வெள்ளி, 8 ஏப்ரல், 2022

சகோதர பாசத்தில் சிறந்த சம்பாதி.

 சகோதர பாசத்தில் சிறந்த சம்பாதி.  


பொதுவாகவே பறவைகளுக்கு இருக்கும் கூரியபார்வையை நாம் அறிவோம். எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் நீரில் இருக்கும் தம்முடைய இரையை அவை கூர்ந்து கவனித்து இறங்கிப் பிடிக்கும். ஆனால் ஒரு பறவையின் பார்வையில் கடல் தாண்டி இருக்கும் தீவே தெரிந்ததாம். அதனால் நன்மையே விளைந்தது அப்பறவைக்கும். சகோதர பாசத்திலும் சிறந்த அப்பறவையின் கதை என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே. 

மஹேந்திரமலையில் ஏறிக்கொண்டிருந்தார்கள் சுக்ரீவனின் வானர வீரர்கள். அங்கதன், அனுமன் இவர்களோடு ஜாம்பவானும் சென்று கொண்டிருந்தார். அனைவரின் முகங்களிலும் ஆயாசம். பலமாதங்கள் ஆயிற்று அவர்கள் கிளம்பி. சீதா தேவியாரைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள் அவர்கள்.


இறக்குமுன் ஜடாயு ராமபிரானிடம் கூறியபடி இராவணன் சீதையைப் பர்ணசாலையோடு பேர்த்துத் தன் புஷ்பக விமானத்தில் வைத்துக் கடத்திச் சென்றுவிட்டான். எங்கே ஒளித்து வைத்திருக்கிறானோ? எப்படிக் கண்டுபிடிப்பது ? சுக்ரீவனுக்கு என்ன பதில் சொல்வது? இராமபிரானை எந்த முகத்தோடு சென்று சந்திப்பது?

மஹேந்திர பர்வதத்தின் முகட்டில் நின்று கொண்டிருந்தார்கள் அவர்கள். களைத்து அமர்ந்து இருந்தது அவர்களோடு சென்ற வானர சேனை. அப்போது அங்கதன் சொன்னார். ”இதுதான் தென் எல்லை. இங்கிருந்து கடல் ஆரம்பித்துவிடும். இதன்பின் நாம் எல்லாம் எப்படிச் செல்வது? அந்த ஜடாயு இறக்கும்போது இராவணன் சீதையைத் தூக்கிச் சென்றான் என்று கூறிவிட்டு இறந்துவிட்டான். ஆனால் நம்மால் இன்னும் அந்த இராவணனையும் கண்டுபிடிக்க முடியவில்லை. சீதையையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தோல்வி அடைந்துவிட்டோம்” என வருந்தினார்.

அப்போது ஜாம்பவான்,” மனம் தளராதே அங்கதா!. இந்தக் கடலில் எந்தத் தீவில் சீதாபிராட்டி இருக்கின்றார்களோ யாருக்குத் தெரியும். ஜடாயு சொன்னது உண்மையாகத்தான் இருக்கும். ஆனால் பாவம் அவன் இராவணனோடு போரிட்டு உயிரிழந்துவிட்டான். அவன் இறக்கைகளை எல்லாம் இராவணன் வெட்டி வீசி இருந்ததைப் பார்த்தால் மனம் பதறும்.”

அப்போது திடீரென்று ஒரு சப்தம். அம்மலையின் குகையில் இருந்து “ஜடாயு என் தம்பி.. என்ன ஆயிற்று உனக்கு? இவர்கள் சொல்வதெல்லாம் உண்மையா?” என்று அழுது கதறியபடியே பிரம்மாண்டமான உருவம் கொண்ட கழுகு ஒன்று வெளியே வந்தது. ஐயகோ என்ன கோரக் காட்சி. அதன் சிறகுகள் எல்லாம் தீயில் தோய்ந்து எரிந்து இருந்தன. அதனால் அவனால் பறக்க முடியவில்லை. தத்தித் தத்தியே குகையை விட்டு வெளியே வந்தான்.

அங்கே குழுமியிருந்த நூற்றுக்கணக்கான வானர வீரர்களையும் ஜாம்பவானையும், அங்கதனையும், அனுமனையும் பார்த்துக் கேட்டான்” நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையா? என் பெயர் சம்பாதி, என் சகோதரன் ஜடாயுவை அந்த இராவணன் இறகுகளை வெட்டிக் கொன்றானா? “ எனக் கேட்டான்.


