திங்கள், 5 ஆகஸ்ட், 2019

துர்வாசரைத் துரத்திய சக்கரம். தினமலர். சிறுவர்மலர். 26.

துர்வாசரைத் துரத்திய சக்கரம்.
சிறியவர்கள் துஷ்டத்தனம் செய்தால் பெரியவர்கள் கண்டிப்பார்கள். ஆனால் முனி சிரேஷ்டர் ஒருவரே ஒரு முறை அல்ல இருமுறை இப்படி துர்ப்புத்தியோடு செயல்பட்டு அல்லலுக்கு ஆளானார். அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
முன்னொரு முறை பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின் போது துரியோதனனின் துர் எண்ணப்படி வனத்துக்குத் தன் சிஷ்யர்களோடு உணவருந்த வந்தார் துர்வாசர். நீராடிவிட்டு உணவருந்த வருவதாகக் கூறிவிட்டு சிஷ்யர்களோடு சென்றுவிட்டார்.
சூரியன் பாண்டவர்களுக்கு அளித்த அட்சய பாத்திரம் ஒருநாளில் ஒருமுறையே உணவளிக்க வல்லது. துர்வாசர் வந்த அன்று அப்பாத்திரத்தில் உணவு பெற்று கழுவிக் கவிழ்த்துவைத்துவிட்டாள் திரௌபதி. அதனால் திடீரென வந்தவர்க்கு உணவளிக்க முடியாமல் தன் அண்ணனாம் கண்ணனை வேண்ட அவர் அப்பாத்திரத்தில் ஒட்டி இருந்த உணவுத் துணுக்கை உண்டு திருப்தியாக தன் வயிற்றைத் தடவ  நீர் நிலையில் நீராடிய துர்வாசருக்கும் அவரது சிஷ்யருக்கும் வயிறு நிறைந்தது. அதனால் அவர் தர்மரிடம் மட்டும் சொல்லிக் கொண்டு தன் சிஷ்யர்களுடன் உணவை மறுத்து நடையைக் கட்டினார்.  அக்கதையை நாம் அறிவோம்.
இன்னொரு முறையும் அவ்வாறே அவர் அம்பரீஷன் என்ற மன்னனிடம் செயல்படுத்த திருமாலின் சுதர்சனம் துர்வாசரைத் துரத்தியது. அது பற்றி விரிவாகப் பார்ப்போம்.

