சனி, 2 அக்டோபர், 2021

சாட்டர்டே போஸ்ட். கொரோனா கெஸ்ட்ஸ் பற்றி எழில் அருள்

 எழில் அருள். மன நல ஆலோசகர். மனமகிழ் மைண்ட் கேர்  எனும் ஆலோசனை மையம் கடந்த ஆறு ஆண்டுகளாக நடத்துகிறார். அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச ஆலோசனை வழங்கும் அகல் டிரஸ்ட் அமைப்பின் பொருளாளர். நிகழ்காலம் எனும் blog எழுதுகிறார்.  அதன் மூலம் சிறந்த பெண் பிளாக்கர் ஆக the Hindu metro plus ஆல் கவுரவிக்கப்பட்டார். 

மக்கள் தொலைக்காட்சியில் உளவியல் தொடர்பான ஒரு கருத்தரங்கில் பேசியுள்ளார். பல கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் மன நலம் சார்ந்த , வாழ்வியல் முன்னேற்ற பயிலரங்குகள் நடத்தியுள்ளார்.  

தங்க மங்கை என்னும் மாத இதழில் இரு ஆண்டுகள் மன நலம் குறித்த தொடர் கட்டுரை வெளியிட்டுள்ளார்...இவர்களுடைய மன நலம் குறித்த தொகுப்புகள் manamagizhmindcare யூடியுப் சேனலில் பார்க்கலாம்...

சுயமுன்னேற்றப் பயிற்சியாளர். தோழி அகிலாவுடன் குழந்தைகளுக்கு நிறைய கவுன்ஸிலிங் செய்கிறார். கோவையில் வசிக்கிறார். பல்லாண்டுகளாக என் முக நூல் தோழி.  லவ்லி லேடீஸ் என்ற வாட்ஸப் குழுமத்திலும் ஒருங்கிணைந்து இருக்கிறோம். 


ஒருமுறை க்ராஸ் கட் ரோடு சென்றபோது இவரைச் சந்தித்தேன். அங்கேயே ஆனந்த அறிமுகமாகி ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டோம். 

அவரிடம் சாட்டர்டே போஸ்டுக்காக எழுதித் தரச் சொல்லிக் கேட்டபோது தான் வளர்த்த பூனைக்குட்டிகள் பற்றி எழுதிக் கொடுத்தார். 

///கொரானா கெஸ்ட்ஸ்..


   8 வருடத்திற்கு முன் வீட்டில் பூனைக்குட்டிகள் 6 வளர்த்துக் கொண்டிருந்தோம். அலுவலகம் சென்ற பின் வெளியில் இருக்கும். ஆனால் எலியைக் கொண்டு வந்து போடுவது, அங்கங்கே கக்கா போவதுன்னு என் வீட்டில் வேலை செய்பவர் மிகவும் வருத்தப்பட்டார். அதனால் அம்மா, குட்டிகள்னு எல்லோரையும் ஒன்றாக பேக் செய்து ஒரு தோட்டத்தில் கொண்டு விட்டு வந்தோம். இனி நாம் பார்ப்பதாய் இருந்தால் தான் பெட் வளர்க்கணும்னு முடிவெடுத்தோம். 

சென்ற வருடம் கொரானா லாக்டவுன் ஆரம்பித்த மார்ச் மாதத்தில் ஒரு பூனை தினம் வந்து மியாவ்னு கத்தும். ஒட்டி உரசும். எதுவும் போடலைன்னாலும் வீட்டு வாசலில் காத்துக் கிடக்கும். 

பெட் வளர்க்க வேண்டாம் நாம் பார்த்துக்கொள்ள முடியாது என்றிருந்ததால் கண்டு கொள்ளவில்லை. ஆனால் முயற்சியில் தளராத அப்பூனை பொறுமையாய் எங்கள் மனதில் இடம்பிடித்தது. இங்கேயே தங்கும். பால் குடித்துவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். அவ்வப்போது வெளியே சென்று வரும்.


ஒரு நாள் ஜன்னலில் எட்டிப்பார்த்து மியாவ் , மியாவ் என விடாமல் கத்திக் கொண்டிருந்தது அந்த மொழி வேறு மாதிரி இருந்தது. என்னவென்று வெளியே சென்று பார்த்தால் மாடி சன்ஷேடில் ஒரு குட்டி கத்திக்கொண்டிருந்தது. எப்படி அங்கு போச்சுன்னு தெரியலை. ஆனால் இறங்கத் தெரியலை, அதனுடைய குட்டி எனப் புரிந்தது. 

அதன் பின் கொஞ்ச நாள் வீட்டினருகில் இருந்த குட்டி அதன் பின் காணவில்லை. அதற்குள் அந்தத் தாய் பூனை எங்களுடன் நெருங்கிப் பழகிவிட்டது. அதற்குள் குட்டி போடவும் தயாரானது… திடீரென்று ஒரு நாள் ரொம்ப கத்தியதும், குட்டி போட இடம் தேடுவது தெரிந்ததும் ஒரு அட்டைப்பெட்டியை எடுத்து அதனுள் கொஞ்சம் துணியைப் பரப்பி போர்டிகோவில் வைத்தேன் . உள்ளே சென்று வலியுடன் கத்திய சிறிது குட்டியை ஈன்றெடுத்தாள். மூன்று குட்டிகள் . 


அவ்வளவு அருமையாகப் பராமரித்தாள். அவள் வெளியே சொல்லும் நேரங்களில் குட்டிகளும் அவள் சொல்பேச்சு கேட்கும் போலும். வாசல் வரை வர, மாடி ஏற, மாடிக்குச் சென்று வர என ஒவ்வொன்றிற்கும் காலம் எடுத்துக் கொண்டன.  

