செவ்வாய், 26 நவம்பர், 2019

மீனாக்ஷி முதியோர் இல்லத்தில் ஒரு நாள்.

காரைக்குடியில் வனா யினா வீதியில் ( ஆலங்குடியார் வீதிக்குப் பாரலல், சந்தைப்பேட்டைக்குச் செல்லும் வழி/சந்தைப்பேட்டைக்கு அருகில் ) இருக்கிறது. மீனாக்ஷி முதியோர் இல்லம். இதை காந்திமதி அறக்கட்டளையைச் சேர்ந்த திரு கணேசனும் அவரது மனைவி திருமதி தனலெக்ஷ்மியும் நடத்தி வருகிறார்கள்.

இங்கே முதியவர்கள் மாதம் ரூபாய் 5,000/- வீதம் பணம் கொடுத்துத் தங்குகிறார்கள். இவர்களை திரு. கணேசன் அவர்களும் அவரது மனைவி திருமதி. தனலெக்ஷ்மி அவர்களும் தொண்டுள்ளத்துடன் கவனித்துப் பராமரித்து வருகிறார்கள். மூன்று வேளையும் சுடச்சுட உணவளித்துத் தங்கும் வசதியுடன் கூடியது இந்த இல்லம் ( தண்ணீர், மின்சாரம், படுக்கை, கழிவறை வசதிகள் உள்ளன )


நாள் கிழமைகளில் நம்மைப் போன்ற சிலர் உணவளிக்க விரும்பினால் அதையும் ஏற்றுக் கொள்கிறார்கள். இங்கே கிட்டத்தட்டப் பதினைந்து முதியவர்கள் தங்கி இருக்கிறார்கள்.


மதியம் ஒருவேளை உணவளிக்க ரூபாய் 2000/- கட்ட வேண்டும். முதியோர்களுக்கு ஏற்றபடி சூடாக இருந்தது உணவு. மின்சாரம் இல்லாததால் மின்விசிறி இயங்கவில்லை. அதனால் வேர்வையோடு அமர்ந்திருந்தவர்களுக்கு தனலெக்ஷ்மி விசிறி எடுத்து வீச ஆரம்பித்தது கண்டு வியந்து நானும் வாங்கி விசிறினேன்.


சௌசௌ கூட்டு, இங்கிலீஷ் காய்கறி பிரட்டல், பரங்கிக்காய் புளிக்கறி, கத்திரிக்காய் சாம்பார், ரசம், மோர், அப்பளம், சேமியாப் பாயாசம் என இருந்தது சாப்பாடு. பெரியவர்களுக்காக எல்லாவற்றையும் மிக மென்மையாக வேகவைத்து இருந்தார்கள்.

பொலபொலவெனவும் மிருதுவாகவும் இருந்தது பொன்னி அரிசிச் சோறு.  வேண்டும் என்பதைக் கேட்டுப் பரிமாறியும் இலையில் இருப்பதைக்  கெடுத்துவிடாமலும் உண்ணவைத்துக் கொண்டிருந்தார்கள் அங்கே ஊழியம் செய்த பெண்ணும் ஒரு ஆணும். அந்தப் பெண் மிக அருமையாக சமைத்திருந்தார்.


வாழை இலை போட்டு அனைவருக்கும் பரிமாறி அவரும் விசிறிக் கொண்டிருந்தார். சமையல் சாப்பாட்டுக் கூடத்தின் எதிரிலேயே இவர்கள் படுத்துறங்கும் இடமும் இருப்பதால் அங்கே படுக்கைகள் போடப்பட்டிருந்தன.

ஓரிருவர் எழுந்து வர இயலாததால் அவர்கள் இருக்குமிடத்துக்கே தட்டில் உணவைப் போட்டு இந்த ஆண் எடுத்துச் சென்று பரிமாறுகிறார்.


எல்லாக் கட்டிலுக்கு அருகிலும் ஒரு சிறிய மர அலமாரி இருக்கிறது. அதில் தங்கள் முக்கியமான பொருட்களை வைத்துக் கொள்கிறார்கள்.


வயதானவர்கள் என்பதால் உணவில் குறைகள் இருக்கலாம். அடிக்கடி ஏதாவது ஒன்றுக்காக இவர்கள் அழைக்கவும் செய்வார்கள். அனைத்தையும் தாய்மனம் கொண்டு கவனித்து நிவர்த்தி செய்து வரும் தனலெக்ஷ்மியின் கனிவு போற்றுதலுக்குரியது.

வயதானாலும் நிம்மதியாக வாழ இடம் கிடைத்ததே என்று இவர்களில் பலர் அமைதி காத்தும் வாழ்ந்து வருகிறார்கள்.

மிகப் பெரும் இவ்வீட்டைஒருவர் மாதம் பத்தாயிரம் ரூபாய் வாடகைக்காகக் கொடுத்து உள்ளார். கரண்ட் போன்றவைக்காக மாதம் ரூபாய் பத்தாயிரம் செலவாவதாக கணேசன் கூறினார். பெரியவர்கள் மாதந்தோறும் அளிக்கும் தொகையோடு ஸ்பான்சர்கள் இருப்பதால் சமாளிக்க முடிகிறது என்றும் சொன்னார்.


அங்கே எனது தந்தைவழியில் உறவினரான பெரியம்மா ஒருவரைச் சந்தித்தேன். அவர் “ இன்னைக்கு நீங்க ஸ்பான்சரா “ எனக் கேட்டது பார்த்து ஆச்சர்யமாக இருந்தது :) அவரை விழுந்து வணங்கி ஆசிபெற்றோம்.

ஏனெனில் நவம்பர் 2 ஆம் தேதி என் கணவரின் பிறந்தநாள் என்பதால் இங்கே சென்று உணவு வழங்கச் சென்றிருந்த  நாங்களும் உண்டு உசாவி மகிழ்ந்து வந்தோம்.

இவர்களைப் பற்றிய விவரங்களையும் தகவல்களையும் கொடுத்து வழிநடத்திய எனது அன்புத் தந்தைக்கு நன்றி.

வளர்க தனலெக்ஷ்மி கணேசன் இவர்களின் தொண்டு. வாழ்க வளமுடன் அனைவரும். 

4 கருத்துகள்:

  1. வளர்க தனலெக்ஷ்மி கணேசன் இவர்களின் தொண்டு.//

    உண்மையிலேயே இது சிறந்த தொண்டு தான் அவர்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. முதியவர்களின் தேவை உணவோடுஅடங்கி விடுமா

    பதிலளிநீக்கு
  3. நன்றி டி பி ஆர் ஜோசப் சார்

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    நன்றி பாலா சார். உண்மைதான் ஏதோ நம்மால் முடிந்த பணியைச் செய்ய விழைகின்றேன்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)