திங்கள், 20 டிசம்பர், 2021

காக்கைச் சிறகினிலே.. காலத்தால் மறக்க முடியாத கலைஞன் ரகுவரன்.

எத்தனையோ பேர் நடிப்புலகில் இருக்கிறார்கள். எத்தனையோ போராட்டங்கள், பிரயத்தனங்கள், ஆசைகள், நிராகரிப்புகள் தாண்டி சிலரே ஜெயிக்கிறார்கள். வாய்ப்புக் கிடைப்பதும் முகம் காட்டுவதுமே அதிர்ஷ்டத்தின் பாற்பட்டிருக்கக் கிடைத்த வாய்ப்பில் தன்னை அடையாளப்படுத்துவது சிலருக்கே வாய்க்கிறது. காக்கைச் சிறகினிலே என்று கலைந்து பறந்த இறகாய்ப் பாடலில் அறிமுகமான நாயகன் இன்று நினைக்கும்போதும் எதிர்நாயகனாக மட்டுமில்லாமல் குணசித்திரராகவும் பதிந்து போயிருக்கிறார்.



ஹீராவாகவும் வில்லனாகவும் சாதித்தவர்களைப் பட்டியலிட்டு விடலாம், எம் ஆர் ராதா, சத்யராஜ், ரகுவரன், அரவிந்தசாமி, ரகுமான் என்று. அதிலும் குணச்சித்திரப் பாத்திரத்திலும் பரிணமித்தவர் ரகுவரன். மென்மையும் வன்மையும் வில்லத்தனமும் ஒருங்கே குடி கொண்ட அதிசயம் அவர். இவ்வளவையும் சாதிப்பது ஒரு சிலருக்கே சாத்தியம்.

நானா படேகர் போல் நடிப்பின் பல பரிமாணங்களில் என்னை அசத்தியவர் ரகுவரன். அந்தத் தீவிரமான பார்வை, கரகரப்போடு கூடிய மெருகான ஆண்குரல், தீர்க்கமான நாசி, பளிச்சென்ற உயரமான உருவம், மெஜஸ்டிக்கான தோற்றம், எளிய ஹீரோ தோற்றம், பணக்கார வில்லத் தோற்றம், குணச்சித்திர தந்தைத் தோற்றம் எல்லாமே அவருக்கு ப்ளஸ் பாயிண்ட்ஸ்.


ஹீராவாக சாதித்ததை விட ஒரு குணசித்திரராக அவரை எனக்கு அஞ்சலியில் மிகப் பிடிக்கும். நெகிழும் தன்மையுள்ள தகப்பன், மனைவிக்குத் தெரியாமல் தாயுமானவனாக மிகப் பிரமிக்க வைத்த பாத்திரம் அது. மனநிலை சரியில்லாத பெண்குழந்தையின் தகப்பனாக உலகத்தின் அத்தனை வலியையும் தாங்கிக்கொண்டு அஞ்சலி ஏன் பிறந்தாள் எனத் தன் மற்ற இரண்டு குழந்தைகளிடம் மன நெகிழ்வோடு குரல்  உடைவதை அடக்கிக்கொண்டு அவர் விளக்கும் இடம் .. “ ஒரு தேவதை பிறக்கும் நேரம் வந்துச்சு. அப்போ அதுக்கு அன்பான குடும்பம் , அப்பா, அம்மா அண்ணன் அக்கா வேண்டும் என்றுதான் கடவுள் இங்கே படைச்சார்.” நெஞ்சை அடைத்துக் கண்களைக் கரைகட்ட வைத்த இடம் அது.

 82 களில் எங்கள் கல்லூரிப் பருவத்தில் வெளிவந்த ஏழாவது மனிதன் படப்பாடலான காக்கைச் சிறகினிலே எனக்கு மிகப் பிடித்த பாடல். கிட்டத்தட்ட 300 படங்கள் நடித்திருக்கிறாராம். நான் ஒரு ஏழெட்டுத்தான் பார்த்திருப்பேன். ஒரு நடிகனின் அனைத்துப் படத்தையும் பார்த்துத்தான் அவரது நடிப்பைத் தீர்மானிக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன்.



