ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

பறக்கும் கோட்டைகளை எரித்த பரமன். தினமலர் சிறுவர்மலர் - 28.

பறக்கும் கோட்டைகளை எரித்த பரமன்.
நாம் பறக்கும் வானவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். வித்யாதரர்கள், கின்னர்கள், கிம்புருடர்கள், கந்தர்வர்கள், தேவர்கள் ஆகியோர்தான் அவர்கள் . ஆனால் பறக்கும் கோட்டைகளைப் பற்றியும் அவற்றை பரமன் ஏன் எதிர்த்தார் என்பது பற்றியும் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
பிரம்மனுக்கு கேட்டவர்க்கெல்லாம் மனம் இரங்கி வரம் கொடுப்பதே வேலை. அவ்வளவு இளகிய மனம் படைத்தவர். தாரகாசுரன் என்ற அசுரனுக்கு மூன்று புதல்வர்கள். அவர்கள் தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகியோர்.
அவர்கள் அரக்கர் குலமாயிருந்தாலும் தேவர்களை விட அதிக பலமுள்ளவர்களாத் திகழ வேண்டி பிரம்மனைக் குறித்துத் தவமிருந்தார்கள். இரண்டு கைகளையும் தலைக்கு மேலே கூப்பி காலின் பெருவிரலில் மட்டும் நின்றபடி கோரத்தவம் செய்தார்கள். நிலத்தில் மட்டுமல்ல நெருப்பிலும் தவம் செய்தார்கள்.
அவர்களின் தவம் தேவலோகம் வரை சென்று தேவர்களை வாட்டியது. தனது இந்திர பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோவென இந்திரனும் பயந்து போனான். அனைவரும் பிரம்மாவிடம் சென்று  அவ்வரக்கர்களுக்கு வரம் ஏதும் கொடுத்துவிட வேண்டாம் என இறைஞ்சினர்.

