திங்கள், 27 ஆகஸ்ட், 2018

ஸ்யமந்தகமணி படுத்திய பாடு. தினமலர். சிறுவர்மலர் - 32.


ஸ்யமந்தகமணி படுத்திய பாடு.

ண்டவனைக் கூட அபவாதத்தில் ஆழ்த்திய பொருள் என்றால் அது ஸ்யமந்தகமணி என்றொரு ரத்னஹாரம்தான். அதற்கு என்ன சிறப்பு அது என்ன அபவாதத்தைக் கொண்டு வந்தது என்று பார்ப்போம் குழந்தைகளே.

துவாரகையில் சத்ராஜித் என்பவர் வசித்துவந்தார். அவருடைய பக்தியைப் பாராட்டி சூரியபகவான் கொடுத்ததுதான் ஸ்யமந்தகமணி என்றொரு ஹாரம். அது சாதாரண ஹாரம் மட்டுமல்ல. அது இருக்கும் இடம் மங்கலம் பொங்கும். ஆரோக்கியம் அளிக்கும் அது மட்டுமல்ல தினமும் எட்டு தோலா தங்கமும் கொடுக்கும்.

இப்பிடியாகப்பட்ட பொருள் ஒரு சாதாரண மனிதனிடம் இருப்பதை விட துவாரகையின் ராஜாவான உக்ரசேனரிடம் இருந்தால் தேச நலனுக்கும் நாட்டு மக்களின் செழிப்புக்கும் உதவுமே என்று கிருஷ்ணர் நினைத்தார். அதனால் அதை ராஜா உக்ரசேனருக்கு வழங்குமாறு அறிவுறுத்தினார்.

ஆனால் சத்ராஜித்துக்கு அதைக் கொடுக்க விருப்பம் இல்லை. அந்த ஸ்யமந்தகமணியை அணிந்துகொண்டு அவனது தம்பி ப்ரசேனன் என்பவன் வேட்டைக்குச் சென்றான். அங்கு அவன் மிருகங்களைத் துன்புறுத்தியதால் ஸ்யமந்தகமணியின் புனிதம் குறைந்தது. ஒரு சிங்கம் அவனை வேட்டையாடி அந்த மணியை வாயில் கவ்விச் சென்றது.


அந்த ஸ்யமந்தகமணி லேசுப்பட்டதா என்ன.? ரத்னஹாரமாயிற்றே. அது சென்ற திசையெல்லாம் ஒரே ஒளிவெள்ளம். கானகத்தையே வெளிச்சத்தில் மூழ்கடித்தது. அந்த ஒளியைப் பார்த்த ஜாம்பவான் என்ற கரடித் தலைவர் அந்த சிங்கத்தை அடித்து அதைப் பறித்துத் தன் மகன் சுகுமாரனுக்கு விளையாடக் கொடுத்தார்.

ஸ்யமந்தகமணி ஹாரம் அணிந்து வேட்டைக்குச் சென்ற தன் தம்பி ப்ரசேனனைக் காணாமல் வருந்திக் கொண்டிருந்தார் சத்ராஜித். ஒருவேளை ஸ்யமந்தகமணிக்காக கிருஷ்ணர் ப்ரசேனனைக் கொன்றிருப்பாரோ என்று வேறு சந்தேகம். அதனால் அவர்தான் தன் தம்பி ப்ரசேனனை ஏதோ செய்துவிட்டதாக அபவாதம் கிளப்பினார்.

”சின்னக் குழந்தையில் ஆயர்பாடியில் வெண்ணெய் திருடித் தின்றவன் தானே. திருடினாலும் திருடியிருப்பான் “ என்று ஊராரின் பழிச்சொல்லும் கேட்க நேர்ந்தது. இதையெல்லாம் கேட்டு நொந்த கிருஷ்ணர் அந்த ஸ்யமந்தகமணியைத் தேடிப் புறப்பட்டார்.

அந்த வனாந்திரத்தில் ஒரு குகைக்கருகில் குட்டிக் கரடி ஒன்றின் கழுத்தில் அந்த ஒளிவீசும் ஸ்யமந்தகமணி அணிவிக்கப்பட்டிருந்தது. மின்னல்போல் பளீரிடும் அதன் ஒளியால் கவரப்பட்டுப் பிடித்து ஆட்டியவாறு வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. அக்குழந்தையினருகே கிருஷ்ணர் செல்லும்போது அந்தக்குகையிலிருந்து வெளிப்பட்டு ஜாம்பவான் வந்துகொண்டிருந்தார்.

