வியாழன், 9 டிசம்பர், 2021

மன்னார்குடி அருள்மிகு ஆனந்த விநாயகர் திருக்கோயில்

 மன்னார்குடி - இராஜ மன்னார்குடி ஒற்றைத் தெருவில் இருக்கும் ஆனந்த விநாயகரை கிட்டத்தட்ட 40 வருடங்களுக்குப் பின் தரிசித்தேன். 

கணவருக்கு மன்னார்குடியில் அலுவலக வேலையாகச் செல்ல வேண்டி இருந்தது. உடனே நானும் பையனும் கூடக் கிளம்பி விட்டோம். முக்கிய காரணம்  அங்கே என் தோழி ப்ரேமலதா தியாகராஜன் இருப்பதால்தான்.

முகநூலில் என்னைத் தேடி இணைந்து வாட்ஸப்பில் நான்கைந்து வருடங்களாகத் தொடர்பு கொண்டு வந்தே ஆக வேண்டும் என அன்புப்பிடிவாதம் செய்து கொண்டிருந்தாள் அவ்வப்போது. எனக்கும் போக ஆசைதான் . ஆனால் நேரம் ஒத்துழைக்கவில்லை. 

கணவர் மன்னார்குடி என்றதும் உடனே கிளம்பி அவளையும் அவளின் அன்பு முயற்சியால் இன்னும் சில தோழியரையும் ( வஹிதா, அமுதா, வசந்தி ) சந்தித்துவிட்டு வந்தேன். 

அந்தப் பயணத்தின் போது நான் மூன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை படித்த கணபதி விலாஸ் பள்ளி, இரண்டாம் வகுப்பு & எட்டு முதல் ப்ளஸ்டூ வரை படித்த செயிண்ட் ஜோசப் பள்ளி ஆகியவற்றையும் நாங்கள் குடியிருந்த 18, சிங்காரவேலு உடையார் தெரு, லெக்ஷ்மி காலனி வீட்டையும், ஆனந்த விநாயகர் & இராஜகோபால சுவாமியையும் தரிசித்துவிட்டு வந்தோம்.

பிரேமலதாவின் அன்பில் தோய்ந்த நிறைவான பயணம். ( ப்ளஸ் ஒன் ப்ளஸ் டூ வரை இருவரும் படித்தோம். அவளுக்குத் திருமணமாகிவிட நான் கல்லூரிக்குச் சென்றேன். நாங்கள் இருவரும் அன்பு மடல்களாக வரைந்து தள்ளி இருந்திருக்கிறோம். அதை எல்லாம் பத்திரமாக வைத்துள்ளாள். அவளது மருமகள் அன்பும் அழகும் அறிவும் வாய்ந்த பாசமான பெண். அவளின் முயற்சி மூலமே நாங்கள் சந்தித்தோம். ) 


மன்னை சென்றதும் பூர்ணா லாட்ஜில் தங்கினோம். ஏன் வீட்டிற்கு வந்து தங்கவில்லை என்று லதாவும் அமுதாவும் வருத்தப்பட்டார்கள். :) 

எல்லாருக்கும் தொந்தரவு தரக்கூடாது என்பதால் ஹோட்டலில் தங்கல் ஏற்பாடு.

மறுநாள் காலை முதன் முதலில் காரை எடுத்துக் கொண்டு ஆனந்த விநாயகர் தரிசனம். கோயில் அன்று கண்ட மேனிக்கு அதிகம் அழிவில்லாமல் அதே புதுப்பொலிவோடு இன்னும் பல்வேறு சிற்பங்கள், ஓவியங்களோடு சிறப்பாக இருக்கிறது.

எங்கள் கணபதி விலாஸ் இருந்த இடத்தில் பேருக்கு அரசுப் பள்ளியாக இருக்க ஆதிபரா சக்தி காலேஜ் வந்துள்ளது. பழைய பில்டிங் ஹோகயா. 

ஆனால் இந்த நேஷனல் ஹைஸ்கூல் படு பிரம்மாண்ட்மாக உயர்ந்துள்ளது. பொறாமையாக இருந்தது. 
சிறு வயதில் அப்பா மார்கழி மாதங்களில் இங்கே மண்டகப்படிக்குக் கொடுப்பார். சந்தனக் காப்பு அலங்காரத்தில் எங்கள் ஆனந்த விநாயகர் ஜொலிப்பார். 