புரியாத புதிர் சில சீன்கள் பார்த்திருக்கிறேன். இன்னொன்றும் சொல்ல வேண்டும். நெகிழ்வில் எப்படி குரல் உடையுமோ அதே போல் எதிர்நாயகனாய் நடிக்கும்போது அந்தக் குரல் மிரட்டும். அதேபோல் ஒரு லேசான தோள் குலுக்கல் கூட மிரட்சியளிக்கும். அந்தத் தீவிரமான பார்வையும் பாடி லாங்வேஜும் அவருக்கு மிகப் பெரிய வரம்.  மிஸ்டர் பாரத்தில் கமர்ஷியல் வில்லன்.

மெச்சூர்டு ஹீரோ, மனநோய் பிடித்த வில்லன் ஆகியவற்றில் பிச்சு உதறும் அவர் வசன வெளிப்பாட்டிலும் ஒரு பரபரப்பு இருக்கும். குரலிலேயே நம்மைப் பதற்றமும் பயமும் தொற்றவைக்கும். பாட்ஷா, ரட்சகன் ஆகியவற்றில் முரட்டுத்தனமான வில்லன் பாத்திரம். முதல்வனில் அந்தக் கண்கள் உருள்வதும் முகத்தை திடீரெனக் கோபமாகவும் கோணலாகவும் ஆக்கித் திட்டுவதும் படபடப்போடு பேசுவதும் என அழுத்தமான மேனரிசங்கள் அவருக்கேயானவை.

பூவிழி வாசலிலேயில் கால் ஊனமுற்றவராக க்ளைமாக்ஸ் சீனில் நகராமலே மிரட்டி இருப்பார். சம்சாரம் அது மின்சாரமில் சுயநலமிக்க மூத்த மகனாக தன் பொருட்களை எடுத்துச் செல்வதும் கணக்குப் பார்த்துப் பணம் கொடுப்பதும் அதையே தன் பேச்சிலும் செயலிலும் வெளிப்படுத்துவதுமாக வாழ்ந்து காட்டியிருப்பார். லெட்சுமி அவரை ஓரிரு சீன்களில் ”இதை எல்லாம் போட்டுட்டு வந்ததுல மயங்கித்தான் என் மடியில் இதக் கொடுத்திருக்கு “ என்று  குழந்தையைக் காட்டிப் புகழும்போது அதைக்கேட்டு மென்முறுவலாக அவர் வெளிப்படுத்துவது அழகு.

ஒரு ஓடை நதியாகிறது என்ற படத்தில் இடம் பெற்ற இந்த இருபாடல்களும் அவரது ஹீரோ பக்கத்தினைக் காட்டினாலும் முதிர்ந்த அவரது நடிப்பின் பக்கத்தில் ஒரு எளிய ஹீரோவுக்கான வெளிப்பாடாகவே அமைந்திருக்கிறது.



அதுவும் சுமலதாவுடனான தலையைக் குனியும் தாமரையே பாடல் முழுக்க கமர்ஷியல் அம்சங்கள். அதிலும் சில இடங்களில் சுமலதாவின் நளினத்தையும் அதைக் காணும் ரகுவரனின் ரொமாண்டிக் பார்வையையும் ரசிக்கலாம்.




கம்பீர ஆளுமை என்று உணரச் செய்தது என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு. இதில் சத்யராஜ் சுகாசினி தம்பதிகள் அநாதை இல்லத்திலிருந்து ஒரு குழந்தையைத் தத்தெடுக்க வளர்க்கிறார்கள். ஒரு கட்டத்தில் அது ரேகாவின் திருமணத்துக்கு முன் பிறந்தகுழந்தை எனத் தெரியவருகிறது. மனநோயில் சிக்கித்தவிக்கும் ரேகாவின் கணவரான ரகுவரன் மனைவிக்காக அக்குழந்தையைப் பெற முயல்கிறார். இதில் தத்தம் மனைவிக்காக அந்தக் குழந்தையைத் தக்க வைக்க சத்யராஜ், ரகுவரன் இருவரும் எடுக்கும் இடைவிடா முயற்சிகள் , தவிப்புகள் அபாரம். அதிலும் காரில் வரும்போது சத்யராஜிடம் தன் கதையைச் சொல்லும் ரகுவரன்  ” கடவுள் அவளுக்குக் கொடுத்த கணவனாய் நான் இருக்க விரும்புறேன்.அந்தக் குழந்தை எங்கள் குழந்தை. என் மனைவிக்கு அவ பெத்த குழந்தை வேணும் “ என்று குரலின் நெகிழ்வு கசிந்துவிடாதவாறு உணர்வு இறுக்கத்துடன் பேசுவது ஈடற்றது.

