திங்கள், 3 செப்டம்பர், 2018

தந்தை சொல்லைக் காத்தவன்/தந்தை சொல்மிக்க மந்திரமில்லை. தினமலர். சிறுவர்மலர் - 33.


தந்தை சொல்லைக் காத்தவன்/தந்தை சொல்மிக்க மந்திரமில்லை.

ந்தை சொல்லைக் காக்கவேண்டும் தாயையும் காக்க வேண்டும். என்ன செய்வது?  முதலில் தந்தை சொல்லைக் கேட்போம் பின் தாயைக் காப்போம் என முடிவெடுத்துக் கீழ்ப்படிந்தான் ஒரு இளம் துறவி. அவன் பெயர் பரசுராமன். அவன் சந்தித்த இக்கட்டு என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

திரேதாயுகத்தில் ஜமதக்கினி என்ற முனிவர் இருந்தார். அவர் மனைவியின் பெயர் ரேணுகாதேவி. அவர்களுக்கு நான்கு மகன்கள். நான்காவது மகனின் பெயர்தான் பரசுராமன். அவன் தாய் தந்தை இருவர் மேலும் பாசம் கொண்டிருந்தான்.

சிவபெருமானை நோக்கித் தவமிருந்து அவருக்கு கோடாலி போன்ற பரசு என்றொரு ஆயுதம் கிடைத்தது. அந்த ஆயுதத்தைத் தன் வலது கையில் எப்போதும் வைத்திருப்பார். தலையில் ஜடாமுடியும் துறவிகளுக்கே உரிய காவி உடையும் அணிந்திருப்பார். உடல்பலமும் மனோபலமும் மிக்கவர்.

மதக்கினி முனிவர் செய்யும் பூஜைபுனஸ்காரங்களுக்கு மகன்களும் மனைவி ரேணுகாதேவியும் உதவி செய்வர். அதிலும் ரேணுகாதேவி தினமும் ஆற்றங்கரை சென்று பச்சை மண்ணைப் பிசைந்து பானை வனைந்து அதில் நீர் கொண்டு வந்து ஜமதக்கினி முனிவரின் பூஜைக்குக் கொடுப்பார்.

ஒருநாள் ரேணுகாதேவி அதிகாலையில் ஆற்றங்கரைக்குச் சென்று அதேபோல் பச்சை மண்ணைக் குழைத்துப் பானை செய்ய ஆரம்பித்தார். சூரியன் உதிக்கும் வேளையில் அந்தப்பானையின் மேல் நிழல் ஒன்று விழுந்தது. எதன் நிழல் மறைக்கிறது என்று அண்ணாந்து பார்த்தார் ரேணுகா தேவி. ஒரு கந்தர்வ லோக மனிதன் பறந்து சென்றுகொண்டிருந்தான். அவனின் நிழல்தான் அந்தப் பானையின் மீது விழுந்தது என்று புரிந்தது அவளுக்கு.

ஐயகோ இதென்ன அண்ணாந்து பார்க்கும் வேளையில்  அவள் வனைந்து கொண்டிருந்த பானை தன்னையறியாமல்அவள் கையேபட்டு  சிதைந்து உருக்குலைந்து போய்விட்டதே. என்ன செய்வது ? ஜமதக்கினி ரிஷி பூஜைக்காகக் காத்திருப்பாரே. சிதைந்த பானையில் நீர் முகர்க்க முடியாதே என வருந்தினாள் ரேணுகாதேவி .

ஒரு நாளில் ஒரு முறைதான் அப்படிப் பானை செய்யமுடியும். கையைப் பிசைந்து கண்ணைக் கசக்கிக்கொண்டிருந்தாள் ரேணுகாதேவி. கோபக்காரக் கணவரான ஜமதக்கினி முனிவரை நினைத்துக் குடிலுக்குத் திரும்பிச் செல்ல அச்சமாயிருந்தது அவளுக்கு.

பூஜைக்கு நேரமாகிவிட்டதே . இன்னும் இந்த ரேணுகாவைக் காணோமே என்னாயிற்று என்று தான் இருந்த இடத்திலிருந்தே யோசித்த முனிவரின் ஞானதிருஷ்டிக்கு நடந்த நிகழ்ச்சிகள் புலப்பட்டன.

வந்ததே மகா கோபம் அவருக்கு. என்ன ஒரு அசிரத்தை. பூஜை கெட்டுவிட்டதே. பானையைச் சிதைத்த ரேணுகையை என்ன செய்யலாம். கோபத்தில் அவருக்குக் கண்மண் தெரியவில்லை. அங்கே இருந்த பரசுராமரின் கோடாலியை எடுத்தார். மூத்த மகனை அழைத்தார். அவனது தாய் ரேணுகையை வெட்டிவிட்டு வரும்படிப் பணித்தார். அவன் தாய் மேலுள்ள பாசத்தால் மறுத்தான். கோபம் கொண்ட முனிவர் அவனைக் கல்லாக்கினார்.