நாங்கள் வணங்கிய விநாயகரை ரங்க்ஸ் தரிசித்தபோது. 

இருபுறமும் வாயிற்காப்போன்கள் காவல் காக்க மேலே இருபுறமும் சரஸ்வதியும் லெக்ஷ்மியும். நடுநாயகமாக அம்மையப்பர் ரிஷப வாகனத்தில் கைலாயத்தில் அமர்ந்திருக்க முருகனும் நாரதரும் இருபுறமும் காட்சி அளிக்கிறார்கள். 
இவர்தான் எங்கள் செல்ல விநாயகர்.

முன்பே சொல்லி இருக்கிறேன். எங்கள் பள்ளி எதிரில் இவர் கோயில் தெரியும். எனவே குனிந்து ரோட்டைத் தொட்டு வணங்கி அந்த மண்ணையும் எடுத்து நெற்றிக்கு இட்டுக் கொள்வோம். :) ( விபூதி போலப் பூசிக் கொள்வோம் :)


இப்போது புதிதாக இக்கோயிலில் அன்னதானமும் நடைபெறுகிறது. 

பிரகாரத்திலும் காக்கும் கணபதிகள். கிழக்கு நோக்கிய சந்நிதி. கருவறைக் கோபுரம் மட்டுமே உண்டு. விநாயகருக்கு என்றே உள்ள ப்ரத்யேகமான கோயில்களில் இதுவும் ஒன்று. 

சிவனும் பார்வதியும் வேடக் கோலத்தில். தவத்தில் குறுமுனி. 

வடக்குப் பக்க மதில் சுற்றில் பதினாறு வகையான கணபதிகளும் கொலு வீற்றிருக்கிறார்கள். 


பிரகாரத்தின் மூன்று பக்கங்களிலும் பிரம்மா விஷ்ணு சிவன் திருக்காட்சி அளிக்கிறார்கள். 

தெற்குப் பக்கம் தட்சிணாமூர்த்தியாக சிவனின் அருட்காட்சி.



விநாயகரின்  வரலாறு, பல்வேறு புராணக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

ஆனால் நான் ஒரு ஓவியத்தை மிகவும் தேடினேன். 

அது மேற்குச் சுவரில் விநாயர் கயிலையில் அம்மையப்பனிடம் மாங்கனியைப் பெறும் ஓவியம். அதில் மேலே வலப்புற ஓரத்தில் மயிலில் முருகன் உலா வரும் காட்சி இடம்பெற்றிருக்கும். அந்த ஓவியம் இருந்த இடத்தில் வேறொரு புடைப்புச் சிற்பம் இருந்தது. 

அதை எடுத்த புகைப்படமும் ஏதோ ஒரு காரணத்தால் கசகசவென்று ஆகிவிட்டது. 

வடக்கு நோக்கிக் காட்சி தரும் உற்சவர். இவருக்குப் பக்கத்திலேயே அலுவலக அறை உண்டு. 
பூத கணங்கள் சூழ விநாயகரின் ஆனந்தத் திரு நடனம். 


கோயிலின் பக்கத்தில் ஊரணி உண்டு. 

எங்கள் சிறுவயதுத் தோழன் இவர். எங்கள் எல்லா நம்பிக்கையும் வேண்டுதல்களும் இவரிடம் இருந்தே ஆரம்பிக்கின்றன. நாங்கள் முதன் முதலில் அறிந்த எங்கள் விளையாட்டுத் தோழன், வழி நடத்துபவன் , துணை வருபவன், தோள் கொடுப்பவன்  & ஆத்மார்த்தக் கடவுள். இத்தனை வருடம் கழித்துச் சென்று பார்த்தபோதும் அதே மாறாத புன்னகையோடு எங்களோடு என்றும் இருப்பதான ஒரு பார்வை பார்த்தார். இருவரும் எங்கெங்கோ இருந்தாலென்ன? அகமும் முகமும் குளிர அவரைத் திரும்பவும் சேர்த்தெடுத்துக் கொண்டு ஆனந்தத்தோடு வந்தோம். 

4 கருத்துகள்:

  1. அருமை.தங்கள் தயவால் நாங்களும் தரிசித்தோம்..வாழ்த்துகளுடன்.

    பதிலளிநீக்கு
  2. Friends reunion, மற்றும் கோவில் தரிசனமும், விளக்கமும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  3. நன்றி ரமணி சார்

    நன்றி ஜம்பு சார்

    நன்றி பானுமதி.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)