செவ்வாய், 5 ஜூன், 2018

தெலுங்கானா பொம்மலாட்டமும் துள்ளியெழுந்த பாம்பும்.

ஹைதராபாத் ஷில்பாராமத்தில் சோகன்லால் பட் இயக்கிய பொம்மலாட்டத்தில்தான் இத்தனை கலாட்டாவும். இதனை தெலுங்கில் காத்புட்லி ( KATHPUTLI ) என்கிறார்கள்.

தோல்பாவைக் கூத்துகள், பொம்மலாட்டங்கள் ஆகியன இரண்டு மூன்று ( நௌதங்கி சாலை ஓர உணவகமான சைபர் பேர்ள் ( CYBER PEARL ) மற்றும் மாதாப்பூர் ஒலிம்பியா மித்தாய் ஷாப்பிலும்) உணவகங்களிலும் நடப்பதாகக் கூறுகிறார்கள்.

ஹைதையில் பொது நிகழ்வுகள், திருவிழாக்கள், கலாச்சார கிராமத்தின் கோடைத்திருவிழா, மக்கள் கூடுமிடங்கள், சந்தை ஆகியவற்றில் கூட இந்த பொம்மலாட்டங்கள் ( பப்பட் ஷோ ) நிகழ்த்தப்படுகின்றன. ஹைதை மக்கள் மிக விரும்பிப் பார்க்கும் ஷோ இது எனலாம். குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்த ஷோவும் கூட.


பொதுவாக நடக்கும் பொம்மலாட்டங்கள் அனைத்தும் கயிறு கொண்டு இயக்கப்படுபவை. ஆனால் ஷில்பாராமில் அந்த பப்பட் ஷோ நடக்கும் தளத்தையே அசைத்தும் ( நீளக்கட்டை குறுக்குக்கட்டை கொண்ட பார்களை  இணைத்து அவற்றைக்)  கைகளினால் பின்புறமிருந்து அசைவு கொடுத்தும் நிகழ்த்துகிறார்கள்.

பின்புறமிருந்து ஒருவர் டோலி இசைத்துப் பாட தோல்பாவைக் கலைஞர் அந்தப் பொம்மைகளை ஆட்டுவிக்கிறார்.

கதை மாந்தர்கள் பொதுவாக ராஜாக்களைப் போன்ற உடைகளையே உடுத்தி இருக்கிறார்கள். எல்லாருக்கும் கால்களும் ஷீக்களும் கூட உண்டு. இருந்தாலும் அது தெரியாத அளவு தழைய தழைய உடை. கதை சொல்லும் ஜோரிலும் பாட்டுபாடும் ஜோரிலும்  ராஜாக்கள் சல்மான்கான், அமீர்கான், ஷாரூக் கானாகி பார்வையாளர்களை திடீர் உற்சாகத்துக்கு உள்ளாக்குகிறார்கள்.

அப்புறமென்ன அது என்ன கதையாக இருந்தாலும் கரகோஷம்தான்.

இந்தக் கதை நடுவில் பொம்மைகளைப் பிணைக்கும் கயிறை நாம் தேடிக் கொண்டிருக்க நடுவில் ராஜாவின் எதிரில் ஒரு பெண் முளைத்து மகுடி வாசிக்கத் துவங்க ஒரு மலைப்பாம்பும் உள் நுழைந்து மகுடிக்கு ஆடித் துள்ளித் துள்ளி எழுந்தது. இதற்கு அவர்கள் நாகினா படத்தின் தீம் மியூசிக்கையும் பாடலையும் வாசித்தார்கள். !

மன்னர் அல்லது வீரர்கள் வெட்டப்போகிறார்கள் என்று பார்த்தால் அவர்கள் கடைசிவரை கதை கேட்டு நம்மைப் போலவே பாம்பைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மாறி மாறி நடுவில் நிற்கும் இருவரும் நமக்குப் புரியாத தெலுங்கில் வேறு மாட்லாடினார்கள். :)

அடுத்த ஷோவுக்காக மரங்களில் தொங்கும் பொம்மலாட்ட ராஜாக்கள்.

மன்னர்களின் வீரம், விடுதலைப் போராட்டம் மட்டுமல்ல, பெண் வீராங்கனைகளின் கதை, செவி வழி நாட்டுப்புறக்கதைகள், மற்றும் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் , விழிப்புணர்வுக் கதைகள் ஆகியனவும் நிகழ்த்தப்படுது. பொதுவாக தோல்களில் செய்யப்படும் உருவங்களுக்கு பளபளா உடைகள் உடுத்தி பொம்மைகளை உருவாக்குகிறார்கள். இக்கலை ராஜஸ்தான், குஜராத்திலிருந்து வந்தாகச் சொல்கிறார்கள். குழந்தைகளுக்கும் இதைக் கற்பிக்க ஷில்பாராமம் கோயா பொம்மலாட்டா பப்பட்டரி வொர்க்‌ஷாப் ஒன்றை நிகழ்த்தியது.

பாரம்பரிய தெருக்கூத்துக் கலைகள், நாட்டுப்புறக்கலைகளை வளர்க்க உருவாக்கப்பட்ட ஷில்பாராமம் கோடை காலத்தில் கொடிகட்டிப் பறக்கிறது. நிகழ்ச்சிகள் வெய்யிலோடு சேர்ந்து அனல் பறக்கின்றன. கலை வளர்ப்போம் கொல்லர் உலை வளர்ப்போம் என்று பாரதி பாடியது இவர்களுக்காகவும் இருக்கும். :) 

2 கருத்துகள்:

  1. காத்புட்லி பொம்மைகளோடு கைகோர்த்து நடனமாடிய நிறைவு தேனம்மை.நன்றி

    பதிலளிநீக்கு
  2. நன்றி பாலா !

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)