அம்பரீஷன் என்ற மன்னன் மாபெரும் ராஜ்ஜியத்தின் மன்னனாக இருந்தாலும் மிகச் சிறந்த பக்திமான். நாம சங்கீர்த்தனம், பகவத் ஸ்மரணம் ஆகியவற்றிலேயே தன் காலத்தைக் கழித்து வந்தான். பகலெல்லாம் இறைவன் திருநாமத்தை உச்சரித்தும் இரவெல்லாம் கண்விழித்தும் திருமாலைத் துதித்து வந்தான்.
ஓராண்டு காலம் இவ்வாறு அவன் யமுனையில் தங்கி ஆகம விதிப்படி ஏகாதசி பூஜை விரதம் ஆகியவற்றைக் கர்ம சிரத்தையுடன் செய்து வந்தான். ஒவ்வொரு ஏகாதசி முடிவிலும் அனைவருக்கும் உணவிட்டு பொன் பொருள் தானங்கள் வழங்கி பூஜையை முடிப்பது அவன் வழக்கம்.  அவன் பக்தியில் மயங்கிய திருமாலும் அவனைக் காக்க உறுதி பூண்டார்.
ஒரு வருட முடிவில் மிகப் பெரும் ஏகாதசிக் கொண்டாட்டமாக மாபெரும் போஜனம் கொடுத்து பல்வகை தானங்களும் வழங்கினான். முடிவில் அவனும் அவனது மனைவியும் உணவு அருந்த அமர்ந்தனர். துவாதசி பாரணை என்று அதற்குப் பெயர். விரதம் இருப்பதால் உடலுக்கு சத்துக் கொடுக்கும் நெல்லிக்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை போன்ற சத்துள்ள காய்களில் உணவு சமைக்கப்பட்டிருந்தது.
ஏகாதசிக்கு முதல் நாளில் இருந்தே விரதம் என்பதால் மூன்று நாட்களாக அம்பரீஷன் மன்னனும் அவன் மனைவியும் உண்ணா நோன்பிருந்து விரதம் நோற்றிருந்தனர். எனவே இலையில் சகலவிதமான காய்கறிகளும் அமுதும் படைக்கப்பட்டு இருந்தது. இலையைச் சுற்றி நீர் விட்டு கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா என்று மும்முறை பிரார்த்தித்து விட்டு உணவை உண்ண வாயருகில் கொண்டு சென்றனர் அரச தம்பதியினர்.
அந்த நேரம் பார்த்து அங்கே துர்வாச மகரிஷி வந்தார். உடனே மன்னன் அம்பரீஷனும் அவன் மனைவியும் துர்வாசரைப் பணிந்து உணவருந்த அழைத்தார்கள். துர்வாசரோ சொன்னதைக் கேட்பவரா. ”இல்லை நான் நீராடிவிட்டுத்தான் உண்பேன்”
“தேவரீர் அப்படியே ஆகட்டும். தாங்கள் ஸ்நானம் செய்து வரும்வரையில் நாங்கள் காத்திருக்கிறோம் . வந்து நீங்கள் அருட்பிரசாதம் வழங்கிய பின்பே அமுதுண்போம் “ என வழியனுப்பி வைக்கிறார் மன்னன் அம்பரீஷன்.
நேரமோ ஓடிக் கொண்டிருக்கிறது. நீராடச் சென்ற முனிவர் வரும் வழியாய் இல்லை. தேடிச் சென்ற வீரர்கள் முனிவரைக் காணாமல் வெறுங்கையோடு திரும்புகிறார்கள். மன்னனுக்கோ என்ன செய்வதெனத் தெரியவில்லை. துவாதசி முடியப் போகிறது. அந்த நேரத்தில் உணவு அருந்தி விரதத்தை முடிக்காவிட்டால் ஓராண்டு கடைபிடித்த அந்த விரதத்தின் பலன் கிடைக்காமலே போய்விடும்.
மன்னனும் ராணியும் யோசிக்க அங்குள்ள மற்ற முனிவர்களோ ”சிறிது துளசியை நீரில் போட்டு அதையே பிரசாதமாக அருந்தினால் விரத பலன் கிட்டும்” எனச் சொல்கிறார்கள்.
வேறு வழியில்லாமல் மன்னனும் ராணியும் துளசியை நீரில் இட்டு அருந்தப் போகும் சமயம் அதைத் தன் ஞான திருஷ்டியால் உணர்ந்த துர்வாசர் உடனே அங்கே தோன்றி தன் துஷ்டப் புத்தியைக் காட்டுகிறார்.
“ மன்னா என்னுடன் உணவருந்துவதாகச் சொல்லிவிட்டு என்ன செய்கிறாய் ? என் அனுமதி இல்லாமல் துளசி தீர்த்தம் குடித்து விரதம் முடிக்கப் பார்க்கிறாயா.? என்ன திமிர் உனக்கு ? இப்போதே உனக்குப் பாடம் கற்பிக்கிறேன். “ என்று கூறியவர் தன் ஜடாமுடியில் இருந்து ஒரு பூதத்தை உருவாக்கி ஏவுகிறார்.
மன்னனுக்கோ என்ன செய்வதெனத் தெரியாத நிலை. அவனை நோக்கி பூதம் எழும்பிப் பறந்து பிடித்துக் கடிக்க வருகிறது. இதை எல்லாம் பார்த்துக் கொண்டேயிருந்தது திருமாலின் கையில் இருந்த சக்கரம். கோபம் கொண்ட அச்சக்கரம் அவனைக் காக்க திருமாலின் கரத்தில் இருந்து சுழன்று விர்ரென்று வேகமாகப் பறந்து வந்தது.
வந்த வேகத்தில் பூதத்தை இரண்டு துண்டாக்கியது. அலறி வீழ்ந்தது பூதம். அடுத்தது சக்கரத்தின் பார்வை துர்வாசரை நோக்கியது. கோபமாக அவரை நோக்கி அது உருண்டு ஓடியது. தன்னை இரு கூறாக வெட்ட வரும் சக்கரத்தைப் பார்த்துப் பயந்த துர்வாசர் பிரம்மாவிடம் ஓடித் தஞ்சம் புகுந்தார்.
விடாமல் அங்கும் வந்து அவரைத் துரத்தியது சக்கரம். அதன் பின் ஈசனிடம் ஓடி “ ஈசனே என்னைக் காப்பாற்றுங்கள் “ என்று கதறினார். அங்கேயும் சக்கரம் விடாமல் துரத்தியது. அடுத்துத் திருமாலிடமே அபயம் கேட்டுவிடலாம் என்று வைகுந்தத்துக்கு ஓடினார். “ அபயம் அபயம்” என்று அலற அலற சக்கரம் சுற்றிச் சுற்றி வந்து அவரை விரட்டியது.
”அம்பரீஷன் என் மேல் கொண்ட பக்தியில் சிறந்தவன். ஆகையால் சுதர்சனச் சக்கரம் நான் சொல்வதைக் கேட்பதை விட அம்பரீஷன் சொல்வதைத்தான் கேட்கும். தப்பிக்க விரும்பினால் நீங்கள் அம்பரீஷனையே சரணடையுங்கள் துர்வாசரே “ என திருமாலும் துர்வாசரைக் கைவிட்டு விட்டார்.
வேறு வழியில்லாமல் அம்பரீஷனிடம் ஓடி வந்து “ அம்பரீஷா உன் நல்ல உள்ளம் தெரியாமல் சோதித்து விட்டேன். என்னை இந்தச் சக்கரத்திடம் இருந்து காப்பாற்று “ என்று வேண்ட அம்பரீஷன் ஆணைப்படி அச்சக்கரம் திருமாலின் கரத்தை அடைந்தது. நிம்மதிப் பெருமூச்சு விட்டார் துர்வாசர்.
ஆகையால் இவ்வாறு நல்லெண்ணம் கொண்டவர்கள் மேல் காழ்ப்புணர்வோடு செயல்பட்டால் நாம்தான் அல்லலுற நேரும் என்பதை உணர்ந்து நல்லன செய்து வாழ்வோம் குழந்தைகளே.  

டிஸ்கி 1 :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 19. 7. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)