ஸ்யமந்தகமணிக்காகத்தான் அவர் வந்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட ஜாம்பவான் கிருஷ்ணரின் மேல் பாய்ந்து யுத்தத்தை ஆரம்பித்தார். சும்மா ஒருநாள் இரண்டு நாள் அல்ல இருபத்தியெட்டு நாட்கள் சண்டை சண்டை சண்டையோ சண்டை. உருண்டு புரண்டு கட்டிப்பிடி சண்டை, கரடிப்பிடி சண்டை நிகழ்ந்தது அந்தக் குகைக்குள். துணைக்கு வந்த யாதவ மக்கள் கிருஷ்ணர் திரும்பமாட்டார் என நினைத்து குகைக்கதவை வேறு பாறையால் மூடிவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

என்ன கொடுமை. பாருங்கள். உரிமையில்லாத பொருள் படுத்தும்பாடு. ஒரு கட்டத்தில் சக்தியிழந்த ஜாம்பவான் தன்னுடன் போரிடுபவர் கிருஷ்ணர் என்று உணர்ந்து அந்த மணியை அவருக்கே கொடுக்கிறார். அதைப் பெற்ற கிருஷ்ணர் உடனடியாகக் கொண்டுபோய் தன்மேல் ஏற்பட்ட பழிச்சொல் நீங்க வேண்டும் என்று சராஜித்திடம் ஒப்படைக்கிறார்.

ஜாம்பவான் புத்திரி ஜாம்பவதியையும் சராஜித்தின் புத்திரி சத்யபாமாவையும் கிருஷ்ணருக்கே அவர்கள் மணமுடித்துக் கொடுத்துவிட்டார்கள். இத்தனை நடந்தென்ன.. சத்யபாமா மூலம் அந்த ஸ்யமந்தகமணி பின்னர் கிருஷ்ணருக்கே கிடைக்கலாம் என்று எண்ணிய  அவருடைய அத்யந்த நண்பர்களான க்ருதவர்மா, அக்ரூரர் ஆகியோருக்கு அழுக்காறு வருகிறது.

அவர்கள் சததன்வா என்ற யாதவரிடம் அந்த ஸ்யமந்தகமணியைக் கைப்பற்றி வருமாறு சொல்கிறார்கள். கிருஷ்ணரோ அஸ்தினாபுரத்துக்கு தன் அத்தை குந்தியைப் பார்க்கச் சென்றிருக்கிறார். அச்சமயம் சராஜித்தின் வீட்டில் புகுந்து அவரைக்  கொன்றுவிட்டு அந்த ஸ்யமந்தகமணியை சததன்வா எடுத்துச் செல்கிறார்.

தன் தந்தை இறந்ததைப் பார்த்த பாமா துக்கத்தில் ஆழ்கிறாள். கிருஷ்ணர் வந்ததும் தன் தந்தையைக் கொன்றவனைத் தண்டிக்கும்படிக் கூறுகிறாள். அதற்குள் சததன்வா அந்த ஸ்யமந்தகமணியை எடுத்துச் சென்று அக்ரூரரிடம் கொடுத்துவிட்டு கிருஷ்ணர் கண்முன் எதிர்ப்படாமல் மறைந்து ஓடுகிறான். ஆனால் தன் சகோதரன் பலராமருடன் சேர்ந்து அவனை எப்படியோ கண்டுபிடித்துத் தண்டித்து அவனை வதம் செய்கிறார் கிருஷ்ணர்.

ஆனால் அவன் வசம் அந்த ஸ்யமந்தகமணி இல்லை. எவ்வளவோ தேடித் தேடிப் பார்த்தும் இல்லை என்று கிருஷ்ணர் சொன்னாலும் அவரது சகோதரரான பலராமரே அதை ஒப்புக்கொள்ளாமல் கிருஷ்ணர் எடுத்துக் கொண்டார் என நினைக்கிறார். ஊராரும் சேர்ந்து தூற்ற ஆரம்பிக்கிறார்கள். இப்படியான அபவாதங்கள், அவலங்கள் அந்த ஸ்யமந்தகமணியினால் கிருஷ்ணருக்கு நேர்ந்தன.

இதையெல்லாம் பார்த்து ஸ்யமந்தகமணியை வைத்திருந்த அக்ரூரருக்குப் பயம் பீடிக்க அவர் துவாரகையிலிருந்து புறப்பட்டு காசியை அடைந்தார். அங்கு அந்த ஸ்யமந்தகமணி அவருடைய நல்ல எண்ணங்களால் சூழப்பட்டு பழையபடி மங்களம், மனை நலம், தங்கம், ஆரோக்கியம், எல்லாம் தர ஆரம்பித்தது.

அது இருக்கும் இடத்தில் அகத்தூய்மையையும் புறத்தூய்மையையும் கடைப்பிடிக்க வேண்டும். புறத்தூய்மையைக் கடைப்பிடிக்காத்தால் ப்ரசேனன் அழிந்தான். அகத்தூய்மையைக் கடைப்பிடிக்காததால் சத்ரஜித் அழிந்தான். அடுத்தவர் பொருளை மகாராஜாவான தன் தாத்தா உக்ரசேனருக்குத் தரச் சொன்னதால் மகாஅவதாரமான ஸ்ரீகிருஷ்ணரே அபவாதம் அடைந்தார்.  
  
ஆண்டவனே ஆனாலும் இவ்விஷயத்தில் துன்பம்தான் நிகழும் எனவே என்றும் அடுத்தவர் பொருள் மேல் ஆசை வைக்கக் கூடாது என்பதையும் தெரிந்துகொள்வோம் குழந்தைகளே.

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 17. 8. 2018  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்.

டிஸ்கி:- அரும்புகள் கடிதத்தில் சபரியின் கதையைப் பாராட்டிய வாசகர் வாழைப்பந்தல் அ. ஆரிமுத்து அவர்களுக்கு நன்றி. 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)