புதன், 6 மார்ச், 2019

அன்னம் பாலித்த அண்ணன். தினமலர் சிறுவர்மலர் - 7.


அன்னம் பாலித்த அண்ணன். :-

அன்னம் பாலித்த அண்ணன் என்றால் உங்களுக்கு தங்கையின் வேண்டுதலுக்காகத் தடா தடாவாக அக்கார அடிசிலும் வெண்ணையும் சமர்ப்பித்த ராமானுஜரும் ஆண்டாளும் நினைவுக்கு வரலாம். ஆனால் அடர் கானகத்தில் ஏதும் கிட்டாத இடத்தில் ஒரு அண்ணன் தன் தங்கைக்கு ஒரு முனிவர் மூலம் ஏற்பட்ட சோதனையில் இருந்து காக்க அன்னம் பாலித்தார் என்பது தெரியுமா?. அதுவும் எப்படி ? முனிவருக்கும் அவரது ஆயிரக்கணக்கான சீடர்களுக்கும்  அறுசுவை உண்டி சாப்பிட்ட உணர்வை உண்டாக்கி இக்கட்டிலிருந்து நீக்கினார் என்றால் ஆச்சர்யம்தானே. அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.


கௌரவர்களுடன் நடைபெற்ற சூதாட்டத்தில் பொன் பொருள் தேசம் படை பட்டாளம் அனைத்தும் இழந்த பாண்டவர்கள் நகரம் நீங்கி திரௌபதியுடன் வனவாசம் மேற்கொண்டார்கள்.

கங்கை புரண்டு ஓடுகிறது. கானகப் பட்சிகள் இன்னிசைக்கின்றன. ஒரு ஆலமரத்தடிக்குச் சென்று அவர்கள் இளைப்பாறுகிறார்கள். அவர்கள் மேல் கொண்ட அன்பின் மிகுதியால் சில முனிவர்களும் தம் பத்தினிகளுடன் பின் தொடர்கிறார்கள். தர்மர் அவர்கள் படும் இன்னலைப் பார்த்து “ முனி சிரேஷ்டர்களே ! கொடிய விலங்குகள் உலவும் இடம் இக்காடு. காய் கனிகள் தவிர வேறு ஏதும் கிட்டாது. எங்கள் விதிப்பயன் நாங்கள் காட்டில் இருக்க நேர்ந்தது. இவ்வளவு தூரம் எங்களோடு நீங்கள் வந்தது போதும். நாடு திரும்புங்கள்” என்று வேண்டுகிறார்.   

அவர்களின் அன்பில் நெகிழ்ந்தனர் ரிஷிகள். தௌமியர் என்னும் மகரிஷி  “எங்களைப் பற்றிக் கவலைப்படாதே தர்மா. நாங்கள் எங்களைக் காத்துக் கொள்வோம். உனக்கு நான் இக்கானகத்தில் வாழ கவசமாய் விளங்கும் சூரிய மந்திரத்தை உபதேசிக்கிறேன். அதைச் சொல்லி வா நல்லதே நடக்கும் “ என்று ஆதித்திய மந்திரம் சொல்லிக் கொடுக்கிறார்.

அதை முழுமனதோடு தர்மர் பல்லாயிரம் முறை சொல்ல மனம் மகிழ்ந்த சூரியன் தோன்றி அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் ஒன்றை வழங்கினார். தர்மர் அதைப் பாஞ்சாலியிடம் கொடுக்க அதன் மூலம் அவள் அனைவருக்கும் அறுசுவை அடிசிலை வழங்கினாள்.

அந்த அட்சய பாத்திரத்திற்கு ஒரு விதிமுறை இருக்கிறது. எந்த உணவுப் பண்டத்தால் நிரப்பினாலும் அள்ள அள்ளக் குறையாமல் உணவு தரும். ஆனால் உணவு அருந்தியபின் சூரியார்ப்பணம் செய்து கழுவிக் கவிழ்த்து வைத்துவிட்டால் அது மறுநாள் சூரிய உதயத்துக்குப் பின்புதான் உணவு தரும்.

இதை அறியாத துரியோதனன் ஒரு சூது செய்தான். அவன் அவைக்கு ஒருமுறை துர்வாச மகரிஷி தன் சீடர்களுடன் வந்தார். அவரை விமரிசையாக வரவேற்று அறுசுவை உணவளித்து உபசரித்தான் துரியோதனன். அதில் மகிழ்ந்த துர்வாசர் என்ன வரம் வேண்டுமெனக் கேட்க துரியோதனின் துர்ப்புத்தி வெகு வேகமாக வேலை செய்தது.

