ஞாயிறு, 24 ஜனவரி, 2021

தந்தைக்கு இளமையைத் தந்த மகன்

 தந்தைக்கு இளமையைத் தந்த மகன்


ந்தைக்குப் பேரும் புகழும் தேடிக் கொடுப்பார்கள் சிலர். இவன் தந்தை என் நோற்றான் கொல் என்று சொல்லுமளவு சபையில் தந்தையைப் பெருமைப்படுத்துவர்கள் சிலர். ஆனால் தந்தைக்குத் தன்னுடைய இளமையைத் தந்த மகனைப் பற்றித் தெரியுமா. ? விநோதமான அந்த விஷயத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோம் வாருங்கள் குழந்தைகளே.

ஸ்தினாபுரத்தின் அரண்மனை. சிம்மாசனத்தில முதிய தோற்றத்தில் அமர்ந்திருக்கிறான் சக்கரவர்த்தி யயாதி. ஒருவருக்கு இருவராக இளம் மனைவியர் பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் தேவயானியும் சர்மிஷ்டையும்தான்.

யயாதி சந்திர குல அரசன் .குருவம்சத்தைச் சேர்ந்தவன். மற்ற எல்லா மன்னர்களையும் போலவே கேளிக்கைகளில் நாட்டம் கொண்டவன். அவன் அசுரகுரு சுக்ராச்சாரியாரின் மகளான தேவயானியைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறான். தேவயானி மூலம் அவனுக்கு யது, துர்வசு ஆகிய இரு குழந்தைகள் உண்டு.




தேவயானி திருமணம் செய்து வரும்போது பணிப்பெண்ணாக அனுப்பப்பட்டவள் விருசபர்வன் என்ற மன்னனின் அழகிய மகள் சர்மிஷ்டை. ஒரு சமயம் சர்மிஷ்டையின் பேரழகால் கவரப்பட்ட யயாதி அவளை தேவயானிக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறான். அவள் மூலம் துருயு, அனு, புரு ஆகிய குழந்தைச் செல்வங்கள் கிட்டுகின்றன.

ஒரு நாள் தேவயானி சர்மிஷ்டையின் அந்தப்புரம் சென்று பார்க்கும்போது யயாதியின் சாயலில் இருக்கும் மூன்று குழந்தைகளையும் கண்டு திடுக்கிடுகிறாள். ராஜா யயாதியையும் சர்மிஷ்டையையும் கோபத்தோடு விசாரிக்க உண்மை வெளிப்படுகிறது. உடனே தேவயானி தன் தந்தை சுக்ராச்சாரியாரிடம் தனக்கு நடந்த அநீதி பற்றி முறையிடுகிறாள்.


மகள் மேல் அதிக பாசம் கொண்ட அசுரகுரு சுக்ராச்சாரியார் மன்னன் யயாதி கிழட்டுத் தன்மை அடையவேண்டும் என்று சாபம் கொடுத்துவிட்டார். உடனே இளமை அழகோடிந்த யயாதி உடல் சுருங்கி , கண்கள் குழிந்து, தலை நரைத்த கிழவனாக ஆகிவிட்டான். கணவன் மேல் கோபம் கொண்டாலும் கணவனின் தோற்றத்தைப் பார்த்த தேவயானிக்கு இரக்கம் மேலிட்டது.

யயாதியும் தனது மாமனாரிடம் தன்னை மன்னிக்கும்படியும் கிழட்டுத்தன்மையை நீக்கும்படியும் வேண்டினான். உடனே சுக்ராச்சாரியார் உனது மகன்களில் ஒருவர் உனது முதுமையை வாங்கிக் கொண்டால்  இளமை உனக்கு மீண்டும் கிடைக்கும் என்று கூறுகிறார்.

தனால்தான் யயாதி தனது ஐந்து பிள்ளைகளையும் சபைக்கு வரச் சொல்லி நிறுத்தி இருக்கிறான். முதலில் தனது முதல் மனைவி தேவயானிக்குப் பிறந்த மூத்த மகனான யதுவிடம் கேட்கிறான்.

“ யது எனது முதுமையை உன்னால் வாங்கிக் கொள்ள இயலுமா ?”

ஒருகணம் திடுக்கிட்டு விழித்த யது தந்தையின் தோற்றத்தைப் பார்த்து மனதுக்குள் அருவெறுத்து இல்லை எனத் தலையசைக்கிறான்.

உடனே கோபம் பீரிட்டெழுகிறது யயாதிக்கு “ நீயும் உனது சந்ததியினரும் அஸ்தினாபுரத்தின் மணிமகுடம் சூட்டிக் கொள்ளத் தகுதியில்லாதவர்களாகக் கடவது “ என்று சாபமிடுகிறான்.

