திங்கள், 11 ஜூன், 2018

பசிப்பிணி போக்கிய பெண் துறவி. தினமலர் சிறுவர்மலர் - 21.

பசிப்பிணி போக்கி  (பவத்திறம் அறுத்த) பெண் துறவி.

புத்த விஹாரங்கள் ஸ்தூபிகளோடு உயர்ந்து நிற்கின்றன. காவி உடை உடுத்திய பிக்குகள் வரிசையாக வந்து புத்தம் சரணம் கச்சாமி. தன்மம் சரணம் கச்சாமி எனக் கூறி வழிபட்டுச் செல்கிறார்கள். எங்கெங்கும் புத்த பிக்குகள், பிக்குணிகள் காணப்படுகிறார்கள்.

பவத்திறம் அறுத்தல் என்றால் பிறப்பறுக்க வேண்டுதல். இளமை, யாக்கை, செல்வம் இம்மூன்றும் நிலையில்லாதது என்பதை உணர்ந்த அத்துறவிகளுள் சின்னஞ்சிறு பெண் துறவியும் நடந்து செல்கிறாளே. அவள் முகத்தில் பெரும் அமைதியும் பேரன்பும் பொலிகிறதே. இளம் வயதில் துறவியானாலும் எந்த இடசங்கத்தையும் பொருட்படுத்தாத வீரம் தெரிகிறதே. கம்பீரமான அந்தப் பெண் துறவி யார். ? அவள் இளமைக்கு ஏற்பட்ட இடைஞ்சல்களை எப்படிக் கடந்தாள் எப்படி இச்சிறு வயதிலேயே ஞானப் பெண்ணானாள். ?

பூம்புகார் நகரில் மாசாத்துவன் மாநாய்கன் என்று இரு வணிகருக்கும் மக்களாகப் பிறந்த கோவலன் கண்ணகி ஆகியோருக்குத் திருமணம் நடைபெறுகிறது. அத்திருமணத்தின் போது  நடனமாடி மகிழ்விக்க வந்த மணிமேகலை விளையாட்டாக நடன முடிவில் வீசிய மாலை கோவலன் கழுத்தில் வீழ்கிறது.

அன்றுதான் திருமணம் முடித்த அவன் மாதவியின் பேரழகால் கவரப்பட்டு அவளுடன் வந்துவிடுகிறான். அவர்கள் இருவருக்கும் பிறந்த அழகு மகள்தான் மணிமேகலை.

இளமையிலேயே தாய் மாதவி தந்தை கோவலன் , பெரியன்னை கண்ணகி ஆகியோரின் வாழ்க்கையைப் பார்த்து அவளுக்கு இளமையிலேயே துறவற மனம் வாய்க்கிறது. தாயைப் போல அவளும் இந்திர விழாவில் நடனமாட வருவாள் என்று ஊரார் எதிர்பார்க்கக் கோவலனைப் பிரிந்த மாதவியோ தானும் துறவு பூண்டு மகளையும் துறவு நெறிக்கு ஆட்படுத்துகிறாள்.

ஆனால் துறவின் பெருமையைப் பரப்பப் பிறப்பெடுத்து வந்த மணிமேகலைக்கும் பூர்வஜென்ம வினை தொடர்கிறது அவள் மேல் உதயகுமாரன் என்ற சோழ அரசன் காதல் வயப்படுகிறான். மணிமேகலையோ தான் துறவு மேற்கொண்டிருப்பதை அவனுக்குச் சொல்கிறாள். அவனோ கேட்பதாயில்லை. என்ன செய்வது எனத் திகைக்கிறாள் மணிமேகலை. தோழி சுதமதி வந்து அவளை இளவரசனிடமிருந்து அப்போதைக்கு விடுவித்துச் செல்கிறாள்.

ருடந்தோறும் நடக்கும் இந்திரவிழா களை கட்டி இருக்கிறது. ஆடல் பாடல் சங்கீதம், நாட்டியமணிகள் தங்கள் சலங்கை ஒலிக்க திருவிழாவை இந்திரஜாலமாக்குகிறார்கள். ஆயிரம் இருந்தும் மாதவியின் நடனம் இல்லையே என வருந்துகிறாள் அவளது தாய் சித்ராபதி. தன் தோழி வயந்தமாலையைத் தூது அனுப்புகிறாள் மகள் மாதவியிடம். அவள் தன் தாயிடம் கண்ணகிக்கு மகளான மணிமேகலை ஆட வரமாட்டாள். அவள் தெய்வ கன்னிகை, துறவேற்கப் போகிறாள் எனச் சொல்லி அனுப்புகிறாள்.

திரும்பவும் சோழ இளவரசனின் தொல்லை தொடர்கிறது. உவவனத்தில் மணிமேகலை பூப்பறிக்கச் செல்லும் சமயம் பின் தொடர்ந்து தன்னை மணக்கும்படி நச்சரிக்கிறான். அவனது வருகைக்குப்  பயந்த அவள் அங்கே இருந்த பளிக்கறைக்குள் ஒளிந்து கொள்கிறாள். அவளது அவசத்தைப் பார்த்து மணிமேகலா தெய்வத்துக்கு இரக்கம் மேலிடுகிறது.