குணசித்திரர்கள் வேறு எத்தனைபேர் வந்தாலும் அவர் முத்திரை அவருக்கேயானது.  காலத்தால் மட்டுமல்ல. என்றோ உதிர்ந்து வீழ்ந்த காக்கைச் சிறகினிலும் கண்ணனின் நிறம் காணும் மனதிலிருந்து அழிக்க முடியாத வண்ணம் பாய்ந்த  நடிப்புச் சித்திரம் அவருக்கு மட்டுமேயானது.

டிஸ்கி :- இந்த வருடம் இருந்திருந்தால் 60 வயது ஆகியிருக்கும் அவருக்கு. இறக்கும்போதும் 50 ஆகிவிட்டது என்று நம்ப முடியாத தோற்றம். இவருடைய சில படங்களே பார்த்திருக்கிறேன். ரோஹிணியுடன் திருமணம், ரிஷி என்றொரு குழந்தையின் தந்தை இவை பத்ரிக்கை வழி அறிந்த செய்திகள். அவர் மரணத்துக்கு காரணம் ட்ரக் அடிக்‌ஷன் என்றும் வெளியிட்டிருந்தன. இவை பற்றிய ஆராய்ச்சியல்ல இக்கட்டுரை. 

தமிழ் சினிமா தந்த அற்புத நடிகர்களில் ஒருவரான ரகுவரனின் நடிப்பின் சில துளிகளில் நெகிழ்ந்த ரசிகையாக அவருக்கு என் ஆத்மார்த்தமான வந்தனங்கள்




டிஸ்கி 2:- டிசம்பர் மாத தனவணிகனில் சென்ற மாதம் வெளியான நடிகை சுகாசினி பற்றிய கட்டுரையைப் பாராட்டி மணிமடல்கள் வந்திருந்தன. 

நன்றி திருச்சி திருமதி T. கலைச்செல்வி இராமனாதன்.

நன்றி விராச்சிலை திரு AN. சிதம்பரம்.

நன்றி ஆவினிப்பட்டி திரு. சொ. ஆண்டியப்பன். 

மணிமடல்களில் இவர்களது பாராட்டுக்களை வெளியிட்ட தனவணிகன் இதழுக்கும் சிரந்தாழ்ந்த நன்றிகள்.

12 கருத்துகள்:

  1. அசாத்தியமான நடிகர்களில் இவரும் ஒருவர்.

    பதிலளிநீக்கு
  2. என் மாமா மகன் ஹரிஹரன் இயக்கத்தில் வெளியான படம் ஏழாவதுமனிதன் ரஷ்ய விருதுபெற்றது

    பதிலளிநீக்கு
  3. I KNOW I KNOW என்று பல தொனிகளில் அவர் பேசியது சிறப்பானது

    பதிலளிநீக்கு
  4. உங்கள் ரசனையை ரசிக்கின்றேன்.பகிர்ந்த பாடல்களும் ரம்மியம்.சிறந்த நடிகர் ரகுவரன்

    பதிலளிநீக்கு
  5. பகிர்ந்திருக்கும் பாடல்கள் அனைத்தும் அருமை அருமையான பாடல்கள். அதே போன்று ரகுவரன் நல்ல திறமையான நடிகர்.

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  6. ரகுவரனைநினைவு படுத்தி விட்டீர்கள். அடர்த்தியான நடிகர்.

    அவர் அமலாவைக் காதலித்தார் என்று அவர் தயாரித்த குமுதம் இதழில் சொல்லி இருந்தார். கைகூடாத காதல்.

    பதிலளிநீக்கு
  7. நல்ல நடிகர். எனக்கும் அவரது அஞ்சலி கதாபாத்திரம் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  8. நன்றி ஜம்பு சார்

    புதிய தகவலுக்கு நன்றி பாலா சார்

    ஆம் பாலா சார் ஐ நோ என்று அவர் கூறியதை நானும் ரசித்திருக்கிறேன்.

    நன்றி ஆச்சி ஸ்ரீதர்

    நன்றி துளசி & கீத்ஸ்

    நன்றி ஸ்ரீராம் . அட இது புது தகவல்.

    நன்றி வெங்கட் சகோ :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  9. மிகவு‌ம் அரிதான, அசாத்தியமான மனிதர்

    பதிலளிநீக்கு
  10. நன்றி ஜீவா

    நன்றி வெங்கடேசன்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா31 மே, 2023 அன்று 8:29 AM

    சந்தேகம் சித்ரவதை ரகுவரன் ரேகா

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)