செவ்வாய், 26 ஜூலை, 2022

ஆயிரம் பிறவிகள் எடுத்த காகபுஜண்டர்

 ஆயிரம் பிறவிகள் எடுத்த காகபுஜண்டர்


ஒருவர் எத்தனை பிறவிகள் எடுக்கிறார் என்பது அவரது கர்மவினைப் பயனைப் பொறுத்தது. குருவை மதிக்காத சித்தர் ஒருவர் பெற்ற சாபம் என்னவென்றால் அவர் இப்பூலோகத்தில் பத்தாயிரம் பிறவிகள் எடுக்க வேண்டுமென்பது. இத்தனைக்கும் அவர் நற்பவி எனப் பெயரெடுத்தவர். அவர் மேல் இரக்கப்பட்ட குரு அவருக்காக வேண்டியபின் அது ஆயிரம் பிறவியாகக் குறைந்ததாம். அவருக்கு சாபமிட்டவர் யார்? ஏன் சாபமிட்டார்? அவரின் குரு யார் எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

தேவலோகத்தில் அன்று ஒரு நடன நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பாடலின் தாளத்துக்கு ஏற்ப தேவகணங்களும் பூதகணங்களும் ஆடத் தொடங்கின. அங்கே இருந்த அன்னப்பறவைகளும் தம்மை மறந்து ஆட்டத்தில் கலந்து கொண்டன. மகிழ்ச்சி வெள்ளம் பொங்கிக் கொண்டிருந்த வேளையில் சிவனாரின் தலையில் சூடிய சந்திரகலையில் இருந்து ஒரு காகம் உருவெடுத்துப் பறந்து போய் ஒரு அன்னபட்சியுடன் நடனமாடியது.


இவ்வாறு இரண்டும் கூடிய அந்தப் போதிலேயே அந்த அன்னம் 21 முட்டைகள் இட்டது. 20 முட்டைகளில் இருந்து அன்னங்கள் சிறகடித்துப் பறக்க ஒரு முட்டையில் இருந்து ஒரு காகம் வெளிவந்தது. அந்தக் காகத்துக்குப் பிறப்பிலேயே சிவனருள் கிடைத்ததால் மனிதராகவும் மாறக்கூடிய சித்தி பெற்றது. நினைத்தபோது காகமாக மாறிப் பறக்கவும் நினைத்தபோது மனித உருவமும் எடுத்ததால் அவர் காகபுஜண்டர் என்று அழைக்கப்பட்டார்.

சிவனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற திட சித்த நம்பிக்கை கொண்டவர் காகபுஜண்டர். எங்கும் சிவம் எதிலும் சிவம் என்பதுதான் அவரது கொள்கை. காகபுஜண்டர் எண்வகை யோகங்கள், அஷ்டமா சித்திகள் கைவரப் பெற்றவர்.

அவரது குருவோ அவரிடம் திருமாலையும் வணங்கும்படிக் கூறுகிறார். இதைக் கேட்டுக் கோபமான காகபுஜண்டர் ”சிவனைத் தவிர வேறொரு தெய்வம் இல்லை. எனவே நான் சிவனை மட்டுமே வணங்குவேன்” என்று பிடிவாதமாகக் கூறுகிறார்.  

அடிக்கடி இதையே குரு கூற இவர் மறுக்க அங்கே ஒரு துவந்த யுத்தம் நடைபெற்று வந்தது. குருவின் வற்புறுத்தல் அதிகமாக அதிகமாக அவரைக் கண்டாலே காகபுஜண்டர் கண்ணை மூடித் தியானத்தில் அமர்ந்துவிடுவார்.

ஒருமுறை குரு வருவதை அறிந்தும் அவருக்கு எழுந்து மரியாதை கொடுக்காமல் அமர்ந்திருந்தார். இதைப் பார்த்த சிவனாருக்கு வந்ததே கோபம். என்னதான் தன் பக்தனாக இருந்தாலும் குருவை மதிக்காமல் இருப்பதா.