கோவலனின் குலக் கொடியான மணிமேகலையை மணிமேகலா என்ற கடல் தெய்வம் மணிபல்லவத்தீவுக்கு அவளை மாய உறக்கத்தில் ஆழ்த்தி எடுத்துச் செல்கிறது. அங்கே அவள் கோமுகிப் பொய்கையில் ஆபுத்திரன் என்பவன் விட்டுச் சென்ற அமுதசுரபி கிடைக்கப் பெறுகிறாள்.

மணிமேகலைக்கு மணிபல்லவத்தீவின் தெய்வமும் அவள் பூர்வஜென்மப் வினையால்தான் உதயகுமாரன் அவளைத் துரத்துகிறான் என்பதை உணர்த்துகிறது. மேலும் அவள் பசியின்றி இருக்கவும், வேறு உருக் கொள்ளவும் வான்வழிச் செல்லவும் மூன்று வரங்கள் அளிக்கிறது.

அவள் வான்வழிவந்து தாயிடம் உண்மைகளை எல்லாம் உரைக்கிறாள். அவளது உள்ளம் மனிதர்கள் உடல், பொருள், இளமையால் படும் பாடுகளைக் கண்டு துயருறுகிறது. அச்சிறு வயதிலேயே வயதுக்கு மீறிய ஞானம் கிடைத்தாலும் தகுந்த வழிகாட்ட அறவண அடிகளைச் சரணடைகிறாள்.

மனிதர்கள் பசியினாலபடும் துயர் கண்டு வெம்புகிறது அவள் உள்ளம். கையில் அமுதசுரபி இருக்கிறது. ஆனால் ஒரு நன்மகள் கையில் பிச்சை பெற்றாலே அந்த அமுதசுரபி மூலம் பசிப்பிணியைத் தீர்க்க இயலும்.

அப்போது மணிமேகலையிடம் வருகிறாள் காயசண்டிகை என்பவள். எவ்வளவு உண்டாலும் எதை உண்டாலும் அவள் பசிப்பிணி அகலவேயில்லை. அவள் மணிமேகலை கையில் இருக்கும் அமுதசுரபியில் அன்னை உள்ளம் கொண்ட ஆதிரை என்பாளிடம் சென்று பிச்சைபெற்று அளிக்கும்படி இறைஞ்சுகிறாள்.

“பாரகம் அடங்க பசிப்பிணி அறுமே “ என்று நல்வாக்குச் சொல்லியபடி மேன்மகள் ஆதிரை இட்ட பிச்சையால் அமுதசுரபியில் உணவு பெருகிக் கொண்டே இருக்கிறது. அதை உண்ட காயசண்டிகையின் பசிப்பிணி அறுகிறது.

நிம்மதியாகச் சென்ற வாழ்வில் மறுபடி குறுக்கிடுகிறான் உதயகுமாரன். பாவம் மணிமேகலை என் செய்வாள். அவள் காயசண்டிகையாக உருமாற்றம் கொள்கிறாள். அவள் காயசண்டிகை உருவிலிருப்பதை எப்படியோ அறிந்த இளவரசன் மறுபடியும் அவளை தொந்தரவு செய்ய காயசண்டிகையின் கணவனோ இளவரசன் தன் மனைவியிடம் தவறாக நடப்பதாக நினைத்துக் கொன்றுவிடுகிறான். அவன் கர்மவினைப்பயன் அவன் முடிவு இவ்விதம் அமைந்தது.

ஆனால் மணிமேகலைக்கோ வாழ்வில் பற்றுகள் இற்றுப் போனதுடன் இம்மாதிரி நிகழ்வுகள் இன்னும் இன்னும் அவளைத் துறவின் பக்கமும் ஞானத்தின் பக்கமும் தள்ளுகின்றன. தன்னலமற்ற அவள் பல்வேறு துறவிகளிடம் சென்று தன் ஆன்மத் தேட்டையை நிகழ்த்தி தவநெறிக்குத் திரும்புகிறாள். முடிவில் அறவண அடிகளாரிடம் உபதேசம் பெற்று சமூக சேவை செய்கிறாள்.

அப்பழுக்கற்ற அச்சிறு பெண் துறவியான மணிமேகலை மாந்தர்தம் பசிப்பிணியைப் போக்கியவள். தன் பவத்திறத்தையும் அதனால் அறுத்தவள். உண்டி கொடுத்தோரே உயிர்கொடுத்தோர் என்ற உண்மை பொலிய அதோ சென்று கொண்டிருக்கிறாள் மாசற்ற அப்பெண் துறவி. அவளைப் போற்றுவோம்.

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 1. 6. 2018  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்.

டிஸ்கி 2. :- அரும்புகள் கடிதத்தில் கொடைவள்ளல் கர்ணனின் கதையைப் புகழ்ந்த திருவாரூர் வாசகி, க. அருணா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். 

2 கருத்துகள்:

  1. அருமையான பதிவு. மணிமேகலை ஒரு மறக்கமுடியாத துறவி.

    பதிலளிநீக்கு
  2. நன்றி சத்ய பாலன்

    நன்றி ஜம்பு சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)