செவ்வாய், 26 ஜூன், 2018

சிரத்தைக்கு எடுத்துக்காட்டு சிரவணகுமாரன். தினமலர் சிறுவர்மலர் - 23.


சிரத்தைக்கு எடுத்துக்காட்டு சிரவணகுமாரன்.

வித்தைகளைக் கற்றுக் கொள்வதில் சிரத்தை உள்ளவர்களைப் பார்த்திருக்கிறோம். விளையாட்டில் கூட சிரத்தை எடுத்து விளையாடி வெற்றிக் கோப்பைகளைக் கைப்பற்றுபவர்களைப் பார்த்திருக்கிறோம். படிப்பில் சிரத்தை எடுத்து சூரப்புலி என்று பட்டம் பெற்றவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் பெற்றவர்களின் மேல் பக்திசிரத்தை எடுத்து சேவை செய்த ஒருவனைப் பற்றிக் கூற வேண்டுமானால் அதில் சிரவணகுமாரன்தான் முதலிடம் வகிப்பான். யார் அந்த சிரவணன். அப்படி அவன் என்ன செய்தான்?

யோத்தி மாநகரின் கானகம் அது. அங்கே உலவிய துஷ்ட மிருகங்கள் நகருக்குள்ளும் புகுந்த மக்களைத் தொல்லைப்படுத்தின. முற்றி விளைந்த பயிர்களை யானைகள் கபளீகரம் செய்தன. கால்நடைகளை புலிகள் , சிங்கங்கள் வேட்டையாடின. மக்கள் மன்னனிடம் முறையிட்டனர், அந்தத் தொல்லைகளில் இருந்து விடுவிக்கும்படி.

கானக மிருகங்களை வேட்டையாடப் புறப்பட்டார் தயரத சக்கரவர்த்தி. எதிர்நோக்கப் போகும் இன்னலைப் புரியாமல் அவரது குதிரையோ படை பட்டாளங்களை விட்டு இருண்ட கானகத்தின் உள்பகுதிகளுக்குப் பாதை மாறிப் பிரிந்து வெகுதூரம் சென்றுவிட்டது. நடை தளர்ந்த குதிரையை விட்டுக் கீழே இறங்கினார் சக்கரவர்த்தி, எங்கோ ஒரு யானை நீரருந்தும் சத்தம் குபுக் குபுக் எனக் கேட்டது. அச்சத்தம் வந்த இடம் நோக்கி தயரதரின் அம்பு பாய்ந்தது.


ஐயகோ இதென்ன சிறுவன் ஒருவனின் அபயக்குரல் கேட்கிறதே.. விரைந்தார் தயரதர். அங்கே இருந்த மடுவின் கரையில் பானை ஒன்று உருண்டபடி கிடக்க ஒரு சிறுவன் அவரது அம்பு பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தான். அவன் கண்கள் ”ஏன் இந்த அநியாயத்தை எனக்கு நிகழ்த்தினாய்/” என்று கேட்கின்றன. அவனால் பேசமுடியவில்லை. இருந்தும் கஷ்டப்பட்டு அவரிடம் அந்தப் பானையைக் காட்டி.

”இதில் நீர் முகர்ந்து இக்கானகத்தில் தாகத்தோடு இருக்கும் என் பெற்றோரிடம் தாங்கள் யார் என்று சொல்லாமல் கொடுத்து அவர்கள் தாகத்தை முதலில் தணியுங்கள். “ என்று திக்கித் திணறிச் சொல்கிறான். உடனேயே அவன் தலை தொய்ந்துவிடுகிறது.

இதைப் பார்த்து இன்னும் அதிர்கிறது அவரது உள்ளம். பேரரசன்தான் எனினும் பெற்ற மகனைக் கொன்ற அவரை அவர்கள் எவ்விதம் பொறுத்துக் கொள்வார்கள். விதியை நொந்தபடி அக்குடத்தில் நீர் முகக்கிறார். குபுக் குபுக் என யானை குடிப்பது போல நீர் நிரம்புகிறது குடத்தில்.

நொந்த மனதுடன் நைந்த நடையுடன் அவர்களை அந்த இருண்ட கானகத்துள் தேடி அலைகிறார். சூரியவெளிச்சம் பாய்ந்துகொண்டிருந்த ஒரு இடத்தில் ஒரு முதிய தம்பதி அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் பக்கத்தில் காவடிபோன்ற ஒன்றும் கிடக்கிறது. அதில் இரு கூடைகள் பிணைக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள்தான் அச்சிறுவனின் பெற்றோராய் இருக்கவேண்டும்.  

“என்னது நம் மைந்தன் சிரவணனை இன்னும் காணோமே.  காட்டு விலங்குகளின் ஒலி வேறு கேட்கிறது. ஏதோ பரிவாரங்களின் அலைச்சல் வேறு மிக லேசாகக் காதுகளில் பட்டது. “ என்கிறார் அச்சிறுவனின் தந்தை சாந்தனு.

”கண் தெரியாத நம்மைத் தோளில் சுமந்து இவ்வளவு தூரம் வந்திருக்கிறான் நமது மகன். நாம் பார்க்க விரும்பிய ஒவ்வொரு புனித தலத்தையும் காட்டிக்கொண்டு வருகிறான் கண்ணுக்குக் கண்ணான மகன். சீக்கிரம் வந்துவிடுவான் “ என்கிறார் அவனது தாய் ஞானவந்தி.

“மிகவும் தாகம் எடுக்கிறது. சிரவணனின் குரல் கேட்டால் அது கூட தீர்ந்துவிடும். சிரவணா.. எங்கே இருக்கிறாயப்பா. சீக்கிரம் வா..”

