ஞாயிறு, 20 அக்டோபர், 2019

சூரியப்ரபை சந்திரப்ரபை.

சூரியப்ரபை சந்திரப்ரபை.

விவசாயம் பொய்த்துக் கொண்டிருந்தது. தண்ணீர் வரத்து இல்லாமல் கொள்ளிடம் கருவாட்டு மணலாய்ச் சுருண்டிருந்தது. கால்வாயும் வாய்க்காலும் வெள்ளமாய்ப் பொங்கி மடைதிறந்து முப்போகம் விளைந்த பூமியில் இன்று போர் போட்டு ஒரு போக விவசாயம். வந்தால் வெள்ளமும் புயலும் வந்து கெடுக்கிறது. இல்லாவிட்டால் பாயிவரப்பான்கள் அணையைத் திறக்க மாட்டேன் என்கிறான்கள். ”கோபாலா காப்பாத்து.” கவலையோடு பட்டாலையில் குறிச்சியில் சாய்ந்திருந்தார்கள் ஆவுடையப்பன் செட்டியார்.
”அப்பச்சி” என்று அழைத்தாள் லெச்சுமி. மாசமான வயிறு சொலிந்து இருந்தது. லேசான சோகையோடு கால் மாற்றிக் கால் வைத்தபடி நின்றிருந்தாள். வலி பின்னி எடுத்தது. இது சூட்டு வலியோ.
”சொல்லாத்தா. இடுப்பை நகத்துதா. இந்தா தங்கண்ணன் கிட்ட காரை எடுக்கச் சொல்லி இருக்கேன் சுகுமாரம்மாவுக்கு ஃபோன் பண்ணி இருக்கேன். எப்ப வேணாலும் வாங்கன்னு இருக்காக. உங்க ஆத்தா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.”
”அப்பச்சி நீங்கதான் எனக்குத் தாய் தகப்பன்.”கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் லெச்சுமி. கண் கலங்கியது இருவருக்கும். 
”நீ கவலைப்படாதாத்தா. அக்கினியாத்தாளும் நரியங்குடிக் கருப்பரும் தொணையிருப்பாக.” கையைத் தட்டிக் கொடுத்துப் பிடித்துக் கொண்டார்கள் ஆவுடையப்பன் செட்டியார்.
’மூணும் பொண்ணாப் போச்சு. அடுத்தாவது மகளுக்கு மகனைக் கொடுங்கப்பா பழனி தெண்டாயுதபாணி. ராச கோபாலா ’
அப்பச்சி சாமி வீட்டைத் திறந்து உள்ளே போய் விபூதி எடுத்துவந்து பூசுவதற்கும் அடுத்தடுத்த வலி வெடுக் வெடுக்கென அவளைத் தாக்கவும் சுருண்டு கொண்டிருந்தாள் லெச்சுமி. ஆத்தாப்பொண்ணு கையைப் பிடித்து அமர்ந்திருந்த ஆவுடையப்பனுக்கு மகளைப் பார்த்து மனசு நிலை கொள்ளவில்லை.
தங்கண்ணன் காரை மனோ வேகம் வாயுவேகமாக ஓட்டிப் போய் செக்காலை சுகுமாரம்மா ஆஸ்பத்ரிக்குள் நுழையவும் லேபர் பெயின் எடுத்து அழகுக் குட்டியாய் விசுவநாதன் பிறந்துட்டான், பின்னே மன்னார்குடி ராசகோபாலன் சந்நிதியில் தொட்டிலில் கிடக்கும் சந்தான கோபால கிருஷ்ணனை வேண்டி ஆராட்டிச் சீராட்டிப் பெத்த பிள்ளையல்லவா.
கொடிச்சப்பரமும் கண்டபேரண்டப் பட்சியும் அவள் முகத்தில் மோதுகிறது. ஆறு வருடத்துக்கு முன்னே அந்தத் திருவிழாவில்தானே அவள் சமைந்ததும். அப்பச்சி சாலியமங்கலத்தில் வயல் வாங்கி விவசாயம் பார்த்து வந்தார்கள். வருஷம் பூராவும் பத்தாயம் எரம்ப நெல் இருக்கும். சொந்தக்காரவுகளுக்குக் கொடுக்கவும் வீட்டு உபயோகத்துக்கும் நெல்லை அவிச்சுக் காயப்போட்டு வேலைக்காரர்கள் அரைத்த மணியமாய் இருப்பார்கள்.
