செவ்வாய், 3 செப்டம்பர், 2019

ஜெர்மனியில் தமிழும் தமிழர்களும்.

மதுரை மீனாட்சியும் ஹம் காமாட்சியும்.
ஜெர்மனியில் இரண்டு தமிழர்கள் சந்தித்துக் கொண்டால் அவர்கள் பேசுவது இதுவாகத்தான் இருக்கும். ”ஜெர்மன் மொழி பேசிப் பழகியாச்சா. என்ன டைப் விசாவில் வந்திருக்கீங்க. எவ்வளவு வருடம் ஆனது ஜெர்மனி வந்து ? வேலை எந்த ஃபீல்டு , காண்ட்ராக்டா,” கடைசியாகப் படிக்கும் குழந்தைகள் இருந்தால் அவர்கள் பள்ளி மற்றும் படிப்புப் பற்றி விசாரிப்பார்கள்.
வருடத்தில் 8 மாதம் குளிர் வாட்டி எடுத்தால் கூட அதைப் பற்றிப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை அவர்கள். வீடு மற்றும் ரோடு ரூல்ஸ்தான் அதிகம் இங்கே. வீடு சுகாதாரம் என்றால் அது கழிவறை சுகாதாரத்தையும் பொறுத்ததே. கழிவறை சுகாதாரம் என்றால் துளிக்கூட ஈரமே இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வீடு வாடகைக்குவிடும் அக்ரிமெண்ட் ரூல்ஸ் படி பராமரிக்காமல் கழிவறையில் பாசி படிந்ததால் அதை சுத்தமாக்கித் திருப்பி ஒப்படைக்க கிட்டத்தட்ட 3000 யூரோக்கள் வரைகூட செலவு செய்தார் ஒரு மாணவர் !.
இந்தோ ஜெர்மன் உறவு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டு விட்டது. பதினெட்டாம் நூற்றாண்டிலேயே பார்த்தலோமா சீகன்பால்க் இந்தியா வந்து தொல்காப்பியத்தை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ் மொழியியல் ஆய்வு செய்து ஜெர்மன் தமிழியல் அளித்த சி எஸ் மோகனவேலு என்ற பேராசிரியரின் பணி சிறப்புக்குரியது.

