செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

தினமும் அன்னமிட்ட திருமங்கை மன்னன். தினமலர் சிறுவர்மலர் - 52.

தினமும் அன்னமிட்ட திருமங்கை மன்னன்

எவ்வளவு செல்வந்தர் ஆனாலும் ஒருநாள் உணவளிக்கலாம். இருநாள் உணவளிக்கலாம். தன் வாழ்நாள் பூராவும் வருடம் முன்னூற்றறுபத்தியைந்து நாளும் அடியார்களுக்கு அன்னமிட்ட திருமலை மன்னன் பற்றித் தெரியுமா குழந்தைகளே. தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
சோழ நாட்டின் திருவாலி திருநகரி என்ற ஊருக்கு அருகிலுள்ள திருக்குரையலூரில் பிறந்தவர் நீலன் என்பார். இவர் இவரது தந்தை சோழமன்னனிடம் பணிபுரிந்தவர். அதனால் இவரும் தக்க பருவம் எய்தியதும் சோழனிடம் வீரராகச் சேர்ந்து பணிபுரிந்து வந்தார். தன் திறமையினால் படிப்படியாக உயர்ந்து படைத்தலைவரும் ஆனார். இவர் எதிரிகளைத் துவம்சம் செய்வதைப் பார்த்து வியந்து சோழ மன்னரே இவர் எதிரிகளுக்குக் காலன் போன்றவன் என்ற அர்த்தத்தில் இவருக்குப் “பரகாலன் “ என்று பட்டம் வழங்கினார்.
ஒரு போரில் இவரின் வீரதீரப் பராக்கிரமத்தைப் பார்த்து அதிசயித்த சோழ மன்னன் இவரைத் தளபதி பொறுப்பிலிருந்து விடுவித்து இவரது தகுதிக்கேற்ப திருமங்கை என்ற நாட்டின் மன்னனாக ஆக்குகிறார். குறுநில மன்னர்கள் என்றால் அவர்கள் அரசர்களுக்குக் கப்பம் கட்ட வேண்டும். திருமங்கை என்ற குறுநிலத்தின் மன்னரானதால் இவர் திருமங்கை மன்னன் என்று அழைக்கப்படுகிறார்.

