திங்கள், 3 பிப்ரவரி, 2020

தங்க வட்டிலை விட்டெறிந்த ஸ்ரீவத்சாங்கர். தினமலர் சிறுவர்மலர் - 50.

தங்க வட்டிலை விட்டெறிந்த ஸ்ரீவத்சாங்கர்


தன்னிடம் இருக்கும் வேண்டாத குப்பைகளைக் கூட தூரப் போடாமல் சேர்த்து வைத்துக் கொண்டிருப்போர் பலர். ஆனால் தங்கத்தால் ஆன வட்டிலைக் கூட வேண்டாம் என்று விட்டெறிந்தார் ஒருவர். தன்னைச் செருக்கு ஆக்கிரமித்துவிடக் கூடாதே என்பதற்காக தன் சொத்து முழுவதையும் தானம் வழங்கிய தனவந்தர். அவர் யார் ? ஏன் அப்படிச் செய்தார் எனப் பார்ப்போம் குழந்தைகளே.
காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கூரம் என்ற இடத்தில் பிறந்தவர் கூரேசர். இவரது இயற்பெயர் ஸ்ரீவத்சாங்கர். இவரது மனைவி பெயர் ஆண்டாள். மனமொத்த தம்பதிகள் இருவரும். செல்வந்தரான இவர் தினமும் அன்னதானம் செய்து வந்தார். எல்லா நாட்களிலும் எல்லா வேளைகளிலும் இவர் இல்லத்துக்கு வரும் அடியவர்களுக்கு உணவிடுவதையே தன் பெரும் பேறாகக் கொண்டிருந்தார்.
இவரது செல்வத்தையும் அன்னதானத்தையும் பார்த்து ஊரார் பிரமித்தார்கள். ”குந்தித் தின்றால் குன்றும் கரையும் என்பார்கள். இந்தக் கூரேசர் தன் சொத்தை எல்லாம் அன்னதானத்திலேயே கரைக்கிறார். துளிக்கூடக் கரையக் காணோம். இவர் போல் சிறந்த அன்னதாதா யாருளார் ? “ என்று அனைவரும் சிலாகிக்கிறார்கள்.

