வியாழன், 26 மே, 2022

தான் கருணை இல்லக் குழந்தைகளின் மூத்தோர் தினவிழாக் கட்டுரை நூலுக்கான அணிந்துரை

 மூத்தோர் தினவிழாக் கட்டுரைப் போட்டி

சர்வதேச முதியோர் தினத்தை ஒட்டி மதுரை தானம் அறக்கட்டளை வெளியிட்ட கட்டுரைப் போட்டி நூல் ஒன்றுக்கு அணிந்துரை எழுதும் வாய்ப்பு அமைந்தது.

நிலக்கோட்டை தான் கருணை இல்லக் குழந்தைகளின் கருணையும் காருண்யமும் பொதிந்த கட்டுரைகள் படித்துக் கண்கள் கசிந்தது நிஜம். முதியோர்களைப் பாதுகாக்கவும், முதியோர் நலன் பற்றியும் ஆக்கபூர்வமாய் ஆலோசனைகள் வழங்கி நம்பிக்கை தந்த குழந்தைகளுக்கு அன்பு &
வாழ்த்துக்கள்

முதியோர் நலனில் அக்கறை கொண்டு இந்நூலை ஆக்கம் செய்த தானம் அறக்கட்டளைக்கும் திரு. பகவதி திருமலை சார் அவர்களுக்கும்
வாழ்த்துக்கள்
& நன்றிகள்.

தான் கருணை இல்லக் குழந்தைகளின் கட்டுரைகள்.

தான் கருணை இல்லம் நிலக்கோட்டை

முகவுரை

அணிந்துரை:-

தான் கருணை இல்லக் குழந்தைகள் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் சிப்பியின் முத்துக்கள். பள்ளியில் பயிலும் வயதிலேயே தங்கள் வாழ்வியல் அனுபவங்களைக் கொண்டு ஒவ்வொரு மாணாக்கரும் வடித்திருக்கும் கட்டுரைகள் அதி சிறப்பு. இந்நூலில் சிறார்களுக்குச் சிறார்களின் கட்டுரைகளே ஞானக் கண்ணைத் திறக்கும் திறவுகோலாக அமைந்திருக்கின்றன.

”முதியவர்களை மதிப்பவர்கள் வெற்றியை நோக்கித் தங்கள் சொந்தப் பாதையை அமைத்துக் கொள்கிறார்கள்” என்பது ஆப்ரிக்கப் பழமொழி. ”மூத்தோர் சொல் அமிர்தம்” என்பது தமிழ் மொழி. அதை வழிமொழிகிறது செல்வி ஜெயஸ்ரீயின் கட்டுரை. முதியோர்கள் நமது வழிகாட்டிகள் என்று முத்தாய்ப்பாய்க் கூறி இருக்கிறார்.

வாழும்போதே அவர்களைப் போற்றிப் புகழ வேண்டும், பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும், அவர்கள் மறைந்தபின் அதை எல்லாம் செய்யாமல் விட்டோமே என்று  கழிவிரக்கம் கொள்வதால் என்ன பயன் ?

ஈசாப்பின் கதை ஒன்றில் ஒரு அரசன் நாடு விட்டுப் புலம் பெயரும்போது முதியோர்கள் சுமை என்று இருக்குமிடத்திலேயே விட்டு விட்டு வரச் சொல்வான். எல்லாக் குடிமக்களும் மனச்சங்கடத்தோடு அவன் ஆணையை மீற முடியாமல் குறைந்த பொருட்களை எடுத்துக் கொண்டு வயது முதிர்ந்த பெற்றோரை அங்கேயே விட்டு விட்டுத் தங்கள் குதிரைகளில் பின் தொடர்வார்கள்.

பயணத்தில் ஓரிடத்தில் தண்ணீர் கிடைக்காமல் மொத்த மக்கள் கூட்டமும் அவதியுறும். அப்போது ஒருவன் வந்து தண்ணீர் கிடைக்குமிடத்தைக் கூறுவான். உடனே அனைவரும் அதை நோக்கிச் சென்று தாகம் தீர்த்துக் கொள்வார்கள். அப்போது அரசன் சந்தேகப்பட்டு ”உனக்கு மட்டும் இது எப்படித் தெரியும்” என வினவுவான். அப்போது அவன் தன்னுடைய தந்தையை நாட்டிலேயே தனியாக விட்டு வர மனமில்லாமல் தன்னுடைய குதிரையின் வயிற்றில் கட்டி மறைத்து வைத்துப் பயணித்து வந்ததாகக் கூறுவான். இதைக் கேட்டுப் பெரியோர்களின் அருமையை உணர்ந்த மன்னன் மனம் திருந்தி அனைத்துக் குடிமக்களும் சென்று தம் பெற்றோர்களை அழைத்து வரும்படிக் கூறுவான்.  

