புதன், 24 அக்டோபர், 2018

ஆண்டாளின் அண்ணன் படைத்த அக்கார அடிசில். தினமலர். சிறுவர்மலர் - 39.


ஆண்டாளின் அண்ணன் படைத்த அக்கார அடிசில்.

உலகிலேயே பிரதிபலன் எதிர்பாராத உன்னதமான உறவுகளில் ஒன்று அண்ணன் தங்கை உறவு. உடன்பிறந்த சகோதரர்களே சகோதரிகளுக்குச் சீர் செய்ய அலுத்துக் கொள்ளும் காலமிது. ஆனால் உடன்பிறவா சகோதரர் ஒருவர் ஆண்டாளின் வேண்டுதலை நிறைவேற்ற பெருமாளுக்கு அக்கார அடிசில் படைத்த கதை ஒன்று உண்டு. தங்கை பாடிச் சென்றதற்காக ஒன்று இரண்டல்ல ஆயிரம் அண்டாக்கள் நிறைய வெண்ணெயும் அக்கார அடிசிலும் படைத்த அந்தப் பாசக்கார அண்ணன் யார் என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
ஸ்ரீவில்லிப்புத்தூர் என்னும் ஊரில் விஷ்ணுசித்தர் என்பார் வாழ்ந்து வந்தார். ஒரு திரு ஆடிப்பூரத்தன்று அவரது தோட்டத்தில் இருந்த திருத்துழாய்ச் செடியின் அருகில் ஒரு பெண்குழந்தை கிடைத்தது அவருக்கு. கொள்ளை அழகு கொண்ட அக்குழவிக்குக் கோதை என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்.
கோதை நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தாள். ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் கோயிலுக்கு அவள் தந்தை விஷ்ணு சித்தர் தினமும் மலர் கைங்கர்யம் செய்து வந்தார். நந்தியாவந்தனப் பூக்களைத் தொடுத்துக் கெட்டி மாலையாக்கித் தினம் கோயிலுக்குக் கொண்டுபோய்க் கொடுப்பது அவர் தொண்டு. அந்த மாலைகளின் அழகைக் கண்ட கோதை விளையாட்டாய்த் தன் கழுத்தில் அணிந்து கண்ணாடியில் அழகு பார்ப்பார்.