ஜெர்மன் வாழ் தமிழ்க் குழந்தைகளுக்கான கல்வி என்றுவரும்போது தமிழ்க் கல்வி ஆலயங்களின் தேவை ஏற்பட்டது. 1990 உலகத் தமிழர் இயக்கத்தின் பொறுப்பாளராய் இருந்த மேஜர் சுரேந்திரகுமாரின் ஆலோசனையின் பேரில் தமிழ்க் கல்வி ஆலயங்கள் துவங்கப் பட்டு இன்று ஸ்டூகர்ட்டிலிருந்து ஆஃகன் நகர் வரை சுமார் 130 தமிழ்ப் பாடசாலைகள் உருவாகி இருக்கின்றன. தமிழோடு மற்ற கலைகளும் கற்பிக்கப்படுகின்றன. வெளி உலகத்தில் ஜெர்மானியர்களோடும் வீட்டில் தமிழர் பண்பாட்டைப் பின்பற்றவும் குழந்தைகளுக்கு இக்கல்வி முறை உதவி வருகிறது என புலம்பெயர் தமிழர்களும் எழுத்தாளர்களுமான நிம்மிசிவா, ராஜ்சிவா தம்பதிகள் கூறினார்கள். 
24 இந்துக் கோவில்கள் வீடுகளிலும் நிலவறைகளிலும் செயல்பட்டு வந்தன. பெர்லின், பக்நாங், ஃப்ராங்ஃபர்ட், ஸ்டுகர்ட், க்ரெஃபீல்ட், ஹாம், ஹன்னோவர், ஹட்டின்ஜன் ஆகிய இடங்களில் 1984 இல் சித்தி விநாயகர் கோவில் , ஹம் காமாட்சி அம்மன் கோவில் இன்னும் பல கோவில்கள் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டன.  ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய கோவில் 15 ஏக்கர் பரப்பில் அமைந்த இந்த ஹம் காமாட்சி அம்மன் கோவில். 15,000 பக்தர்கள் கலந்துகொள்ளும் இக்கோவிலின் வருடாந்திரத் தேர்த்திருவிழா உலகப்பிரசித்தம். மதுரைக்கு மீனாட்சி போல் ஐரோப்பா மக்களுக்கு ஹம் காமாட்சி ( அவர்களை ஒன்றிணைக்கும்) கண்கண்ட தெய்வம்.
சிறுபத்ரிக்கைகள் பூவரசு, மண், இளங்காற்று, வெற்றிமணி ஆகியனவும் ஐரோப்பியத் தமிழ் வானொலி, தென்றல் உலகவானொலி ஆகியனவும் தமிழ் சேவை சாதித்து வருகின்றன. தமிழ் இளையோர் அமைப்பு, தமிழ்ப் பெண்கள் அமைப்பு, மாணவர் அமைப்பு, தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஆகியனவும் செயல்படுகின்றன.
பென்ஸ், பி எம் டபிள்யூ, வோல்ஸ்வேகன் ஆகிய விலையுயர்ந்த கார்கள் இங்கேதான் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஐடி தொழில் நுட்பம், ஆட்டோமொபைல் தொழில் நுட்பம் தெரிந்தவர்களுக்குக் கூடுதலாக ஜெர்மன் மொழியும் தெரிந்திருந்தால் வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகம். முன்பு ஆட்டோமொபைல் வேலைக்காக வந்தவர்கள் இன்று ஐடி வேலைக்காக அதிகம் வருகிறார்கள்.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் கற்கும் மாணவர்கள் ஜெர்மன் மொழி கற்றுத் தேர்ந்து இருந்தால் மட்டுமே அட்மிஷன் கிடைக்கும். இங்கே பகுதிநேர வேலைவாய்ப்பில் கிடைக்கும் தொகையைக் கொண்டே அவர்கள் தங்கள் படிப்பை முடித்துவிடலாம் என்பது கூடுதல் வசதி.
தமிழ்மொழி வகுப்புகள் உள்ள பல்கலைக் கழகங்களும் இங்குண்டு. அவை இந்தியவியல் தமிழியல் நிறுவனம் - கோலோன் பல்கலைக் கழகம்  & ஐடல்பர்க் பல்கலைக் கழகம் ஆகியன . எட்டாம் தமிழ் இணைய மாநாடு கோலோன் பல்கலைக் கழகத்தின் உதவியுடன் நடைபெற்றது. மொழி ஆய்வுகள், மதுரையைச் சுற்றிவாழும் மக்களின் இன அமைப்பியல், பண்பாடு மற்றும் நாட்டுப்புற வாழ்வு ஆய்வியல் ஆகியவற்றில் இப்பல்கலைக் கழகங்கள் ஆய்வு நிகழ்த்துகின்றன.
ப்ரொஃபஸர் ஜேனர்ட் 1970, 80 களிலேயே திராவிடமொழிகளில் ஒன்றையோ அல்லது தமிழையோ கற்றவர்கள் மட்டுமே கொலான் யூனிவர்சிட்டியில் இந்தியவியல் மற்றும் தமிழ்த்துறையில் இடம்பிடிக்க முடியும் என்று கூறி இருக்கிறார். அதன்படி அப்போது கற்ற உல்ரிக் நிக்கலஸ் என்ற மாணவி பேராசிரியையாகி நூற்றுக்கணக்கான தமிழ் மாணவர்களை உருவாக்கி உள்ளார். கோலோன் பல்கலைக்கழக லைப்ரரியில் 40000 தமிழ் நூல்கள் இப்போது இடம்பெற்றுள்ளன. 2017 இல் பெரியார் பகுத்தறிவு - சுயமரியாதை மாநாடு ஜெர்மனியில் நடைபெற்றுள்ளது என்பது வியக்கத்தக்க செய்தி.
1980வாக்கில் புலம்பெயர்தல் அதிகமானபோது அம்மக்களை அரவணைத்துக் கொண்ட அயல்நாடுகளில் ஜெர்மனிக்கும் தனியிடம் உண்டு. அப்போது விசா கிடைக்க எந்தக் கெடுபிடியும் இல்லை. தற்போது அறுபதாயிரம் தமிழர்கள் இங்கே வசிக்கிறார்கள். இதில் ஜெர்மனிக்குப் புலம்பெயர்ந்து வந்து வாழும் இலங்கை/இந்திய வம்சாவளியினர். அவர்களுக்குப் பதினாறு வயது ஆனதும் நிரந்தரக் குடியுரிமை பெற்று விடுவார்கள். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் தானாகவே ஜெர்மன் குடியுரிமை பெற்றவர்கள். அவர்களை மணக்கும் அயல்தேச ஆண்கள்/பெண்கள் இரண்டு ஆண்டுகள் இங்கே பணி புரிந்தால் மட்டுமே ஜெர்மன் குடியுரிமை கிடைக்கும். இரட்டைக் குடியுரிமை கிடையாது.கலப்புத் திருமணங்கள் சகஜம். 
இங்கே வீட்டுவேலைகளுக்கு ஆள் கிடைக்காது. அதிக வேகத்தில் சாலை விதிகளைப் பின்பற்றிக் கார் ஓட்டுவது சிரமம். ஞாயிறுக் கிழமைகளில் ஷாப்பிங் பண்ண முடியாது. மனைவிக்கு வேலை வாய்ப்புக் குறைவு. தமிழர்களின் சமையல் முறைகளால் கறி ஸ்மெல் ஏற்படும் என்று வாடகைக்கு வீடு கிடைப்பது கஷ்டம், மொழி கற்றே ஆகவேண்டும். ஆங்கிலம் தெரிந்தாலும் அனைவரும் ஜெர்மன்தான் பேசுவார்கள்., எட்டுமாதம் அதிக குளிர், கோடையில் இரவு பத்துமணி வரை வெளிச்சம் என அதீத தட்பவெப்ப மாற்றம், எல்லாவற்றையும் சமாளித்துத் தமிழர்கள் இங்கேயும் கோலோச்சி வருகிறார்கள்.
இவர்களுள் கண்டெயினர் கிங் என்றழைக்கப்படும் இயன் கிருகரன் என்ற ஈழத்தமிழர் அரசியலில் பங்கேற்று 2009 – 11 ஆம் ஆண்டுகளில் ஹாம்பர்க் மாநில பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராகப் பணியாற்றியது இன்னும் சிறப்பு.

3 கருத்துகள்:

  1. ஜெர்மனியில் தமிழர்கள்... புதிய தகவல்கள்....

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி வெங்கட் சகோ

    மிக்க நன்றி குமார் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)