செவ்வாய், 25 அக்டோபர், 2022

இரண்யாட்சனும் நரகாசுரனும்

 இரண்யாட்சனும் நரகாசுரனும்



இரண்யாட்சனும் நரகாசுரனும் அரக்க குணம் கொண்டவர்கள். இருவரும் தாங்கள் புத்திசாலித்தனமாக வரம் கேட்பதாக நினைத்துக் கேட்டு அதன் மூலமே அழிவைத் தேடிக் கொண்டவர்கள். அப்படி அவர்கள் கேட்ட வித்யாசமான வரம் என்ன அதையும் மீறி அவர்கள் அக்கிரமத்துக்காக எப்படி தண்டனை பெற்றார்கள் என்பதைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

 

காசியபர் திதி தம்பதியின் புதல்வன் இரண்யாட்சகன். இவரின் தம்பிதான் இரண்யகசிபு. மரணமில்லாப் பெருவாழ்வு பெற வேண்டி இரண்யாட்சகன் பிரம்மாவை நோக்கித் தவம் இருந்தார். பல்லாண்டுகாலத் தவம். இவரின் தவ நெருப்பால் பூமியே கொதித்தது. அது பிரம்மலோகம் வரை எட்டியது. பிரம்மா ஓடோடி வந்தார்.

“இரண்யாட்சகா. நிறுத்து உன் தவத்தை. பிரம்மலோகமே அனலடிக்கிறது. என்ன வரம் வேண்டும் கேள்.”

”மரணமில்லாப் பெருவாழ்வு வேண்டும் பிரம்ம தேவரே”



“பிறந்த உயிர்கள் அனைத்தும் ஒரு நாள் இறப்பு எய்தியே தீரும். அதனால் அவ்வரத்தை வழங்க இயலாது. வேறு வரம் கேள்.”

“மூவுலகுக்கும் அரசனாக வேண்டும். அதோடு என் இறப்பு எந்த ஆயுதத்தாலும் நிகழக் கூடாது “

“அப்படியே தந்தேன்” என்று கூறி மறைந்தார் பிரம்மா. ஆரம்பித்தது இரண்யாட்சனின் அட்டகாசம். மூவுலகத்தினரும் எந்த ஆயுதம் கொண்டு எதிர்த்தாலும் அவர்களை அநாயாசமாகத் தூக்கி எறிந்தான் இரண்யாட்சன். மேலும் பூமியை அபகரித்துக் கடலுக்குள் அமிழ்த்தி மறைத்து வைத்தான்.

பூமாதேவி கதறத் தொடங்கினாள். இரண்யாட்சனைக் கண்டாலே பிரம்மாவும் இந்திராதி தேவர்களும் பயந்து ஓடினார்கள். திருமாலிடம் தம்மைக் காக்கும்படி முறையிட்டார்கள். பாதாளத்தில் கடலில் மூழ்கிய பூமியை மீட்கத் திருமால் வராக அவதாரம் எடுத்தார்.

ஆயுதத்தால்தானே அழிக்க இயலாது. அதனால் வராகம் தன் கூரியபற்களால் அக்கொடிய அசுரனைக் குத்திக் கொன்றது. வித்யாசமான வரம் கேட்டவன் அதனாலேயே அழிந்தான். வராகம் பூமியை மீட்டு தன் யதாஸ்தானத்தில் நிறுத்தித் தர்மத்தை நிலைநாட்டியது.

அப்போது ஒரு அபூர்வ விஷயம் நிகழ்ந்தது. பூமாதேவியை வராகர் தன் பற்களால் தூக்கி வந்தபோது அவரது அருளால் பூமாதேவிக்கு ஒரு மகன் பிறந்தான். பூமாதேவிக்கும் புருஷோத்தமனுக்கும் பிறந்த புத்திரன் என்பதால் அவன் பௌமன் என்றழைக்கப்பட்டான்.

பௌமன் வாட்டசாட்டமாக வளர்ந்து பிரக்ஜோதிஷபுரம் என்னும் நாட்டுக்கு அரசன் ஆனான்.  இரண்யாட்சன் என்னும் அசுரன் நிகழ்த்திய அழிவின் சமயத்தில் இறைவனிடம் இருந்து தோன்றியவன் என்பதாலோ என்னவோ இவனிடம் அரக்க குணமும் ஒளிந்திருந்தது.

இவன் பெரியவன் ஆக ஆக அந்த அரக்க குணமும் வளர்ந்து வந்தது. தான் திருமாலின் மகன் என்ற எண்ணத்தோடு அவரிடம் அவனும் மரணமில்லாப் பெருவாழ்வு கேட்டான். அவன் கேட்டவுடன் அவர் இந்தா வரம் என்று அள்ளிக் கொடுத்துவிடவில்லை. நிறைய யாகம், தவம் எல்லாம் செய்து இவனும் பல்லாண்டு காலம் காத்திருந்தான்.