ஒருமுறை இவர் அழகும் அறிவும் பக்தியும் ஒருங்கே பெற்ற குமுதவல்லி என்ற பெண்ணைச் சந்திக்கிறார். அவளை மணக்க விரும்புவதாகச் சொல்கிறார். அதற்கு அவள் ” தினமும் ஆயிரத்தெட்டு அடியவர்களுக்கு உணவளிக்க நீர் ஒப்புக்கொண்டால் உம்மை மணக்கச் சம்மதிக்கிறேன் “ என்கிறாள்.
அன்னமளிப்பது நல்ல விஷயம்தானே. மேலும் மனதுக்குப் பிடித்த பெண் சொல்லியதால் அதன் படி நடப்பதாகக் கூறி மணக்கிறார். அதன் பின் தான் ஆரம்பிக்கிறது சோதனைகள் ஒவ்வொன்றாய். முதலில் சொன்னபடி தினமும் ஆயிரத்தெட்டு அடியவர்களுக்கு முப்பொழுதும் அன்னமிட்டு வந்தார்.
அவர் அரண்மனைப் படி ஏறி பசி என்று திரும்பிச் சென்றவர் யாருமில்லை. தினமும் அன்னமளிக்க கஜானா காலியானது. வந்த வரிப்பணத்தை எல்லாம் செலவழிக்கத் துவங்கினார். மக்கள் கொடுத்த வரிப்பணத்தில் ஒருபங்கை சிற்றரசர்கள் பேரரசர்களுக்குக் கப்பமாகக் கட்ட வேண்டும். ஆனால் அதையும் அன்னதானத்தில் செலவழித்த திருமங்கை மன்னனோ சோழ மன்னரைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலையில்லாமல் அன்னமிட்டு வந்தார்.
பார்த்தார் மன்னர். ஒரு மாதமாயிற்று, இரண்டு மாதமாயிற்று. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவர் வரிவசூலிக்க வீரர்களை அனுப்பினார். அவர்கள் வெறுங்கையுடன் திரும்ப திருமங்கை மன்னன் அன்னதானமளிப்பது பற்றிக் கேள்விப்பட்டு வரிவசூலிக்க மன்னரே நேரே வந்தார். வந்தால் இங்கே திருமங்கை மன்னனிடம் சல்லிக்காசு இல்லை.  எது வந்தாலும் சரி என உறுதியோடு சோழமன்னரை எதிர்த்து வாள் ஓங்கி சண்டைக்குத் தயாரானார்.
சோழமன்னனோ அவர் நிலை பார்த்து இரங்கி ”பரகாலரே, கோவிலில் தங்கிக் கொள்ளுங்கள். ஆனால் கூடிய சீக்கிரம் வரியை அனுப்புங்கள். அதிலிருந்து தப்ப முடியாது “ என்று எச்சரித்து விட்டுச் செல்கிறார். திருமங்கை மன்னனிடமோ இப்போது நாடும் இல்லை. எங்கே இருந்து வரி செலுத்துவார்.
தினம் உணவு தேடி வரும் அடியவர்க்கு அன்னமிட முடியவில்லையே என்ற வருத்தத்தில் அவர் கோவிலில் அமர்ந்திருக்கிறார். மூன்று நாட்களாக அன்னம் தண்ணீர் இல்லை. ஊருக்கே சோறிட்டவருக்கு ஒரு வாய் சோறிட யாருமில்லை. பசி மயக்கத்தில் கிறக்கமாய் இருக்கிறது அவருக்கு. அப்படியே கோவில் தூணில் சாய்ந்து உறங்கும்போது ஒரு கனவு வருகிறது. அதில் காஞ்சிக்குச் சென்றால் கடன் அடையும் என்று கனவில் திருமாலே சொன்னது போல் இருக்கிறது.
இறைவன் சொன்னபடி காஞ்சிக்குச் சென்று அவர் கனவில் காட்டிய இடத்தில் தோண்ட பெரும் புதையல் கிடைக்கிறது. ஆனந்தக் கூத்தாடும் அவர் சோழ மன்னனின் கடனை அடைத்து மிச்சப் பணத்திலும் அடியவர்க்கு அன்னதானம் செய்து வருகிறார்.
இதுவும் எத்தனை நாளைக்கு வரும், புதையலும் கரைந்து போனது. இப்போது திருமங்கை மன்னன் கையில் ஒன்றுமில்லை. நாளை வரும் அடியார்க்கு எப்படி உணவிடுவது என்ற கவலையில் இருக்க களவு செய்தாவது அடியவர்க்கு உணவு படைக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகிறது.
உடனே வேடன் போல் வேஷம் கட்டிக் குதிரையின் மேல் கொள்ளைக்காரன் போல் போய் காட்டுவழியில் காத்திருக்கிறார். அங்கே வரும் பணக்காரர்களைக் கொள்ளையடித்து அடியவர்களுக்கு உணவிடுகிறார். எப்படியோ குமுதவல்லிக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மிச்சமிருக்கிறது அவரிடம்.
ஒரு நாள் வேடுபரி ஆடிச் செல்லும்போது ஒரு மாப்பிள்ளையும் பெண்ணும் வேற்றூருக்குச் செல்ல அக்காடு வழியாக வருகிறார்கள். அவர்களிடம் “ கழட்டுங்கள் நகைகளை “ என சத்தம் போடுகிறார். அவர்களும் கழட்டித் தருகிறார்கள். ஆனால் மாப்பிள்ளையின் காலில் போட்டிருக்கும் கல்யாண மிஞ்சி எனப்படும் கால்மோதிரம் கழட்ட வரவில்லை.
”என்னால் கழட்ட முடியவில்லை. நீங்களே கழட்டிக்  கொள்ளுங்கள் “ என அந்த மாப்பிள்ளை சொல்லிவிட எவ்வளவோ முயற்சித்தும் வராததால் தன் பற்களால் கடித்துக் கழட்டுகிறார் திருமங்கை மன்னன். அப்போது எதேச்சையாக நிமிர்ந்து பார்க்கிறார் திருமங்கை மன்னன். அந்த மணமகன் திருமாலாக காட்சி தர, அவர் அடியவர்க்கு அமுது படைக்க அவரிடமே திருடினோமே என்று வெட்கி நாணி அவர் காலடி பணிந்து மன்னிப்புக் கேட்கிறார் திருமங்கை மன்னன். அதிலிருந்து அவர் வேண்டும் பொருள் எல்லாம் திருமாலே வழங்கிவிட்டதால் அவர் வேடுபரியாடிக் கொள்ளையடிப்பதை நிறுத்தினார்.
பார்த்தீர்களா குழந்தைகளே. சொன்ன சொல்லைக் காப்பாற்றவும் அன்னதானம் தடைப்படாமல் இருக்கவும் திருமலை மன்னன் களவு செய்து அன்னமிட்டு அதன் பின் நன்னெறிக்குத் திரும்பினார். ஒருவர் தன் வாழ்நாளெல்லாம் இப்படி தினமும் அன்னதானம் செய்வது என்பது மிகப்பெரும் விஷயம்தானே.   

டிஸ்கி :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 24 .1. 2020  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர்கள் அஷோக் &  ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.

3 கருத்துகள்:

  1. மனதில் நிற்கும் மன்னர்களில் ஒருவரைப் பற்றிய அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு கதை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஜம்பு சார்

    நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)