வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

திருமுறைகளைத் தொகுத்த கணபதி தோழன்.

திருமுறைகளைத் தொகுத்த கணபதி தோழன்

ஒரு குழந்தை கணபதியையே தோழனாக வரிக்க முடியுமா. அவரிடமிருந்தே திருமுறைகள் பற்றிக் கேட்டுத் தொகுக்க முடியுமா ? முடியும் என நிரூபித்திருக்கிறார் நம்பியாண்டார் நம்பி என்பவர்.
பத்தாம் நூற்றாண்டுக் காலம் அது. இராஜ இராஜ அபய குலசேகர சோழன் ஆட்சி புரிந்து வந்தான். காட்டுமன்னார்கோவில் என்ற ஊரின் அருகே திருநாரையூர் என்ற எழில்மிகு ஊரில் பொள்ளாப் பிள்ளையார் கோவில் ஒன்று இருந்தது. அக்கோவிலில் பிள்ளையாருக்கு அனந்தேச சிவாசாரியார் என்பார் தினப்படி பூஜைகள் செய்து வந்தார்.
தினமும் பிள்ளையாரைப் பூசித்து உணவு படைத்து விட்டு வீடு திரும்பும்போது தன் கண்ணில்படும் எளிய குழந்தைகளுக்கு அவ்வுணவைக் கொடுத்துவிட்டு வருவார். இவ்வாறு அவர் வரும்போது அவரது மகன் நம்பியாண்டார் நம்பி “ அப்பா, இன்றைக்கு பிரசாதம் எங்கே ? “ எனக் கேட்பார்.


”நம்பி, இன்றைக்குப் பிரசாதம் மிக ருசியாக இருந்ததால் பிள்ளையாரே முழுதும் சாப்பிட்டு விட்டார் “ என்று மறுமொழி அளிப்பார் அவரது தந்தை அனந்தேசர். இதை உண்மை என்று நம்பி வந்தார் நம்பியாண்டார் நம்பி.
ஒரு முறை அவரது தந்தை வெளியூருக்குச் செல்ல வேண்டி வந்தது. அப்போது பூஜை தடைப்படாமல் இருக்க தன் மகன் நம்பியாண்டாரை அன்றுமட்டும் கோவிலுக்குச் சென்று பிள்ளையாருக்குப் பூஜை செய்துவிட்டு வருமாறு பணித்தார். நம்பியாண்டார் தந்தை போல பிள்ளையாருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து பூஜித்து நைவேத்தியத்தைப் படைத்தார்.
வைத்த உணவு அப்படியே இருந்தது. பூஜை மணியை அடித்தும் “பிள்ளையாரே, உணவை உண்ணுங்கள்” என்று கேட்டும் பார்த்தார். பிள்ளையாரோ வரும் வழியாய்க் காணோம். “ஏன் நான் படைத்த உணவு ருசியாக இல்லையா. இதை ஏன் நீ சாப்பிட மறுக்கிறாய்? என் தந்தை தந்தால் மட்டும் உண்கிறாயே ?” “ இன்று நீ இதை சாப்பிடாட்டி இந்தத் தூணிலேயே மோதி செத்துப் போயிடுவேன். பார்த்துக்கோ”
என்னதான் பலவாறாக அவர் கெஞ்சியும் கதறியும் பிள்ளையார் அவ்வுணவை உண்ணாததால் கவலையோடும் கோபத்தோடும் எதிரே இருந்த தூணில் மடார் மடாரெனத் தன் தலையை மோதிக் கொண்டார். இதைக் கண்ட கணபதியின் உள்ளம் கனிந்தது. தன் துதிக்கையை நீட்டி நம்பியாண்டாரைத் தடுத்த கணபதி அந்த உணவைத் தானும் உண்டு நம்பியாண்டாருக்கும் ஊட்டினார்.
வீட்டிற்கு வெறும் பாத்திரங்களோடு வந்தார் நம்பியாண்டார். வெளியூர் சென்றிருந்த அவரது தந்தை அப்போது வீடு திரும்பினார். “நம்பி. இதென்ன காலி பாத்திரமாய் இருக்கிறதே ? பிரசாதமெல்லாம் எங்கே ?” “ அப்பா, அதெல்லாம் பிள்ளையார் சாப்பிட்டு விட்டார். எனக்கும் ஒரு வாய் ஊட்டி விட்டார் .”
“என்னது பிள்ளையார் சாப்பிட்டாரா? சின்னப் பிள்ளையிலேயே பொய் சொல்கிறாயா ? “ என்று சொல்லி அடித்தார். “ அப்பா உண்மையிலேயே பிள்ளையார் சாப்பிடாருப்பா, வேணா நாளைக்கு வந்து பாருங்க, உண்மை தெரியும்” என்று அழுதபடியே கூறினார். நம்பியாண்டார் நம்பி.