முதியவரை மதிப்பதில் உள்ள கடமைகள், பொறுப்புகள் பற்றிக் கூறும் சிவரஞ்சனியின் கட்டுரை பிற்காலத்தில் நாம் முதியவராகும்போது நாம் இப்போதுள்ள முதியவர்களுக்குச் செய்ததே நமக்கும் கிடைக்கும் எனக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.

முதியோர்களை ஏளனமாகப் பேசுதல் & உரிய மரியாதையைத் தராமல் இருத்தல் பற்றிய கண்டனம், மரியாதையாக விளித்தல், முதியோர்களைப் பராமரித்தல், பிச்சை எடுப்பதைத் தடுத்து உதவுதல், பிள்ளைகளின் பொறுப்புக்கள், வயதானவர்களின் தேவைகள், அவர்களைத் தொல்லையாக நினைக்காமலிருக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிக் கூறும் இக்கட்டுரைகள் இனிய இளையர்களை அறிமுகப்படுத்தி எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது.

இயற்கையோடு இயைந்த அவர்கள் வாழ்வு, இயற்கை உணவுகளால் நீளும் அவர்களின் ஆயுள், குழந்தைகளைப் போல் மாறிவிடும் பெரியவர்கள், அவர்கள் உடல் மன நிலையைக் காத்தல், முக்கிய விஷயங்களில் முடிவெடுக்க அவர்களின் ஆலோசனையைப் பெறுதல், ஆசி பெறுதல், இல்லமே சொர்க்கம், நாம் வழிகாட்டியாக இருந்தால்தான் நம் சந்ததியினர் நம்மை முதுமையில் மதிப்பார்கள், ஒவ்வொரு முதியவரையும் தாத்தா பாட்டியாகக் கருதுவேன், அனுபவமுள்ள முதியோர்களின் கருத்துக்களைக் காது கொடுத்துக் கேளுங்கள் என்னும் கருத்துக்கள் குழந்தைகளின் பொறுப்புணர்வை உணர்த்தி வியப்பளிக்கின்றன.  

கதைகள் கூறுதல், புதிர்க்கணக்குப் போடுதல், விவசாயத்தில் ஈடுபடுதல், முன்னெச்சரிக்கையோடு வழிநடத்துதல், நல்வழிப்படுத்துதல் என்று பெரியோர்களின் நற்பண்புகளைப் பட்டியலிட்டு இருப்பதும் சிறப்பு.

செவிலியாக இருந்து பார்த்துக் கொள்வேன் என்று கூறி இருக்கும் சிவசத்யா நெகிழ்ச்சி அளிக்கிறார்.குழந்தைகள் இல்லங்களை விட பெருகி வரும் முதியோர் இல்லங்கள் பற்றிய சுபாதேவியின் கட்டுரை சிறந்த எச்சரிக்கை மணியாக ஒலிக்கிறது.

”அம்மா அப்பா இல்லாத பிள்ளைகளுக்கு இந்த இல்லம் இல்லை என்றால் கஷ்டம்தான், எனவே நானும் இதுபோல் முதியோர்களுக்கு ஒரு உயர்ந்த இல்லத்தை உருவாக்குவேன்” என்று கூறும் ஹரீஷ் பிரசாத்ராஜின் வாக்கு வெற்றி பெறட்டும்.

முதியோர் இல்லத்துக்கு அனுப்பப்படும் பெரியவர்களின் மனநிலையைப் பற்றிக் கூறி அவர்கள் மனம் கஷ்டப்படாமல் அன்போடு பார்த்துக்கொள்வேன் என்று கூறும் ஸ்ருதியும், முதுமை ஒரு சுமை என்று கருதும் மனிதர்களைத் திருத்துவேன் என்று கூறும் காயத்ரியும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.  

இக்கட்டுரைகளை எழுதியவர்கள் ஒன்பதாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்து வரும் 27 மாணவிகள், 2 மாணவர்கள் என்பது சிறப்புத்தகவல். கருணை இல்லத்தில் வாழும் குழந்தைகளுக்கு வாழ்வியல் பற்றிய பெருநோக்குப் பார்வை இருக்கிறது. எதையும் நேர்மறை சிந்தனையோடு அணுகும் இவர்கள் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள். சிறப்பான கட்டுரை படைத்த இந்தக் குழந்தைகளுக்கும் இதை அழகாக நூலாக்கம் செய்து எல்லோருக்கும் எடுத்துச் செல்லும் தானம் அறக்கட்டளைக்கும் வாழ்த்துக்கள்.

”வீட்டில் இருக்கும் ஒரு முதியவர் வாழும் தங்கச் சுரங்கம் போன்றவர்” என்கிறது சீனப் பழமொழி. எனவே எங்கிருந்தாலும் பெரியோரைப் போற்றுவோம் என உறுதி கொள்வோம்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)