வருடா வருடம் மன்னார்குடியில் இருந்த கொழுந்தியாள் வீட்டுக்குத் திருவிழாப் பார்க்க வரண வரும்போது இவள் சமைந்தாள். ஹரித்ரா நதியின் பக்கமாகத்தான் அவளது சின்னத்தாள் ஜெயாச்சி வீடு. அங்கே கொடுக்கல் வாங்கல் லேவாதேவி செய்துகொண்டிருந்தார் அவளது சின்னத்தா ஆம்பிள்ளையான் அடைக்கப்பன். “நமக்கு வட்டிதான் பரம்பரைத் தொழில். உங்காச்சி ஆம்புள்ளையான் என்னவோ விவசாயம் பண்ணுறாக. இது சரிப்படுமா “ ”நீங்க சும்மா இருங்க” என்று அடக்குவாள் ஜெயா.
வருடாவருடம் லீவுக்கு சின்னத்தா வீட்டுக்கு வருபவள்தான் லெச்சுமி. மகள் சமைந்ததும் காரெடுத்துக் கொண்டுவந்து அப்பச்சி உடனே கோட்டையூருக்கு அழைத்துவந்து சடங்கு கழிக்கத் துடித்தார்கள். எங்கே முடிந்தது ?  சமைஞ்சபிள்ளை சடங்கு கழிக்காமல் போகப்பிடாது என்று அனைவரும் தடுக்க அந்தத் திருவிழா முழுக்க அவள் அங்கேதான் சின்னத்தா வீட்டில் இருந்தாள். தெப்பம் முடிந்துதான் கிளம்பினார்கள்.
பாமா ருக்மணியோடு ராஜகோபாலன் உறையும் தட்சிணத் துவாரகையாம் அந்த ஊர். அங்கேதான் சிங்கப்பூர் அலோர் ஸ்டாரில் இருக்கும் சின்னத்தாவின் நாத்தனார் மகன் சக்தியும் அதே வருடம் லீவுக்கு வந்திருந்தான். இவள் பதினாறு நாள் ஊர் விட்டு ஊர் போகக் கூடாது என்பதால் சாலியமங்கலம் கிராமத்திலிருந்து ஆவுடையப்பனின் நண்பர் கிருஷ்ணராஜ உடையார் சம்சாரம் தட்டுநிறையப் பழம் பூ இனிப்பு வகையறா என நிரப்பிக் கொண்டு பார்க்க வந்துவிட்டார்.
சமைஞ்ச குமரிக்கு தினம் தினம் அலங்காரம் செய்து அழகு பார்த்தார் . ஒரு நாள் தலையில் ஆயிரம்கால் சடை பின்னினார். சாட்டைமாதிரி கூந்தலில் நாகப் பின்னல் முன்னும் பின்னும் இழைந்து நாகம் நெட்டுயிர்த்ததுபோல் கோர்த்ததுப் பிடித்திருந்தன. பார்க்க அச்சமூட்டும் பருவ அழகுடன் லெச்சுமி பாற்கடல் தேவி போலிருந்தாள்.
லெச்சுமியும் சக்தியும் ஒருவரை ஒருவர் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பார்வைகளின் பரிமாற்றைத் தெரிந்து கொண்டார்களோ என்னவோ ஆவுடையப்பன் செட்டியார் அடுத்த வையாசிக்குள் மகளுக்குச் சக்தியுடன் மணமுடித்துவிட்டார்கள். வெளிநாட்டுப் படிப்பு. மைனர் சங்கிலி, மோட்டார் பைக், இதெல்லாம் போக தடதடவென அதிரடிப் பேச்சு. கிராமத்துக்காரர்கள்தான் ஆறவேயில்லை.
மாப்பிள்ளை அழைத்து வரும்போதும் “ஐயா மகளுக்கு இப்பிடி மாப்பிள்ளையா ? ராசாத்தி மாதிரிப் புள்ளைக்கு இப்பிடி மாப்பிள்ளையா “ என்று கிராமமே புலம்பித் தீர்த்தது. சக்தி நல்ல ஐயனார் கோயில் சிலைபோல ஈடுதாடான கறுப்பு நிறம். பார்வை வேறு தீர்க்கம். நல்ல நாட்டுக் காட்டான் மாதிரித் தோற்றமளித்தான்.
திருமணத்தில் ஆலாத்தி எடுக்கும் போதும் திருப்பூட்டும்போதும் வித்யாசம் தெரிந்தது பால்சிசுப் போன்ற லெச்சுமியும் தெனாவட்டான மைனர் போன்ற சக்தியும் பக்கம்பக்கமாய் நின்றபோது திகைத்துத்தான் போய்விட்டார் ஆவுடையப்பன் செட்டியார். 
திருமணத்துக்கு முன்பே மகளிடம் பலமுறை கேட்டு விட்டார்கள். ”ஆத்தா இல்லாத பிள்ளைன்னு கேக்காம விட்டுப்புட்டேன்னு நினைக்கப்புடாது. அப்புறம் வருத்தப்படப்புடாது. சொத்துப் பத்து ஏராளமா இருக்கு இங்கனயும் சீமையிலயும். பணத்துக்காகப் பண்ணல.உனக்குப் பிடிச்சிருக்குத்தானேத்தா. “
