திங்கள், 23 நவம்பர், 2020

நண்டு

 நண்டு


கடற்கரையோர நகரம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்கள் மாலதியின் தம்பிகள். இன்னும் திருமணமாகவில்லை. அவர்களுக்கு சமைத்துப் போட அவர்கள் பாட்டி வீட்டில் இருந்து சிகப்பி அக்காவை அனுப்பி இருந்தார்கள். தன் பிள்ளைகளோடு கோடை விடுமுறைக்குத் தம்பிகள் வீட்டுக்கு வந்திருந்தாள் மாலதி. 

நண்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார் சிகப்பி அக்கா. ”வெள்ளையாத்தானேக்கா இருக்கு இந்த நண்டு. இது எப்பிடி சமைச்சோடனே சிவப்பா ஆகுது ” என்று கேட்டாள் பக்கத்தில் அமர்ந்து நண்டு சுத்தம் செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மாலதி.

“இது கடல் நண்டு. சட்டில போட்டு வதக்குனவோடனே சூட்டுக்கு செவப்பாயிரும். அம்மாப்பொண்ணு இங்க உக்காராதே. சுத்தம் செய்யும்போது பார்த்தாச் சாப்பிட மாட்டே “ என்று சொல்லிக் கொண்டே நண்டின் கால்களைப் பிரித்து ஓட்டை உடைத்து மஞ்சள் பகுதியைக் கையால் தேய்த்துக் கழுவினார் சிகப்பியக்கா.

தண்டட்டிக் காது அசைய அமர்ந்திருந்த சிகப்பியக்கா பேருக்கேற்றாற்போல வெள்ளைச் சிகப்பு. மாலதியின் பாட்டி வீட்டில் கிட்டத்தட்ட 30 வருடமாக சமையல் வேலை செய்தவர். பாட்டி வீட்டுக்கு விடுமுறைக்கு வரும்போதெல்லாம் சிகப்பி அக்காளின் கைவண்ணத்தில் விதம் விதமான உணவுகளை ருசித்திருக்கிறார்கள் மாலதியும் அவள் தம்பிகளும். திடீரென எவ்வளவு பேர் வந்தாலும் அவ்வளவு பேருக்கும் உணவு தயாரிப்பதில் அசந்ததேயில்லை சிகப்பியக்கா.

வேலை ஓய்ந்த பகல்பொழுதுகளிலும் திருகையில் உப்புமாவுக்கு உடைப்பது, குந்தாணியில் சிவப்பரிசி போட்டு உரலால் புட்டு இடிப்பது , சாயங்காலமானால் பச்சரிசி மாவில் தேங்காய் திருகிப் போட்டு சீடை உருட்டுவது, கயிறில் கோர்த்து உப்புக்கண்டம் காயப்போடுவது, வற்றல் போடுவது  என ஏதாவது செய்து கொண்டே இருப்பார். ஒருநாள் கூட மதியத்தில் அந்த அக்கா ஓய்ந்து உறங்கிப் பார்த்ததேயில்லை மாலதி.

அதன்பிறகு பல விடுமுறைகள் வந்தன. மாலதி பெரிய பெண்ணானாள். திருமணமும் ஆனது. பாட்டி வீட்டுச் சீரில் சிவப்பி அக்கா கொடுத்த பானா காது வைத்த சில்வர்சட்டி அவள் மனதைக் கவர்ந்தது. அக்காவின் கால்களில் விழுந்து கும்பிட்டு வாங்கிக் கொண்டாள். ”நல்லா இரும்மா” என்று ஆசி வழங்கிக் கொடுத்தார் சிவப்பி அக்கா.

தம்பிகள் வேலைக்குச் சென்றார்கள். சிவப்பி அக்காளுக்குத் தள்ளாமை வந்தது. பெரிய வீட்டில் நிறையப் பேருக்குச் சிகப்பி அக்காவால் வேலை செய்ய இயலவில்லை. தம்பிகளுக்குச் சமைக்கப் போகச் சொல்லிப் பாட்டியே அனுப்பி வைத்தார்

பழைய நினைவில் உறைந்திருந்த மாலதியைத் தடாலென ஒரு சத்தம் எழுப்பியது. சிகப்பி அக்காதான் வாசற்படி தடுக்கி மயக்கமாகி விழுந்து கிடந்தார். பதறியபடி ஒடிவந்தாள் மாலதி. ஒஞ்சரித்துக் கிடந்த அக்காவைத் தூக்கியபோது தட்டுச் சுற்றாகக் கட்டிய சேலை ஒருபக்கம் திரண்டு இருக்க பின்புறத்தில் சிவப்பாக இருந்தது.

