செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

திருவோடு தொலைந்த மாயம்.

திருவோடு தொலைந்த மாயம்.

நம்மேல் நம்பிக்கை வைத்து ஒருவர் ஒரு பொருளைக் கொடுத்துப் பாதுகாப்பாய் வைக்கச் சொன்னால் அதன்படி வைத்து அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். அதுதான் தர்ம நியாயம். ஒரு வேளை அது தொலைந்துவிட்டால் அதற்கு நாம்தான் பொறுப்பேற்க வேண்டும். அப்படி ஒரு சிவயோகி கொடுத்த திருவோடு தொலைந்ததால் நீலகண்டம் என்பவர் பட்ட இன்னல்களைப் பார்ப்போம் குழந்தைகளே.
சிதம்பரம் என்ற ஊரில் மட்பாண்டத் தொழில் செய்து வந்த ஒருவர் இருந்தார். அவர் பிரதோஷ காலத்தில் இறைவன் ஆலகால விஷத்தை உண்டு உலகத்தைக் காப்பாற்றியதால் சிவனின் திருநீலகண்ட உருவத்தை வணங்கி வந்தார். அதனால் அவரது பெயர் திருநீலகண்டர் என வழங்கலாயிற்று.
நாள்தோறும் சட்டி பானைகள் செய்து சந்தையில் விற்று அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் குடும்பத்தை நடத்தி வந்தார். சிவனடியார்கள் அல்லது யோகிகள், சந்நியாசிகள் வந்தால் அவர்களுக்கு மண்ணால் செய்த திருவோடு செய்து கொடுத்து மகிழ்வார். அக்காலங்களில் திருவோடுகளில்தான் துறவறம் மேற்கொண்டவர்கள் பிட்சை பெற்று உண்பார்கள்.

திருநீலகண்டரின் மனைவியும் அவர் மேல் மிகுந்த அன்பு கொண்டவர். இருவரும் கருத்தொருமித்து வாழ்ந்து வந்தார்கள். திருஷ்டி பட்டது போல் ஒரு நாள் இருவருக்கும் ஏதோ ஒருவிஷயத்தில் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது. முடிவில் அவர் மனைவியோ கோபத்தில் தன்னைத் தொடவே கூடாது என்று சிவனின் திருநீலகண்டத்தின் மேல் ஆணையிட்டுக் கூறிவிட்டார்.
இப்படியே நாளும் பொழுதும் இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசாமல் பல்லாண்டுகாலம் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். ஒருநாள் ஒரு சிவயோகியார் திருநீலகண்டரின் இல்லத்துக்கு வந்தார். பொதுவாக வீட்டிற்கு வரும் சிவனடியவர்களுக்கு திருநீலகண்டர்தான் புது ஓடு செய்து கொடுப்பார். ஆனால் விந்தையிலும் விந்தை. வந்த சிவயோகியோ தன்னிடமிருந்த ஒரு திருவோட்டைக் கொடுத்துப் பத்திரமாக வைத்துக் கொள்ளும்படிச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