ஒரு கட்டத்துக்குப் பிறகு இவன் தவம் அசைக்க மகாவிஷ்ணு அவனுக்குக் காட்சி கொடுத்தார். “என்ன வரம் வேண்டும் பௌமா?” என்று கேட்க அவனும் திரும்ப மரணமில்லாப் பெருவாழ்வைக் கேட்டான்.

“என் மகனாகவே இருந்தாலும் இந்தப் பூமியில் பிறந்துவிட்ட காரணத்தால் உனக்கு அந்த வரத்தைத் தர முடியாது. “ என்றார்.

பூமிதான் தன்னோட தாய். எனவே தாய் தன் குழந்தையைக் கொல்லமாட்டாள் என முடிவெடுத்து, புத்திசாலித்தனமாகக் கேட்பதாக நினைத்து ”என்னுடைய மரணம் என் தாயின் கையால்தான் நிகழ வேண்டும்.” என்று கேட்டான் பௌமன்.   

மகாவிஷ்ணுவும் வரத்தைத் தந்து மறைந்தார். அவ்வளவுதான் ஆரம்பித்தது பௌமனின் ஆட்டமும். உலக உயிர்கள் மட்டுமல்ல ஈரேழு பதினாலு லோகத்திலும் அவன் அட்டகாசம் அதிகரித்தது. நரனாய் இருந்த பௌமன் தன் அரக்க குணத்தால் நரகாசுரன் ஆனான்.



எல்லா உலகத்தவர்களும் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார்கள். ” நாராயணா, நரகாசுரனின் கொடுமை தாளவில்லை. காப்பாற்றுங்கள். அபயம். அபயம். “ நரகாசுரனின் அட்டூழியம் ஆரம்பித்த சமயத்தில் மஹாவிஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்திருந்தார். பூமாதேவியும் அவருடைய மனைவி சத்யபாமாவாக அவதாரம் எடுத்திருந்தாள்.

எல்லா மக்களையும் நரகாசுரனிடம் இருந்து காக்க வேண்டி கிருஷ்ணர் தனது தேரில் ஏறி அவனுடன் போர் புரியப் புறப்பட்டார். எங்கே அவர் சென்றாலும் அவருடன் கூடச் செல்லும் சத்யபாமாவும் உடன் தேரில் ஏறிக் கொண்டாள். இருவரும் நரகாசுரன் முன் சென்று நின்றார்கள். தன் முன் புதிய நரர்களைப் பார்த்ததும் நரகாசுரன் அவர்களைத் துன்புறுத்தும் நோக்கில் ஓடிவந்தான்.

வேறொரு அவதாரத்தில் வந்திருந்ததால் வந்திருப்பவர்கள் தனது தாயும் தந்தையும்தான் என்பதைக் கூட உணர முடியாத அளவு அவன் தீயவனாய் மாறி இருந்தான். தன் தந்தையுடனே போரை ஆரம்பித்தான். தொடர்ந்து பலநாட்கள் நடந்தது போர்.

ஒரு நாள் போரின் போது கிருஷ்ணர் வேண்டுமென்றே தன் தேரில் மயக்கம் வந்தவர் போல் விழுந்தார். இதைக் கண்டு நரகாசுரன் தன் ஆயுதத்துடன் அவரைத் தாக்க வெறி  கொண்டு ஓடி வந்தான். உடனே சத்யபாமா கிருஷ்ணரின் வில்லையும் அம்பையும் எடுத்து அவன் மேல் சராமாரியாக அம்பு மழை பொழிந்தாள். உடனே கீழே விழுந்தான் நரகாசுரன்.

அப்போதான் அவனுக்கு ஞானம் பிறந்தது. தன்னை அம்பால் எய்தவள் தன் தாய்தான் என்று உணர்ந்தான். பூமாதேவின் கால்களில் விழுந்தான். மரிக்குமுன் அந்தநாளை பூலோகத்தவர் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டான். அதனால்தான் தீபாவளி பிறந்தது.

என்னதான் சாமர்த்தியமாக, வித்யாசமாக வரம் பெறுவதாக நினைத்தாலும் இரண்யாட்சனும், நரகாசுரனும் அட்டூழியம் செய்து, அக்கிரமாக , ஆணவமாக நடந்ததால் தாம் பெற்ற வரத்தாலேயே அழிந்தனர். எனவே நல்லவற்றையே இறைவனிடம் கேட்டுப் பெறுவோம். நல்லபடியே நடப்போம் குழந்தைகளே.   

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)