வெள்ளி, 30 செப்டம்பர், 2022

எள்ளி நகையாடியதால் இன்னல் அடைந்தவள்

 எள்ளி நகையாடியதால் இன்னல் அடைந்தவள்


புன்னகை பலவிதம். லேசாக முறுவலிப்பது, வாய் விட்டுச் சிரிப்பது எனப் பலரகம் இருந்தாலும் அடுத்தவரைப் பார்த்து எள்ளி நகையாடுவது அவரை அவமானப்படுத்துவதற்குச் சமம். அப்படி ஒரு ராணி ஒரு ராஜாவைப் பார்த்து எள்ளி நகையாடியதும் அதனால் அந்த ராணியும் அதன் பின் அந்த ராஜாவுமே பட்ட துன்பங்களைப் பார்ப்போம் குழந்தைகளே.

அஸ்தினாபுரத்தைத் திருதராஷ்டிரன் ஆண்டு வந்தார். அவரது மகன்கள் நூறு பேர். கௌரவர்கள் என அழைக்கப்பட்ட அவர்களின் துரியோதனன், துச்சாதனன் ஆகியோர் முக்கியமானவர்கள். திருதராஷ்டிரனின் தம்பியான பாண்டுவின் மைந்தர்கள் பாண்டவர்கள். அவர்களுக்கு உரிய ராஜ்யபாரத்தைப் பிரித்துக் கொடுக்காததோடு எந்தவித உபயோகமும் செய்ய முடியாத ஒரு களர்நிலப் பகுதியைக் கொடுத்தார் திருதராஷ்டிரன்.

நியாயவானும் தர்மவானுமான தர்மர் தன் தம்பிகளோடு அந்த உவர் நிலத்தையும் பண்படுத்தி தேவலோகத் தச்சன் மயனின் உதவியால் இந்திரப் ப்ரஸ்தத்தைச் சமைத்தார். அந்த இந்திரப் ப்ரஸ்தமோ ஒரு மாயா நகரம். தடாகத்தில் நீர் இருப்பது போல் காட்டும் இடத்தில் நீர் இருக்காது. வெறும் தரைபோல் இருக்கும் இடத்தில் நீர் நிறைந்திருக்கும். யமுனையில் கரையில் அழகுற அமைந்திருந்த இந்த நகரமெங்கும் வண்ண வண்ண மாயாஜால அமைப்புகள் இருந்தன. சரியாக கவனிக்காமல் கால் வைத்தால் தண்ணீரில் தலைகுப்புற விழவேண்டியதுதான்.


பஞ்சபாண்டவர்கள் தம் நகரை அமைத்ததும் ராஜசூய யாகம் செய்தனர். அதற்காக கௌரவர்களையும் அழைத்திருந்தார்கள். பஞ்சபாண்டவர்களுக்கும் திரௌபதி என்றொரு மனைவி இருந்தாள்.

பாஞ்சால தேச அரசன் துருபதன் பிள்ளை வரம் வேண்டிச் செய்த யாக அக்கினியில் தோன்றியவள் திரௌபதி. கருமை நிறத்தவள். அதே யாகத்தில் இவளுடன் திருஷ்டத்யும்னன் என்றொரு ஆண் குழந்தையும் துருபதனுக்குக் கிடைத்தான். பருவ வயதடைந்ததும் துருபதன் இவள் சுயம்வரத்துக்காக ஒரு போட்டி அறிவித்தான்.

அதில் அர்ஜுனன் வெற்றி பெற்று இவளை வீட்டுக்கு அழைத்து வந்தான். அப்போது அவர்கள் தாயார் குந்தி வென்று வந்த பொருளை அனைவரும் பகிர்ந்து கொள்ளக் கூறியதால் ஐவருக்கும் மனைவியானாள்

இவர்கள் இந்திரப் ப்ரஸ்தத்தில் நடத்திய யாகத்துக்குக் கௌரவர்கள் வந்தார்கள். நகரைப் பார்த்து ஆச்சர்யத்தில் அவர்கள் கண்கள் விரிந்தன. எதற்கும் உதவாத அந்தக் காடு சொர்க்கலோகம் போலவும் இந்திரலோகம் போலவும் மின்னியது. துரியோதனனுக்கோ சொல்ல முடிதாத பொறாமை.

அந்த மாயா அரண்மனையின் ஒவ்வொரு பாகத்தையும் பார்த்துப் பார்த்துப் பெருமூச்சு விட்டான். அப்படி நடந்து கொண்டிருக்கும்போது தண்ணீர் இல்லாத இடத்தில் தண்ணீர் இருப்பது போல் பிம்பம் தட்டியதால் எட்டி எட்டி நடை வைத்தான். இதை எல்லாம் திரௌபதி தனது அந்தப்புரத்தின் உப்பரிகையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு சிரிப்பு வந்தது. அவள் பார்க்கப் பார்க்கவே தண்ணீர் இருக்கும் ஒரு இடத்தில் துரியோதனன் அங்கே வெறும் தரை என நினைத்துக் கால் வைக்க அந்தத் தடாகத்தில் தலைகுப்புற விழுந்தான். இதைப் பார்த்த திரௌபதிக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது. துரியோதன் நனைந்து எழுந்த நிலை பார்த்துக் கைகொட்டிச் சிரித்தாள். சிரித்ததோடு மட்டுமல்ல ”தகப்பனுக்குத்தான் கண் தெரியவில்லை என்றால் மைந்தனுக்கும் கண் தெரியவில்லை” எனக் கூறினாள்.  