”அடிபட்டு ரத்தம் வருதோ.” பதட்டத்துடன் அக்காவை எழுப்பித் தண்ணீர் கொடுத்து அமரவைத்தாள். அக்கா ”தொடையில எங்காச்சும் அடிபட்டிருச்சா நல்லாப் பாருங்கக்கா “ என்று கையையும் காலையும் நீவி விட்டாள்.  

”இல்லப்பா. எங்கயும் நத்தம் வரல. ஊமை அடிதான்”

“அக்கா உங்க சேலையில பின்பக்கத்துல ரத்தம் இருக்குங்கக்கா. அதான் பாக்கச் சொல்லுறேன்”  

”அது ஒண்ணுமில்லம்மா. சமைஞ்ச கொமரிக மாதிரி இப்பப் போயித் தீட்டுப் போகுதும்மா.” எழுபது வயது கடந்த அக்காவின் வெளுத்த மூஞ்சியில் வெட்கம் படர்ந்து கிடந்தது. 

”எப்பவுலேருந்து அக்கா “

”அது அப்பப்ப வருதும்மா.”


“ஏங்கா சொல்லாம விட்டீங்க. வாங்க டாக்டர்கிட்ட காமிச்சிட்டு வரலாம்.”

“அடப் போப் பிள்ள. இதுக்கெல்லாம் பயந்துக்கிட்டு. அதுபாட்டுக்குத் தானா நிக்கும். இந்த வயசுல இதெல்லாம் போயிக் காமிப்பாங்களா”

“இல்லக்கா. எதுக்கும் காமிச்சிறலாம். எதுனாலன்னு தெரிஞ்சிக்கிறது நல்லதுதானே. “

“இரு சமையல முடிச்சிட்டுப் போகலாம். சுத்தம் பண்ணிட்டுச் சமைக்காட்டி நண்டு ஊத்திப் போயிரும். அப்புறம் கொழம்புல வெறும் ஓடுதான் இருக்கும்.“

“அக்கா இப்ப அது முக்கியமில்ல. அத ஃப்ரிட்ஜ்ல வைச்சிட்டுப்போவோம். ”

மாலதியின் கட்டாயத்துக்காக அக்கா வேறு சேலை மாற்றிக் கொண்டு கிளம்பினார்.

கைனகாலஜிஸ்டிடம் ஏகக் கூட்டம். ”டோக்கன் முடிஞ்சிருச்சு. நாளைக்கு வாங்க” எனக் கூறினாள் ரிசப்ஷனிஸ்ட்.

“இல்லீங்க. கொஞ்சம் அர்ஜண்ட்.”

“யாருக்கு உங்களுக்கா”

“இல்லீங்க இவுங்களுக்கு “

”என்ன பிரச்சனை, வயசு என்ன, பேர் என்ன ? “

“தீட்டுப் பிரச்சனை, வயசு எழுவது, பேர் சிகப்பி”

இந்த வயசில் தீட்டா எனப் பார்த்தவள் ”அந்த எடை மிஷினில் நில்லுங்க “ என எடை உயரம் குறித்துக் கொண்டாள். கிழங்கு மாதிரி இருக்கும் அக்கா காத்துப் போல மெலிந்து லேசாக இருந்ததை அப்போதுதான் நன்றாகக் கவனித்துப் பார்த்த மாலதிக்குக் கண் கலங்கியது.

எல்லா டோக்கனும் போனபின் கடைசி ஆளாக உள் நுழைந்தார்கள். சிகப்பி அக்காளைப் போல டாக்டரும் களைத்திருந்தார். நர்ஸ் குறித்திருந்த குறிப்புகளைப் பார்த்துவிட்டு ”வயிறு, இடுப்பு வலிக்குதா” எனப் படுக்கவைத்துப் பரிசோதித்தார் டாக்டர். ”அப்பப்ப வலிக்கும் “ என்றார் அக்கா.