மறுநாள் மகனுடன் கோவிலுக்கு வந்தார் அனந்தேசர். ஒரு தூணின் பின்புறம் மறைந்து கொண்டு தன் மகன் செய்யும் பூஜையைப் பார்த்தார். நைவேத்தியத்தைத் திறந்து வைத்து மகன் பிள்ளையாரைக் கூப்பிட்டு உண்ணச் சொன்னான். என்ன ஆச்சர்யம். விநாயகரின் துதிக்கை நீண்டு உணவை எடுத்துக் கொள்ள உணவு முழுவதும் உடனே மாயமாய் மறைந்தது. பார்த்துக் கொண்டிருந்த அனந்தேசருக்குக் கண்களில் நீர் கொட்டியது. ஓடி வந்து மகனை அணைத்துக் கொண்டார்.
“பிள்ளையாரே என்னை மன்னிச்சிடப்பா, என் பிள்ளையை நான் சந்தேகப்பட்டுட்டேன். உண்மையாய் அழைத்தாய் நீ வருவாய் என உணர்த்திவிட்டாய்” என்று விநாயகரிடம் மன்னிப்புக் கேட்டார். இதன் பிறகு அனந்தேசரின் பிள்ளையும் பிள்ளையாரும் தோழர்கள் ஆகிவிட்டார்கள். அதன் பின் நம்பியாண்டாரின் தமிழ்ப்புலமையும் பெருகியது.

விநாயகார் மேல் திருநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலை, கோயில் திருப்பண்ணியர் விருத்தம், திருத்தொண்டர் திருவந்தாதி, ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி, ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம், ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை, ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம், ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை, திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை ஆகியன பாடினார். அதனால் இவர்களது புகழ் வெகு தொலைவுக்குப் பரவியது.
ராஜ ராஜ அபய குலசேரக சோழனின் அவையில் தமிழின் பொக்கிஷம் எனப்படும் திருமுறைகள் புலவர்பெருமக்களால் எங்கோ மறைத்து வைக்கப்பட்டிருப்பதால் அவற்றை எப்படி மீட்பது என மந்திரி பிரதானிகளோடு ஆலோசனை செய்து வந்தான். ”நம்பியாண்டார் நம்பி என்றொருவர் இருக்கிறார். திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையாரின் அருளால் அவர் பல்வேறு பிரபந்தங்கள் பாடி உள்ளார் மன்னா. அவராலேயே இதைக் கண்டுபிடிக்க முடியும்”
உடனே மன்னன் நம்பியாண்டாருக்கு ஓலை அனுப்பினான். அவர் பிள்ளையாரிடம் கேட்க அந்தத் திருமுறைகள் சிதம்பரம் கோவிலில் நடராஜர் கருவறையின் மேல் பத்திரமாக இருக்கும்பொருட்டு வைக்கப்பட்டதாகக் காட்டியருளினார். மன்னனிடம் இச்செய்தியைத் தெரிவித்தார் நம்பியாண்டார். அரசனின் ஆணைப்படி அழிவின் விளிம்பில் இருந்த அந்த ஓலைகளை எடுத்துவந்து கரையான்கள் அழித்தது போக மீதமிருந்தவற்றை நம்பியாண்டார் நம்பியே தொகுத்தார். பதினொன்றாம் திருமுறையில் தாம் இயற்றிய பத்துப் பிரபந்தங்களையும் இணைத்து வகைப்படுத்தினார்.
அப்பர், சம்பந்தர் சுந்தரர் ஆகியோர் எழுதிய இத்திருமுறைகளை கணபதியின் தோழனாகத் தொகுத்து உலகுக்கு அளித்த நம்பியாண்டார் நம்பியின் அருந்தொண்டு போற்றற்குரியதுதானே குழந்தைகளே.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)