துரியோதனுக்கோ வந்ததே கோபம். தீராத அவமானமாகவே அதை எண்ணினான். இந்திரப் பிரஸ்தத்தின் அழகும் திரௌபதையின் சிரிப்பும் அவனை உன்மத்தம் கொள்ளச் செய்தது. அவளை எப்படியாவது திரும்பப் பழி வாங்க வேண்டும் என எண்ணினான்.

இப்படியே அவன் அஸ்தினாபுரம் திரும்பினான். அவள் பார்வையும் சிரிப்பும் எங்கு பார்த்தாலும் அவனைப் பார்த்துக் கெக்கிலி கொட்டியது. அவன் பகையும் கோபமும் நாளுக்கு நாள் கொழுந்துவிட்டெரிந்தது.


இந்திரப் ப்ரஸ்தம் சென்று வந்த துரியோதனாதிகள் மறுவிருந்தாகத் தம் அஸ்தினாபுரத்துக்கு பாண்டவர்களை அழைத்தார்கள். இந்த விருந்துக்கு வந்திருந்த பாண்டவர்களை தன் நயவஞ்சக மாமா சகுனி மூலம் பழி வாங்க நினைத்தான் துரியோதனன். எனவே சகுனி மூலம் சூதாட அழைப்பு விடுத்தான்.

நாட்டின் மன்னர்கள் மற்ற மன்னர்களின் இது போன்ற அழைப்புக்குச் செவி சாய்க்க வேண்டும் என்ற அந்தக் காலத்துக் கொள்கைப்படி தருமன் சூதாட சம்மதித்தான். விளையாட்டாக ஆரம்பித்த சூதாட்டம் விபரீதமாக ஆகத் தொடங்கியது.


முதலில் நாடு, பின்னர் ஆனை, சேனை, படை, பட்டாளம், பணியாட்கள், கருவூலம்,  என  அனைத்தையும் பணயம் வைத்து ஆடினார். அந்தச் சூதுச் சகுனி கேட்ட எண்ணிக்கையிலேயே தாயக்கட்டை உருண்டது. அதனால் தர்மர் தோற்க ஆரம்பித்தார். பின்னர் தன் தம்பிகளைப் பணயம் வைத்தார். அதன் பின் தன்னையும் பிணை வைத்து ஆடினார். எந்தப் பொருளும் இல்லாமல் திகைத்தபோது பாஞ்சாலியைப் பணயம் வைத்து ஆடுமாறு சகுனி சொன்னான். அதைக் கேட்டுப் பாஞ்சாலியையும் பிணை வைத்து ஆடித் தோற்றார் தருமர். இதனால் கௌரவர்களுக்கு அனைவருமே அடிமையானார்கள்.

இதைக் கண்டு குதூகலமான துரியோதனன் தன் தம்பி துச்சாதனன் மூலமாக பாஞ்சாலியைச் சபைக்கு இழுத்து வரச் செய்தான். தன்னைக் கண்டு எள்ளி நகையாடி அவமானப்படுத்திய அவளைப் பதிலுக்கு அவமானப்படுத்த எண்ணி அவளது துகிலை உரித்து எரியும்படி துச்சாதனனிடம் சொன்னான். இந்நிலையில் பாஞ்சாலி கிருஷ்ண பகவானை “ கண்ணா ! என் அண்ணா என்னைக் காப்பாற்று “ என்று கதறி வேண்ட மனம் பொறுக்காத அவர் திரௌபதியின் துகிலை வளரச் செய்து அவள் மானத்தைக் காப்பாற்றினார்.

இந்நிகழ்ச்சியால் வெகுண்ட பாஞ்சாலி அனைவரும் நிறைந்த அச்சபையில் சபதம் போட்டாள். “ பாவி துச்சாதனன் செந்நீர் , இந்தப் பாழ் துரியோதனன் ஆக்கை ரத்தம் இரண்டும் பூசிக்கலந்து மேவிக் குழல் முடிப்பேன். இது செய்யுமுன்னே முடியேன்” எனத் தன் கூந்தலை அவிழ்த்து விட்டாள். பீமனும் அவள் சபதத்தை முடிக்க உதவுவதாகச் சபதம் ஏற்றான்.

கௌரவர்கள் கட்டளைப்படிப் பாண்டவர்கள் பன்னிரெண்டு ஆண்டுகள் வனவாசம், ஓராண்டு அஞ்ஞாதவாசம் முடிந்து வந்தும் கௌரவர்கள் நாட்டைத் திருப்பித் தரவில்லை. இதனால் குருக்ஷேத்திரப் போர் ஏற்பட்டது. 18 நாட்கள் நடந்த அப்போரின் முடிவில் பீமன் கரங்களால் துச்சாதனனும் அர்ஜுனன் கரங்களால் துரியோதனனும் வீழ்ந்துபட அவர்கள் இரத்தத்தைத் தன் கூந்தலில் பூசி முடித்தாள் திரௌபதி.

இதனால் அடுத்தவரை அவமானப்படுத்துவது போல் எள்ளி நகையாடினால் அதன் கொடூரமான பின்விளைவுகளையும் சந்திக்க நேரும் என்பதை நாமும் கவனத்தில் கொள்ளவேண்டும். அதற்குத் திரௌபதியின் இந்தக் கதை நமக்குப் பாடமாக அமைந்தது. 


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)