வெள்ளி, 31 டிசம்பர், 2021

ஓங்காரத்தால் ஜெயித்தவள்.

ஓங்காரத்தால் ஜெயித்தவள்.

தேவர்கள் அடைய முடியாத வெற்றியை ஒரு பெண் அடைந்தாள். அதுவும் ஒரு ஒலியின் மூலம். அப்படி ஒரு ஒலியினால் வெற்றியை அடைய முடியுமா ? அது என்ன ஒலி ? எப்படி அவள் அவ்வெற்றியை அடைந்தாள், அதனால் அவள் பெற்ற பெருமை என்னென்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
முற்காலத்தில் முரன் என்னும் அரக்கன் இருந்தான். அவன் முனிவர்கள் , தேவர்கள் ஆகியோர் இயற்றும் யாகங்களை அழித்து அவர்களைத் துரத்தி அடித்தான். மனிதர்களைத் துன்புறுத்தியதோடு அல்லாமல் தேவர்களையும் வாட்டித் தேவலோகத்தையும் தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்தான். தேவர்கள் முறையிட்டதால் இந்திரன் அவர்களைக் காக்க முரனுடன் போர் செய்தான்.
முரனோ தன் தாறுமாறான போர்முறைகளால் இந்திரனைத் தோற்கடித்து ஓட ஓட விரட்டினான். அமராவதிப் பட்டினத்தை இந்திரனிடமிருந்து அபகரித்துத் தான் கோலோச்சத் தொடங்கினான். தோல்வியுற்ற இந்திரன் கைலாயம் நோக்கி ஈசனைத் தேடி ஓடினான். தன் கஷ்டங்களை முறையிட்டு தேவலோகத்தை மீட்டுத் தன்னைக் காக்கும்படி வேண்டினான்.
அவரோ மகாவிஷ்ணுவைச் சரணடையும்படிக் கூறினார். “பெருமாளே.. அபயம், அபயம் “ என்று அலறியவாறு வைகுந்தம் ஓடியவன் விஷ்ணுவின் பாதகமலங்களைச் சரணடந்தான் இந்திரன். அவன் பின்னேயே தேவர்களும் ஓடி வந்து சரணடைந்தனர்.


