புதன், 24 நவம்பர், 2021

யார் முதலில் ?

யார் முதலில் ?

எந்த ஒரு விஷயத்தைச் செய்தாலும் பதறாமல் செய்தால் நிச்சயம் அதை முழுமையாய்ச் செய்யலாம். அதன் மூலம் பல்வேறு நன்மைகளையும் அடையலாம். நமக்கெல்லாம் தெரிந்த ஔவைப்பிராட்டி இப்படி ஒருமுறை ஒரு காரியத்தைப் பதற்றத்தோடு செய்து அதன் பின் நிதானமாக அதைப் பூர்த்தி செய்து கைலாயமே சென்றாராம். அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
கொன்றை வேந்தன் ஆத்திச்சூடி ஆகியன எழுதியவர் ஔவைப்பிராட்டி. பழம்நீயப்பா ஞானப் பழம்நீ அப்பா இந்த சாதாரண மாம்பழம் உனக்கு கிட்டவில்லையே என்று எதற்குக் கோபம் நீயே ஒரு ஞானப் பழம்தானே என்று முருகனை ஆற்றுப்படுத்தியவள். அதே முருகன் சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா எனக் கேட்டபோது சுடாதபழம் வேண்டும் எனச் சொல்லி முருகன் உலுக்கிய நாவல் பழத்தைப் பொறுக்கி ஊதித்தின்றவர். என்ன பாட்டி பழம் சுடுதா என்று முருகன் சிரித்தபடி கேட்ட கேள்வியில் முருகனின் தமிழ்ப் புலமை கண்டு வியந்தவள்.

இந்த ஔவைப்பிராட்டியும் சேரமான் பெருமாள் நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் நண்பர்கள். ஒருமுறை சேரமான் பெருமாள் நாயனாரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் ஔவைப்பிராட்டியைக் காண வந்திருந்தார்கள்.
அது ஒரு அதிகாலை நேரம். பொழுது புலர்ந்து பூக்களும் மலர்ந்து கொண்டிருந்தன. தினமுமே விநாயகர் பூஜை செய்தபின்தான் அன்றைய பொழுதைத் துவக்குவார் ஔவைப்பிராட்டி. காலைக் கடன் முடித்துத் தன் பூக்குடலையில் பூக்களைக் கொய்து விநாயகருக்குப் பூஜை செய்ய அமர்ந்தார் ஔவைப்பிராட்டி. பூஜைப் பொருட்கள், பிரசாதங்களை விநாயகர் எதிரில் வைத்துப் பூஜை ஆரம்பிக்கும் நேரம் சேரமான் பெருமாள் நாயனாரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் ஔவையின் இல்லத்துக்கு வந்தார்கள்.
வந்தவர்களை  வரவேற்று உபசரித்த ஔவைப்பிராட்டி அவர்கள் வந்த காரணத்தை வினவினார். “ ஔவையே நாங்கள் இருவரும் கைலாயம் செல்கிறோம்.நீங்களும் உடன் வருகிறீர்களா. மூவரும் செல்லலாம் “ எனக் கேட்டனர்.
அதற்கு ஔவை “ சற்றுப் பொறுங்கள். இந்த விநாயகர் பூஜையை முடித்துவிட்டு வருகிறேன். போவோம் “ என்றார். பூஜை என்றால் ஔவை பல்வேறு விநாயகர் துதிகளைச் சொல்லி விநாயகர் அகவலும் சொல்லி முடிப்பதற்குள் மதியம் ஆகிவிடும் என யோசித்த சுந்தரமூர்த்தி நாயனாரும், சேரமான் பெருமாள் நாயனாரும் ”ஔவையே நாங்கள் முன்னே மெதுவாகச் செல்கிறோம். நீங்கள் உங்கள் பூஜையை முடித்துவிட்டு எங்களுடன் வந்து இணைந்து கொள்ளுங்கள் “ என்றனர்.
அரைகுறை மனத்தோடு பூஜை செய்ய அமர்ந்தார் ஔவை. மெதுவாகச் செல்கிறோம் வந்து இணைந்து கொள்ளுங்கள் என்று கூறிய சேரமானும் சுந்தரரும் வேகு வேகென்று வேகமாகச் செல்வது தெரிந்தது ஔவைக்கு. ‘எதற்காகக் கூப்பிட வந்தீர்கள். வந்தவர்கள் பொறுத்திருக்கலாம்தானே. அழைத்துவிட்டு வேண்டுமென்றே விட்டுச் செல்கிறீர்களே.. இருங்க இருங்க. நானும் பூஜையை சீக்கிரம் முடித்துவிட்டு வந்து உங்களை முந்திச் செல்கிறேன் பாருங்கள்’ என்று மனதுள் திட்டமிட்டபடி பூஜையை வேக வேகமாகச் செய்யத் துவங்கினார் ஔவை.