மற்ற பிள்ளைகளும் பயந்தபடி நிற்கிறார்கள். அடுத்து துர்வசு, துருயு, அனு ஆகிய புத்திரர்களிடமும் கேட்க அவர்களும் மறுத்துவிடுகிறார்கள். அவரகளுக்கும் அதே சாபத்தைக் கோபத்தில் வாரி வழங்குகிறான் மன்னன் யயாதி.

கடைசியாக நிற்கிறான் கடைக்குட்டி புரு. அவனுக்குத் தன் சகோதரர்களிடம் கெஞ்சும்  தகப்பனைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. கடைக்குட்டிப் பிள்ளை வேறு. தானும் மறுத்துவிட்டால் தந்தை பாவம் என்ன செய்வார் என நினைக்கிறான்.

தந்தை அவனிடம் “ உன்னால் என் முதுமையை வாங்கிக் கொள்ள இயலுமா புரூ ?” என்று கேட்கிறார் தனது கடைசி நம்பிக்கையான கடைக்குட்டிப் பிள்ளையைப் பார்த்து.




உடனே தயங்காமல் அவன் கம்பீரமாகச் சொல்கிறான் “ நிச்சயமாக தந்தையே. நான் உங்கள் முதுமையை ஏற்றுக் கொள்கிறேன் “

சொன்ன அடுத்த கணம் தந்தையின் முதுமையை ஏற்றுக் கொண்டு தனது இளமையைக் கொடுக்கிறான் புரூ. சக்கரவர்த்தி யயாதி அதே பழைய தேஜஸுடன் கம்பீரத்துடன் ஆகிருதியுடன் எழுந்து நிற்கிறான். சிறுவனான புரூ முதுமைத் தோற்றம் அடைந்து கிழட்டுத் தன்மை எய்துகிறான். பச்சிளம் குழந்தை கிழவனானது பார்த்து அதிர்ச்சியில் எழுந்து நிற்கிறது சபை.

தேவயானியும் சர்மிஷ்டையும் கூட ஒரு கணம் அதிர்ச்சியில் பேதலித்துப் போய்விட்டார்கள். புருவின் சகோதரர்களும் விரிந்த விழிகளுடன் அவனையே இமைக்காமல் பார்க்கிறார்கள்.

ஒன்றும் பேசாமல் முதுமைகூடிய கிழ உருவத்துடன்  நரைத்த தலையும், திரை விழுந்த கண்ணுமாய் சபையிலிருந்து மெல்ல நகர்ந்து செல்கிறான்.

ஓராண்டு ஈராண்டல்ல ஆயிரம் ஆண்டுகள் புருவின் இளமையை எடுத்துத் தன் வாழ்க்கையை அனுபவிக்கிறான் யயாதி. அலுத்துச் சலித்துப் போய்விட்டது வாழ்க்கை. யாக்கை நிலையாமையை உணர்கிறான். மகனின் இளமையைத் திருப்பிக் கொடுத்துவிட்டு கானகம் சென்று தவம் செய்ய எண்ணுகிறான்.

ஆயிரமாண்டுகள் கழிந்ததும் அவன் புரூவை அழைத்துத் தன் இளமையை அவனுக்குத் திருப்பிக் கொடுத்துவிட்டு முதுமையை எடுத்துக் கொள்கிறான். ஆயிரம் ஆண்டுகள் பொறுமை காத்த தன் மகன் புருவை அழைக்கிறான். அவனது தலையில் கைவைத்து ஆசி கூறி அஸ்தினாபுர அரசுரிமைக்கு அவனும் அவனது வாரிசுகளும்தான் பாத்யப்பட்டவர்கள் என்று கூறி முடி சூட்டுகிறான். தம் மனைவியர் இருவரோடும் கானம் சென்று தவம் செய்து தேவலோகம் செல்கிறான்.

மன்னன் புருவின் வம்சத்தில் பிறந்தவர்கள்தான் பாண்டவர்களும் கௌரவர்களும். தந்தைக்கு இளமையைத் தந்த மகனுக்கும் அவன் வம்சத்துக்கும் குருகுலத்தின் வாரிசாக அஸ்தினாபுரத்தை ஆளும் பாக்கியம் கிடைத்தது. எனவே பொறுமை அனைத்தும் சாதிக்கும் என்பது உண்மைதானே குழந்தைகளே.


3 கருத்துகள்:

  1. வழுக்கி விழுந்த பல மன்னர்களைக் கொண்டது அஸ்தினபுரி.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஸ்ரீராம்

    கருத்திட்டமைக்கு நன்றி பாண்டியன் சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)