வியாழன், 1 செப்டம்பர், 2022

குழந்தைகள் பாதுகாப்பும் பெற்றோர் பராமரிப்பும்

 குழந்தைகள் பாதுகாப்பும் பெற்றோர் பராமரிப்பும்


ஜூன் 1 உலக பெற்றோர் தினம். குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள் ஜூன் 12. முதியோர்களுக்கான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் ஜூன் 15. ஜூன் மூன்றாவது வார ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம், இப்பிடி ஜூன் மாதம் பூராவும் குடும்ப அமைப்பின் முக்கியக் காரணிகளான குழந்தைகள், பெற்றோர், முதியோர் ஆகியோரை மையப்படுத்தியே அமைகிறது.

உலகெங்கும் 150 மில்லியன் குழந்தைகள் 5 வயதுக்கு உட்பட்டவர்கள் தொழிலாளிகளாகப் பணி செய்கிறார்கள். சாலையோரக் கடைகள், ஹோட்டல்களில் பணிபுரிதல், கட்டிடத்தொழில், சுரங்கவேலை, தோட்ட வேலை, முறுக்கு விற்றல் போன்றவற்றுக்குக் கொத்தடிமைகளாக வெளி மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படுதல், பெரியவர்கள் அதிகம் கூலி கேட்கும் வேலைகளுக்குக் குறைந்த சம்பளத்தில் குழந்தைகளை ஈடுபடுத்துவது, 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் புகையிலை மது போதைப்பொருள் விற்கச் செய்வது , சூதாட்ட க்ளப், வீடுகளில் குழந்தைத் தொழிலாளியாகப் பணி செய்வது, தீப்பெட்டி, பட்டாசுத் தொழிற்சாலை, வீடியோ கேம்ஸ் & படங்களில் நடிக்க வைத்தல், பிச்சை எடுத்தல், பாலியல் தொழில் செய்யக் கட்டாயப்படுத்தல் ஆகியன.

ஆதரவற்ற அநாதைக் குழந்தைகள், விவாகரத்து ஆன தம்பதியின் குழந்தைகள், வேண்டாத கர்ப்பத்தின் மூலம் உருவான குழந்தைகள், மரணதண்டனைக் குற்றவாளிகளின் குழந்தைகளும் குற்றவாளிகளைப் போலப் பார்க்கப்படுதல். போர்க்கைதிகளின் குழந்தைகள், அகதிகளின் குழந்தைகள் ஆகியோரும் இதில் அடங்குவர். குப்பை பொறுக்குதல், உடல் நலனைப் பாதிக்கக் கூடிய வேலைகள், காற்றோட்டம் இல்லாத சூழலில் விடியலில் இருந்து இரவு வரை சொற்பக் காசுக்காக உழைத்தல். அதனால் ஆஸ்துமா போன்றவற்றால் அவதிப்படுதல், கட்டாய பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுதல், ஓரினச் சேர்க்கை துன்புறுத்தல் சிசுக்கொலை, கடத்தல், உடல் உறுப்புக் குறைபாடுகள், உடல் உறுப்புக்களுக்காகக் கடத்தப்படுதல், கட்டாயத்திருமணம், நோய் மற்றும் பாலியல்நோய்களால் தாக்குறுதல் ஆகியன இவர்களுக்கு நிகழ்கின்றன.

உடல்ரீதியாக வறுமை, பசி, ஊட்டச்சத்து இல்லாமை, விட்டமின் குறைபாடு, இரத்தசோகை ஏற்படுகிறது. உளவியல் ரீதியான பாதிப்புகள் என்றால் கல்விஅறிவு பெற இயலாமல் போவது உணர்வுரீதியாகச் சமூகத்தால் புறக்கணிக்கப்படுவது, தோற்றத்தால் மதிப்பிழந்து அதே வாழ்வு முழுமைக்கும் தொடர்வது. சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு சிறார் சீர்திருத்த மையத்துக்குச் செல்வது. அதன் பின் நிரந்தரக் குற்றவாளியாவது. வீடுகளிலும் பள்ளிகளிலும் தொழில் செய்யும் இடங்களிலும் இவர்களுக்கு நிகழும் வன்முறைகளும் இவர்கள் குற்றம் புரியக் காரணமாகிறது.


