வெள்ளி, 11 மார்ச், 2022

பொறாமையால் அழிந்தவன்.

பொறாமையால் அழிந்தவன்.

ஒருவருக்குப் பொறாமை வந்தால் அவரை மட்டும் அழிக்காமல் அவரைச் சார்ந்தவர்களையும் அழித்துவிடும். அதற்கு உதாரணமாய்த் திகழ்ந்தவன் துரியோதனன். அவனது பொறாமை அவனை மட்டுமல்ல. அவனது தொண்ணூற்று ஒன்பது தம்பியரையும் சேர்த்தே அழித்தது. பொறாமை ஏன் கூடாது எனப் பார்ப்போம் குழந்தைகளே.
குருவம்சத்தின் மூத்த அரசன் திருதராஷ்டினன். அவர் பிறக்கும்போதே கண்ணில்லாமல் பிறந்ததால் அவரது தம்பி பாண்டுவுக்கு அரசாட்சியை விட்டுத் தரவேண்டியதாயிற்று. பாண்டுவும் தான் ஆள விரும்பாமல் தங்கள் தம்பியான விதுரரைப் பொறுப்பாளராக நியமித்து ஆட்சியை ஒப்படைத்துவிட்டுத் தம் மனைவியருடன் கானகம் சென்றார்.
பாண்டு கானகம் சென்றதும் ஆட்சியின் ருசியை அனுபவித்த திருதராஷ்டிரனும் அவரது புத்திரர்களும் பாண்டவர்கள் திரும்பி வந்ததும் ஆட்சியை ஒப்படைக்க வேண்டி வந்தது. ஆனால் அதை துரியோதனன் விரும்பவில்லை. அவர்களை மொத்தமாக அழித்துவிடத் துடிக்கிறான்.

பீஷ்மர் கௌரவர் பாண்டவர் ஆகியோருக்கு வில் வித்தை, வாள் பயிற்சி, குதிரையேற்றம் கற்றுத்தர துரோணாச்சாரியாரை நியமிக்கிறார். துரோணாச்சாரியாரோ பாண்டவர்களின் திறமையைப் புகழ்கிறார். இதை எல்லாம் பார்த்ததும் துரியோதனனுக்குக் கோபம் வருகிறது.
அர்ஜுனனும் தங்கள் குரு துரோணருக்கு ஏற்பட்ட அவமானத்தைத் தீர்க்க துருபதராஜனைப் போரிட்டு வென்று சிறையெடுத்துத் துரோணரின் முன் நிறுத்துகிறான். இதனால அவன் புகழ் பரவுகிறது.
பாண்டவர்களில் அர்ஜுனனின் வீரமும் பீமனின் பராக்கிரமும் துரியோதனனை அச்சம் கொள்ள வைக்கிறது. எனவே வாரணாவதத்தில் ஜது க்ரகம் என்ற அரக்கு மாளிகை அமைத்து அங்கே அவர்களை அனுப்பத் துடிக்கிறான். மன்னன் திருதராஷ்டிரனுக்கும் தன் தம்பி மகனான தர்மபுத்திரனுக்கு இளவரசுப் பட்டம் கட்டவோ, ஆட்சியைத் தூக்கிக் கொடுக்கவோ விருப்பம் இல்லாதிருந்தும் மக்களின் பெரும்பான்மை ஆதரவு பாண்டவர்க்கு இருப்பதால் அதை எல்லாம் செய்ய வேண்டியதாகிறது.
அதனால் தவித்துப் போகும் திருதராஷ்டிரன் ”துரியோதனா பொறுமையாயிரு. முதலில் தருமரை இளவரசாக்குவோம். அதன் பின் பார்ப்போம்” எனச் சொல்கிறார். அப்போதைக்கு அங்கே இருந்து செல்கிறான் அவன். நாளுக்கு நாள் மக்கள் அனைவரும் தர்மபுத்திரருக்கு யுவராஜ்ஜியப் பட்டம் கிடைக்கப் போவது பற்றி மகிழ்ந்து பேசுகிறார்கள். அதை ஒரு கொண்டாட்டமாகவே நிகழ்த்தத் தயாராகிறார்கள்.
இத்தனை நாட்கள் தான் அஸ்தினாபுரத்தில் இருந்தும் தனக்கு மக்கள் ஆதரவு இல்லாததைக் கண்டு துரியோதனனுக்கு மக்கள் மேல் வெறுப்பாக இருக்கிறது. நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் தனக்குச் சாதகமில்லாமல் போவதைக் கண்டு கொந்தளிக்கிறான் துரியோதனன். பொறாமைத் தீ அவன் மனதில் கனன்று எழுகிறது. நேரே தன் தந்தையான திருதராஷ்டிரனிடம் செல்கிறான்.
“தந்தையே, இத்தனை ஆண்டுகள் ஆட்சி எனக்குத்தான் என நினைத்திருந்தேன். ஆனால் இப்போது அது பாண்டவர்க்குக் கொடுக்க வேண்டி வந்துவிட்டது. இப்போதைக்கு அதிகாரம் உங்கள் கையில். நீங்கள் அறிவிப்பவர்தான் இளவரசர். என்னையே யுவராஜனாக அறிவித்து விடுங்கள். ”