“தேவரீர் என் அரண்மனைக்கு எழுந்தருளி உணவருந்தியது போல கானகத்தில் இருக்கும் என் சகோதரர்கள் குடிலுக்கும் சென்று தாங்கள் உணவருந்தி ஆசீர்வதிக்க வேண்டும். “ கானகத்தில் தங்கள் உணவுக்கே அல்லாடுபவர்கள் முனிவருக்கும் சீடர்களுக்கும் உணவளிக்க முடியாமல் அவரது சாபத்தைப் பெறுவார்கள் என்று மனக்களிப்பால் மூழ்கிக் கிடந்தான் துரியோதனன்.

பாண்டவர்க்கு அட்சயபாத்திரம் கிடைத்த விபரம் அவனுக்கு தெரியாது. ஆனால் அந்தோ பரிதாபம் அன்றைக்கு என்று பார்த்து திரௌபதி அனைவருக்கும் அட்சய பாத்திரத்திலிருந்து உணவளித்துவிட்டுக் கழுவிக் கவிழ்த்து வைத்துவிட்டாள்.

அந்நேரம் பார்த்து பாண்டவர் குடிலுக்கு துர்வாசரும் அவரது சீடர்களும் எழுந்தருளினார்கள். தர்மரிடம் தாங்கள் குளித்து விட்டு உணவருந்த வருவதாகக் கூறி அருகே இருந்த கங்கைக்குச் சென்றார்கள். தர்மர் திரௌபதியிடம் அட்சய பாத்திரத்திலிருந்து உணவைப் படைக்கும்படிக் கூறினார். ஆனால் அவள் என்ன செய்வாள். சீடர் பட்டாளத்தைப் பார்த்துத் திகைத்தவள் தர்மரிடம் உண்மையைக் கூறினாள், ” அதைக் கழுவிக் கவிழ்த்து விட்டேன். இனி அப்பாத்திரம் நாளைதான் உணவு அளிக்கும்” என்று.

துர்வாசரோ கோபக்காரர். பிடி சாபம் கொடுப்பதில் பிரசித்தி பெற்றவர். என்ன செய்வது என்று அனைவரும் திகைக்க நிற்க, திரௌபதியோ தன் மனதில் தன் அண்ணன் கண்ணனை நினைத்து தியானிக்கத் தொடங்கினாள். துரியோதனன் சபையில் மானபங்கம் ஏற்பட்டபோது அவள் தியானித்ததும் அவள் ஆடையை வளரச் செய்தவர் அல்லவா. அவள் மனதில் நினைத்ததுமே அந்த மாயக் கண்ணன் அங்கே தோன்றி “ தங்காய் திரௌபதி ஏன் அழைத்தாயம்மா ? “ என்று பரிவுடன் கேட்டார்.

திரௌபதி விபரத்தைக் கூற ”எங்கே அந்த அட்சய பாத்திரத்தை எடுத்துவாம்மா பார்க்கலாம்” எனப் பணித்தார். அதில் ஒரு ஓரத்தில் ஒரு பருக்கை அன்னமும் ஒரு கீரைத்துண்டும் ஒட்டிக் கொண்டிருந்தது. அதை எடுத்து வாயில் போட்டுக் கொண்ட கிருஷ்ணர் “ திருப்தி” என வயிற்றைத் தடவினார்.

கங்கையில் குளித்துக் கரை ஏறிய துர்வாசருக்கும் அவரது சீடர்களுக்கும் அறுசுவை உணவு உண்டு வயிறு நிரம்பியது போல் கனத்தது. அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்த தர்மரிடம் “ தர்மா தவறாக நினைத்துக் கொள்ளாதே. பசி உணர்வு போய் நிறைவான திருப்தி இருக்கிறது. எனவே உணவு அருந்த இயலாது, சிரமம் கொடுத்துவிட்டேன் “ எனக் கூறித் தன் சீடர்களுடன் வேகமாகக் கானகத்தை விட்டு வெளியேறினார்.

ஆச்சர்யத்துடன் குடிலுக்குத் திரும்பினார் தர்மர். அப்புறம்தான் விஷயம் தெரிந்தது தன் தங்கைக்காக அங்கே எழுந்தருளிய கண்ணன் அந்த அட்சய பாத்திரத்திலிருந்து ஒரு பருக்கையை உண்டு அனைவருக்குமே பசிக்காத அளவு அன்னம் பாலித்திருக்கிறார் என்று. இக்கட்டிலிருந்து தன் தங்கையைக் காக்க எப்போது அழைத்தாலும் வந்து உதவும் அண்ணன் கண்ணனின் நற்குணம் போற்றத்தக்கதுதானே குழந்தைகளே. 

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 1 . 3. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் அஷோக் & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)