சந்திரப் பிரபையும் சூரியப் ப்ரபையும் வெட்கம் சாற்றி மாறி மாறி மகள் முகத்தில் பொலிவதைப் பார்த்தார்கள் ஆவுடையப்பன். வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுதான் மகள் சொன்னாள் ஒரே வார்த்தை ” மனசுக்குப் பிடிச்ச எதுவும் கண்ணுக்கு அழகாய்த்தானே இருக்கும் அப்பச்சி “ மகளின் பதிலில் அயர்ந்து போனார்கள் ஆவுடையப்பன். ’கோபாலா நீதான் தொணை எம்மகளுக்கு’.
பேரனைத் தூக்கிக் கொண்டு அடுத்த திருவிழாவுக்குப் போனார்கள் மன்னார்குடிக்கு. வெண்ணெய்த்தாழியில் வெண்ணெய் வாங்கிப் பயல் கையால் போடவேண்டுமென்பது வேண்டுதல். பல்லாக்கில் உலாவந்து கொண்டிருந்தான் கோபால கிருஷ்ணன். ஹோ ஹோய் எனப் பல்லக்குத் தூக்கிகள் ஆரவாரத்தோடு வந்துகொண்டிருந்தார்கள்.
ஜெயாவும் அடைக்கப்பனும் லெச்சுமியின் மகனைத் தூக்கிக் கையில் பூவரச இலையில் பொதித்த வெண்ணெய் உருண்டையை பல்லக்கோடு கூட ஓடி கிருஷ்ணன் கைப்பிடிக்குள் வைத்திருந்த குடத்தில் போட முயன்றார்கள். இரண்டு முறை தப்பி கிருஷ்ணனின் கோலிலும் அர்ச்சகரின் குடுமியிலும் விழுந்தது. மூன்றாம் முறை லெச்சுமி கையைப் பிடித்து எக்கிப் போட வெண்ணெய்க் குடத்தில் விழுந்தது.  
வுடையப்பன் செட்டியாரின் மனதுக்குள்ளே ஏகப்பட்ட விஷயங்கள் சுருட்டிக் கொண்டிருந்தன. மாப்பிள்ளை சக்தி  அலோர் ஸ்டாருக்கு சொத்து ஒன்றை விற்பது சம்பந்தமாகப் போயிருந்தான். அங்கே அவன் அடிக்கடி நைட் க்ளப் போவதும் மசாஜ் க்ளப் போவதும் திருஞானம் அண்ணன் மூலமாக அடிக்கடி தகவல் வந்தது.
“ சிகரெட் பாக்கு இது மாதிரி லாகிரி வஸ்துக்களை அந்த க்ளப்புல மேனாட்டு உடை அணிஞ்ச பொம்பளைக கழுத்துல ட்ரே மாதிரி மாட்டி அதுல வைச்சு விற்பாங்க. அத உங்க மாப்பிள்ளை எடுக்கும்போது அந்தப் பொம்பளக நெஞ்சுல தட்டி எடுத்துப் புகைப்பாக. நானே பார்த்திருக்கேன். “ சர்வமும் நடுங்கியது ஆவுடையப்பனுக்கு. இங்கே மகளுக்கு நான்கு குழந்தைகளாகி விட்டது. சீக்கிரம் வந்துவிட்டால் தேவலை. பால்போல் சிரித்துப் பிள்ளைகளோடு பிள்ளைகளாய் விளையாடும் மகளைப் பார்த்து வயிற்றைப் பிசைந்தது அவர்களுக்கு.
”தம்புக் குட்டி ஐயாவுக்கு வெண்ணெயை அப்பு”  என்று பிஞ்சுக் கையைப் பிடித்து அப்பச்சியின் கன்னத்தில் தடவினாள் லெச்சுமி. பேரனின் கையப் பிடித்து நெஞ்சோடு அணைத்துக் கொண்ட ஆவுடையப்பன் ’ அப்பச்சி என் காலம் முடிஞ்சு போச்சு, உங்கப்பச்சி என்ன செய்வாகன்னு தெரியல. நீ என்னைக்கும் ஆத்தாளுக்குத் தொணையா இருக்கணும். ” கையால் நெற்றியை ஆசீர்வதிப்பது போல் தட்டிச் சிரித்தான் பேரன் விசுவநாதன் .
யலில் போர் இறங்கிக் கொண்டிருந்தது. இன்னும் ஆழம் இன்னும் ஆழம். பூமாதேவியின் கருணையைச் சுரண்டிக் கொண்டிருக்கிறோமே என்று கவலையாய் இருந்தது ஆவுடையப்பனுக்கு. வட்டிக்கு வாங்கின பணம் முடிந்துவிட்டது. வட்டிக்கே வட்டிகட்ட வட்டிக்கு வாங்கிக் கொண்டிருந்தார்கள். கம்மாய்கள் போல வரண்டு காய்ந்து கிடந்தது நெற்குதிர்.