ஆசையோடு அழைக்கும் அவர்கள்முன் நிற்கக்கூடக் கூசியது தசரத சக்கரவர்த்திக்கு. என்னது இவர்களுக்குக் கண்வேறு தெரியாது. நடக்கவும் இயலாதவர்களா ? இவர்களின் கண்போன்ற புதல்வனைக் கொன்றுவிட்டேன் என்று சொன்னால் இவர்கள் நீர் அருந்த மாட்டார்கள் எனக் கருதி ஒன்றும் சொல்லாமல் நீர் நிறைந்த பானையை நீட்டுகிறார்.

“அப்பா சிரவணா. எவ்வளவு நேரம் ஆகிவிட்டது. நல்லது கண்மணியே.. நீ வந்தது” என்று கூறி தன் மகன் என நினைத்து ஆதூரமாகக் கரம் பற்றிய ஞானவந்தி உடனடியாகக் கையை உதறுகிறார்.

விதிர்விதிர்த்து எழ முயல்கிறார். “ யார் நீ.. யார் நீ. எங்கள் சிரவணன் எங்கே. ?”

அவரது பதற்றம் சாந்தனுவையும் தொற்றிக் கொள்ள அவரும் கோபத்தோடும் குழப்பத்தோடும் கேட்கிறார். “ யார் நீ.. எங்கள் மைந்தன் சிரவணன் எங்கே. அவனை என்ன செய்தாய். ? நீ ஏன் நீர் முகர்ந்து வருகிறாய். ?”

”ஐயன்மீர் நான் அயோத்தியின் மன்னன் தசரதன். என் மக்களுக்குக் கானக விலங்குகளால் துன்பம் நேரிட்டது. அதை நீக்க வேட்டையாட வந்தேன். நீங்கள் நீர் அருந்துங்கள்” என்கிறார்.

சிரவணனது வயதான பெற்றோரோ மறுத்துத் தலையசைத்துக் கண்ணீர் பொங்கக் கேட்கிறார்கள். “ எல்லாம் சரி.. எங்கள் மைந்தன் எங்கே. ? என்னாயிற்று அவனுக்கு. “ சுருங்கிய கன்னங்களில் வற்றாமல நீர் வழிந்துகொண்டே இருக்கிறது.

”யானை நீர் முகர்க்கும் சத்தம் என நினைத்துத் தவறுதலாய் நான் எய்த அம்பு தங்கள் அன்பிற்குரிய குமாரனின் உயிர் பறித்தது. “ சொல்லத் துணிவற்றுப் போனாலும் ஒரே மூச்சில் சொல்லி முடித்துத் தலை கவிழ்ந்தார் தசரதச் சக்கரவர்த்தி.

“ ஆ.. என்னது இதென்ன அக்கிரமம்..ஏனிப்படிச் செய்தாய் ? சிரவணா சீக்கிரம் வந்து இதெல்லாம் பொய் எனச் சொல்லப்பா.. “ கதறுகிறார்கள் இருவரும். எங்கிருந்தும் அவர்கள் மைந்தன் குரல் கேட்கவில்லை. திசைதோறும் துழாவுகின்றன அவர்களின் கண்களும் கரமும்.

அவர்களின் தேடுதல் பார்த்துப் பதைபதைப்பாய் இருக்கிறது தசரத சக்கரவர்த்திக்கு. “ உங்கள் மகனை என்னால் திருப்பித் தர இயலாது. ஆயினும் மகன் போல் உங்களைக் காக்க எண்ணுகிறேன். “

”ஆயிரம்பேர் மகனாய் வந்தாலும் அவனுக்கு ஈடாகுமா. ?அவந்தான் எங்கள் உலகம். எங்கள் ஊன்றுகோல் எங்கள் கண்கள். எங்கள் உயிருக்குயிரானவன்.. அவனைப் பிரிந்து ஒரு கணம் கூட நாங்கள் உயிர்தரிக்க மாட்டோம்.”

”ஏ இறையே எங்களுக்குத்தான் கண்ணில்லை என்றால் உனக்குமா கண்ணில்லை.எங்கள் பெருஞ்சொத்தும் பேருலகமுமான அவனைப் பிரித்தாயே. எங்களையும் அவனோடு எடுத்துக் கொள் “. என்று அவர்கள் கதறி அழுது வீழ்ந்து மரிக்கிறார்கள்.

சில கணங்களில் நிகழ்ந்த இந்நிகழ்ச்சிகளால் மனத்துயருற்ற தசரதச் சக்கரவர்த்தி சாகுந்தருணத்திலும் அம்பெய்து கொன்ற தன்னை ஏதும் சொல்லாமல் வீழ்ந்த அவர்களைப் பார்க்கிறார். அதைவிட தான் இறந்தாலும் தன் தாய் தந்தையரின் தாகம் தீர்க்கச் சொன்ன சிரவணனையும் எண்ணிப் பார்க்கிறார். தந்தைதாய்ப் பாசத்தில் விஞ்சிய அவனுக்கு ஈடாக ஒருவரையும் சொல்ல முடியாது என்ற முடிவுக்கு வருகிறார்.

சக்கரவர்த்தியே மகனாய்க் கிடைத்தாலும் வேண்டாம் என மறுத்த பெற்றோருக்கு மகனான சிரவணன் பக்திசிரத்தையும் சேவையும் பாருள்ள அளவும் பேசப்படும் என்பதில் ஐயமில்லை.  

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 15. 6. 2018  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்.

2 கருத்துகள்:

  1. நன்றி ஜெயக்குமார் சகோ.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)