திருநீலகண்டரும் அந்த ஓட்டை எடுத்துச் சென்று இல்லத்தில் பாதுகாப்பான ஒரு இடத்தில் வைத்தார். பலநாட்கள் சென்றுவிட்டன. ஒருநாள் சிவயோகியார் திருநீலகண்டரின் இல்லத்துக்கு வந்தார்.
“ திருநீலகண்டரே . அன்று நான் கொடுத்த ஓட்டை எடுத்து வாரும் “
“ஐயா வாருங்கள். சிரம பரிகாரம் செய்து கொள்ளுங்கள். தாக சாந்திக்குச் சிறிது நீர் அருந்துங்கள் . இதோ உங்கள் ஓட்டை எடுத்து வருகிறேன் “ என்று கூறிவிட்டுத் திருநீலகண்டர் உள்ளே சென்று தான் வைத்த இடத்தில் ஓட்டைத் தேடினார்.
என்ன மாயம். அது அங்கே இல்லை. மீண்டும் மீண்டும் தான் வைத்த இடத்திலும் அந்த அறை முழுவதும் தேடினார். இல்லை என்றதும் வீடு முழுவதும் தேடினார். வெளியே சிவயோகியோ “ என்னய்யா செய்கிறீர். என் ஓட்டை எடுக்க இவ்வளவு நேரமா.. சீக்கிரம் கொண்டு வாரும். நான் கிளம்ப வேண்டும் “ என்று இரைகிறார்.
பதட்டத்தில் வியர்க்கிறது திருநீலகண்டருக்கு. கைகளைப் பிசைந்தபடி சிவயோகியாரிடம் வந்து “ஐயா நீங்கள் கொடுத்த ஓட்டை உள்ளே பத்திரமாகத்தான் வைத்திருந்தேன். ஆனால் இப்போது…”
”இப்போது என்ன ஆயிற்று. “ என்று கேட்டார் சிவயோகி.
“அந்த ஓட்டைக் காணவில்லை “ என்றார் திருநீலகண்டர்.
“என்னது ஓட்டைக் காணவில்லையா. அது என்ன கைகால் முளைத்துக் கிளம்பி விட்டதா .. என்ன செய்வீரோ தெரியாது எனக்கு என் ஓடு வேண்டும் “ என்றார்.
“ஐயா பலமுறை தேடிவிட்டேன். கிடைக்கவில்லை. என்னை மன்னித்து என்னிடம் இருக்கும் புது ஓடுகளில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். ”
“அதெல்லாம் முடியாது. எனக்கு என் மண் ஓடுதான் வேண்டும். கொடுத்த பொருளைத் தொலைத்துவிட்டுப் புது ஓடு தருகிறாராம் புது ஓடு.. பொன் ஓடாக இருந்தாலு யாருக்கு வேண்டும் அது .. என் ஓட்டைத் திருடிக் கொண்டாயா “ என்று சத்தம் போடுகிறார் சிவயோகி.எண்சாண் உடம்பும் கூசிப்போகிறது திருநீலகண்டருக்கு.

“ஐயோ நான் திருடவில்லை ஐயா “ என்கிறார் திருநீலகண்டர்.
”அப்படியானால் உன் மகனின் கையைப் பிடித்துக் குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய் ”
“எனக்கு மகன் இல்லை ஐயா”
“அப்படியானால் மனைவியின் கையைப் பிடித்துக் குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய் “
“ஐயா நாங்கள் இருவரும் பேசியே பல்லாண்டு ஆகிறது. எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட ஒரு சண்டையில் இருவரும் ஒருவரை ஒருவர் தொடமாட்டோம் “
“அப்படியானால் தில்லையம்பலத்திற்கு இந்த வழக்கைக் கொண்டு போகப் போகிறேன். அங்கே வந்து என் ஓட்டை என்ன செய்தீர் எனச் சொல்லும் ? “ எனக்கூறிவிட்டு முன்னே விரைகிறார் சிவயோகி.
மனம் குறுக ஊரார் பார்க்க சிவயோகியின் பின்னால் விரைகிறார் திருநீலகண்டர். அவர் பின்னேயே விரைகிறார் அவரது மனைவியும். வழக்கை தில்லையம்பலத்தில் உரைக்கிறார் சிவயோகி.
”திருவோட்டை வீட்டின் உள்ளேதான் வைத்தேன். ஆனால் அது இப்போது மாயமாய் மறைந்துவிட்டது “ என்று தன் பக்கம் உள்ள உண்மையை உரைக்கிறார் திருநீலகண்டர். அவர்களும் விசாரித்துவிட்டு சிவயோகி சொற்படி நடக்கச் சொல்கிறார்கள்.
தன் மனைவியுடன் பிணக்கு என உரைக்கிறார் திருநீலகண்டர். அதன்பின் அவர்கள் கூறியபடி ஒரு மூங்கில் தடியின் இருபக்கமும் இருவரும் பிடித்தபடி அந்தக் குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய்தபடி எழுகிறார்கள். என்ன ஆச்சர்யம். எழும்போது இளமை திரும்ப எழுகிறார்கள். அந்த சிவயோகியைக் காணவில்லை. அப்போதுதான் தெரிகிறது அந்தச் சிவயோகி இவர்கள் இருவரின் பிணக்கைத் தீர்க்கவே அந்த ஓட்டை மாயமாய் மறைத்தார் என்பது.

என்னதான் இருந்தாலும் ஒருவரிடம் நாம் ஒருபொருளைப் பாதுகாத்துக் கொடுப்பதாகப் பெற்றுக் கொண்டால் அதன்படி நடக்க வேண்டும். இல்லாவிட்டால் பெற்றுக்கொள்ளவே கூடாது. அதை உணர்த்திய திருநீலகண்டரின் கதை சுவாரசியமாய் இருந்ததுதானே குழந்தைகளே.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)