”இல்லை துரியோதனா. இதுவரை நீ உன் திறமை எதனையும் வளர்த்துக் கொள்ளவில்லையே. மக்கள் மனப்போக்குப்படித்தான் செய்ய வேண்டும். “
“நீங்கள்தான் முதலில் பிறந்தீர்கள். மூத்தவர்க்குத்தான் அரசபாரம். உங்களுக்குப் பின் எனக்குத்தான் அது வரவேண்டும். நான்தான் உங்கள் மூத்த மைந்தன். அது அந்தப் பாண்டுவின் புத்திரர் வசம் போவதை நினைத்தால் ஆத்திரமாக வருகிறது தந்தையே “
“மகனே, நான் முதலில் ஆட்சிக்கு உரியவனாகப் பிறந்தாலும் எனக்குப் பார்வையில்லாததால் அதைத் தம்பிக்கு விட்டுத்தர வேண்டியதாயிற்று. இப்போதும் உனக்குத்தான் அதைக் கொடுக்க நினைதேன். இவர்கள் இப்படி இடையில் வந்து சேர்வார்கள் என நினைக்கவில்லை, மேலும் அவர்கள் மக்கள் செல்வாக்குப் பெற்றுவிட்டார்கள், என்ன செய்வது ?”
“தந்தையே உங்களுக்குப் பார்வை இல்லாவிட்டால் என்ன. எனக்குத்தான் பார்வை இருக்கிறதே. உங்கள் மகனான நான்தான் நாட்டை ஆள உரியவன். இவர்களை வாரணாவதத்துக்கு அனுப்புங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். “

“மகனே அது நாடு கடத்துவதற்குச் சமம். அப்படி எல்லாம் அனுப்ப முடியாது “
“அறிவே கண்ணானவர் என மக்கள் உங்களைப் புகழ்கிறார்கள். தந்தையே ஆனால் நீங்கள் கண்ணில்லாதவர்தான். அதற்காக நாங்கள் அனைவரும் பாண்டுவின் புத்திரர்களுக்கு ஆண்டாண்டு காலமாய் அடிமை உத்யோகம் பார்க்க வேண்டுமா. நாங்கள் ஆனந்தமாய் சுற்றி வந்த இந்த அஸ்தினாபுர அரண்மனையை அவர்களுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு அடிமைச் சேவகம் பார்க்க வேண்டுமா? உங்களுக்குப் பிறந்ததால் உரிமை உள்ள நானும் உரிமை இழந்து என் நிலையில் இழிந்து போனேன். என் சந்ததியாரும் அரசுரிமை பெறாமல் போனார்கள். பெற்ற பிள்ளைகளுக்கு அநீதி. தம்பி பிள்ளைகளுக்கு நீதி. நடக்கட்டும் உங்கள் அரசாட்சி. “ எனக் கொந்தளிப்போடு கூறினான்.
பெற்றமகன் பொறாமையால் பொங்கிப் போய் நிற்பதை உணர்ந்தான் திருதராஷ்டிர மன்னன். துரியோதனன் தற்போது மௌனமாக இருக்கும்படியும் பின்னர் அவன் மனோரதத்தை நிறைவேற்றுவதாகவும் வாக்குக் கொடுத்தான் திருதராஷ்டிர மன்னன்.
பீஷ்மரையும் வியாசரையும் கூட்டி ஆலோசனை செய்து தர்மபுத்திரனுக்கு மக்களின் அமோக ஆதரவோடு இளவரசுப் பட்டம் சூட்டினான். அவனையே அரசனாக்கவும் வேண்டும் என மக்கள் பேச திருதராஷ்டிரன் மனதிலும் பொறாமை கொழுந்துவிட்டெரிந்தது. துரியோதனன் கூறியபடி வாரணாவதம் செல்லும்படி பாண்டவர்களைப் பணித்தான்.
வாரணாவதத்தில் புரோசேனனைக் கொண்டு எளிதில் தீப்பற்றும் அரக்கு மாளிகை அமைத்து அதில் பாண்டவர்களைத் தங்கவைக்கும் துரியோதனின் திட்டத்துக்கு திருதராஷ்டிரனும் உடன் போகினான். இந்தக் கொடுமையால் அரக்கு மாளிகையில் எரிந்து அழிந்தது பாண்டவர்கள் அல்ல. துரியோதனனே முடிவில் அழிந்தான்.
எனவே பொறாமை என்பது தன்னையே அழிக்கும் நோய் என உணர்ந்து அதை நம்மிடமிருந்து நீக்குவோம் குழந்தைகளே.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)