வியாழன், 28 நவம்பர், 2019

லோஜா டி இலான்ஸி சிற்பங்கள் - ரோம்.

ஃப்ளாரன்ஸில் நெப்டியூன் ஃபவுண்டனுக்கு அருகில் பல்லாஸோ வெக்கியோ ( டவுன் ஹால் ) வுக்கு எதிரில் இருக்கிறது இந்த ஸ்கொயர், இதற்குப் பியாஸா டெல்லா சின்யோரா என்று பெயர். அதன் அருகில் சிற்பங்கள் நிறைந்த இந்தக்கூடத்துக்கு லோஜா டி இலான்ஸி என்று பெயர்.

ஃப்ளாரன்ஸ் கதீட்ரலில் இருந்து இங்கே வந்து அதன் பின்  உஃபிஸி கேலரிக்கும் வஸாரி கேரிடாருக்கும் இங்கிருந்தான் சென்றோம். இங்கே இருக்கும் சிற்பத் தொகுப்பைக் காணக் கண்கோடி வேண்டும். இதன் ஒவ்வொன்றின் பின்னணியிலும் நெடிய சரித்திரக் கதைகள் பொதிந்துள்ளன.

சிதறிக் கிடக்கும் ரோமின் ஒவ்வொரு கல்லிலும் சரித்திரம் கொட்டிக் கிடப்பதாக எங்கள் டூர் மேனேஜர் ராகவனும், கைட் மைக்கேலும் சொன்னார்கள்.

கைட் மைக்கேல் சொன்னவற்றில் அனைத்தையும் அப்போது உள்வாங்க முடியவில்லை. ஆனால் இந்தச் சிற்பங்களைத் திரும்பப் பார்க்கும்போது அவற்றின் வீரியமும் வலிமையும்  தெரிகிறது.


பல்லாஸோ வெக்கியோ என்ற இந்த டவுன்ஹால் பதிமூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாம். ! ”வீரர்களை வரிசைப்படுத்தும் வெளிவிதான நிலை ”என்பதுதான் லோஜா டி இலான்ஸி என்பதன் அர்த்தமாக இருக்கக்கூடும்.


இங்கே தெரியும் வெண்கலச் சிற்பம் மெடுஸாவின் தலையைக் கொய்து நிற்கும் பெர்சியஸின் சிற்பம். இதனை வடிவமைத்தவர் பென்வனுட்டோ செலினி என்ற கலைஞர்.


இது டூரிஸ்ட் ஸ்பாட் மட்டுமல்ல ஃப்ளாரன்ஸ் நகரின் உள்ளூர்ப் பொதுமக்கள் கூடும் இடமாகவும் இருக்கிறது. மூன்று பெரிய ஆர்ச்சுகள் கொண்ட கலைக்கூடம் இது. இதன் தூண்களில் புராதன க்ரேக்கம் மற்றும் ரோமானிய கொரிந்தியர் வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. கொத்துக் கொத்தாக அமைந்த சிற்பத் தொகுப்புதான் அது.

சிற்பக்கலை , ஓவியம் ஆகியவற்றின் மறுமலர்ச்சிக் காலமான 14 ஆம் நூற்றாண்டில் இவ்வாறான மாபெரும் சிற்பங்களை அமைக்கும் பணி தொடங்கியது. இந்தக் கூடத்தின் நடுப்பகுதியில் மெர்ஸி லயன்ஸ் என்னும் இரு சிங்கங்கள் இருபுறத் தூண்களிலும் கம்பீரமான கர்ஜனையோடு காட்சி அளிக்கின்றன.  இதனை வடிவமைத்தவர் ஃபெமினியோ வாக்கா என்ற சிற்பக் கலைஞர். உள் தூண்களிலும் குட்டிச் சிங்கங்கள் உண்டு.

இது ஜியாம்போலாக்னாவின் ”தி ரேப் ஆஃப் தி சபீன் ( இனம் )  உமன் “ . மிகச் சீரற்ற மாபெரும் மார்பிளைக் கொண்டு இவர் இதை அழகாக வடிவமைத்துள்ளது அதிசயமே. அதேகாட்சியை இவர் வெண்கலத்திலும் வடிமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


கீழே உள்ள சிற்பம் ”பேட்ரோக்ளஸின் உடலைத் தாங்கி நிற்கும் மெனலஸ்”. இதை வடிவமைத்தவர்   & இதைத் தகவமைத்தவர்கள் பியட்ரோ டாக்கா & ஸ்டிஃபானோ ரிக்கி .


