் போல நான் இல்லை முகம் கூட எனதில்லை ஏனடா ஏனடா” எனத் தாமரையின் வரிகளுக்கு அழகான செல்லுலாய்ட் சிற்பங்களாகக் காட்சி அளிப்பார்கள் ஷாமும் சிநேகாவும். இத்தாலி ரோமின் கொலோசியத்தில் ”தொட்டுத் தொட்டுச் செல்லும் ஐஸ் காற்றிலே’யும் மலர்ச்சி ததும்பும். முடிவில் ஒரு காதல் வந்துச்சோ என ஒரு வழியாக செட்டில் ஆவார்கள்.

வருணுடன் “சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது” இப்பாடல் எடுக்கும் முன் இவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டுக் காலில் அடிபட்டது. ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அழகாக ஆடி இருப்பார். பார்த்தாலே பரவசத்தில் மாதவன் பாடும் பாடல் “நீதானே என் தேசிய கீதம் ரஞ்சனா ரஞ்சனா”. இதில் நர்ஸ் செல்லாவாக சிநேகா. வாலி எழுதிய இப்பாடலில் “என் மரியாதைக்குரியவளே, மனதிற்கு இனியவளே” என்ற வரிகள் மிகப் பிரமிக்க வைத்தன!.

இவருடைய படப்பாடல்கள் அனைத்துமே அருமை. வசூல் ராஜாவில் கமலுடன் “பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு”, ”காடு திறந்து கிடக்கிறது” ஆட்டோகிராஃப்பில் சேரனுடன் ”ஒவ்வொரு பூக்களுமே”(தன்னம்பிக்கை வரிகள்), பார்த்திபன் கனவில் ஸ்ரீகாந்துடன் ”கனா கண்டேனடி”, ஏப்ரல் மாதத்திலும் ஸ்ரீகாந்துடன் “பொய் சொல்ல இந்த மனசுக்குத் தெரியவில்லை”, வசீகராவில் விஜயுடன் “ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்குப் பிடிக்கும் என்று” என அனைத்தும் இனிமை. இளமை. 

பம்மல் கே சம்பந்தத்தில் ”திண்டுக்கல்லுப் பூட்டை வைச்சு வாயை மூடிக்கோ” இதில் “காரைக்குடி ஒங்கப்பன் வீடு நீயும் போய்க்கோ” என்ற வரிகளைக் கேட்டுச் சிரித்துப் புரை ஏறிவிட்டது. பள்ளிக்கூடத்தில் ”இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா, இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா” பாடலில் நரேனுடன் உணர்ச்சியும் கவர்ச்சியும் கலந்த நெருக்கம்.  

வசூல்ராஜா எம்பிபிஎஸ்ஸில் ஜானகி என்ற பாப்பு மனிதநேயமிக்க இளம் டாக்டர். புதுப்பேட்டை யில் வரியா என்ற ஒற்றை வரிப்பாட்டுக்குக் குத்தாட்டம் போட்டு மிரட்டி இருப்பார். இதில் விலைமகளாக ஒரு பாத்திரம். தனுஷுடன் ஜோடி. உன்னை நினைத்து, கிங், ஜனா, போஸ், அதுவ, ஆயுதம், சின்னா, ஏபிசிடி, சிலம்பாட்டம், கோவா, தீராத விளையாட்டுப் பிள்ளை, பவானி ஐபிஎஸ், பொன்னர் சங்கர், ஒரு கல் ஒரு கண்ணாடி, பார்த்தாலே பரவசம், புதுப்பேட்டை, நான் அவனில்லை, பள்ளிக்கூடம், பிரிவோம் சந்திப்போம் ஆகியவற்றிலும் சிறப்பாக நடித்திருப்பார்.

சிறந்தநடிகைக்காகவிஜய்விருதுகள்பெற்றபிரிவோம் சந்திப்போம் படத்தின் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை.” என்ற பாடலும், ”இரு விழியோ சிறகடிக்கும்” பாடலும் எனக்கு மிகப் பிடித்தவை. நகரத்தார் வீட்டுப் பெண்ணாகவும், மணப்பெண்ணாகவும் சிநேகா நடித்த பிரிவோம் சந்திப்போம் படத்தின் ”இரு விழியோ சிறகடிக்கும்” என்ற பாடலைப் பார்த்தால் முடிவில் கண் கலங்காத நகரத்தார் பெண்மக்களே இருக்க முடியாது. மாப்பிள்ளை அழைப்பதிலிருந்து பெண் வீட்டார் சொல்லிக் கொள்வது வரை எடுக்கப்பட்ட இப்பாடல் நகரத்தார் திருமணத்தின் அழகான ஆவண சாட்சி.

இப்படி நகரத்தார் திருமணப் பெண்ணாக நடித்து நான் ரசித்த சிநேகாவை அவரது அன்புக் கணவர் பிரசன்னா, அழகுக் குழந்தை விஹான் ஆகியோருடன் ஒரு நகரத்தார் திருமணத்தில்தான் சந்தித்தேன். ஊரே கூடியிருந்து வாழ்த்திய திரு வி என் சிடி அவர்களின் பேரனின் திருமணம்தான் அது. அனைவருமே சிநேகாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். 2017 இலும் மணப்பெண் போலவே இருந்தார் அவர்.

படங்களில் ரொமாண்டிக் லுக்கை வெளிப்படுத்தும் பிரசன்னா சிறிது சீரியஸ் லுக்குடன் இருந்தார்.

இருவரும்கம்ஃபர்டாகவிளம்பரங்களிலும்தோன்றிவருகிறார்கள். சினேகா இரண்டு முதல்வர்களிடமும் விருது வாங்கியிருக்கிறார்இதுதவிர நந்திகலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளும் பெற்றுள்ளார். தம்பதிகளின் சிறப்பு பொதுநலத்திலும் ஈடுபடுவது. டெல்லியில் போராடி வந்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பத்துப் பேருக்கு இவர்கள் தலா 2 லட்சம் ரூ. நிதி உதவி அளித்துள்ளது நிச்சயம் இருகரம் தட்டிப் பாராட்டப்பட வேண்டிய செயல். வாழ்க வளமுடன் சாக்லேட் பாய் பிரசன்னாவும் புன்னகை இளவரசி சிநேகாவும்.


டிஸ்கி :- நகரத்தார் செய்திகளில்


 


எனது நூல்வெளியீடு பற்றிப் போட்டுள்ளமைக்கும், 




மணிமடல்களில் எனது கடிதத்தை வெளியிட்டுள்ளமைக்கும்  மேலும் மனத்திரையில் மின்னலில் நடிப்பு ராட்சசி சரிதா பற்றிய என்னுடைய கட்டுரையைப் பாராட்டிய மதுரை வாசகர் திரு முருகவிலாஸ் கே நாகராஜ் அவர்களுக்கும் நன்றிகள். 


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)