ஃபேஸ்புக் வாட்ஸப் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது 
சைபர்புல்லிங் என்னும் இணைய வழிக் குற்றங்கள் குழந்தைகளை எப்படி பாதிக்கிறது என்றால் மனச்சோர்வு, தனிமை, பாதுகாப்பின்மை, கல்வியில் நாட்டம் குறைதல், தகுந்த உடல்வளர்ச்சி இன்மை, நடத்தைக் கோளாறு, உடல் மனக் கோளாறு, தற்கொலை எண்ணங்களைத் தூண்டுதல் ஆகிவற்றுக்குக் காரணம் ஆகிறது.

இவ்வாறு மனநல உடல்நல பாதிப்பு ஏற்படுத்துதல் குற்றம். கட்டாயக் கல்வி, வாசிப்பு, திறமைகளை ஊக்குவித்தல், குழந்தைகளைத் தொழிலில் ஈடுபடுத்துவோருக்குக் கடும் தண்டனை கொடுத்தல், குழந்தைத் தொழிலாளிகள் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடத்துதல் ஆகியவற்றை 1959 இல் ஐக்கிய நாடுகளின் பொது சபை வெளியிட்ட குழந்தை உரிமை பிரகடனம் வலியுறுத்துகிறது.

தத்தெடுப்பு இதிலிருந்து பாதுகாக்கிறது என்றாலும் தத்தெடுக்கப்பட்டுக் குழந்தைத் தொழிலாளி ஆக்கித் துன்புறுத்தப்படுதலும் நிகழ்கிறது. தாரா கல்வி மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு என்பது இந்திய அரசு சாரா அமைப்பு. இதில் ஆரோக்கியமற்ற மற்றும் சேரிகளில் வாழும் குழந்தைகள், அனாதைகள், பெற்றோரின் வன்முறையால் பாதிக்கப்பட்டோர், கடத்தல், பாலியல் துஷ்பிரயோகத்தில் வாழ்ந்த குழந்தைகள் இந்தியக் குழந்தைகள் நல நீதிபதியின் உத்தவுப்படி மீட்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறார்கள். காவல்துறையின் உதவி,ஆலோசனை, சட்ட உதவி பெறப்பட்டுச் சில குழந்தைத்தொழிலாளர், கொத்தடிமைத்தொழிலாளர். குழந்தைக் கடத்தலில் இருந்து மீட்கப்பட்டுக் குடும்பத்துடன் ஒன்று சேர்க்கவும் படுகிறார்கள் என்பது ஆசுவாசம் அளிக்கிறது.

ன்னைக்கு மட்டும்தான் அன்னையர் தினமா. நம்மை அல்லும்பகலும் வளமையில் வார்த்தெடுக்கும் தந்தைக்கும் ஒரு தினம் கொண்டாடினால் என்ன என்று வாஷிங்க்டனில் 1910 ஆம் ஆண்டில் முதன் முதலாக சோனோரா ஸ்மார்ட் டோட் என்பவரின் முயற்சியால் கொண்டாடப்பட்டது. அவர்கள் வழக்கப்படி தந்தைக்குப் புகழுரை, இரவு விருந்து, கூடி மகிழ்தல் ஆகியன நிகழ்த்திக் கொண்டாட ஆரம்பித்தார்கள். ஆனால் இப்போது இது வணிகமயமான கொண்டாட்டமாகி வருகிறது.