ம்மான் நான் உங்க நிலத்தை வாங்கிக்கலாம்னு இருக்கேன். பணம் தாரேன் ஆனா கையில தரமாட்டேன். அசலையும் வட்டியையும் அடைச்சிர்றேன். அதுவே அதிகமாகிப் போச்சு. நீங்க அங்கனயே கிராமத்துல இருங்க. ஆனா நமக்கு மேற்பார்வை பார்த்துக்குங்க. ” என்றான் சக்தி. சிங்கப்பூரில் பெரும்சொத்தொன்றை வித்து வழிபண்ணிக் கொண்டுவந்திருந்தான்.
திக் கென்று இருந்தது ஆவுடையப்பனுக்கு. என்னது நம்ம வயலையே நம்ம மாப்பிள்ளையானாலும் இன்னொருத்தருக்காக மேற்பார்வை பார்ப்பதா. கண்கள் இருண்டு வந்தது. மகள் லெச்சுமிக்குப் பொங்கிப் பொங்கி வந்தது. ஆனால் மாப்பிள்ளை யார் சொல்வதையும் கேக்கும் ரகமில்லை. ”புதுப்பணம் வந்திருக்குன்னு ஆடுறான் ” எனப் பங்காளிகள் கூடக் குறை சொல்லிக் கொண்டிருந்தார்கள். ” மாமனார்தான் வெளங்காம விவசாயம் பார்க்குறார்னா மருமகேனும் விருதாப் பயலா இருக்கானே. “ என்று புறம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
”இல்லை மாப்பிள்ளை நான் கோட்டையூருக்கே போகலாம்னு இருக்கேன்’. அப்ப சரி என்பது போல் மாப்பிள்ளை இருக்க கோட்டையூருக்கே திரும்பி வந்தார்கள் ஆவுடையப்பன். மனசு சரியில்லை என்றவுடன் உடலும் சுருங்கத் தொடங்கியது. பிள்ளைகுட்டிக்காரி லெச்சுமிக்கு சாலியமங்கலத்தில் இருந்து கோட்டையூர் வெகு தொலைவாகிவிட்டது. அவர்கள் கை மாறிய தருணம் மழை பொழிந்து வயல் செழித்தது.
ப்பச்சி ஒரு தை மாதம் இறைவனடி சேர்ந்த செய்தி வந்தது. கோட்டையூருக்கு ஓடினாள் லெச்சுமி. சுருங்கிய சூரியப் பிரபை போல் குறிச்சியில் கிடந்தார்கள் ஆவுடையப்பன். ஜோதிமயமான சூரியனிலிருந்துவந்த ஆன்மா சூரியனுடன் கலந்துவிட்டது. அதிகாலையில் அவர்கள் முகத்தின் தேஜஸ் அவளை என்னவோ செய்தது. அப்பச்சி என்று கதறி அழுது முகத்தை அணைத்துக் கொண்டாள். கைக்குள் குழந்தைபோலச் சுருண்டிருந்தார்கள் அப்பச்சி.
ப்பச்சி இறைவனடி சேர்ந்து இருபது வருடமிருக்கும். இப்போதும் வெள்ளாமை பொய்க்காமல் வருகிறது. ஆனால் புயல்தான் படுத்துகிறது. விசு விவசாயம் படித்துவிட்டு சக்திக்கு உதவியாக இருக்கிறான். ஏதேதோ பெயர்களில் புயல் சாலியமங்கலத்தைக் கடந்திருந்தது. காற்றின் வீரிய விஷம் இன்னும் குறையவில்லை. வயலில் நாற்றுகள் மடிந்து நீரோடு புதைந்திருந்தன. தென்னையும் வாழையும் வேரோடு விழுந்து பச்சைப்பிணங்கள் விழுந்த காடு போலிருந்தது தென்னந்தோப்பும் வாழைத்தோப்பும். எதுக்கும் இன்சூரன்ஸும் எடுக்கவில்லை. படித்த பயல் விசு சொல்கிறது எதையும் சக்தி காது கொடுத்துக் கேட்பதில்லை.