ஆனால் பிரம்மாவோ தன்னைக் குறித்துத் தவம் செய்தவர்களுக்கு வரம் கொடுத்தே ஆக வேண்டும், அதுதான் நியாயம் என்று கூறி அந்த அசுர சகோதரர்கள் முன் தோன்றி ”உங்கள் தவத்தால் மகிழ்ந்தேன். என்ன வரம் வேண்டும் ?”என்று கேட்டார்.
அவர்கள் மூவரும் தேவர்களை விட நாங்கள் வலிமையானவர்களாக வளமையானவர்களாக வேண்டும். எனவே எங்களுக்குப் பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றாலான பறக்கும் கோட்டைகள் வேண்டும். அதில் சகல வசதிகளும் சகல பாதுகாப்புக்களும் இருக்கவேண்டும்.  அவை நீரிலும் நிலத்திலும் ஆகாயத்திலும் செல்லக்கூடியவையாக இருக்கவேண்டும். எந்த விதமான ஆயுதம் பாணத்தினாலும் அவற்றுக்கு அழிவு ஏற்படக்கூடாது. நாங்களும் சாகாவரம் பெற்றவர்களாக அக்கோட்டையில் வாழ்ந்து வர வேண்டும் “ என்றார்கள்.
” கோட்டைக்கு எல்லாவரமும் தருகிறேன், ஆனால் உங்களுக்குச் சாகாவரம் தர இயலாது “ என்று கூற அவர்கள் ஒப்புக்கொண்டனர். தாரகாட்சனுக்குப் பொன் கோட்டையும், கமலாட்சனுக்கு வெள்ளிக்கோட்டையும், வித்யுன்மாலிக்கு இரும்புக் கோட்டையும் கிடைத்தன.
அந்தக் கோட்டைகள் தேவலோகத்தையும் விட அழகாக இருந்தன. மாடமாளிகைகள், கூடகோபுரங்கள், அப்சரஸ் கன்னிகையர், அறுசுவை உணவுகள், அழகான சோலைகள், இன்னிசை அரங்குகள் என சகலசௌபாக்கியங்களும் நிரம்பி வழிந்தன.
அவற்றில் அவர்கள் ஏறி சுகபோகங்களை அனுபவித்தார்கள். விண்ணையும் மண்ணையும் ஆக்கிரமித்தார்கள். அதன் பின் அவர்கள் அக்கிரமம் எல்லை மீறியது. மானுடர், தேவர், முனிவர், ரிஷிகள் அனைவரையும் ஆட்டிப் படைத்தனர். அவர்கள் தங்கள் பறக்கும் கோட்டைகளுடன் சென்று அக்கிரமம் செய்துவிட்டு அங்கேயிருந்து மாயமாய்ப் பறந்துவிடுவார்கள்.
அவதியுற்ற தேவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். அவர் சிவனிடம் பக்தி கொண்ட அவர்களை சிவனாலேயே அழிக்கமுடியும் என்று சொல்ல சிவனிடம் ஓடினார்கள்.
தேவர்களின் பரிதவிப்பைப் பார்த்து சிவன் அவர்களை அழிக்கப் புறப்பட்டார். ஆனால் பறக்கும் கோட்டைகளைப் பிடிக்க சிறப்புப் படை வேண்டுமே. அதனால் தேவர்கள் எல்லாம் படையாகவும், உலகம் தேராகவும், சூரிய சந்திரர்கள் தேர்ச்சக்கரமாகவும், வேதங்கள் குதிரைகளாகவும் பூட்டி, மேருமலையை வில்லாகவும், வாசுகிப் பாம்பைக் கயிறாகவும், திருமாலை அம்பாகவும் வைத்து பிரம்மாவை ரத ஓட்டியாக வைத்துத் திரிபுரத்தை அழிக்கக் கிளம்பினார் .
சிவன் வருவது தெரியாமல் அம்மூன்று அரக்கர்களும் தம் பறக்கும் கோட்டைகளுக்குள் உல்லாசமாக இருந்தனர். மேலும் மேலும் கிடைத்தவர்களைக் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
சிவனின் தேர் நெருங்க நெருங்க அக்கோட்டைகள் பறக்கத் துவங்கின. தப்பித்து ஓடின. வரம் கொடுத்த பிரம்மன் சாரதியாக அத்தேரை விரட்ட விரட்ட பரமனோ விஷ்ணு என்னும் அம்பை எய்ய சமயம் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் ஒவ்வொரு முறையும் தேர் நெருங்கும்போது அக்கோட்டைகள் அதிகதூரம் பறந்து போய்விடும். அதைத் துரத்தித் தேரும் அதி வேகத்தில் பறக்க ஆரம்பிக்கும்.
அதற்குள் தாம் இல்லாவிட்டால் சிவனால் அம்மூன்று அசுரர்களையும் அழிக்கமுடியாது என்ற ஆணவம் தேவர்களுக்கு ஏற்பட்டது. கோட்டைகளை இந்த முறை வெகு அருகில் நெருங்கிவிட அந்நேரம் பார்த்துத் தேர்ச்சக்கரம் முறிந்துவிழுந்தது. அச்சோ இப்போது என்ன செய்வது என தேவர்கள் கையைப் பிசைய, அவர்கள் செருக்கை அடக்க நினைத்த சிவபெருமான் மூன்று அசுரர்களையும் ஒரே அம்பு எய்து வதம் செய்தார்.
“அஹ்ஹ்ஹாஹாஹா” என்று விண்ணும் மண்ணும் அதிரச் சிரித்தார் பரமன். அது தேவர்களின் மமதையை அடக்கியது. அதே நேரம் அவர் சிரிக்கச் சிரிக்க அம்மூன்று கோட்டைகளின் மேலும் நெருப்புப் பாய்ந்து பற்றி எரியத் துவங்கியது. தேவர்களின் உதவி இன்றித் தன் சிரிப்பாலேயே அம்மூன்று கோட்டைகளையும் எரித்தார். தேவர்களின் கொட்டமும், அசுரர்களின் அட்டகாசமும் ஒன்றாக அடங்கியது. எந்த அம்புக்கும் பாணத்துக்கும் அழியாத அந்தப் பறக்கும் கோட்டைகள் சிவனின் புன்சிரிப்பாலேயே பஸ்பமாகின.
அகந்தை கொள்வோர் திருந்த வேண்டும். அக்கிரம் செய்வோர் அடங்க வேண்டும் என்பதை பறக்கும் கோட்டைகள் பஸ்பமான கதை உணர்த்துகிறதுதானே குழந்தைகளே.

டிஸ்கி 1 :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 2. 8. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.

3 கருத்துகள்:

  1. திரிபுராசுரர்கள் கதை கேட்கக் கேட்க அருமையாக இருக்கும். அதனை கூறிய விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  2. அருமையா சொல்லியிருக்கீங்க

    வாழ்த்துகள்

    கீதா

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஜம்பு சார்

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)