“காகபுஜண்டா! குரு வருவதைப் பார்த்தும் மதிக்காமல் அமர்ந்த நீ இதுவரை ஜபித்த மந்திரங்களின் பலனை இழந்துவிட்டாய். அதனால் பூமியில் பத்தாயிரம் பிறவிகள் பிறந்து நரக வேதனை அனுபவிப்பாய். “ என சிவன் சாபமிட்டார்.

இதைக் கேட்டு காகபுஜண்டர் மட்டுமல்ல அவரது குருவும் தன்னால்தானே காகபுஜண்டன் தண்டிக்கப்பட்டான் என வருந்தினார். அவர் சிவனிடம் “ ஐயனே உம்பால் வைத்த பக்தியாலேயே காகபுஜண்டன் இவ்வாறு தவறு செய்தான். எனவே அவனை மன்னிக்க வேண்டுகிறேன். எல்லையில்லாத கருணை கொண்ட பரம்பொருளான நீர் இந்த சாபத்தை நீக்க வேண்டும். “

இதைக் கேட்ட சிவன் “ சாபமிட்டதை நீக்க முடியாது. ஆனால் பிறவிகளை வேண்டுமானால் குறைக்கலாம். பத்தாயிரம் பிறவிகளுக்குப் பதிலாக காகபுஜண்டன் ஆயிரம் பிறவிகள் எடுத்துத் தன் கர்மபலனைத் தீர்ப்பான். இந்தப் பூவுலகே அழிந்தாலும் காகபுஜண்டனுக்கு அழிவில்லை. குருவான நீங்களே கேட்டுக் கொண்டதற்காக அவனது சாபத்தை மாற்றியமைத்தேன் “ என்றார்.

தனக்காக இறைவனிடம் பேசி சாபத்தைக் குறைத்த குருவை காகபுஜண்டர் வணங்கி மன்னிப்புக் கோரினார். குருவும் அவரை மன்னித்தார். அதன்பின் காகபுஜண்டர் 999 பிறவிகள் எடுத்தார். இவருடைய மனைவி பகுளா தேவி. மகன் ரோமச முனிவர்.

பலகோடி யுகங்களாக எத்தனையோ பிரளயங்களையும் அழிவுகளையும் பார்த்தபின்னும் காகபுஜண்டருக்கு அழிவே ஏற்படவில்லை. பூமியின் மேலிருந்து பூமியில் நிகழும் அனைத்தையும் பார்த்திருக்கிறார். மயில் வடிவில் உமை மயூரநாதரைப் பூசித்தது, ஐந்து தலை பிரம்மன், பூமி சூரிய சந்திரன் உருவாக்கம், பாற்கடல் கடைந்தது, முப்புரம் எரிந்தது, விஷ்ணுவின் பத்து அவதாரம் ஆகியவற்றைத் தன் 999 பிறவிகளில் பார்த்த அவர் ஆயிரமாவது பிறவியாக ஒரு வேதியர் இல்லத்தில் பிறந்தார்.


குருவிடம் திருமாலை வணங்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்ததற்கு மாற்றாக ராம பக்தராக மாறினார். ராமனைக் காணக் காக வடிவெடுத்துப் பல்வேறு உலகங்களிலும் தேடி அலைந்தார். ராமனைக் காண இடையறாது தவம் செய்தார். கடுந்தவத்தின் பின் அவரைக் கண்டு வணங்கிக் குருவின் ஆசையை நிறைவேற்றினார். அதன்பின் பதினாறு ஆண்டுகள் கடுமையாகத் தவம் இயற்றிச் சிவன் தரிசனம் பெற்றுச் சமாதி அடைந்தார்.

குருவின் வாக்கைக் கேட்டு நடந்த சீடனைப் பற்றியும், சீடனின் நற்பவித் தன்மை அறிந்து அவனுக்காக சாபவிலக்குக் கேட்ட குரு பற்றியும் அறிந்து கொண்டோம்தானே. நாமும் எப்போதும் நம் குருவின் சொற்கேட்டு நடப்போம். அதனால் என்றும் நன்மையே விளையும் என்பது உண்மைதானே குழந்தைகளே. நற்பவி. 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)