ஞாயிறு, 20 ஜூன், 2021

இராமன் செய்தது நியாயமா ?

இராமன் செய்தது நியாயமா ?

ஒருவரை நேருக்கு நேர் நின்று எதிர்ப்பது ஒரு விதம். ஆனால் ஒருவரை மறைந்திருந்து தாக்குதல் இன்னொரு விதமான போர்முறை. இராமன் வாலியை அப்படி மறைந்திருந்து தாக்கிக் கொன்றான். அதனால் வாலியின் மனதில் ”பகைவனல்லாத தன்னை இராமன் மறைந்திருந்து அம்பெய்ந்து கொன்றானே. அவன் செய்தது நியாயமா” என்ற கேள்வி உறுத்திக்கொண்டே இருந்தது. அதை இலக்குவனிடம் கேட்டான். அதன் பின் தெளிந்தான். அந்தக் கதை என்னவென்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
அன்றலர்ந்த பூக்கள் நிரம்பிக் கிடக்கின்றன. வாலி அவற்றை எடுத்துக் கொண்டு காலை பகல் மாலை என்று மூன்று வேளையும் எட்டுத் திக்கும் சென்று சிவனுக்கு அர்ச்சித்து வணங்குபவன். சிவநேயச் செல்வன். பக்தியிலும் ஆட்சி நெறியிலும் வல்லமை, வலிமை கொண்டவன் என்பதால் வாலி என வழங்கப்பட்டான்.
அன்று காலையும் தன் பூஜை புனஸ்காரங்களை முடித்து வந்து அமர்ந்தான் வாலி. வெளியே சுக்ரீவனின் அறைகூவல் கேட்கிறது. வாலியின் தம்பிதான் அவன். போருக்கு வரும்படி ஏன் அறைகூவல் விடுக்கிறான் அவன். என்னாயிற்று இன்று அவனுக்கு. வாலி உணவை விடுத்துத் தன் கதையை எடுத்துக்கொண்டு கிளம்புகிறான்.


அவனைத் தடுக்கிறாள் தாரை “ ஐயனே , இன்று நீர் வெளியே உம் சகோதரருடன் பொருதப் போக வேண்டாம். விட்டு விடுங்கள் ”
“இரு, தாரை.  இத்தனை நாளாய் இல்லாமல் சுக்ரீனுக்கு எப்படித் துணிச்சல் வந்தது எனப் பார்க்கவேண்டும் “
”யாரோ ராமன் என்பவரின் துணையோடு அவர் வந்திருக்கிறாராம், அதனால்தான் போரிட அறைகூவல் விடுக்கிறார் “
“என்னது ராமனா.. தாரை அவன் நீதி நெறி வழுவாதவன். தயரதன் மகன். தந்தையின் ஆணைக்காக மாற்றாந்தாய் மகனுக்கு ஆட்சியை உவந்தளித்துவிட்டுக் கானகம் புகுந்தவன். அவனுக்கும் எனக்கும் பகையில்லை. தன் தம்பிக்கே விட்டுக் கொடுத்தவன் என்னுடன் ஏன் பொருதப் போகிறான் ?”
“நீங்கள் சுக்ரீவனின் மனைவி ருமையைக் கவர்ந்து கொண்டீர்கள் என்று அவருக்குக் கோபம் “
“மாயா அரக்கனைக் கொல்ல நான் ஒரு மலைக் குகைக்குள் சென்றபோது நான் தோற்றேன், அழிந்தேன் என நினைத்து என்னைக் குகைக்குள்ளே வைத்துக் குன்றுகளால் மூடி விட்டு வந்தவனல்லவா சுக்ரீவன். என் அரசாட்சியை எடுத்துக்கொண்டு என்னை ஏமாற்றியவனல்லவா அவன். “
”உங்கள் தோள்வலிமை பற்றி எனக்குத் தெரியும்.. இருந்தும் ஏதோ ஒரு உள்ளுணர்வு உங்களைப் போகவிட வேண்டாம் என்கிறது. “
“தாரை. வீரனான வாலியின் மனைவி நீ. மந்தாரமலையை மத்தாக, வாசுகியைக் கயிறாகக் கொண்டு பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்து ஓய்ந்தபோது நான் சென்றுதானே கடைந்து அமுதம் பெற்றுத் தந்தேன். சுக்ரீவனின் இந்த வெறுங்கூச்சலுக்கெல்லாம் அஞ்சாதே “
வெளியே சுக்ரீவனின் ஹூங்காரமும் அறைகூவலும் அதிகரிக்கிறது.
வாலி தன் கதையை இறுக்கப் பற்றுகிறான். தாரை அச்சப்படுகிறாள்.  
ரிஷியமுக பர்வதத்தில் சுக்ரீவனும் அனுமனும் ராமனுடனும் இலக்குவனுடனும் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். சுக்ரீவனின் மனைவியை அபகரித்துக் கொண்டான் வாலி என்ற சொல் கேட்டு இராமன் வருந்துகிறான். வாலியைக் கொன்று உன் மனைவியையும் அரசாட்சியையும் திருப்பிக் கொடுப்பேன் என்கிறான்.
மானிடர்களாகிய அவர்களால் அச்செயலை நிறைவேற்ற முடியுமா எனத் திகைக்கிறான் சுக்ரீவன். அங்கே இருந்த ஏழு மராமரங்களையும் தன் ஒரே அம்பினால் துளைத்துக் காட்டுகிறான் இராமன்.
”ஒரு ரகசியம் உள்ளது என் சகோதரனுடன் ஒருவர் நேருக்கு நேர் பொருதால் அவரது வலிமையில் பாதி அவனுக்குப் போய்விடும். அதனால் அவனை நீங்கள் நேரிடையாத் தாக்கினால் கொல்ல முடியாது. ” என்கிறான் சுக்ரீவன்.

