சனி, 29 டிசம்பர், 2018

சாட்டர்டே போஸ்ட் :- விவிஎஸ் சார் கூறும் ஐந்தில் விளையாதது ஐம்பதில் ..?

இந்த வாரமும் சாட்டர்டே போஸ்டில் மிக அருமையான தகவல் ஒன்றுடன் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் உங்களை சந்திக்கிறார்.

ஐந்தில் விளையாதது அம்பதில் ……… ? மனோஜ்குமார் தன் இரண்டு மகன்களோடு அன்று என் வங்கிக்கு வந்தார். மூத்தவன் எட்டாம் வகுப்பு. இளையவன் ஐந்தாம் கிளாஸ். ஆளுக்கொரு உண்டியலைக் கையில் ஏந்தி இருந்தார்கள். குழந்தைகளுக்குச் சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தச் சிறப்பு முகாம் ஒன்றை எங்கள் வங்கி நடத்தியது. ஒரு வருடம் முன்பு. அப்போது கணக்கு தொடங்கிய ஒவ்வொருவருக்கும் ஒரு உண்டியல் கொடுத்தோம். தகரத்தினால் ஆனதுதான். அடிப்பக்கத்தில் சாவி போட்டுத் திறக்கும் வசதி கொண்டது. அதைத்தான் ஒரு குழந்தை ஃபைவ் ஸ்டார் சாக்கலேட்டை இறுகப் பற்றியிருப்பது போல் கையில் வைத்திருந்தார்கள்.
பல மாதங்களாக இது நடந்து வருகிறது. மனோஜ் வந்ததும் பியூன் பலராமன் வருவார். இரண்டு உண்டியலையும் தனித்தனியாகத் திறந்து சேகரித்த நாணயங்களை எண்ணுவார். சலான் எழுதுவார். பையன்கள் அதில் கையொப்பம் இடுவார்கள். கேஷியரிடம் தொகையைக் கட்டுவார்கள்.


 கவுன்டர் ஃபாயிலையும் பாஸ்புக்கையும் கவுன்ட்டரில் கொடுத்து என்ட்ரீ போட்டுக் கொள்வார்கள். பேலன்ஸை என்ன என்று பார்ப்பார்கள். முகத்தில் ஒளி தோன்றும். தந்தையோடு வீட்டிற்குக் கிளம்பி விடுவார்கள்.

 இது சுமார் ஒரு மணி நேரம் நடக்கும். இரண்டு மாதத்தில் மறுபடியும் உண்டியல் நிறைமாதக் கர்ப்பிணியாகக் கனக்கும். மீண்டும் வங்கிக்கு வருவார்கள்.

 மனோஜ்குமார் எங்களுடைய முக்கியமான வாடிக்கையாளர். ஒரு பெரிய பிஸினஸ்மேனும் கூட. இவ்வளவு பிஸியான நபர் நேரத்தை விரயம் செய்கிறாரோ என்று நான் நினைத்தேன்.

 அவரிடம், “ஸார், இவ்ளோ சிரமப் படுவதை விட அந்த உண்டியலில் தோராயமாக எவ்வளவு இருக்கிறது என்று கணக்கிட்டு ஒரு ரவுண்ட் அமெளண்ட்டாக கணக்கில் கட்டி விடலாமே. உங்க ஆள் மூலமா ஒரு செக்கை அனுப்பினா போதுமே. ஏன் இவ்வளவு மெனக்கெடறீங்க” என்று கேட்டேன்.

 “இல்லை ஸார். இது வேஸ்ட் ஆஃப் டைம் இல்லை. இந்த உண்டியல்ல பணம் சேர்ந்திருக்கே. இவங்களுக்கு எப்படி பைசா வந்தது தெரியுமா ? எங்க வீட்டுக்கு வர்ற பெரியவங்க அன்பளிப்பா ஏதாவது தொகை தருவாங்க.

 அதே மாதிரி நாங்களும் அப்பப்ப கொஞ்சம் பாக்கெட் மனி தருவோம். அதுல கொஞ்சத்த செலவழிச்சிட்டு மீதியை உண்டியல்ல போட்டு வெக்கிறாங்க. செலவழிச்சா கெடைக்கிற சந்தோஷத்த போஸ்ட்போன் பண்றாங்க. ஒரு சின்ன சேக்ரிஃபைஸ். சேமிக்கிற அனுபவம் முழுசா கெடைக்கணுமின்னா இப்படி நேரா வந்துதான் கட்டணும்.  நா செக் மூலமா கட்டினா அது சின்தெடிக் ஃபீலிங்கா போயிடும். எஃபெக்ட் இருக்காது “ என்று விளக்கினார்.

 உண்மைதானே. பூரண அனுபவம்தானே புத்தியில் பதியும். அந்த இரண்டு பிள்ளைகளும் உண்டியலில் காசைப் போட்டது நெல்லை விதைத்ததைப் போன்றது.

 வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தியது விளைந்த கதிரைக் கையில் ஸ்பரிசிப்பதைப் போன்றது. ஐந்து வயதில் இந்த ”விளைச்சலைப்” பார்த்து விட்டால் போதும்.

 ஐம்பது வயதிலும் சேமிக்கும் பழக்கம் தொடரும். ஐந்தில் “விளையாதது ” அம்பதில் விளையுமா என்ன !

டிஸ்கி :- சேமிப்புக்கு உதாரணமா நெல்லை விதைப்பதும் பயிரை ஸ்பரிசிப்பதும் எனக் கூறியது ரசிக்கத்தக்கதாகவும் பொருள் பொதிந்ததாகவும் இருக்கிறது விவிஎஸ் சார். மனதில் பதியும் வண்ணம் சேமிப்பின் அருமை பற்றிக் கூறியதற்கு ரொம்ப நன்றி.

3 கருத்துகள்:

  1. சிறப்பான பகிர்வு. சேமிக்கும் பழக்கம் சிறு வயதில் வந்தால் நல்லது.

    பதிலளிநீக்கு
  2. நன்றி வெங்கட் சகோ

    நன்றி உஷா.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)