மூன்று மகளையும் கட்டிக் கொடுத்தாச்சு. மகனுக்கும் வாழ்வுக்கும் ஆதாரமாக இருந்த வயலையும் தோப்பையும் ஒரே நொடியில் சூறையாடிவிட்டது புயல். கறவை மாடுகள் விழுந்து கிடந்தன. அன்றைக்கு ஆவுடையப்பனுக்கு வந்த நெஞ்சு வலி இன்றைக்குச் சக்திக்கு வந்தது. நெஞ்சை அமட்ட கண்கள் இருள ஈஸிசேரில் சாய்ந்தான். உறங்கிக் கொண்டிருக்கிறான் எனத்தான் நினைத்தாள் லெச்சுமி. அசையாமல் படுத்திருக்கும் அப்பச்சியைக் காலையில் மகன் விசு எழுப்பும்போதுதான் விஷயம் தெரிந்தது.
விசு சூரியப் பிரபைபோல திலகம் ஒளிவிடும் தாயின் நெற்றியைப் பார்த்தான். குப்பென்று வியர்த்தது அவனுக்கு. என்ன செய்வது ? விடிகாலை வெளிச்சத்தில் நிலா தேங்கிக்கிடந்த நீரில் நிழலாட்டம் போட்டது. விடிய சிறிது நேரமிருக்கிறது. சூரியப்ரபை போல் ஜொலிக்கும் ஆத்தாளின் முகத்தில் சந்திரப் பிரபை போல் நெற்றி வடிவாயிருந்தது. அதில் அந்தத் திலகம் தீப்போல ஒளிவிட்டது. ஒளி மங்காமல் காக்க வேண்டுமே.
இனி ஐந்தாண்டுகள் ஆகும் நிலம் சீராக. எல்லாம் அழிந்துவிட்டது. அப்பச்சியும் இல்லை. ஆனால் ஆத்தா இருக்கிறார்கள். அவனுக்கு உயிர் கொடுத்தவள். ஊன் கொடுத்தவள். அவளைக் காப்பாற்றியாகவேண்டும். வங்கிகளில் லோன் வாங்கலாம். மெல்ல மெல்ல முதலில் இருந்து ஆரம்பிப்போம். வட்டிக்கடையே வைக்கலாமா. அசலுக்கு மோசமிருக்காது. ஆனால் வீடு வாசல் இழந்து நாசமாய்ப் போய் இருப்பவர்களிடம் கடன் கொடுத்து வட்டி வாங்குவதா. அது வேண்டாம். பயிர்ப்பச்சையே காப்பாத்தும்.
சின்னப் பிள்ளையில் ஐயா ஆவுடையப்பன் ’ஆத்தாளைப் பாத்துக்க அப்பச்சி’ என்று சொல்லிக் கையைப் பிடித்துக் கொஞ்சுவார்கள். இனி தான்தான் தான்மட்டும்தான் ஆத்தாளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஐயாவும் அப்பச்சியும் வைத்திருந்தது போல் தங்கத் தட்டில் தாங்க வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். உடம்பில் சுருசுருவென ரத்தம் ஓடினாற் போலிருந்தது.
எல்லாருக்கும் நடந்திருப்பதுதான். எத்தனை எத்தனை இழப்புகள். இதைப் பக்குவமாய்க் கடக்க வேண்டும். எதையும் கடக்கத்தானே வேண்டும். கோபாலா தன்னம்பிக்கை கொடு. நம்பிக்கை இழக்காதவரை நாம் எதையும் இழப்பதில்லை.
சக்தியைப் பார்த்தவுடனே கண்டுபிடித்துவிட்ட லெச்சுமி அழத் தொடங்கினாள். வெலவெலவென்று வந்தது அவளுக்கு. கண்கள் இருள ஈஸிசேரில் சக்தியின் காலடியைப் பற்றியபடி சரிந்தாள். "ஐயா ராசா என் சக்தியா இருந்தியளே.. என் சக்தியை உருவிட்டுப் போயிட்டியளே. ரெண்டு பொண்டாட்டி, மூணு மகள்க, ரெண்டு ஆம்புள்ளைப் புள்ளைகள்னு அமோகமா இருந்தியளே. யாருக்கும் தெரியாமக் காப்பாத்துனோமே. எங்க அப்பச்சிக்குத் தெரிஞ்சா வருந்துவாகன்னு போய்ப் பாக்காமக்கூட இருந்தேனே. நம்ம மகன் விசுவுக்கும் தெரியாது.  இனிச் சொல்லித்தான் ஆகோணும். சூரியப் ப்ரபையா என்ன சொலிக்க வைச்சு சந்திரப் ப்ரபையா அவளை மறைச்சு வைச்சிருந்தியளே. அந்தச் சந்திராளையும் நம்ம மகன் காசியையும் விசுகிட்டச் சொல்லிக் கூட்டியாரச் சொல்லோணும். எல்லாத்தையும் தாங்கோணும். எல்லாரையும் காக்கோணும். “  

