ஞாயிறு, 13 ஜனவரி, 2019

யசோவர்மனின் குறை தீர்த்த அருணன். தினமலர் சிறுவர்மலர் - 52.

யசோவர்மனின் குறை தீர்த்த அருணன்.

தாயின் கர்ப்பத்திலிருந்து வெளியேறும் முன்பே சாபம் பெற்ற ஒருவன் இன்னொருவரின் குறையைத் தீர்க்க முடியுமா ? அதுவும் தான் பிழைப்பதே அரிதாக இருந்தபோது எப்படி இன்னொருவருக்கு ஆரோக்கியத்தை அளித்தான் ஒருவன் என்று பார்ப்போம் குழந்தைகளே.
விஷ்ணுவின் நாபிக்கமலத்தில் உருவானவர் பிரம்மா. இவரது மகன்கள் சப்தரிஷிகள் எனப்படும் எழுவர். அவர்களின் ஒருவரான மரீசி என்பவரின் மகன் கசியபர். இவர் மனைவியின் பெயர் அதிதி. இவர்கள் இருவரும் ஒரு கானகத்தில் வசித்து வந்தார்கள்.
தர்மம் தவறாமல் வாழ்ந்து வந்தார்கள் அத்தம்பதிகள். சிறிது நாட்களில் அதிதி கர்ப்பமுற்றார். ஒரு நாள் கசியபர் உணவு அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் வீட்டுக்கு ஒரு முதியவர் வந்து யாசகம் கேட்டார். கர்ப்பத்தின் காரணமாக அதிதியின் வயிறு பெரிதாக இருந்ததால் உடனே எழுந்து சென்று அந்த முதியவருக்கு உணவு படைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

உணவு வர தாமதமானதால் கோபப்பட்ட அந்த துஷ்ட முதியவர் அவள் கர்ப்பிணி என்றும் பாராமல் அவளது கர்ப்பத்தில் இருக்கும் கரு கலையட்டும் என்று சாபமிட்டார். ஐயகோ என்னது இது ? பிறக்குமுன்னே தங்கள் தலைப்பிள்ளைக்கு இப்படி ஒரு கதியா ?.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அதிதி கஸ்யபரிடம் தெரிவிக்க அவர் உடனே சிவபெருமானை வேண்டி ஒரு பெரிய யாகத்தைச் செய்ய ஆரம்பித்தார். யாகத்தில் மகிழ்ந்த சிவன் தோன்றி “ குழந்தை நிலைத்த புகழையும் நீடித்த ஆயுளும் பெறும் “ என்று வரமளித்தார். ஆசுவாசப் பெருமூச்சு விட்டார்கள் பெற்றோர்.
சிவன் வரமளித்தபடி மிகுந்த அழகோடும் தேஜஸோடும் பிறந்தார் அருணன். தந்தை கசியபர் சொல்படி அவனும் சிவனை நோக்கித் தவமிருக்க சிவன் தோன்றி ஒன்பது கிரஹங்களுக்குத் தலைமைப் பதவியையும், உலகுக்கு ஒளி, உணவு, ஆரோக்கியம் வழங்கும் வரத்தையும் அளித்தார்.
தன் கொள்ளுப்பேரன் அருணனைப் பார்த்து மகிழ்ந்த பிரம்மா காலத்தைச் சக்கரமாகச் செய்து கொடுத்தார். முப்பாட்டனார் மகாவிஷ்ணுவோ ஏழு வண்ணம் கொண்ட குதிரைகளை அளித்தார். இவற்றைப் பெற்ற அருணன் ஒரு நாள் கூட சோம்பி இருந்ததில்லை. அந்தக் காலச்சக்கரத்தில் ஏழு குதிரைகளையும் பூட்டி உலகை உலா வரத்தொடங்கினான்.
பிறக்குமுன் அழிவைச் சந்திக்க இருந்த அருணன் பிறந்தபின் தன்னைச் செம்மைப்படுத்திக் கொண்டான். தன் கதிர்களைப் பரப்பி பயிர் பச்சைகளைப் பெருக்க வைத்தான். உயிர்களைச் செழிக்க வைத்தான். அன்றிலிருந்து இன்றுவரை ஒரு நாள்கூடத் தன் கடமைகளில் இருந்து ஓய்ந்தானில்லை. உயிர்களுக்கு ஊன் கொடுத்து உயிர்கொடுத்த சூரியனின் ஒளி பட்டால் தேகஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
ப்படி அவன் உலா வரும்போது ஒரு மன்னனின் கவலைக் குரல் அவன் காதுகளில் விழுந்தது. அவன்தான் யசோவர்மன் என்ற அரசன். அவனுக்குப் பலகாலம் பிள்ளை இல்லை. பல்வேறு யாகம் ஹோமம் செய்த பின்பு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. ஆனால் என்ன துர்பாக்கியம் அக்குழந்தை எப்போதும் நோய் நொடியோடு நோஞ்சானாகவே இருந்தது. தோல் நோயால் வேறு அவதிப்பட்டது. அரண்மனை வைத்தியர்களின் எந்த மருத்துக்கும் அது குணமாகவே இல்லை.
அப்போது அந்த மன்னனின் அரண்மனைக்கு வந்த அகத்தியமுனிவரிடம் அரசன் யசோவர்மன் தன் கவலையைத் தெரிவித்தான். அந்தக் கவலைக் குரல்தான் அருணனின் காதில் விழுந்தது. அவர் மன்னனிடம் மகனுக்கான சில மருத்துவ முறைகளைக்கூறி தினமும் சூரியனை வணங்கி நீராடச் சொன்னார்.  
சோவர்மன் அகத்தியர் கூறிய முறைகளைப் பின்பற்றி பக்கத்தில் இருந்த நீர் நிலைக்கு மகனை அழைத்துச் சென்று மகனை நீராடச் சொன்னான். யசோவர்மனின் மகன் சூரியனை வணங்கி நம்பிக்கையோடு நீரில் மூழ்கினான். அஹோ எழும்போது சூரியனின் கிரணம் பட்டு அவன் மேனியில் இருந்த தோல் நோய்களும் அழிந்தன . அவனும் திடகாத்திரமானவனாக ஆரோக்கியம் உள்ளவனாக எழுந்தான். அவன் உடலும் சூரியனைப் போல தேஜஸோடு ஒளிர்ந்தது.
இதைக் கண்ட யசோவர்மன் தன் குறை தீர்த்த அருணனுக்கும் வழி சொன்ன அகத்திய முனிவருக்கும் நன்றி சொன்னான். தன்னை நாடிவந்தோரின் குறைதீர்த்து  ஆரோக்கியத்தைக் காத்த அருணன் போற்றுதலுக்குரியவன்தானே குழந்தைகளே. 
டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 11 . 1. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் அஷோக் & தேவராஜன் ஷண்முகம் சார்.

2 கருத்துகள்:

  1. குழந்தைகளுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே உரிய தொடர். தொடர்ந்து வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஜம்பு சார்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)