“எதுக்கும் ஒரு எம் ஆர் ஐ ஸ்கான் பண்ணிட்டு வாங்க” என எழுதிக் கொடுத்தார்.

ரிஸல்ட் வந்ததும் பார்த்துவிட்டு “என்னது கர்ப்பப்பையில் கான்சரா” என அதிர்ந்தாள் மாலதி. சிகப்பி அக்காவுக்குக் குழந்தைகளே இல்லை. கருத்தாங்காத அக்காவின் கர்ப்பப்பையில் கட்டிக்கு என்ன வேலை. அல்லும் பகலும் எங்களுக்காகப் பாடுபட்டு எங்களையே தங்கள் கருவில் சுமந்த அக்காவுக்குப் போய்க் கர்ப்பைப்பை கட்டியா. ?

“கர்ப்பப்பையை எடுக்க வேண்டி வருமா டாக்டர். “

“வேண்டாம். இவங்களுக்கு வயசாயிருச்சு. ட்ரீட்மெண்ட் தாங்காது. ஆரம்ப ஸ்டேஜில வந்திருந்தா லாப்ராஸ்கோப்புல சரி பண்ணியிருக்கலாம். “

நண்டு போல அக்காவின் உடலை அரித்துத் துளைத்துக் கொண்டிருக்கும் கான்ஸரை நினைத்துக் கோபமாய் வந்தது மாலதிக்கு. எந்த மருந்தும் மாத்திரையும் பலனளிக்காமல் சிகப்பி அக்கா போய்ச் சேர்ந்து சில வருடங்களாகி விட்டது. சிகப்பி அக்காளைக் காக்க முடியவில்லையே எனச் சொல்ல முடியாத் துக்கத்தில் ஆழ்ந்திருந்தாள் சிலகாலம்.

”எத்தனை நாள்தான் சிகப்பி அக்காவுக்காக சோகம் காப்பே. டீல் ரிப்பன் கேம்பைன் இருக்கு. வா” என ஃபோன் செய்தாள் மாலதியின் சிநேகிதி ரேகா. மனதைத் தேற்றிக் கொண்டு வீட்டில் இருந்து கிளம்பினாள் மாலதி. டீல் கலர் எனப்படும் பச்சை நிற ரப்பர் வளையம் கையில் அணிந்து ரேகாவுடன் கர்ப்பப்பை விழிப்புணர்வு ஊர்வலத்தில் கை உயர்த்தியபடி கடற்கரைச் சாலையில் நடந்து சென்றாள், ’இதைப் பார்க்கும் யாராவது தங்கள் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்குவாங்களா’ என அவள் சிந்தனை ஓடியது.  

“என்ன பச்சைக்கலர் பாண்ட் போட்டுக்கிட்டுப் போறாங்க எல்லாரும் “ மத்திமவயதுப் பெண் ஒருவர் ரோட்டில் விசாரித்தார்.”கர்ப்பப்பை கான்சர் விழிப்புணர்வாம் “ என்று விளக்கம் சொல்லி அழைத்துச் சென்றார் அவர் மகள். தான் சிகப்பி அக்காவை இழந்ததுபோல் இன்னும் யாரும் யாரையும் இழக்காமலிருக்க இந்த கேம்பைன் உதவியதே என்ற மகிழ்ச்சியில் கையை இன்னும் மேலே உயர்த்தி நடந்துகொண்டிருந்தாள் மாலதி. கடற்கரைச் சாலையில் தன்னை நோக்கி நடந்துவரும் பெரும் கூட்டத்தைக் கண்டதும் நீரலையில் மிதந்து வளைக்குள் ஓடி ஒளிந்தது கேன்ஸர் என்னும் நண்டு.

2 கருத்துகள்:

  1. அருமையான கதை.... சிகப்பி அக்காவை நினைத்து கண்கல் கலங்கியது

    பதிலளிநீக்கு
  2. அன்பும் நன்றிகளும் நிகழ்காலம்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)