தாய்லாந்தில் ராஜாவின் பிறந்த நாளை தந்தையர் தினமாகக் கொண்டாடுகின்றனர். தற்போதைய ராஜாவான புயிமிபொல் அடல்யதேஜிற்கு டிசம்பர் 5 ம் தேதி பிறந்தநாளாகும். ஆண் தன்மையுடைய கன்னா என்னும் மலரைத் தந்தைகளுக்கும் தாத்தாக்களுக்கும் கொடுத்து இத்தினத்தைக் கொண்டாடுகிறார்கள். ஜெர்மனியரின் தந்தையர் தினம் வேட்டர்டக் என்ற பெயரில் அரசாங்க விடுமுறையாக அனுசரிக்கப்படுகிறது. இது மேனர்டக் எனப்படும் ஆண்களின் தினம் என்றும் அல்லது ஹெரன்டக் எனப்படும் நன்மகன் தினம் எனவும் அழைக்கப்படுகிறது. பொல்லர் வேகன் என்னும் வண்டியில் பானங்கள், காய்கறிகள், முட்டை, பிராந்திய உணவுகளை வைத்து இழுத்துச் சென்று ஓரிடத்தில் அமர்ந்து ஆரவாரத்துடன் கொண்டாடுவர். ரோமன் கத்தோலிக்கர்கள் செயிண்ட் ஜோசப் தினத்தைத் தந்தையர் தினமாகக் கொண்டாடுகின்றனர்.

வாழ்நாள் முழுவதும் உழைத்துக் களைப்பவர் தந்தை. தாய் வயிற்றில் சுமக்கிறாள். ஆனால் தந்தையோ மனதில் சுமக்கிறார். திருவிழாவில் மகனுக்குத் தேரில் உலா வரும் சாமி தெரியவேண்டுமென்பதற்காகத் தன் தோளில் சுமந்து கடவுளைக் காட்டுபவர் தந்தை. இவன் தந்தை எந்நோற்றான் கொல் என்று அவையில் முந்தி இருக்கச் செய்த தந்தையைப் பெருமைப்படுத்த வேண்டியது ஒரு மகனின் கடமை.

 

மிழகத்தில் முதியோர்கள் மக்கள் தொகையில் இரண்டாமிடத்தைப் பிடிக்கின்றனர். பொருளாதார மருத்துவ வசதிகள் அதிகம் என்பதால் இறப்பு விகிதம் குறைவு, குழந்தைகள் பிறப்பு விகிதமும் குறைந்துள்ளதால் முதியோர்கள் சதவிகிதம் பெருகி வருகிறது. 1995ல், 542 மில்லியனாக இருந்தது. இது, 2025ல் இரு மடங்காக உயரும் என்கிறார்கள்.

தம் இல்லத்தில் இருந்தாலும் முதியோர் இல்லத்தில் இருந்தாலும் அனைத்து முதியோர்களுக்கும் உணவு, உடை, இருப்பிடம் மற்றும் சுகாதார வசதிகள் போன்றவை கிடைக்கப்பெற வேண்டும். வாழ்வதற்கு ஏற்ற சுமுகமான சூழல், சட்டப்பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு, சொத்துப் பாதுகாப்பு, அடிப்படை சுதந்திரம்,  இருக்க வேண்டும். உதவித் தொகைகள், பென்ஷன், போன்றவை உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும். கைவிடப்பட்ட மூத்த குடிமக்களுக்கு அரசே இல்லங்கள் ஏற்படுத்திப் பராமரித்தல், சட்ட உதவிகள் வழங்குதல் , உயிர் காக்கும் மருந்துகளை இலவசமாக வழங்குதல் வேண்டும்.

ஆனால் நர்சுகளின் மற்றும் கேர் டேக்கர்களின் பொறுப்பில்தான் பெரும்பாலான முதியவர்களின் இறுதிக்காலம் கழிகிறது.  இறந்தபின் மலர்மாலைகள், நினைவஞ்சலிகள் சூட்டுவதற்குப் பதிலாக இருக்கும்போதே அவர்களின் துணை வேண்டுதல், உடல் நலக் குறைவு ஏற்படும்போது தக்க மருத்துவப் பணியாளர் நியமித்துப் பராமரித்தல், நேரத்துக்கு உணவளித்தல், அவர்களின் கருத்துக்கள் ஆலோசனைகளை ஏற்றாலே அவர்கள் மனநலத்துடன் வாழ்ந்து நம்மையும் ஆசீர்வதித்து மனநிறைவுடன் செல்வார்கள். எனவே ஒவ்வொரு இல்லத்திலும் உரிய மரியாதை கொடுத்து முதியோரைக் கொண்டாடுங்கள்,மதியுங்கள். அதுவே இறையாண்மை ஆகும். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)