இதை எல்லாம் கேட்கும்போது அவருக்குக் கூச்சம் மேலிடுகிறது. மேலும் இதைக் கேட்கக் கேட்க தான் செய்யும் தானங்களை நினைத்துத் தனக்குச் செருக்கு வந்துவிடாதிருக்க வேண்டுமே என்று கவலைப்படுகிறார். இருக்கும் சொத்துக்களை எல்லாம் திருக்கூரத்தில் தானம் செய்துவிட்டுத் தன் குரு ராமானுஜர் இருக்கும் திருவரங்கத்திற்குச் செல்லவேண்டும் என்பது இவர் ஆசை.
இராமானுஜர் இவரை விட இளையவர் என்றாலும் அவரது ஞானத் தெளிவை எண்ணி அவரை மானசீக குருவாக வரிக்கிறார். அவர் இருக்கும் இடம் செல்லவேண்டும் எனத் துடிக்கிறது இவர் மனது.
அதன்படித் தன் சொத்துக்களை எல்லாம் தானம் செய்கிறார். இவர்தான் ஞானம் கொண்டு தானம் செய்கிறார் என்றால் இவருக்கு மனைவியாக வாய்த்த ஆண்டாளும் கணவர் சொல்லுக்கு மறுபேச்சுப் பேசாமல் அனைத்தையும் தானம் வழங்க சம்மதிக்கிறார். கணவருக்கேற்ற மனைவி. அப்போது அவர் கையில் அகப்படுகிறது தினமும் கூரேசர் உணவருந்தும் தங்க வட்டில்.
அனைத்தையும் கொடுக்க முடிந்த ஆண்டாள் அம்மைக்குத் தன் கணவர் கூரேசர் உணவருந்தும் தங்க வட்டிலைக் கொடுக்க மனம் வரவில்லை. இதைக் கொண்டு சென்றால் திருவரங்கத்தில் அவர் உணவருந்தப் பயன்படுமே என்று எடுத்து வைத்துக் கொள்கிறார்.
இருவரும் சொத்து சுகம் அனைத்தையும் துறந்து தானம் செய்துவிட்டுப் பொடிநடையாகவே திருவரங்கம் புறப்படுகிறார்கள். நள்ளிரவு. இருட்டு கரு கும்மென்றிருக்கிறது. கண்ணுக்குக்கூடப் பாதை தட்டுப்படாத பயணம். ஆண்டாள் அம்மை முந்தானையால் சுற்றி மடியோடு சேர்த்துத் தன் கணவர் அமுதுண்ணும் வட்டிலைக் கட்டி வைத்திருக்கிறார்.
தூரத்தே சலசலப்பு. திருடர்கள் வருகிறார்களோ என்று ஆண்டாள் அம்மைக்கு பதைப்பு. ஆனால் கூரேசரோ எந்தத் தயக்கமும் இல்லாமல் கானகத்தில் கொடி செடி அனைத்தும் விலக்கித் தைரியமாகச் சென்று கொண்டிருக்கிறார். ஆண்டாள் அம்மை தயங்கித் தயங்கி வருவதைப் பார்க்கிறார்.
’என்ன விஷயம்’ என்று கூரேசரால் யூகிக்க முடியவில்லை. ஆனால் ஆண்டாள் அம்மை ஏதோ பயத்துடன் வருவது போல் தோன்றுகிறது அவருக்கு. “ எதற்கு பயந்து கொண்டே வருகிறாய் ஆண்டாள்?’ என்று கேட்கிறார் .
”ஒன்றுமில்லை சும்மாதான்” என்று கூறியபடி நடந்து வரும் ஆண்டாள் அம்மை அவ்வப்போது தன் மடியைத் தொட்டுப் பார்த்துக் கொள்கிறாள். ஆனால் பட்சியோ மிருகமோ இரையும் சத்தமோ அல்லது எங்கேனும் மனிதர் நடமாட்டமோ குதிரைச் சத்தமோ கேட்கும் போதெல்லாம் ’திருடர்களாயிருக்குமோ’ என்று பயந்து நடுங்குகிறாள்.
தன் கணவருக்காக ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று அவள் மறைத்து எடுத்து வரும் தங்க வட்டில் மீதே அவள் கவனம் பூரா இருக்கிறது. மனைவியின் தடுமாற்றத்தைப் பார்த்த கூரேசர் பளிச்சென்று கேட்கிறார்.
“மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் வரும். உன் மடியில் ஏதும் வைத்திருக்கிறாயா “
“ஆம் சுவாமி நீங்கள் திருவரங்கத்தில் உணவருந்த உங்கள் தங்க வட்டிலை மட்டும் எடுத்து வந்தேன். “ என்கிறாள் ஆண்டாள் அம்மை.
”அனைத்தையும் துறந்த நமக்கு எதற்கு தங்க வட்டில் ? அதையும் தூக்கிப் போட்டுவிட்டு நிம்மதியாக வா “
அதற்கு ஆண்டாள் இணங்க மறுக்கவே அவளிடமிருந்து அந்த தங்க வட்டிலை வாங்கிக் கானக இருட்டுக்குள் தூக்கி எறிகிறார். ”அச்சோ” ஒரு நொடி திகைத்தாள் ஆண்டாள் அம்மை. அடுத்த நொடி தன் கணவரின் கைகளை இறுக்கமாகப் பற்றி நடக்க ஆரம்பித்தாள். இருவரும் நிம்மதியாக இராமானுஜர் இருக்கும் திருவரங்கம் சென்று சேர்கிறார்கள்.
அங்கே யாசகம் பெற்று வாழும் அவர்கட்கு ஒரு நாள் மழையின் பொருட்டு உணவு கிடைப்பது சிரமமாகிறது. அந்த நேரம் அவர்கள் பசியறிந்து அரங்கன் கோவில் பிரசாதம் கிட்டுகிறது. அதன்பின் அவர்களுக்கு வியாசர்,பராசரர், என்ற இரு தெய்வத் திருமகன்கள் பிறக்கிறார்கள். அவர்கள் அளித்த தானம் எல்லாம் சும்மா போகுமா ? அதனால்தான் நன்மகன்கள் பிறந்தார்கள்.
தங்க வட்டிலானாலும் துறப்பது என்று வந்தபின் அனைத்தையும் துறந்துவிட வேண்டும் என்ற ஞானத்தோடு செயல்பட்ட ஸ்ரீவத்சாங்கரின் மேன்மை போற்றுதலுக்குரியதுதானே குழந்தைகளே.

டிஸ்கி :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 10 .1. 2020  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர்கள் அஷோக் &  ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.

3 கருத்துகள்:

  1. சிறப்பான கதை. எத்தனை பெரிய மனது கூரேசருக்கு.

    தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)