திங்கள், 16 மே, 2022

பாரதி பதிப்பகத்தில் எனது நான்கு நூல்கள் வெளியீடு.

வளையாபதி குண்டலகேசி - மூலமும் உரையும். வெளியீடு. 

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ளது பாரதி பதிப்பகம். இந்நிறுவனம் 70 ஆண்டுகளாகச் சிறப்பாக நடந்து வரும் பெருமை உடையது. 

இதன் தற்போதைய நிர்வாக இயக்குநர் செல்வி நித்யா ராஜேந்திரன். துடிப்பான இளம்பெண். 




இந்த வருடம் புத்தகத்திருவிழாவிற்காகக் கிட்டத்தட்ட 50 புது நூல்களை புது ஆசிரியர்களைக் கொண்டு எழுத வைத்துப் பதிப்பித்து இருக்கிறார். அதில் நானும் ஒருத்தி எனச் சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகின்றேன்.

 செல்வி நித்யா நவம்பர் மாதம் இரண்டாம் தேதி என்னுடைய நூல்களை அமேஸானில் பார்த்தும் என் யூ ட்யூப்  நூல் விமர்சனங்களைப் பார்த்தும் தொடர்பு கொண்டார்.


ஒரு நூலை எழுதித் தரும்படி கேட்டார். வளையாபதிதான் அது. தொடர்ந்து குண்டலகேசி, நாககுமார காவியம், நீலகேசி ஆகியவற்றையும் டிசம்பர் மாதம் 15 தேதிக்குள் எழுதி ப்ரூஃப் பார்த்தும் அனுப்பி விட்டேன். ஏனெனில் ஜனவரியில் புக்ஃபேர் வருவதாக இருந்தது. 

ஐம்பெருங்காப்பியங்களையும் ஐஞ்சிறுங்காப்பியங்களையும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக இந்நூல்களை அவர் என்னை எழுத வைத்துப் பதிப்பித்து இருக்கிறார். 

“காப்பியங்களுக்கு எல்லாம் உரை எழுத நான் முனைவர் இல்லையேம்மா. ”என்று தயங்கிய போது “ ஆண்டி நீங்கள் எழுதுவது மற்றும் பேசுவது எங்களைப் போன்ற இளையர்களுக்குப் புரிகிறது. எனவே எளிய தமிழில் நீங்கள் எங்களுக்கு உரை எழுதித் தாருங்கள். அதை இளையோர்களுக்கும் கொண்டு சேர்ப்போம் “ என்றார். 

அதன்படி எழுதிக் கொடுத்தேன். புத்தகத் திருவிழாவிற்கு வருகை தந்திருந்த முனைவர் ,கலைமாமணி திரு ஞானசம்பந்தன் அவர்கள்   நட்பு ரீதியில் பாரதி பதிப்பகம் வந்து எனது நூல்களை வெளியிட வானதி பதிப்பகத்தைச் சார்ந்த திரு இராமு அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். அவர்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 

இந்த வருடப் புது வெளியீடுகளாய் வந்த எனது பதினைந்தாவது பதினாறாவது நூல்களான ”நன்னெறிக் கதைகள்” அங்கே பல்வேறு ஸ்டால்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அந்நூல்களைப் பதிப்பித்த சில்வர்ஃபிஷ் வள்ளி அருணாச்சலம் அவர்களுக்கும் நன்றி. 

எனது பதினேழாவது பதினெட்டாவது பத்தொன்பதாவது நூல்களான ”வளையாபதி & குண்டலகேசி - மூலமும் உரையும்”, “ நாககுமார காவியம் - புதினம்” “நீலகேசி - புதினம்” ஆகியவற்றை பதிப்பாளர் செல்வி நித்யா ராஜேந்திரன் வெளியிட்டுச் சிறப்புச் செய்தமைக்கும் மனமார்ந்த நன்றிகள்.  

காரைக்குடியில் புத்தகத்திருவிழாவை முன்னின்று நடத்தும் என் இரண்டாவது மாமா திரு லயன் வெங்கடாச்சலம் அவர்கள் சென்னை புக் ஃபேர் சென்றபோது பாரதி பதிப்பகம் நிர்வாக இயக்குநர் செல்வி நித்யா ராஜேந்திரன் அவர்கள் பரிசளித்து உள்ளாரகள்.

நித்யா எனது இருபதாவது நூலான கோலங்கள் என்ற நூலையும் கொண்டு வந்துள்ளார். அதற்கும் அவருக்குச் சிறப்பு நன்றிகள். வாழ்க வளமுடன். 

3 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  2. பழம்பெரும் நூல்களை இன்றையக் கண்ணோட்டத்தில் இளைஞர்களைக் கொண்டு புதிய உரையை எழுத வைத்து அழகிய வடிவமைப்பில் வெளியிடுவது தமிழுக்குச் செய்யப்படும் மகத்தான சேவையாகும். உங்கள் எழுத்துக்கு என் வாழ்த்து!

    பதிலளிநீக்கு
  3. ஊக்கமூட்டும் உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள் இராய செல்லப்பா சார்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)