புதன், 20 நவம்பர், 2019

தீச்செயலால் அழிந்த தாடகை. தினமலர் சிறுவர்மலர் - 41.

தீச்செயலால் அழிந்த தாடகை
அழகானவர்களாக வலிமை உள்ளவர்களாகப் பிறந்தும் சிலர் தீச்செயல்கள் செய்வதால் அழிந்து படுகிறார்கள். அவர்களுக்கு உதாரணமாகத் தாடகை என்ற இயக்கர்குலப் பெண்ணைச் சொல்லலாம். தாடகை யார், அவளை ஏன் அழித்தார்கள், அவளை அழித்தவர்கள் யார் எனப் பார்க்கலாம் வாருங்கள் குழந்தைகளே.
அரக்கர் குலத்திலும் மிகவும் நற்பண்புகள் கொண்டவன் சுகேது. இவனுக்குக் குழந்தைப்பேறு இல்லாமையால் பிரம்மனைக் குறித்துத் தவம் செய்தான். பல்லாண்டுகளாய் இவன் செய்த கடுந்தவத்தால் மகிழ்ந்த பிரம்மா மயில்போன்ற அழகும் மதயானையை ஒத்த வலிமையும் உள்ள மகள் பிறப்பாள் என்று வரம் அளிக்கிறார். அதன்படிப் பிறந்தவள்தான் தாடகை.
இவள் திருமணப் பருவம் எய்தியதும் இவளது தந்தை சுகேது இவலை சுந்தன் என்ற இயக்கனுக்கு மணம் புரிந்துவைத்தான். இவர்களுக்கு மாரீசன், சுவாகு என்ற இருமகன்கள் பிறந்தனர்.
எல்லாம் சுமுகமாகவே போய்க்கொண்டிருந்தது. ஆனால் ஒரு முறை சுந்தன் அகத்தியரின் ஆசிரமத்துக்கு வந்து அங்கேயிருந்த மரங்களை எல்லாம் பிடுங்கி எறிந்தான். அகத்தியர் கோபம் கொண்டு அவனை நோக்க அவன் சாம்பலானான். இதைப் பார்த்து வெகுண்டாள் தாடகை