தன்னை அண்டியவர்களைக் காப்பது அவரது கடமையல்லவா. உடனே விஷ்ணு தனது சக்ராயுதத்தை எடுத்துக் கொண்டு முரனுடன் போர்புரியக் கிளம்பினார். போர் என்றால் போர் மிகக் கடுமையான போர். விஷ்ணுவின் சக்ராயுதம் அவனைத் தேடித் தேடித் துரத்தியது. அதிலிருந்து தப்பிக்க அவன் மாய வித்தைகளைப் பயன்படுத்தினான். தன் உருவையே வேறொரு உருவாக மாற்றி மாய உருவத்தில் அசராமல் போர்புரிந்து கொண்டிருந்தான்.
போருக்கென்று அக்காலத்தில் சில நெறிமுறைகள் உண்டு. சூரிய உதயத்தில் ஆரம்பித்து சூரிய அஸ்தமனத்தில் போரை நிறுத்திவிட வேண்டும். இதுவே போர் தர்மம். போர் ஆயிரம் ஆண்டுகளாக நீடித்துக் கொண்டிருந்தது.
ஒருநாள் சூரிய உதயத்தில் ஆரம்பித்த போர் அன்று சூரிய அஸ்தமனத்தில் முடிந்தது. போர் முடிந்ததும் மிகவும் களைத்துப் போய் விஷ்ணு பத்ரிகாஸ்ரமம் என்ற குகைக்குள் சென்று ஓய்வெடுத்தார். நீண்ட போரின் காரணமாக உள்ளே சென்று இளைப்பாறியதும் ஆழ்ந்த உறக்கம் ஆட்கொண்டது அவரை.  இனி மறுநாள் சூரிய உதயத்தில்தானே போர் புரியச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் உறங்கத் தொடங்கியதால் அவருக்கு முரனின் சதிச் செயல்கள் தெரியவில்லை.
மாயா அரக்கனான முரனோ போர் நெறிமுறைக்குப் புறம்பாக இரவில் அந்தக் குகைக்குள் புகுந்து விஷ்ணுவைத் தாக்கத் தீர்மானித்தான். பத்ரிகாஸ்ரமம் குகைக்குள் நுழைந்தான். உள்ளே விஷ்ணுவோ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார். விழித்திருக்கும்போது அவரது சக்கரத்துக்குப் பயந்து பயந்து போரிட வேண்டியிருக்கிறது. எனவே அவரை வெல்ல இதுவே சரியான தருணம் என நினைத்த அவன் விஷ்ணுவைத் திடீரெனத் தாக்கத் தொடங்கினான்.
இது எதையும் எதிர்பாராத விஷ்ணுவோ தூக்கம் கலையாமல் இன்னும் உறக்கத்திலேயே இருந்தார். அவன் தாக்கியது கூடத் தெரியவில்லை. திரும்பவும் முரன் விஷ்ணுவைத் தாக்க நெருங்கினானோ இல்லையோ திடீரென விஷ்ணுவின் உடலில் இருந்து அழகும் ஆக்ரோஷமும் கொண்ட ஒரு பெண் சக்தி தோன்றினாள்.
விஷ்ணுவின் உடலில் இருந்து பயங்கரப் படைக்கலங்களுடன் விஸ்வரூபம் எடுத்த அவளைப் பார்த்தும் ஒரு கணம் பயந்து பின் வாங்கினான் முரன்.  தூக்கத்தில் இருந்த விஷ்ணுவை அதர்மமாகப் போர் நெறிமுறைக்கு மாறாகத் தாக்கியதால் கோபமுற்றிருந்த அந்தப் பெண் சக்தி முரனை விழித்து நோக்கினாள்.
விஷ்ணுவை வெல்லுமுன் அந்தப் பெண்ணையும் அழிக்க வேண்டும் என்று நினைத்த முரன் தன் ஆயுதங்களோடு ஆக்ரோஷமாகக் கூச்சலிட்டபடி அந்தப் பெண் சக்தியை நெருங்கினான். ஒரே நொடிதான். பல்வேறு படைக்கலங்களையும் தாங்கிய அப்பெண் தன் ஆயுதங்கள் எதையும் பயன்படுத்தாமல் மிக உச்ச ஸ்தாயியில் ஓங்காரம் செய்தாள். அவளிடமிருந்து வெளிப்பட்ட அந்த ஓங்காரம் மட்டுமே அரக்கன் முரனை ஒரே நொடியில் சாம்பலாக்கியது.

பெண் சக்தியின் வலிமை தெரியாமல் மோதிய முரன் ஒரு நொடியில் சாம்பலானாதும் ஓங்காரம் கேட்டு விழிந்தார் மகாவிஷ்ணு. நடந்த விவரங்களை ஒரு நொடியில் ஊகித்த அவர் தான் தூங்கும்போது அதர்மப்போர் புரிந்த முரன் என்னும் அரக்கனை தர்மத்தின் காரணமாக அழித்ததற்காக அந்தப் பெண்ணைப் பார்த்து மகிழ்ந்தார். மகிழ்ச்சியில் அவளுக்கு ஏகாதசி எனப் பெயரிட்டார்.
விஷ்ணுவின் உடலில் இருந்து தோன்றிய சக்தியான ஏகாதசி முரனை அழித்ததைக் கண்ட இந்திரனும் தேவர்களும் முனிவர்களும் மானுடர்களும் மகாவிஷ்ணுவையும் ஏகாதசியையும் போற்றினர். அன்றைய தினத்துக்கு ஏகாதசி எனப் பெயரிட்டனர். வருடம் முழுவதும் வரும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வரும் 24 ஏகாதசியையும் அந்தப் பெண் சக்தியைப் போற்றி மகிழ்ந்தனர்.
ஆணும் பெண்ணும் சமம் என்பார்கள். அதேபோல் விஷ்ணுவின் சரீரத்தில் இருந்து ஒரு பெண் தோன்றியதும் அந்தப் பெண் சக்தியான ஏகாதசி நீதியை நிலைநாட்டத் தன் ஓங்காரத்தால் ஒரு அரக்கனை அழித்ததும் வியத்தகு செயல்தானே குழந்தைகளே. 

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)