அதற்கு ஜாம்பவானும்” ஆம் அப்பா! உண்மைதான். அதைச்சொல்லவே மனம் வருந்துகிறது. சீதாபிராட்டியாரை இராவணன் தூக்கிச் சென்றதை ஜடாயு தடுத்ததாலேயே வெட்டிக் கொன்றான்” என்றார்.

அதைக் கேட்ட சம்பாதி மனம் வருந்தி அழுதான்.” ஆமாம் உன் இறக்கைகளுக்கு என்ன ஆயிற்று. நீ எதனால் உன் இறக்கைகளை இழந்தாய்?” எனக் கேட்டார். அதற்கு சம்பாதி நாங்கள் இருவரும் கருடனின் தம்பியான அருணனின் மகன்கள். என் தம்பிதான் ஜடாயு. ஒரு நாள் விளையாட்டாக சூரியனை எட்ட எண்ணி இருவரும் போட்டிபோட்டு உயரே உயரே பறந்தோம்.”

“ஆனால் அதிக உயரம் சென்றதும் சூரியனின் நெருப்பு எங்களை வாட்ட ஆரம்பித்தது. விளையாட்டு வினையானது. ஜடாயுவின் இறகுகள் வாடின. என் தம்பியான அவனைக் காப்பாற்றும் பொருட்டு என் இறகுகளினால் அவனை மூடினேன். அவனைக் காப்பாற்றிவிட்டேன். ஆனால் என் இறகுகள் பற்றி எரிந்தன. அவனைப் பத்திரமாகத் தரையிறக்கும்போது என் சிறகுகள் முழுமையாகக் கருகி விட்டன. அன்றிலிருந்து நான் இந்த மலைக்குகையில் வசித்து வருகிறேன்” அவனது நிலையைக் கண்டு அனைத்து வானர வீரர்களும் வருந்தினார்கள்.


”நானும் சில மாதங்களுக்கு முன் அரக்கன் ஒருவன் ஒரு பெண்ணைத் தூக்கிச் செல்வதைக் கண்டேன். அவள் ‘இராமா காப்பாற்று” என்று அழுது கொண்டே சென்றாள். ஒருவேளை அவள்தான் சீதையாக இருக்கக் கூடும். அந்த அரக்கன் அவளை இந்தக் கடல்தாண்டி எண்ணூறு யோசனை தூரத்தில் இருக்கும் இலங்கைத் தீவில் சிறை வைத்துள்ளான். என் கூரிய பார்வையால் நான் அதைக் கண்டேன். எதற்கும் உங்களில் ஒருவர் சென்று அவர் சீதைதானா என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் “ எனக் கூறினான்.

இந்தத் தகவல்களைக் கேட்டதும் வானர வீரர்களுக்கு உற்சாகம் கொப்பளித்தது. அதைக் கேட்ட அவர்கள் ஒரே குரலில் “ஸ்ரீராம், ஜெயராம், ஜெய ஜெய ராம். சீதை கிடைக்கப் போகிறார். ராமருக்கு வெற்றி “ என்று கூறி திரும்பத் திரும்ப ராமநாமத்தைக் கூறத் தொடங்கினார்கள். அதைக் கேட்கக் கேட்கவே சம்பாதியின் கருகிய சிறகுகள் உதிர்ந்து இளமையான புதியசிறகுகள் தோன்றத் தொடங்கின.

அவனும் அதைக் கண்டு ஆச்சர்யப்பட்டுக் கூறினான்”இராம காரியத்துக்கு நீ உதவும்போது உன் எரிந்த சிறகுகள் முளைக்கும்” என்று எனக்கொரு வரம் கிட்டியது அது இப்போது உண்மையாயிற்று.” என மகிழ்ந்தான்.

வானர வீரர்கள் காணக் காணவே சம்பாதியின் சிறகுகள் முளைத்து அவன் வலிமையான தோற்றம் அடைந்தான். அவன் மூலம் சீதை இருக்கும் இடம் தெரிந்ததும் சம்பாதிக்கு நன்றி கூறி அனைவரும் இலங்கைக்குப் புறப்படத் தயாரானார்கள்.

ஒரு பறவையின் கூரிய பார்வையையும் அதனால் விளைந்த நன்மையையும், அவன் சகோதர பாசத்தையும் கண்டு நாமும் நெகிழ்ந்தோம் இல்லையா குழந்தைகளே. நாமும் அனைவருக்கும் நம்மாலான உதவிகளைச் செய்வோம்.

1 கருத்து:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)