“சரி. ஒரு உபாயம் செய்வோம். நீ போருக்கு அழை. நான் மறைந்திருந்து தாக்குகிறேன்”
சுக்ரீவனின் அறைகூவல் அதிகரித்ததும் வாலி வெளியே வருகிறான். ”என்னடா பிழைத்துப் போ என விட்டால் என்னையே கொல்ல வருகிறாயா “ எனத் தன் கதையால் சுக்ரீவனைத் தாக்குகிறான். இரண்டு கடல்கள் ஒன்றின் மேல் ஒன்று மோதுவது போலத் தாக்கிக் கொள்ளுகிறார்கள். சுக்ரீவனின் வலிமையில் பாதி வேறு அவனுக்குப் போய்விட சுக்ரீவன் பலவீனமாகிறான்.
‘எங்கே இந்த இராமன் .. வில்லை எய்யாமல் என்ன செய்கிறான் “ எனத் தப்பித்து மறைவிடம் நோக்கி ஓடி வருகிறான்.
“இராமா என்ன செய்கிறாய். அங்கே என்னை வாலி வதைத்துத் தள்ளுகிறான்.”
“சுக்ரீவா. நீங்கள் இருவரும் ஒரே மாதிரி இருப்பதால் எனக்கு யார் வாலி, யார் சுக்ரீவன் எனத் தெரியவில்லை. அதனால் கழுத்தில் மாலை ஏதும் அணிந்து செல். எனக்கு அடையாளம் தெரியாததால் நான் அம்பை எய்யவில்லை.”
“வாடா.. வாடா வெளியே..  கோழையைப் போல் ஓடி எங்கேயடா ஒளிந்து கொண்டாய் சுக்ரீவா “ என்று கதையைத் தரையில் தட்டிச் சப்தமெழுப்புகிறான் வாலி.