அடுத்த மகனை அழைத்தார். அவனும் மறுத்தான். அவனையும் சாபம் இட்டுக் கல்லாக்கினார். மூன்றாவது மகனையும் அழைத்தார் அவனும் மறுக்கவே கோபம் பொங்க அவனையும் கல்லாக்கினார் ஜமதக்கினி முனிவர்.

பேரிலேயே அக்கினி இருப்பதால் அவருக்குக் கோபம் அனலைப்போலப் பொங்கிக் கொண்டிருந்தது. நான்காவது மகனை அழைத்தார். அவன் அவரது பிரியத்துக்குரியவன். அன்னையிடமும் அதிக பாசம் உள்ளவன். அவனுக்கும் இக்கட்டு நேர்ந்தது.

அவனும் மறுப்பான் என்று  எண்ணியபடியே அவனது தாயின் தலையை அந்தக் கோடாலியால் துண்டித்து வருமாறு கூறினார். ஆனால் நான்காவது மகனான பரசுராமன் மறுக்கவில்லை. மனதைக் கட்டுப்படுத்தினார். தந்தையின் கையில் இருந்து அந்தக் கோடாலியை வாங்கினார்.  ஒரு தடுமாற்றமும் இல்லாமல் கொடுமையான அந்த ஆணையை நிறைவேற்ற ஆற்றங்கரை நோக்கி நடந்தார்.

அங்கே தன் கண்கலங்கி நிற்கும் தன் தாயைப் பார்த்தார். பாசம் பொங்கியது. தந்தையின் ஆணையை நினைத்தார். கண்ணை மூடிக்கொண்டு கோடாலியால் தாயின் தலையைத் துண்டித்தார். அதை எடுத்துக் கொண்டு தந்தையின் காலடியில் கொண்டுவந்து போட்டார்.

”அருமை மகனே. தந்தையின் ஆணையை நிறைவேற்றினாய். உனக்கு இரு வரங்கள் அளிக்கிறேன். என்ன வேண்டும் சொல் “ என்று பிரியத்துடன் வினவினார் கோபம் அடங்கி சாந்தமான தந்தையான ஜமதக்கினி முனிவர்.

“தன்யனானேன் தந்தையே.  என் அருமைச் சகோதரர்களை உயிர்ப்பிக்க வேண்டும். இது முதல் வரம். என் ஆருயிர்த் தாயையும் மன்னித்து உயிர்ப்பிக்க வேண்டும் இதுவே இரண்டாவது வரம். “ என்று அட்சர சுத்தமாக கம்பீரமாகத் தெளிவாக தன் வரங்களைக் கோரினார்.

வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தார் ஜமதக்கினி முனிவர். தான் சொன்னதைச் செய்தவனுக்குத் தான் கொடுத்த வரத்தை இனி மறுக்க முடியாதே.  நிறைவேற்றியே ஆக வேண்டுமே.  புத்திசாலியும் பாசக்காரனுமான மகனைப் பார்த்தார். ”உன் நிதானம் ஜெயித்தது. என் கோபம் தோற்றது. உன் நிதானத்தாலும் பணிவாலும் தந்தை சொல்லுக்குக் கீழ்ப்படிந்ததாலும் என்னை வென்றாய். நீ கேட்டவைகளை நிறைவேற்றுவேன் பரசுராமா “ என்று கூறி பரசுராமரின்  கல்லான சகோதரர்களை உயிர்ப்பித்தார்.

பரசுராமரிடம் அவர் தாய் ரேணுகையின் தலையை உடலோடு ஒட்டி வைக்கச் சொல்லிய ஜமதக்கினி ரிஷி கமண்டலத்தில் இருந்து நீரைத் தெளித்து அவளையும் உயிர்ப்பித்தார். தாய் ரேணுகாதேவி உயிர்பெற்றதும் அவரைப் பணிந்த பரசுராமர் தந்தை ஆணைக்காக ஈவிரக்கமில்லாமல் செயல்பட்ட தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். ரேணுகாதேவியும் தன் புதல்வன் பரசுராமனை மன்னித்து அரவணைத்தார்.

தண்டிக்கப்பட்டது தாயே ஆனாலும் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று துணிந்து செயல்பட்ட பரசுராமர் போற்றுதலுக்குரியவர்தானே குழந்தைகளே.

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 24. 8. 2018  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்..

டிஸ்கி 2.:- அரும்புகள் கடிதத்தில் விளையாட்டு வினையாகும் என்ற கதையைப் பாராட்டிய கைலாஷ்நகர் எஸ். பி. ஜெயசூர்யா அவர்களுக்கு நன்றி. :) 

2 கருத்துகள்:

  1. இப்படி புராணக்கதைகதைகள் சொல்லியே நம் குழந்தைகளிடம் மறுப்புஇல்லாத குணத்தை வளர்க்கிறோம் சுயமாக சிந்திக்க விடுவதில்லை நானும் அவதாரக்கதைகளில் எழுதி இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. பத்ரிக்கையில் கேட்டதற்காக எழுதி வருகிறேன் பாலா சார் :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)