இளம் வயதிலேயே கோதைக்கு பக்தியைப் போதித்து வளர்த்தார் விஷ்ணுசித்தர். கண்ணனுக்காகப் பூமாலையோடு பாமாலையும் புனையும் திறன் வளர்ந்தது அந்தப் பூங்கோதைக்கு. சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஒருநாள் விளையாட்டாய் மாலையை அணிந்திருப்பதைப் பார்த்த விஷ்ணு சித்தருக்குக் கோபம் மேலிடுகிறது. எனவே அவள் சூடிய மாலைகளை பெருமாளுக்குச் சூட்டாமல் விடுகிறார்.
ஆனால் அன்று அவர் கனவில் கடவுள் வந்து அந்த மாலைகளே தனக்கு உகப்பானவை என்கிறார். திருமண வயது வந்தது கோதைக்கு. சோதனைகளும் வந்தது விஷ்ணு சித்தருக்கு.
அவர் மகளோ மானிடரை மணக்கமாட்டேன். கண்ணனை தன் மனதின் மன்னனைத்தான் மணப்பேன் என்று விடாப்பிடியாக நிற்கிறாள். அதுவும் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ரங்கனைத்தான் மணப்பேன் என்கிறாள். என்ன செய்வதென்று புரியாமல் மயங்குகிறார் விஷ்ணு சித்தர்.
தெய்வீகப் பெண்ணைப் பெற்றுவிட்டோமே. அவள் எண்ணத்தை எப்படி நிறைவேற்றுவது என்று கவலையுறுகிறார். அன்றும் விஷ்ணு சித்தரின் கனவில் தோன்றிய பெருமாள் கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்துத் திருவரங்கம் அழைத்துவரச் சொல்கிறார்.
பட்டும்.பொன்னும் பூவும் பூமாலையும் அணிந்து மணப்பெண்ணாகச் சிவிகையில் வந்து இறங்குகிறாள் கோதை. அவள் அழகைக் கண்டு வியக்கிறது திருவரங்கம். தீபதூப ஆராதனைகள் நடைபெற கோதை இறைவனோடு ஐக்கியமாகிறாள்.
ஆண்டவனை மணக்க எண்ணம் கொண்டு அதிலேயே பிடிவாதமாய் நின்று மணந்து கொண்டாள் ஆண்டாள். ஆனால் அவள் திருமணத்துக்கு முன் ஒரு வேண்டுதல் செய்தாள். நாச்சியார் திருமொழி ஒன்றில் திருமாலிருஞ்சோலை நம்பிக்கு ஆயிரம் தடா வெண்ணெயும் அக்கார அடிசிலும் படைப்பதாக வேண்டிக்கொண்டவள் அதைப் படைக்க மறந்து இறைவனோடு சேர்ந்துவிட்டாள்.
இதைப் படித்த ராமானுஜர் “ அடடா இதைச் செய்யத் தவறினால் ஆண்டாள் வாக்குத்தவறியவளாகி விடுவாளே. இறைவனுடன் ஐக்கியமான அவள் எப்படித் திரும்ப வந்து இதையெல்லாம் படைக்க முடியும். ” என வருந்துகிறார்.  
ஆண்டாளைச் சகோதரியாக ஏற்று அந்த வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்க எண்ணுகிறார். ஒன்றா இரண்டா ஆயிரம் தடாக்கள் வெண்ணெயும் அக்கார அடிசிலும் படைக்க முடியுமா.? மிகுந்த ப்ரயத்தனத்தோடு அவற்றையெல்லாம் தயார் செய்து நெய் ஒழுக ஒழுகப் படைத்து வணங்குகிறார். அதன் பின்பே அவர் உள்ளம் நிம்மதி கொள்கிறது. தன் தங்கையின் வேண்டுதல்களை நிறைவேற்றிய களிப்பு மிகுகிறது அவர்க்குள்.
இதைச் செய்து முடித்ததும் அவர் ஆண்டாளின் தரிசனம் பெற ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருக்கும் அவள் கோயிலுக்குச் செல்கிறார். அப்போது ஆண்டாளின் அருள்வாக்காய் “ வாரும் என் அண்ணாவே “ என்ற குரல் ஒலித்தது. தங்கையின் வரவேற்புக் குரல் கேட்டதும் புல்லரித்தது ராமானுஜருக்கு. ராமானுஜர் ஆண்டாளைத் தங்கையாக ஏற்றது பெரிதுதான். அதேபோல் ஆண்டாளும் தனக்காக வேண்டுதல்களை நிறைவேற்றிய ராமானுஜரைத் தமையனாக ஏற்றது அதனினும் பெரிது.
ஆண்டாள் வாழ்ந்த காலத்துக்குப் பின் பலகாலம் கழித்துப் பிறந்தாலும் ராமானுஜர் ஆண்டாளைத் தன் உடன்பிறந்த தங்கையாகவே கருதினார். மேலும் ஒவ்வொரு வருடமும்  அவர் ஸ்ரீபெரும்புதூரில் ஆண்டாளுக்கு விருந்து வைத்து சீர்வரிசை கொடுத்து ஆசீர்வதிக்கும் வைபவம் நடக்கிறது.
மனிதர்கள் தங்கள் சகோதர சகோதரிகளிடம் எப்படி பாசம் காட்டி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறது ராமானுஜர் ஆண்டாளிடம் வைத்த பாசமும் அதை ஆண்டாள் அங்கீகரித்து அவரை அண்ணனாக ஏற்றுக் கொண்ட நேசமும்.
பொன் பொருளை விட உயர்வானது, உலகத்தின் எல்லாச் செல்வங்களையும் விட மேலானது சகோதர சகோதரியர் ஒருவர்மேல் ஒருவர் வைக்கும் பாசமே. கோடிப் பொன் கொடுத்தும் வாங்க முடியாதது இந்தப் பாசம் மட்டுமே. அதனால் குழந்தைகளே உங்கள் உடன்பிறப்புக்களை நேசியுங்கள். அவர்களுக்காக விட்டுக் கொடுங்கள். அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுங்கள். வாழ்வில் ஜெயிப்பீர்கள்.

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 5. 10. 2018  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்..

டிஸ்கி :- 2. அரும்புகள் கடிதத்தில் சாவித்ரியின் கதையைப் ( நம்பிக்கை & மன உறுதி ) பாராட்டிய கங்களாஞ்சேரி, மு. இனியா, அவர்களுக்கு நன்றி. 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)