அவள் கண்ணெதிரே சூரியப் ப்ரபை போல அப்பச்சியும் சந்திரப் ப்ரபை போல சக்தியும் கலங்கிக் கலங்கி வந்தார்கள். பஸ்பமாகிக் கலந்தார்கள்.  ”கோபாலா உன் மடியிலேயே இருவரையும் வைச்சிக்க. மோட்சம் கொடு.” கைகள் கூப்பிக் கலங்கும் ஆத்தாளின் கைகளைப் பரிவோடு பிடித்துக் கொண்டான் விசு. 

“தாங்குவோம் இதையும் தாங்குவோம்”. தொய்ந்த ஆத்தாவின் தோளணைத்துப் பிடித்து அமரவைத்தான். கசியும் கண்களோடு பக்கம் அமர்ந்து தாயின் முகத்தைப் பார்த்தான். ஆத்தா சொன்னது கொஞ்சம் அதிர்ச்சியாய் இருந்தாலும் முன்பே அரசல்புரசலாய்த் தெரிந்திருந்தால் கலங்கவில்லை மகன். அப்பச்சியைப் போய் எப்படித் தட்டிக் கேட்பது. அப்பச்சி கட்டிக் கொண்டதால் அவுகளும் ஆத்தாதானே.. அவுகளுக்குப் பொறந்ததால் அவனும் தம்பிதானே.. நீலவானில் நிலா தெளிந்து ஒதுங்க பொன் மஞ்சள் பிரகாசத்தோடு சூரியன் எழும்பிக் கொண்டிருந்தான். 

ஆத்தாவின் கைபற்றிக் கோர்த்துக் கொண்டான். மகனின் தலையைத் தடவிக் கொடுத்தாள் லெச்சுமி. சூரியப் பிரபை அன்பும் பண்பும் பாசமும் நிறைந்திருந்த ஆத்தா அவனுக்குப் பற்றுக் கோடாக விளங்க. அவளது நெற்றியில் மாசுமறுவில்லாத சந்திரப் ப்ரபை அவனது தகப்பனாய் ஒளிவீசத் துவங்கி இருந்தது.

டிஸ்கி :- இந்தக் கதை அக்டோபர் 7, 2019 திண்ணையில் வெளியாகி உள்ளது. 

2 கருத்துகள்:

  1. கதை மிகவும் அருமை.

    // அந்தச் சந்திராளையும் நம்ம மகன் காசியையும் விசுகிட்டச் சொல்லிக் கூட்டியாரச் சொல்லோணும். எல்லாத்தையும் தாங்கோணும். எல்லாரையும் காக்கோணும். “ //

    லெச்சுமி நல்ல ஆத்மா. விசுவும் அருமையான மகன்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி கோமதி மேம்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)