காட்டுப்பூக்களைக் கொடியோடு இழுத்து மாலை போல் அணிந்து திரும்ப சுக்ரீவன் சண்டையிட ஓட, “ என்னடா இன்னுமா உனக்கு நப்பாசை. என்னைக் கொன்றுவிடலாம் என்று வந்திருக்கிறாயா.. இதோ வாங்கிக் கொள் “ எனச் சுக்ரீவனைப் பிடித்துத் தலைமேல் சுழற்றி மண்ணில் எறியப் போகும்போது இராமனின் பாணம் வாலியின் மார்பில் பாய்கிறது.
ஒரு கணம் அதிர்ந்த அவன் நிலை குலைந்து நின்று தன் மார்பில் பாய்ந்த அம்பை வலியோடு பிடுங்கிப் பார்க்கிறான். பாணத்தில் ராமனின் பேர் எழுதி இருக்கிறது. “இராமா நீயா என் மேல் அம்பெய்தாய்.. நீதி நெறி தவறாதவன் என்றெல்லாம் எண்ணியிருந்தேனே.. நீயா இப்படிச் செய்தாய் .. இல்லறத்தைத் துறந்ததோடு வில்லறத்தையும் துறந்தாயா ?” என்று அதிர்ச்சியோடு கேட்டான்.
ராமன் மறைவிடத்திலிருந்து வெளியே வர “ உன் மனைவியைக் கவர்ந்தவனோ இராவணன். அரக்கர் தவறிழைக்க என்னை ஏன் கொன்றாய் இராமா. சீதையை மீட்க சுக்ரீவன் உதவுவான் என்றுதானே என்னை கொன்றாய். என் பக்க நியாயத்தைக் கேட்டாயா. நீ என்னிடம் கேட்டிருந்தால் நானே இராவணனை அழித்து சீதையை உனக்கு மீட்டுக் கொடுத்திருப்பேனே
”தக்கன எது தகாதன எது என நீ உணராதததே காரணம் சுக்ரீவா”.
”அப்படி என்ன தகாதன செய்தேன் இராமா”
“தம்பியின் மனைவியான ருமையைக் கவர்ந்து கொண்டது. “.
”எங்கள் வானர குலத்தில் அது சகஜம் இராமா “.
”வேதம் பயின்றிருக்கிறாய். மனு தர்மத்தின் படி அரசாட்சி செய்திருக்கிறாய். அப்படிப்பட்ட நீ விலங்கு இனத்தவன் அல்ல. மனிதருக்குச் சமமானவன்”.
”இராவணன் முறையற்ற செயல் செய்தான் என்று கருதும் நீ என்னை மறைந்திருந்து அம்பெய்து கொன்றது ஏன் ? ”
இதற்கு இலக்குவன் பதில் சொன்னான் “ உனக்கு முன்பே சுக்ரீவன் இராமனிடம் சரணடைந்து விட்டதால் முறை தவறி நடந்த உன்னைக் கொல்வதாக இராமனும் வாக்களித்து விட்டான். உன்னோடு நேரில் போரிட்டால் நீயும் இராமனை அறிந்து அடைக்கலம் வேண்டினால் என் செய்வது என்றுதான் இராமன் மறைந்திருந்து போரிட்டான் “
ஒருவாறாகத் தெளிந்த வாலி தன் தவறுணர்ந்து மனமாற்றம் அடைந்து தன் தீயன பொறுக்க வேண்டி தன் தம்பியைக் காக்க வேண்டினான். இவ்வாறு வலிமை மிக்க வாலி தன் முடிவுக் காலத்தில் தவறுணர்ந்து திருந்தியது சிறப்பானதுதானே குழந்தைகளே. 

5 கருத்துகள்:

  1. என்றுமே விவாதத்துக்குரிய விஷயம்.   அதையும் அந்த காவியத்தை ப்படைத்தவரே உருவாக்கியிருக்கிறார்!

    பதிலளிநீக்கு
  2. சிறார்களுக்கு கதை என்றால் அவர்களையும் சிந்திக்கச் செய்யவேண்டும்

    பதிலளிநீக்கு
  3. உண்மைதான் ஸ்ரீராம்.!

    ஆமாம் பாலா சார். ஆனா நாமளே முடிவையும் சொல்ல வேண்டி இருக்கே ஹ்ம்ம்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  4. நல்ல பகிர்வு. விவாதத்திற்குரிய கதையும் கூட.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)