வியாழன், 24 மே, 2018

மாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். & யானையும் சிம்மமும் நந்தியும்.


மாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். 

பஞ்சபாண்டவ இரதங்கள் எனப்படும் ஐந்து இரதங்கள் அடுத்தடுத்து அமைந்திருக்கின்றன. 

முதலாம் நரசிம்மவர்மன் என்னும் மாமல்லனின் ( கி. பி. 630 – 638 ) அரிய படைப்பான பஞ்சபாண்டவ இரதங்கள் என்று அழைக்கப்படும் ஐந்து ஒற்றைக்கல் கோயில்கள் மற்றும் சில விலங்கு சிற்பங்கள் அடங்கிய ஐந்து இரதங்கள் தொகுதி தெற்கிலிருந்து வடக்காக சரிந்த சிறு குன்றிலிருந்து செதுக்கப்பட்டதாகும்.

இயற்கையான பாறையைச் செதுக்கித் தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக்கல் கோயில் தேர்போல காட்சி அளிப்பதால் அவை இரதம் எனப்படும்.


இந்த ஐந்து இரதங்களும் பஞ்சபாண்டவர் பெயரைப் பெற்றிருந்தாலும் அவை மகாபாரதத்துடன் தொடர்புடையவை அல்ல. 

இந்த இரதங்களுக்கு முன்புறமாக சிம்மமும், பக்கவாட்டில் யானையும் நந்தியும் செதுக்கப்பட்டிருப்பது சிறப்பு. 
திரௌபதி இரதம்

மூன்று அடுக்குகளுடன் எட்டுபட்டை சிகரத்தையுடைய தர்மராஜ இரதம், சாலை சிகரத்தையுடைய பீமராஜ இரதம், சதுரமான சிகரத்தையுடைய திரௌபதி இரதம், மற்றும் கெஜபிரஷ்டம் சிகரத்தையுடைய நகுல-சகாதேவ இரதம் ஆகிய இரதங்கள் கோயில் மாதிரிக்காகத் தோற்றுவிக்கப்பட்டவையே என்பதை அவற்றில் ஸ்தூபிகள் பாறையிலிருந்து பிரிக்கப்பட்டு சிகரத்தின்மீது பொருத்தப்படாமல் இருப்பதிலிருந்து அறியலாம்.

தர்மராஜ இரதத்தில் காணப்படும் அழகு வாய்ந்த சிவனும் பார்வதியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் பல்லவர் சிற்பக்கலைத்திறனுக்கு ஓர் ஒப்பற்ற எடுத்துக்காட்டு. மேலும் பல்லவ-கிரந்த எழுத்துக்கள் பொறிப்புடைய முதலாம் நரசிம்மவர்மனின் விருதுப் பெயர்களும் அந்த இரதத்தில் காணப்படுகின்றன.  

தனிக்குன்றுகளின்றும் வடிவாக்கப்பட்ட ரதங்கள் என்னும் கற்றளிகளின் பாணி தனிச்சிறப்புக் கொண்டது. இதன் முக்கியத் தொகுப்பு ஐந்து ரதங்கள் என்று மக்கள் வாயிலாகப் பெயர்பெற்று திரௌபதி உட்பட பாண்டவர்களின் பெயரைத் தாங்கி நின்றாலும் குறிப்பாக நான்கு வகையான விமான அமைப்புகளோடு திகழ்கிறது.

இவற்றைத் தவிர கணேச ரதமும்,  சிறைப்பாறைகளில் இருந்து ஆக்கப்பட்ட வளையன்குட்டை, பிடாரி ரதங்களும் வெவ்வேறு இடங்களில் உள்ளன. 

இவற்றுள் தர்மராஜ, அர்ஜுன, தென்னண்டைப் பிடாரி ரதங்கள் சதுரமான தளங்களுடனும், எண்பட்டைச் சிகரங்களுடனும், திராவிட விமானத்துக்கு இலக்கணமாகத் திகழ்கின்றன.

தர்மராஜ ரதம் மேலும் மூன்று அடுக்குகளில் மூன்று கருவறைகளில் தாங்கி நிற்கும் தனிப்பெருமை கொண்டது. திரௌபதி ரதமும் வளையகுட்டை ரதமும், வடவண்டைப் பிடாரி ரதமும் மேற்சொன்ன வகையிலிருந்து தளங்கள் சதுரமான சிகர அமைப்பில் மாறுபட்டு ’நாகர’ விமான வகையில் விளங்குகின்றன.

பீம கணேச ரதங்கள் நீண்ட சதுரத் தளங்களைக் கொண்டு முறையே ஒன்றும் இரண்டுமான அடுக்குகளைக் கொண்டுள்ளன. சகாதேவ ரதம் கஜவிருஷ்டன் என்னும் நீண்ட சதுர உடலும் வில்வளைவான முதுகுபுறமும் கொண்ட வேஷ்ர விமான பாணியில் அமைந்திருக்கிறது. 
இது மட்டும் புடைப்புச் சிற்பங்களை ஒட்டிய கோவில். 
அர்த்தநாரீஸ்வரர் 
சிம்மயாளி பல்லவர் ஸ்டைல்

இவையெல்லாம் அக்காலத்தில் சிற்ப நூல்களில் கையாளப்பட்டு வந்த ஆலயவடிவங்களுக்குச் சான்றுகளாகவும் அழியாத மாதிரிகளாகவும் திகழ்கின்றன.

2 கருத்துகள்:


  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  2. மாமல்லபுரம் ஒற்றைக்கல் தளிகள் - ஆதான் பஞ்ச பாண்டவர் இரதங்கள் - குறித்த பதிவு சுவையுடன் பதிவு செய்துள்ளீர்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)