வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

கொலோஸியத்தில்.. COLOSSEUM, ROME.

ஏழு புதிய உலக அதிசயங்களுள் ஒன்று இந்த கொலோசியம். 

பண்டைய ரோமாபுரியின் கட்டிடக்கலைகளுள் ஒன்று கொலோசியம். க்ளாடியேட்டர் என்றொரு படம் பார்த்திருப்பீர்கள். மனிதர்களும்( கைதிகள் )  மிருகங்களும் ஏன் அடிமைகளும் அடிமைகளுமே குபீரென பாதாளப் பாதைகளில் இருந்து உக்கிரத்துடன் வெளிப்பட்டு ஆக்ரோஷத்துடன்  மோதும் இடம். 

யூரோப் டூரின் நான்காம் நாள் இந்த அரங்கத்தைப் பார்த்தோம். பல்லாயிரக்கணக்கான உயிர்களை மன்னர்களின்  கேளிக்கைக்காகக் காவு கொண்ட இடம் இது. இதுவும் பாரிஸின் ப்ரெஞ்ச் தொழிற் புரட்சி நடந்த இடமும் ( OBILISH OF LUXOR ) - ப்ளேஸ் டி கன்கார்ட் மனதை வருத்திய இடங்கள். 

மதனின் “ மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்” என்ற நூலில் இந்தக் கொலோசியம் பற்றியும் அதன் கொடுங்கோல் மன்னன் பற்றியும் விவரித்து இருக்கும் விதம் படிக்கும்போதே சில்லிடக்கூடியது. 

நாம் காணும் இந்தக் கொலோசியம் 20 நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்று சொன்னால் பிரமிப்பாய் இருக்கும். சலவைக்கல், இரும்பு கொண்டு திடமாய்க் கட்டப்பட்ட இக்கட்டடம் நிலநடுக்கத்தாலும் இயற்கைச் சேதங்களாலும் பாழடைந்து இந்நிலையை எட்டியுள்ளது. 


இது மினி கொலோசியம் என்ற ஒன்று.கொலோசியம் செல்லும் வழியில் காணக் கிடைத்தது. 
வட்டவடிவமாக அமைக்கப்பட்ட இந்த மினி கொலோசியத்தை ஆம்பிதியேட்டர் என்றும் கொலோசியத்தை ஃப்ளேவியன் ஆம்பிதியேட்டர் என்றும் அழைக்கிறார்கள். 

கிபி 70 - 80 களில் வெஸ்பாசியன், டைடஸ் ஆகிய மன்னர்கள் கட்டுவித்தது இது. டோமியன் என்னும் மன்னர் காலத்தில் இன்னும் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. இம்மூவரும் ஃப்ளேவியன் வம்சத்தவர் என்பதால் இது ஃப்ளேவியன் ஆம்பிதியேட்டர் என்றழைக்கப்படுகிறது. 


பல்வேறு நுழைவு வாயில்கள் உள்ளன இந்த அரங்கத்துக்கு. நூற்றைம்பது அடி உயரமுள்ள இந்த அரங்கத்தில் நான்கு கேலரிகள் உள்ளன. 

அடுக்கடுக்காக வட்டவட்டமாக ஸ்டேடியம் போல்  அமைந்திருக்கும் இந்த அரங்கின் மேல் அடுக்கில் அரச வம்சத்தினரும், இரண்டாம் அடுக்கு நிலப்பிரபுக்களும், மூன்றாம் அடுக்கு தொழிலாளர்களும் நான்காம் அடுக்கு பெண்களும் அமர்வதற்கு என வடிவமைக்கப்பட்ட இடங்கள். 

இதன் அடித்தளம் அடிமைகள், விலங்குகள், ஆயுதங்கள் ஆகியன வைக்கப்பட கட்டப்பட்டவை. இவர்கள் ஒருவருக்கொருவர் மடியும் வரை போராடுவார்கள் இதை அரசவம்சத்தினரும் பொதுமக்களுமே கூக்குரலிட்டு ரசித்து மகிழ்வார்கள். ரொம்பக் கொடுமையாக இருக்கிறதல்லவா. 
இறந்த மன்னர்களின் ஆன்மா சாந்தியடைவதற்காக நிகழ்த்தப்பட்ட சண்டைகள் (3 ஜோடிகள் போரிட்டுக் கொள்வது ) பிற்காலத்தில் கேளிக்கை அரங்கு ( கொலோசியம்) அமைத்துப் போரிடும் அளவில் விரிவடைந்துள்ளது. 
ஆரம்ப நாளிலேயே இது ஆயிரம் வாள் வீரர்களையும் ( க்ளாடியேட்டர் ) 9000 காட்டு விலங்குகளையும் காவு கொண்ட இடம் இந்தக் கொலோசியம்.  

பாதிக்கு மேல் சிதைந்த இதை இந்த நூற்றாண்டில் இத்தாலிய மாடல்கள் மற்றும் விளம்பரத்துறையைச் சார்ந்தவர்கள் உதவியுடன் ஆர்க்கிடெக்ட் ஒருவர் எடுத்து சீர்படுத்திப் பொதுமக்கள் பார்வைக்குக் கொடுத்துள்ளார் என எங்கள் டூர் கைட் கூறினார்.


அரங்கத்தின் பல்வேறு பகுதிகளிலும் கூட்டம். கிட்டத்தட்ட 65000 பார்வையாளர்களுக்கு மேல் அமர்ந்து பார்க்கலாமாம்.  ஐந்தாம் நூற்றாண்டில் கிறிஸ்துவ மதம் பரவ ஆரம்பித்த பின்பு இந்த உயிர்க்கொலை நிகழ்வுகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தடுத்து நிறுத்தப்பட்டன என்கிறார்கள். 
உயிர்க்கொலை நிறைந்த அரங்கில் சில பகுதிகளில் பிற்காலத்தில் ஓரிரு கிறிஸ்துவ ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளியன்று இதைச் சுற்றிச் சிலுவைப்பாதை ஊர்வலம் தொடங்கி வழி நடத்தப்படுகிறது என்பது விநோதமான உண்மை. 

ஸ்டேடியத்தின் உட்புறத் தோற்றம் படத்தில். 


மக்கள் நுழையும் வெளி அல்லது மனிதக் கைதிகள், விலங்குகள் அடைக்கப்பட்ட கூண்டுகள் ? 


எவ்வளவுதூரம் சென்றாலும் புலிகள், சிங்கங்கள் மனிதர்கள் மோதுவதுபோல் அச்சமூட்டும் அரங்கத்தின் ஒலி காதுகளில் அறைந்து கொண்டுதான் இருக்கிறது. வாட்கள் மோதும் சப்தமும், மனிதர்களின், மிருகங்களின் கவிச்சியும் ரத்தவாடையும் நிறைந்து கிடக்கிறது கொலோசியம். 





மனிதர்களின் வாழ்க்கையை விளையாடிப் பார்த்த மன்னர்களுமே மண்ணைத்தான் கவ்வினார்கள். இருந்தும் அவர்களின் ரத்த விளையாட்டுகள் நூற்றாண்டுகள் தாண்டியும் நம்மைப் பதறடிக்கத்தான் செய்கின்றன. 

3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)