ஹெர்குலிஸ் செண்டார் நெஸஸைத் தோற்கடிக்கும் சிற்பம். இதை உருவாக்கியவர் ஃபியட்ரோ ஃப்ரான்காவில்லா.

இந்தத் தொகுதியின் பெயர் ”ரேப் ஆஃப் பாலிஸீனா”. இதை 1865 இல் உருவாக்கியவர் பியோ ஃபெடி.


சிற்ப வேலைப்பாடு பொலிந்த இந்த பீடத்தின் கீழ் குவிமாடங்களுக்குள் ஜூபிடர், மெரிகுரியஸ், மினர்வா, டனே ( பெர்ஸியஸின் தாய் ) ஆகியோரும் மினி சிற்பங்களாகக் காட்சி அளிக்கின்றனர். இவர்களையும் சமைத்தவர் பென்வனுட்டோ செலினிதான்.



இவர் வெண்கலச் சிலைகள் செய்வதில் ஸ்பெஷலிஸ்ட் என்றாலும் இவர் உருவாக்கிய மெழுகுச் சிற்பம் ( மூலம் ) மெடிசி குடும்பத்தாரால் அங்கீகரிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இதை வெண்கலத்தில் செய்யும்போது அவர் அடைந்த சோதனைகள் அளவிடமுடியாதது.


இந்த லோஜா டி இலான்ஸியின் பின்புறம் ஐந்து மாந்தர்களின் சிலை உள்ளது.

இவர்கள் அனைவரும் சாத்வீகிகள். விவேகானந்தர், புத்தர் ரேஞ்சுக்கு அமைதியாக நிற்கிறார்கள்.

இவர்களில் மூவரை மட்டிடியா, மர்ஸியானா, அக்ரிபினா மைனர் என்று அடையாளம் காட்டுகிறார்கள். இவர்களில் சிலர் சபீன் இனப் பெண்ணாகவும் ஒருவர் ட்ராஜன், ஹார்டியன் காலத்தைச் சேர்ந்த டுஸ்னெல்டா எனப்படும் காட்டுமிராண்டிக் கைதியாகவும் சுட்டப்படுகிறார்.


1541 இல் இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு கலையின் மறுமலர்ச்சி மற்றும் சுதந்திரத்தைப் பறைசாற்ற இங்கே நிறுவப்பட்டன.


1584 வரை மெடிஸி வில்லாவில் இருந்த இவை  ப்யட்ரோ லியோபோல்டோ என்ற கலைஞரால் 1789 இல் இங்கே கொணரப்பட்டுப் போற்றுதலுடன் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.


ஆனாலும் இச்சிலைகளில் என்ன ஒரு கோபம், என்ன ஒரு கொடூரம்.

மறுமலர்ச்சி என்ற பெயரில் மாபெரும் வன்முறை !!!


தன்னுடைய செயலைக் கண்டு தானே அதிர்ச்சியுற்றவனாக அமைக்கப்பட்டுள்ளது மெடுஸாவின் சிரசைக் கொய்து நிற்கும் பெர்ஸியஸின் சிற்பம்.

கலை உண்மையைப் பேசவேண்டும்தான். மறுமலர்ச்சி என்ற பெயரில் ( தமிழ் சினிமாவின் வெட்டுக் குத்துப் போல ) இங்கே கொடுமையைப் பேசி இருக்கிறது. !

3 கருத்துகள்:

  1. தன்னுடைய செயலைக் கண்டு தானே அதிர்ச்சியுற்றவனாக அமைக்கப்பட்டுள்ளது மெடுஸாவின் சிரசைக் கொய்து நிற்கும் பெர்ஸியஸின் சிற்பம்.//

    அருமையான விளக்கம்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி டிடி சகோ

    ஆம் ஜோசப் சார். சிலை அப்படித்தானிருந்தது :) நன்றி

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)