வழக்கமாய் அன்போடும் ஆசையோடும் பூக்கள் தூவி ஆராதிக்கும் ஔவை அன்று விநாயகர் அகவலையே அவசரம் அவசரமாகச் சொன்னதையும் பூக்களையும் சீக்கிரம் தீர்த்துவிடவேண்டுமென்று நிறைய நிறைய அள்ளி வைத்ததையும் ஔவை எதிரில் சிலைவடிவில் விநாயகர் பார்த்துக் கொண்டிருந்தார். அன்போடு அழைப்பவர்கள் முன் அன்றைக்குத் தெய்வங்கள் எல்லாம் காட்சி அளித்தார்கள்.
அன்போடு அழைக்கும் ஔவை அன்று சொற்பதங் கடந்த மெய்ஞான கணபதிக்கு முப்பழம் அர்ப்பித்துத் தன்னை ஆட்கொள்ள வேண்டினாள். அவளது அவசர பூஜையைக் கண்டு வியந்த கணபதி அவள் முன்னே தோன்றி “ ஔவையே பொறுமை பொறுமை. என்ன அவசரம். இன்று என்னை ஆவாகனம் செய்து அவசரக் கோலத்தில் பூக்களை அள்ளித் தெளிக்கிறாய். பழங்களையும் திணிக்கிறாய். என்றும் அமைதியாகப் பாடி உண்ணச் சொல்வாயே.. இன்று என்னாயிற்று ? ” எனக் கேட்கிறார்.
உடனே ஔவை “ வேழமுகத்தோனே.. எனது நண்பர்கள் சேரமானும், சுந்தரனும் கைலைக்குச் செல்கிறார்கள். என்னையும் வரச் சொல்லி அழைத்தார்கள். நான் உனக்கு பூஜை செய்துவிட்டு வருகிறேன் என்று சொன்னதும் என்னால் தாமதமாகிவிடும் என்று என்னை விட்டுவிட்டு வேகமாகச் சென்றுவிட்டார்கள். எனக்கோ வயதாகிவிட்டது. எவ்வளவுதான் வேகமாகச் சென்றாலும் என்னால் அவர்களைப் பிடிக்க முடியுமாவெனத் தெரியவில்லை.” என்று தன் கவலையைத் தெரிவித்தாள்.  

”பதறாதே ஔவையே.. பதறாத காரியம் சிதறாது. நிதானமாக பூஜை செய். நான் உன்னை அவர்களுக்கு முன்னே கயிலையில் சேர்ப்பிக்கிறேன் “ இப்படிச் சொல்லியபடி விநாயகர் அமர்ந்தார். ஔவையும் வழக்கம்போல் அமைதியாகி நிதானமாக பூஜையைச் செய்து நிவேதனங்களைச் சமர்ப்பித்தாள்.
இதனால் மகிழ்ந்த விநாயகர் தனது பனைமரம் போன்ற தும்பிக்கையில் ஔவையை அமரவைத்து ஒரே நொடியில் உயரத் தூக்கிக் கைலாயத்தில் சேர்ப்பித்தார். அங்கோ சோலை வனம் போலிருந்த வெள்ளி மலையில் வேகு வேகென்று ஔவையை முந்திய சந்தோஷத்தோடு வேர்க்க விறுவிறுக்க சேரமானும் சுந்தரரும் சென்று கொண்டிருந்தார்கள்.
’இன்னும் கொஞ்சதூரம்தான் ஔவை நம்மைப் பிடிக்க நேரமாகும். நாமே முதலில் கயிலையைச் சென்றடைவோம்’ என்று குதூகலத்தோடு சென்று கொண்டிருந்த சேரமானும் சுந்தரரும் தமக்கு முன்பே ஔவை கைலையில் இருக்கக் கண்டு வெட்கமடைந்தார்கள். ஔவையிடம் சென்று “ ஔவையே மதியம்தானே புறப்பட்டு இருப்பீர்கள். சில நாழிகைகளுக்குள்ளே கயிலையை எப்படி அடைந்தீர்கள் “ என வியப்புடன் கேட்டார்கள்.
ஔவை சொன்னாள். “பதறாத காரியம் சிதறாது. நான் பொறுமையாக பூஜை முடித்துக் கிளம்பினேன். மதியம் ஆகிவிட்டதுதான். ஆனால் அந்தப் பூஜையினால் மகிழ்ந்த  விநாயகப் பெருமானே என்னைத் தம் தும்பிக்கையில் தூக்கி இங்கே கொண்டு வந்து சேர்த்தார். அதனால் நான் முதலில் வந்து சேர்ந்தேன் ” என்று சந்தோஷத்துடன் கூறினாள். யார் முதலில் செல்வது என்று போட்டி போட்ட நண்பர்கள் இருவரும் வெட்கித் தலைகுனிந்தனர்.
எனவே எந்தச் செயலைச் செய்தாலும் முழுமையான ஈடுபாட்டோடு பதறாமல் செய்வோம் குழந்தைகளே.    

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)