நாங்களும் இங்குதான் வளரப் போகிறதென அவற்றிற்கு பெயர் வைத்து அழைக்க ஆரம்பித்தோம். சிங்கான்,சிக்கான் , சிங்கி…. சிங்கி பழகவேயில்லை . விரைவில் வீட்டை விட்டு ஓடிவிட்டது. சிக்கான் கைக்கே கிடைக்க மாட்டான். சிங்கானும் , சிக்கானும் செம ஆட்டம் போடுவார்கள். சிங்கான் எங்களுடன் வந்து பழகி உட்கார்ந்திருப்பான். எங்களுக்கெல்லாம் செம ஸ்ட்ரெஸ் பஸ்டர்…


இந்த சமயத்திலிருந்து அதன் அம்மாவும் காணாமல் போனது. இரண்டும் ஒரு நாள் உடல் நிலை சரியில்லாமல் எழ முடியாமல் படுத்துக் கிடந்தது. இரண்டையும் எடுத்துக் கொண்டு மருத்துவரிடம் போனோம் . அன்றுதான் சிக்கான் என் கையில் வந்தான் . அதன் பின் எங்களுடன் நெருக்கமாகிட்டான். ஒரு நாள் மழை இரவில் சிங்கான் தெருவிலிருந்த ஏதோ வண்டியில் அடிபட்டு இறந்து போனான். சிக்கான் அந்த உடலை சுற்றி சுற்றி வந்தான். தனிமையாகிவிட்டான் . அதன் பிறகு ஆட்டமேயில்லை. 

பின்னொரு நாள் வீட்டின் எதிரில் ஒரு குட்டிப் பூனையின் சத்தம். எப்படியோ தனிமைப்பட்டிருக்கிறது. சரியென எடுத்து வந்து பால் கொடுத்தோம். பக்கத்து கடைப் பிள்ளைகள் குட்டான் எனப் பெயரிட்டனர். சிக்கான் அவனைக் கிட்டவே சேர்க்கவில்லை. இரண்டு நாள் தான். பிறகு தான் குடிக்கும் முன் அவனைக் குடிக்க விடுவான். தாய் போல குட்டானை நக்கிக் கொடுப்பான். கருவாடு போட்டால் அவனை அழைத்து அவனுக்கு முதலில் கொடுக்கணும். இரண்டும் காலை பால் குடித்துவிட்டு மாடிக்குப் போனால் நம்முடனும், அவர்களுக்குள் நல்ல விளையாட்டு . பகலில் இருவரும் ஒன்றாகவே தூங்குவார்கள். அப்புறம் மாலையும் விளையாட்டு தொடரும். பார்க்கவே இனிமையாக இருக்கும் 

மூன்று மாதம் முடிந்திருக்கும் . ஒரு  நாள் இரவு வெளியில் சென்ற குட்டானை தெரு நாய்கள் குதறிவிட்டது. அதை புதைக்கப் போனால் அந்தக் குழியில் சிக்கான் உட்கார்ந்து கொண்டது. அப்புறம் அதைத் துரத்திவிட்டுத்தான் புதைத்தோம். அதன் பின் சோர்ந்தே தான் இருந்தது சிக்கான் . நம்முடன் விளையாடவே வரவில்லை. 


பின் வேறு ஒரு பூனையைக் கூட்டி வந்தது, அதற்கும் உணவளித்தோம். ஆனால் அப்பூனை கொஞ்சம் வளர்ந்த பூனை தான் இந்த வீட்டில் உரிமை எடுக்கணும்னு நினைச்சதோ என்னமோ நம் கண் மறைந்த நேரங்களில் சிக்கானை நன்றாக மிரட்டவும், அடிக்கவும் ஆரம்பித்துவிட்டது. அதனால் அப்பூனையைத் துரத்தி விட்டோம். இப்போது மீண்டும் சிக்கான் விரக்தியாய் தனிமையில்…. வீட்டிலுள்ளோர் சிக்கானுக்கு ஏன் உன்னால் கவுன்சிலிங்க் கொடுக்க முடியலைன்னு கேட்ட வண்ணம் உள்ளனர்….///

டிஸ்கி :- வளர்த்த பூனைகளைப் பறிகொடுப்பது என்பது சோகம்தான். இதுபோல் வளர்ப்புப் பிராணிகளைப் பராமரிக்க வெகு பொறுமை வேண்டும். அது உங்களுக்கு வாய்த்திருக்கிறது. முடிந்தவரை அவற்றைப் பார்க்கலாம். ஆனால் அவற்றின் இறப்பு நம் கையில் இல்லையே. என்ன செய்வது ? மனத்தைத் தேற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் அந்த சோகத்திலிருந்து தெளிந்து மீண்டு எழுந்தால்தான் உங்களால் சிக்கானுக்குக் கவுன்சிலிங் செய்ய முடியும். 

உங்க சோகமும் சிக்கானின் ஏக்கமும் எங்களையும் தாக்கிருச்சு. சிங்கான், சிக்கான், சிங்கி, குட்டான் என்று நாங்களும் அவற்றின் வாழ்வோடு பயணித்தோம். சிக்கானின் கண்களைப் பார்த்தாலே மனதைப் பிசையுது. பாவம் அவன். சீக்கிரம் சிக்கானும் சரியாகி விடுவான். துணைக்கு வேறு சிக்கி கிடைக்கலாம். சாட்டர்டே போஸ்டுக்காக மனம் நெகிழ வைத்த சிக்கானின் கதையைப் பகிர்ந்துள்ளீர்கள். அவன் மீண்டெழப் பிரார்த்திக்கிறோம். அன்பும் நன்றியும் எழில் அருள். :)

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)