ஆரம்பமாயிற்று தாடகையின் அட்டகாசம். தன் மகன்கள் மாரீசன், சுவாகு ஆகியோருடன் சேர்ந்து சென்று அகத்தியரின் ஆசிரமத்தை நாசமாக்கினாள். இதைக்கண்ட அகத்தியர் கோபம் கொண்டார். இயக்கர் குலத்தைச் சேர்ந்தவர்களானாலும் பார்க்க மானுடர் போலவேயிருந்த தாடகை,மாரீசன், சுவாகுவைப் பார்த்து அவர்கள் மூவரும் கொடிய அரக்கர் தோற்றம் அடையும்படிச் சபித்தார்.
மாரீசனும், சுவாகுவும் இலங்கைக்குச் சென்று இராவணனின் பாட்டன் சுமாலி என்பவனிடம் சென்று அடைக்கலமாயினர். தனித்து விடப்பட்டாள் தாடகை. அதனாலேயே அவள் கோபம் எல்லை மீறியது. விசுவாமித்திர முனிவர் செய்துவந்த யாகங்கள், ஹோமங்கள் அவள் கோபத்தை இன்னும் தூண்டியது. எனவே அதற்கு இடையூறு செய்யும் வண்ணம் கானகத்தை அழித்து வந்தாள்.
வயல்கள் சார்ந்த மருதநிலத்தை அழித்ததோடு மட்டுமல்ல அங்கே இருந்தவர்களைக் கொன்று புசிக்கவும் செய்தாள். இவள் கொட்டத்தை அடக்க விசுவாமித்திரர் இராம லெக்ஷ்மணர்களை தயரத சக்கரவர்த்தியின் அனுமதி பெற்று அழைத்து வந்தார்.
விசுவாமித்திரர் இருக்கும் ஆரண்யத்தில் நுழைந்ததும் அதன் அழிவுநிலையைப் பார்த்து ராமனும் லெக்ஷ்மணனும் அதிர்ச்சி அடைந்தனர். ”அழகான ஆரண்யத்தைச் சிதைத்தவர் யார் ? என வினவினர்.
அவர்களிடம் விசுவாமித்திரர் தாடகையைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே தோன்றினாள், கருத்தநிறமும், தடித்த உருவமும் கோரைப்பற்களும் கொண்ட தாடகை. அவள் வாய் ஒரு குகை போல் இருந்தது. கண்கள் செக்கச்செவேலென இருந்தன. ஆயிரம்மத யானைகள் சேர்ந்தாற்போல இருந்தது அவளது செய்கைகள். மலைகள் அதிரும் வண்ணம் நடந்து வந்தாள் அத்தாடகை. இடியைப் போன்ற தனது குரலில் உரத்து முழங்கினாள். கானகத்தின் பறவைகள் அவள் குரல் கேட்டு அலறிப் பறந்தன.
“இந்தக் கானகத்தில் உண்ணத் தகுந்ததெல்லாம் உண்டுவிட்டேன். அழிக்க முடிந்ததெல்லாம் அழித்துவிட்டேன். இனி என்ன செய்வது என்று எண்ணும் நேரம் வந்து சேர்ந்தீர்கள் மானுடப்பதர்களே. உண்ண ஒன்றும் இல்லை. பசிக்கிறது. ஆஹா ஊன் ஊன் ஊன் ”என்று மூவரையும் பார்த்து உரக்கக் கூக்குரலிட்டாள்.
விசுவாமித்திரர் உடனே இராம லெக்ஷ்மணர்களிடம் அவளைக் காட்டி, ‘இந்தக் கானகத்தின் நிம்மதியை அழித்தவள் இவள்தான். இவள் மேல் அம்பு எய்து கொல்லுங்கள். எங்கள் யாக சாலையைப் பாதுகாத்து வாருங்கள். அதற்காகவே உங்களை அழைத்து வந்தேன் “ என்றார்.
என்னதான் அரக்கி என்றாலும் எதிரே நிற்பவள் பெண். அவளிடம் ஆயுதம் ஏதுமில்லை. வெறும் கூச்சல் போடுபவளை அம்பால் அடிப்பதா என்று தயங்கினார்கள் ராமனும் லெக்ஷ்மணனும்.
விசுவாமித்திரர் தனது வேள்விச்சாலையைக் காட்டினார். “ பாருங்கள் பாதியிலேயே அவிந்த வேள்விச்சாலையைப் பாருங்கள். எங்கள் வேள்விகளுக்கு இடையூறு செய்து எல்லாவற்றையும் அழித்து முனிபுங்கவர்களை விழுங்கியவள் இவள் “
அப்போதும் இராமன் தயங்க “இராமா பெண் என்று பாராதே. அவள் செய்த தவறுகளைப் பார். இவளை விட்டால் இங்கே மிச்சமிருப்பவர்கள் யாரும் உயிர்பிழைக்க இயலாது. உடனே உன் அம்பைச் செலுத்து. இவளது கதையை முடி. இல்லாவிட்டால் இவள் நம்மையும் உண்டுவிடுவாள். இந்திரனையே ஓட ஓட விரட்டியவள். இப்போது நாம் உயிர்தப்ப வேண்டுமெனில் அரசிளங்குமரனாக உன் கடமையைச் செய் “
அப்போதுதான் அவளை நன்றாகக் கவனித்தான் ராமன். அவள் கையில் ஒரு திரிசூலம் முளைத்திருந்தது. அதைக் கொண்டு அவள் மூவரையும் தாக்க முற்பட்டாள். மேலும் மூவரையும் தன் கரங்களால் பிடித்து உண்ணத் தலைப்பட்டாள். பாறைகளை எடுத்து வீசினாள்.
அவளது கைகள் காற்றில் மூவரையும் நோக்கி அங்கும் இங்கும் அலைந்தன. மூவரும் ஒரு பெரிய விருட்சத்தின் மறைவில் பாதுகாப்பாக நின்று கொண்டனர். மலை போன்ற அரக்கிக்கு அந்த விருட்சம் ஒருபுல்லைப் போலத் தோன்றியது. அதையும் அவள் பெயர்த்தெடுத்து வீசினாள்.
அவளை அழிக்கவேண்டியது தன் விதி என்றுணர்ந்த ராமன் வேறு வழியின்றித் தாடகையின் மேல் அம்புகளைச் செலுத்தினான். அண்ணலைப் பார்த்துத் தம்பியான இலக்குவனும் அவள்மேல் அம்புகளை எய்தான். இருவரின் அம்புகளும் துளைத்ததும் மலை உருண்டு விழுந்ததுபோல் கீழே விழுந்தாள் தாடகை.
இராமன் மன்னிக்கத் தயாராயிருந்தும் அவளைக் கொல்ல விரும்பாதிருந்தும் தனது தீச்செயல்களாலேயே அழிவைத் தேடிக்கொண்டாள் தாடகை. 

டிஸ்கி :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 8 .11. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர்கள் அஷோக் &  ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.

4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)